- இயற்கையை மனிதர்கள் கொடூரப்படுத்தியதால் ஏற்பட்டுள்ள பருவகால மாறுதல்கள் என்ற நெருக்கடி நம்முடைய கவனத்தை வலுக்கட்டாயமாக ஈர்த்திருக்கிறது, ஆனால் இந்தியாவைப் பீடித்துள்ள சுற்றுச்சூழல் பிரச்சினைகள் புவி வெப்பமடைவதால் மட்டும் உண்டானவை அல்ல.
- மூச்சுத்திணற வைக்கும் அளவுக்கு வட இந்திய நகரங்களில் காற்று மாசுபடுவதும், சாலைகள், அணைகள் கட்டுவதற்காக அக்கறை சிறிதும் இல்லாமல் இமயமலைப் பிராந்தியத்தின் இயற்கை வளங்களைச் சூறையாடுவதும், நிலத்தடி நீர்சேமிப்பை வரம்பில்லாத ஆழ்துளைக் கிணறுகள் மூலம் வற்றச் செய்வதும், ‘தொழிலுற்பத்திக்காக’ என்ற பெயரில் மண்ணில் ரசாயனங்களை அளவின்றிக் கலக்கவிடுவதும், வனங்களிலும் மலைகளிலும் வாழ்ந்த பல்லுயிர்களைத் தொடர்ந்து இழப்பதும் - பருவநிலை மாறுதலுக்குத் தொடர்பில்லாத நாசகரமான செயல்களாகும்.
- இப்படிச் சுற்றுச்சூழலை வெவ்வேறு வகைகளில் வெகு மோசமாக நச்சுப்படுத்துவதால் மனிதர்களுடைய சுகாதாரமும், நோய்வாய்ப்படுவதால் வேலை செய்யும் உடல் உரமும் வெகுவிரைவிலேயே கெட்டுவிடுகின்றன. பொருளாதார முன்னேற்றத்துக்காக உலகமும் – அதன் அங்கமான இந்தியாவும் இப்போது கடைப்பிடிக்கும் வழிமுறைகள் நீண்டகால நோக்கில் நமக்குத் நல்லவைதானா என்ற கேள்விகளை எழுப்புகின்றன.
- சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுவரும் கேடுகளைத் தடுப்பது எப்படி என்று இப்போது ஏராளமான கட்டுரைகளும் புத்தகங்களும் பதிப்பிக்கப்படுகின்றன. ஆனால், இந்தக் கட்டுரை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட ஒரு புத்தகம் குறித்து கவனம் செலுத்த விரும்புகிறது. இந்தப் புத்தகம் உலகம் முழுவதும் எவ்வளவு அறியப்பட்டிருக்க வேண்டுமோ அதைவிடக் குறைவாகத்தான் அறியப்பட்டிருக்கிறது, அதன் கருப்பொருள்கள், அது எழுதப்பட்ட காலத்தில் மட்டுமல்ல காலம் கடந்தும் நிற்பதாகவும், குறிப்பாக நமக்கு மிகவும் பொருந்துவதாகவும் இருக்கிறது.
அது என்ன புத்தகம்?
- ‘மனிதனும் இயற்கையும்: நவீன மனிதனின் ஆன்மிக நெருக்கடி’ (Man and Nature: The Spiritual Crisis of Modern Man) என்பது புத்தகத்தின் தலைப்பு. அதை எழுதியவர் தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறைப் பேராசிரியர் செய்யது ஹுசைன் நாசிர். நாசிர் இப்போது தொண்ணூறு வயதை எட்டிய பிறகும் பயனுள்ள வகையிலும் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதத்திலும் வாழ்ந்துவருகிறார். அறிஞர்களும் எழுத்தாளர்களும் கொண்ட குடும்பத்தில் ஈரானில் பிறந்தார். மசாசுசெட்ஸ் தொழில்நுட்பக் கல்விக் கழகத்திலும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலும் படித்த அவர் 1958இல் தாய்நாடு திரும்பினார்.
- மேற்கத்திய நாடுகளில் அதிக ஊதியத்துடன் கிடைத்த வேலைகளையும் பெருமைப்படத்தக்க கல்வி நிறுவனங்களின் அழைப்புகளையும் நிராகரித்த அவர், தெஹ்ரானில் அலையலையாக நிறைய மாணவர்களுக்கு கற்பித்து நல்ல வழிகாட்டியாகத் திகழ்ந்ததுடன் பாரசீகம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புத்தகங்களையும் எழுதினார்.
