TNPSC Thervupettagam

புள்ளிவிவரம் இல்லையே

November 2 , 2022 647 days 360 0
  • அவ்வப்போது சில சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆய்வுகளை வெளியிடுவதும், அவை பரபரப்பை ஏற்படுத்துவதும் வழக்கமாகிவிட்டன. பெரும்பாலான ஆய்வுகள் தொடர்ந்து இந்தியாவை மோசமாகச் சித்திரிப்பதால், அந்த ஆய்வுகள் நம்பகத் தன்மை இழக்கின்றன.
  • ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 121 நாடுகளின் பட்டியலில், இந்தியாவுக்கு 107-ஆவது இடத்தை வழங்கி இருக்கிறது 2022-க்கான "உலகப் பசிக் குறியீடு' (வேர்ல்ட் ஹங்கர் இன்டெக்ஸ்). போரால் பாதிக்கப்பட்டிருக்கும் உக்ரைன் 36-ஆவது இடத்திலும், கலவர பூமியாக, மக்கள் அத்தியாவசியப் பொருள்களுக்குத் தெருவில் இறங்கிப் போராடும் இலங்கை 64-ஆவது இடத்திலும், நமது அண்டை நாடுகளான நேபாளம் (81), வங்கதேசம் (84), பாகிஸ்தான் (99) போன்றவை இந்தியாவைவிட மேம்பட்ட நிலையிலும் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவிடமிருந்து உணவு மானியம் பெறும் நாடுகளைவிட இந்தியாவில் பசியும், பட்டினியும் அதிகம் என்கிற அந்த ஆய்வின் முடிவு நகைப்பை வரவழைக்கிறது.
  • இந்தியாவின் ஊரகப்புறங்களில் 75%, நகர்ப்புறங்களில் 50% குடும்பங்கள் கிலோ ரூ.2-க்கு 35 கிலோ தானியம் பெறுகின்றன. தமிழகத்தில் இலவசமாகவே பெறுகின்றன. அப்படி இருக்கும்போது, இந்தியாவில் பசியும், பட்டினியும் தலைவிரித்தாடுவதாகவும், பலர் பசியால் வாடுவதாகவும் சித்திரிக்கும் ஆய்வு முடிவுகளை எள்ளி நகையாடாமல் வேறென்ன செய்ய?
  • "பசிக் குறியீடு' என்கிற தலைப்பே அபத்தமானது. பரபரப்பை ஏற்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. அதன் கேள்வியும், அளவுகோலும் பசியல்ல, வறுமையும் அல்ல. குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைவு, வளர்ச்சியின்மை, குழந்தைகள் மரணம் ஆகியவற்றின் அடிப்படையிலும், உணவுப் பாதுகாப்பு சார்ந்தும் எடுக்கப்படும் புள்ளிவிவரங்களுக்கு "பசிக் குறியீடு' என்று தலைப்பு வைப்பதிலேயே, நேர்மையின்மை வெளிப்படுகிறது.
  • ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளின் இறப்பு விகிதத்தின் அடிப்படையிலும், ஊட்டச்சத்துக் குறைவின் அளவுகோலிலும் ஒட்டுமொத்த மக்கள்தொகையையும் கணிப்பது எங்ஙனம் சரியாகும்? இந்தியாவில், குழந்தை மரணங்களில் மூன்றில் இரண்டு பங்கு அவற்றின் முதலாண்டில் நிகழ்கிறது. அதற்குக் காரணம், பராமரிப்பு இன்மையோ, வேறு நோய்களோதானே தவிர, பசியல்ல. அதை "பசிக் குறியீடு' என்று எப்படிக் கூற முடியும்?
  • சுமார் 140 கோடி மக்கள்தொகையுள்ள நாட்டில், 3,000 பேர் தந்த தகவல்களின் அடிப்படையில் எடுக்கப் பட்டிருக்கும் பசிக் குறியீட்டு ஆய்வு, எப்படி துல்லியமானதாகவோ, உண்மையை பிரதிபலிப்பதாகவோ இருக்க முடியும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். பசிக் குறியீடு குறித்து இந்திய அரசு எடுத்த புள்ளிவிவரங்கள் இல்லாமல் இல்லை.
