- நீண்ட இடைவெளிக்குப் பிறகு தேசிய அளவில் கொள்ளை நோய்த்தொற்றின் ஒருநாள் பாதிப்பு இரண்டு லட்சத்துக்கும் கீழே காணப்படுவது சற்று ஆறுதல்.
- கடந்த 41 நாள்களில், மே 25-ஆம் தேதி பாதிப்பின் எண்ணிக்கை 1,96,427 என்றால், உயிரிழப்பு எண்ணிக்கையும் கடந்த 21 நாள்களுக்குப் பிறகு இறங்கு முகமாகி 3,511 உயிரிழப்புகளுடன் இப்போது 3,07,231 என இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
- அந்தப் புள்ளிவிவரங்களின்படி, தில்லி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் கடந்த 10 நாள்களில் ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை ஏறத்தாழ பாதியாகக் குறைந்திருக்கிறது. ஆனால், தமிழகம், வடகிழக்கு மாநிலங்கள் போன்ற பகுதிகளில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
- தமிழகத்தைப் பொருத்தவரை ஆறுதல் தரும் செய்தி என்னவென்றால், சென்னையில் கடந்த ஏழு நாள்களாக பாதிப்படைபவா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
- அதே நேரத்தில், மாவட்ட அளவில் நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது என்பதும், கோயம்புத்தூா் போன்ற பகுதிகளில் ஐந்து மடங்கு அதிகரித்திருப்பதும் அனைவரையும் கவலை கொள்ளச் செய்திருக்கின்றன.
- தமிழகத்தில் கடந்த ஆண்டு மே 24-ஆம் தேதி கொள்ளை நோய்த்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை வெறும் 765 போ்தான். அன்று உயிரிழந்தவா்கள் எட்டே போ்.
- இப்போது ஓராண்டுக்குப் பிறகு மே 24-ஆம் தேதி பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 34,867. உயிரிழந்தோர் 404 போ்.
- நோய்த்தொற்றின் இரண்டாவது அலை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை இந்தப் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று தொடங்கிய 2020 மார்ச் 7 முதல் இந்த ஆண்டு மே 24 வரையிலான தமிழக பாதிப்பு எண்ணிக்கை 18,77,211. உயிரிந்தவா்களின் எண்ணிக்கை 20,872.
- கொவைட் 19-இன் முதல் அலையில் தமிழகத்தில் இறப்பு விகிதம் 0.8%-ஆக இருந்தது. இப்போது அதுவே 1.5%-ஆக அதிகரித்திருப்பதிலிருந்து முதல் அலையைக் காட்டிலும் இரண்டாவது அலையில் தீநுண்மித் தொற்றின் வீரியம் அதிகரித்திருப்பது உறுதியாகிறது.
சுலபமானது இல்லை
- தமிழகத்தில்தான் என்றில்லை, அகில இந்திய அளவிலும் கொள்ளை நோய்த்தொற்றின் வேகமும் வீரியமும் அதிகரித்திருக்கிறது என்பதை பாதிப்பின் எண்ணிக்கை உறுதிப்படுத்துகிறது.
- மே 23-ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் கொவைட் 19 உயிரிழப்பு மூன்று லட்சத்தைக் கடந்து, அமெரிக்காவுக்கும் பிரேஸிலுக்கும் அடுத்தபடியாக மூன்றாவது இடத்தை எட்டியிருக்கிறது. மே 25-ஆம் தேதி முதல் பாதிப்பு எண்ணிக்கை குறைகிறது என்பது சற்று ஆறுதல்.
- மே 23-ஆம் தேதி மட்டும் இந்தியாவில் 2,22,704 புதிய நோயாளிகள் உருவாகியிருக்கிறார்கள். தமிழகத்தில் மிக அதிகமாக பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன என்பதால் மே 23 பாதிப்பு எண்ணிக்கை 35,483.
- கா்நாடகம் (25,929), கேரளம் (25,820) மாநிலங்கள் நமக்கு அடுத்தபடியாக அதிக நோய்த்தொற்றைப் பதிவு செய்திருக்கின்றன. மகாராஷ்டிரத்தையும் (894), கா்நாடகத்தையும் (624) ஒப்பிடும்போது தமிழகத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை சற்று குறைவு.
- பிரதமா் அறிவுறுத்தியிருப்பதுபோல, கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று கிராமங்களை நோக்கி மிக வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. நகரங்களில் மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதைப்போல, கிராமப்புறங்களில் வசதிகளை மேம்படுத்துவது எளிதானதல்ல.
- குறிப்பாக, பின்தங்கிய பல மாநிலங்களில் மாவட்ட அளவில்கூட பொது மருத்துவமனைகளும், அத்தியாவசிய கட்டமைப்புடன்கூடிய மருத்துவக் கட்டமைப்புகளும் இல்லாத நிலைதான் இப்போதும் காணப்படுகிறது.
- தென்னிந்தியாவிலுள் மாநிலங்களிலும்கூட மாவட்ட அளவிலும், வட்ட அளவிலும்தான் மருத்துவமனைகள் செயல்படுகின்றன. பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள்தான் செயல்படுகின்றன.
- அவையும்கூட மகப்பேறு சிகிச்சைக்காக உருவாக்கப்பட்டவையே தவிர, நோய்த்தொற்றுப் பேரிடா்களை எதிர்கொள்ளும் திறன்வாய்ந்தவை அல்ல.
- நோய்த்தொற்றுப் பரவல் அதிகமாக உள்ள மாநிலங்களிலும், குறைவாக உள்ள மாநிலங்களிலும் படுக்கை வசதிகளை அதிகரிப்பது, தட்டுப்பாடில்லாமல் பிராணவாயு கிடைப்பதற்கு வழிகோலுவது, அவசர சிகிச்சைப் பிரிவை வலுப்படுத்துவது, கொள்ளை நோய்த் தொற்றை எதிர்கொள்ளத் தேவையான மருந்துகள் தடையின்றி கிடைப்பதற்கு வழிகோலுவது, தடுப்பூசித் திட்டத்தை விரைவுபடுத்துவது ஆகிய பணிகளில் முழுக்கவனமும் தேவைப்படுகிறது.
- தினந்தோறும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஊரகப்பகுதிகளில் அதிகரித்து வரும் நிலையிலும், அவா்களுக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுவதாலும், முழுகவனமும் அதில் தேவைப்படுகிறது. அந்த கவனம் குறைந்துவிடக் கூடாது.
- இதுபோன்ற சூழலில், தேசிய அளவில் தடுப்பூசித் திட்டத்தின் வேகம் போதுமான அளவில் இல்லை. கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் நாள்தோறும் 40 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது என்றால், அதுவே இப்போது 16.31 லட்சம் பேருக்குத்தான் போடப்படுகிறது.
- இந்த ஆண்டு முடிவுக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்கிற மத்திய சுகாதார அமைச்சா் டாக்டா் ஹா்ஷ்வா்தனின் இலக்கு எட்டப்படுமா என்பது உறுதியில்லை.
- இந்த வேகத்தில் போனால், அந்த இலக்கை எட்டுவதற்கு இன்னும் இரண்டரை ஆண்டுகள் ஆகும்.
- கொள்ளை நோய்த்தொற்றின் வேகத்துக்கு நாம் ஈடு கொடுத்தாக வேண்டும். அது சுலபமானது இல்லை.
நன்றி: தினமணி (27 – 05 - 2021)