- எப்போதாவது பிரெஞ்சு, அரபி மொழிகளிலும்கூட நூல்களை வெளியிட்டிருக்கிறார். ஈரானில் 1979இல் ஏற்பட்ட புரட்சி காரணமாக தாய்நாட்டை விட்டே அவர் வெளியேற நேர்ந்தது; காரணம், அயதுல்லாக்கள் சுதந்திர சிந்தனைகளை அனுமதிக்கும் நிலையில் இல்லை. அது முதல் அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய நாசிர் நிறைய நூல்களை எழுதினார் – குறிப்பாக மதங்களை ஒப்பிட்டு அறிவார்ந்த நூல்களைப் பதிப்பித்தார்.
- “மேற்கத்திய நாடுகளில் சுற்றுச்சூழல் நாசப்படுத்தப்படுகிறது என்ற விழிப்புணர்வு இருக்கிறது; இந்தப் பிரச்சினைகளைப் பேசுகிறவர்களே - பொருளாதார வளர்ச்சியும் அவசியம் என்கின்றனர்; மனிதர்களுடைய வறுமைக்கு எதிரான போரில் வளர்ச்சியை அடைய, புவியையே நாசப்படுத்தும் திட்டங்களுக்கு ஆதரவு தருகின்றனர்.
- வேறு வகையில் சொல்வதென்றால், இயற்கைக்கும் மனிதகுலத்துக்குமான சமநிலை அழிந்ததால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, இயற்கையை மேலும் மேலும் மேலாதிக்கம் செய்யும் திட்டங்களையே தீட்டுகின்றனர்… மிகச் சிலர்தான் உண்மையை உணர்ந்துள்ளனர், இயற்கைக்கு எதிரான அணுகுமுறையை மனிதர்கள் கைவிட்டால்தான் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்று அவர்கள் தெரிந்து வைத்துள்ளனர்” என்று தன்னுடைய ‘மனிதனும் இயற்கையும்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பிரச்சினைகளின் ஆணி வேர் எது?
- இந்தப் புத்தகம் 1966இல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் அவர் ஆற்றிய உரைகளின் அடிப்படையில் தொகுத்து எழுதப்பட்டது. இது மேற்கத்திய நாடுகளை – குறிப்பாக அமெரிக்காவை இலக்காகக் கொண்டு எழுதப்பட்டது என்றாலும், அவர் விடுத்த எச்சரிக்கை நமக்கும் பொருந்தும். காரணம் இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் ஆட்சியாளர்கள் மேற்கத்திய பொருளாதார வளர்ச்சி மாதிரிகளை மிகுந்த ஆர்வத்துடன் பின்பற்றுகின்றனர்.
- “உலகு இப்போது சந்திக்கும் சூழல் பிரச்சினைகளின் ஆணி வேரே, வளர்ச்சி திட்ட சிந்தனைகளில்தான் இருக்கிறது” என்கிறார் நாசிர்.
- மேலும், “நவீன மனிதன் இயற்கை மீது தனக்கு முழு அதிகாரம் இருப்பதாகக் கருதி, அதைப் பயன்படுத்தவும், பாழ்படுத்தவும் முழுச் சுதந்திரம் இருப்பதை உறுதிசெய்ய அதை விருப்பம்போல பயன்படுத்தியும் வருகிறான். இப்படி இயற்கையை ஆதிக்கம் செய்ய முனைந்ததன் விளைவுதான் மட்டு மீறிய மக்கள்தொகைப் பெருக்கம், நகரங்களில் மூச்சுவிடக்கூட இடமில்லாத அளவுக்கு மக்கள் நெருக்கம், நகர வாழ்க்கையில் சமூக வளர்ச்சியற்ற கட்டிதட்டிப்போன பொருளாதாரச் சூழல், வாழ்விட நெருக்கடி, எல்லா விதமான இயற்கை வளங்களும் வேகமாக பயன்படுத்தப்பட்டு தீரும் அவலம், இயற்கையின் அழகை நாசமாக்கும் செயல்கள், இயந்திரங்களும் உற்பத்திக்கான நவீனக் கருவிகளும் இயற்கை வளங்களை வேகமாக குறைக்கும் போக்கு, கவலைப்படும் அளவுக்கு மக்களிடையே மன நோயாளிகள் அதிகரிப்பது, இன்னும் இவை போல ஆயிரக்கணக்கான தீர்க்க முடியாத பிரச்சினைகள் தோன்றுகின்றன” என்று எழுதியிருக்கிறார் நாசிர்.
- “காமமும் பேராசையும் உந்தித் தள்ள மனிதன் உலகின் எல்லாவற்றையும் தன்னுடைய போகத்துக்காகப் பயன்படுத்த விரும்புகிறான், அதற்கு இயற்கை மீது பேராதிக்கம் செலுத்துகிறான், இயற்கை வளங்கள் அனைத்துமே மனிதனுடைய நுகர்வுக்காக மட்டுமே படைக்கப்பட்டவை என்று சுரண்டுகிறான். பொருளாதார வளத்தைப் பெருக்கவும் சுகங்களை அடையவும் எல்லையில்லாத – வரம்பு இல்லாத வாய்ப்புகள் இருக்கின்றன, எனவே எந்தவித சுயக் கட்டுப்பாடும் இல்லாமல் வாழ்வதே சரியானது என்ற சிந்தனை அமெரிக்காவில் வளர்ந்துவருகிறது” என்று கண்டித்திருக்கிறார்.