  • 1993 - 94-இல் ஊரகப்புறங்களில் 5.5%, நகர்ப்புறங்களில் 1.9% மக்கள் பசியால் வாடுவதாகப் புள்ளிவிவரம் தெரிவித்தது. 2004 - 05-இல் எடுக்கப்பட்ட ஆய்வில் அதுவே 2.6%, 0.6% என்று குறைந்தது. "அந்த்யோதயா' என்கிற ஏழைகளுக்கான உணவுத் திட்டத்திற்குப் பிறகு, அதுவும் குறைந்து இல்லாமல் ஆகிவிட்டது. பசி என்பது வேறு; வறுமை என்பது வேறு.
  • சர்வதேசத் தரப்பட்டியல் வெளியிடும் நிறுவனங்களின் ஆய்வுகள் பல இந்தியா குறித்த தவறான கண்ணோட்டத்தை உருவாக்குவதற்கு நாமேகூடக் காரணமாக இருக்கிறோம். உலகப் பசிக் குறியீடு நமக்குச் சில பாடங்களை உணர்த்துகிறது. பத்திரிகை சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமை உள்ளிட்ட பிரச்னைகளில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா வேண்டுமென்றே விமர்சிக்கப்படுவதற்கு நம்மிடம் போதிய புள்ளிவிவரங்கள் இல்லாமல் இருப்பதுதான் காரணம்.
  • மத்திய, மாநில அரசுகளில் புள்ளிவிவரத் துறை என்று ஓர் அமைப்பு இருக்கிறது. அந்த அமைப்பு திரட்டும் புள்ளிவிவரங்கள் பெரும்பாலும் கடமைக்காக எடுக்கப்படுபவையாகவும், ஆட்சியாளர்களை திருப்திப் படுத்துபவையாகவுமே இருக்கின்றன. சர்வதேச புள்ளிவிவரங்களை எதிர்கொள்ளவோ, மறுதலிக்கவோ நம்மிடம் புள்ளிவிவரங்கள் இல்லாமை மிகப் பெரிய பலவீனம்.
  • கொள்ளை நோய்த்தொற்றின்போது, லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஊர் நோக்கி நடந்தே சென்றனர். அவர்கள் குறித்த புள்ளிவிவரம் அரசிடம் இல்லை. ஊடகங்களில் கேள்வி எழுந்த பிறகாவது நமது தொழிலாளர் நலத்துறை அமைச்சகமோ, புள்ளிவிவரத் துறையோ விழித்துக் கொண்டதா என்றால் அதுவும் இல்லை. முறையான புள்ளிவிவரம் எடுக்கப்பட்டால்தான், முறையான தீர்வுகளை எடுக்க முடியும் என்பதுகூடவா நிர்வாகத்துக்குத் தெரியவில்லை?
  • பசிக் குறியீட்டையே எடுத்துக் கொள்வோம். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், பிரதமரின் "கரீப் கல்யாண் அன்ன யோஜனா' என்கிற இலவச பொது விநியோகத் திட்டம் ஆகிய இரண்டின் அடிப்படையில் 75% மக்கள்தொகையினருக்கு உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. பயனாளிகள் குறித்து இதுவரை ஏதாவது புள்ளிவிவரம் திரட்டப்பட்டிருக்கிறதா? கிடையாது. இரண்டு திட்டங்களிலும் பயனடைவோர் யார், எவர் என்பது தெரியுமா? தெரியாது.
  • இந்தியாவில் சுமார் 11% பிறப்புகள் பதிவாவதில்லை. 10 மாநிலங்களில் இதுவே 25%. அது ஏன் என்று நாம் விவாதிப்பதில்லை. மத்திய உள்துறை அமைச்சக புள்ளிவிவரப்படி, 86% மரணங்கள் பதிவாகின்றன. சுகாதார ஆய்வு அறிக்கையின்படி அதுவே 71%. இதுபோல இன்னும் எத்தனையோ முரண்பாடுகள்.
  • "பசிக் குறியீடு' தப்புக் குறியீடு; புள்ளிவிவரம் இல்லாமை நம்மிடம் இருக்கும் குறைபாடு

நன்றி: தினமணி (02 – 11 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்