நாசிரின் வாதங்கள்!
- பொருளியல் என்பது தனிப் பாடமாக பிரிக்கப்பட்டதன் விளைவாகத்தான், ‘மனிதனுடைய ஆற்றலுக்கு வரம்பே இல்லை, அவனால் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் போய் சுகங்களை அனுபவிப்பதற்கான நுகர்வுச் சாதனங்களைப் படைக்க முடியும்’ என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது என்று வாதிடுகிறார். உலகியல் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ள மட்டுமே படைக்கப்பட்டவன் மனிதன் என்ற கருத்து வலுத்துவருகிறது என்று சுட்டிக்காட்டுகிறார்.
- “நவீன அறிவியலும் நவீனப் பொருளியலும் மனிதனை - அவன் கடைப்பிடிக்க வேண்டிய தார்மிக, ஆன்மிக சுயக் கட்டுப்பாடுகளிலிருந்து பிரித்துவிடுகின்றன; இயற்கை வளங்களை முடிந்தவரை உச்சபட்சம் நம்முடைய தேவைகளுக்குப் பயன்படுத்தி அனுபவிக்க வேண்டும் என்ற வெறியை ஊட்டுகின்றன. அப்படிப் பயன்படும் இயற்கையைக் காக்க வேண்டிய கடமையோ, பொறுப்போ நமக்குக் கிடையவே கிடையாது என்ற எண்ணத்தையும் விதைத்துவிடுகின்றன” என்று விவரிக்கிறார் நாசிர்.
- இப்போது மனித குலம் அழிவிலிருந்து தப்பிப்பதற்காகவாவது இயற்கையை மேற்கொண்டு சிதைக்காமல் அதனுடன் வாழவும் அதன் புனிதத்தை மீண்டும் நிலைநாட்டவும் செயல்பட்டாக வேண்டும். அதற்காக நவீனம் என்று கருதப்படாத அன்றைய நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் மீண்டும் கடைப்பிடித்தாக வேண்டும்.
- நாசிரின் ‘மனிதனும் இயற்கையும்’ என்ற புத்தகம் 1968இல் முதலில் பதிப்பிக்கப்பட்டது. அப்போது அவர் தெஹ்ரானில்தான் வாழ்ந்துவந்தார். பத்தாண்டுகளுக்குப் பிறகு ஈரானை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தம் மதப் பழமைவாதிகளால் அவருக்கு ஏற்பட்டது. அமெரிக்காவில் அவர் தன்னுடைய வாழ்க்கையைப் புதிய வகைக்கு மாற்றிக்கொண்டார். வேறு கருப்பொருள்களை மையமாகக் கொண்டு புத்தகங்கள் எழுதினார்.
- இறுதியாக மீண்டும் மனிதனும் இயற்கையும் பாணி புத்தகங்களுக்குத் திரும்பினார். 1996இல் ‘மதமும் – இயற்கையின் ஒழுங்குமுறையும்’ என்ற புத்தகத்தை எழுதினார். “மதச்சார்பற்ற மனிதன் என்ற கருத்தாக்கமும், புவியுலக மனிதன் தனித்துவம் மிக்கவன் என்ற முழுமைக் கொள்கையும் வளர்வது மனித குலத்துக்கும் இயற்கை வரலாற்றுக்கும் அளவிட முடியாத பாதகமான விளைவுகளை ஏற்படுத்திவிடும், இயற்கையையே அதன் ஒழுங்குமுறையிலிருந்து மாற்ற முயல்வதானாலும் சரி, அல்லது செல்வத்தைக் குவிப்பதற்காகவாவது இருந்தாலும் சரி, அல்லது இதர மனித நாகரிகங்களை வெற்றிகொள்வதற்காகவாவது இருந்தாலும் சரி, மனிதர்களைக் கட்டுப்படுத்த இனி எந்தவித மதம் சார்ந்த கட்டுப்பாடுகளும் இருக்காது. இயற்கை என்பது புனிதமானது என்ற கருத்திலிருந்து மனித குலம் வெகுதொலைவு விலகிவிட்டது. இயற்கை என்பது உயிர்களின் தாய் என்பது மறக்கப்பட்டு, இயற்கை என்பதே உயிரில்லாத ஜடம், அதன் மீது ஆதிக்கம் செலுத்தலாம், நம்முடைய தேவைக்கேற்ப அதைச் சுரண்டலாம் பயன்படுத்தலாம் என்ற எண்ணம் வலுத்துவிட்டது” என்கிறார்.
தவறான உலகியல் சிந்தனைகள்
- புவிசார்ந்த சூழல் பிரச்சினைகளுக்கு வெவ்வேறு மதங்களின் பண்பாட்டு அடிப்படையில் தீர்வுகண்டு நெருக்கடிகளை எப்படிக் களையலாம் என்று ‘மதம், இயற்கையின் ஒழுங்குமுறை’ என்ற தன்னுடைய நூலில் விளக்கியுள்ளார். இயற்கையின் புனிதத்தன்மையை உணர்ந்துள்ள வெவ்வேறு மதங்கள் தங்களுடைய சிந்தனைகளைப் பரஸ்பரம் பகிர்ந்துகொண்டு, இயற்கைக்கு ஏற்படுத்திய காயங்களை ஆற்ற முடியும் என்கிறார்.
- அவருடைய இந்த அணுகுமுறை இன்றைய தொழில்நுட்ப நிபுணர்களுடைய சிந்தனைக்கு எதிராக இருக்கிறது. சூரிய ஒளி, காற்று, ஹைட்ரஜன் போன்ற புதிய ஆற்றல் வளங்களைக் கொண்டு இப்போது நிலவும் சூழல் சீர்கேட்டை சரிசெய்துவிடலாம் என்று அவர்கள் கருதுகின்றனர்; பெட்ரோலில் ஓடும் கார்களுக்குப் பதிலாக மின்சார பேட்டரிகளைப் பயன்படுத்தினால் கரிப்புகை மாசு நீங்கிவிடும் என்று நினைக்கிறார்கள், புவிசார் பொறியியல் நுட்பங்கள் மூலம் அழிவிலிருந்து தப்பிக்கலாம் என்று கருதுகின்றனர்.
- ‘பருவநிலை முதலாளித்துவம்’ என்ற சமீபத்திய புத்தகத்துக்கு உலகின் முன்னணி கோடீஸ்வர தொழில்நுட்ப வல்லுநர்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர்; புதிய அறிவியல் – தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் மூலம் வளர்ச்சி சக்கரத்தை இடைவிடாமல் சுழல வைக்க முடியும், பருவநிலை மாறுதல்களால் ஏற்படும் கெடு பலன்களையும் எதிர்கொள்ள முடியும் என்கிறது அந்தப் புத்தகம்.
- “சுற்றுச்சூழல் நெருக்கடிக்கு தவறான தொழில்நுட்பம் அல்லது தவறாகப் பயன்படுத்தபடும் தொழில்நுட்பங்கள் காரணம் அல்ல, தவறான உலகியல் சிந்தனைகள்தான் அடிப்படைக் காரணம்” என்கிறார் பேராசிரியர் நாசிர். “தவறான பொறியியல் நுட்பங்கள் காரணமாக சூழல் சீர்கேடுகள் நடைபெறவில்லை, இயற்கை பற்றி தனக்கிருந்த இயல்பான அறிவை மனித குலம் இழந்ததும், அகத்தில் இருந்த ஆன்மிக உணர்வு மங்கியதும்தான் சூழல் நெருக்கடிக்குக் காரணம்” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார் பேராசிரியர் நாசிர்.
மாற்றங்கள் அவசியம்
- நாசிரின் அணுகுமுறைக்கும், நவீன முதலாளித்துவ சிந்தனையாளர்களின் அணுகுமுறைக்கும் நான் ஆதரவாளன், அதேசமயம் இரண்டுமே முழுமையானவை அல்ல, பகுதியானவை என்றே கருதுகிறேன். புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் தொடர்பான கண்டுபிடிப்புகள் வரவேற்கப்பட வேண்டும், அதேசமயம் இயற்கை தொடர்பாக மேலதிக கவனத்துடன் கூடிய பாதுகாப்பு அணுகுமுறையும் வேண்டும். வாழ்க்கை முறைகளுக்கும் இவற்றில் முக்கியப் பங்கு உண்டு.
- உலக கோடீஸ்வரர்கள் தங்களுடைய தனி விமானங்கள், சொகுசு பங்களாக்கள், சகல வசதிகளும் நிரம்பிய கப்பல் போன்ற சொந்தப் படகுகள் போன்ற சுகபோகங்களை எதற்காகவும் விட்டுத்தராமல் பருவநிலை மாறுதல்களை எப்படியாவது தடுத்து நிறுத்தியாக வேண்டும் என்று விரும்புகிறார்கள். இன்றைய உலகில் மதம் என்பது மக்களிடையே அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்குப் பதிலாக, வெறுப்பையும் விரோதத்தையும் வளர்ப்பவையாகவே மாறிவருகின்றன.
- மதத்தைப் பின்பற்றும் தனிமனிதர்கள் வெகு கவனத்துடன் செயல்பட்டாலும், மற்றவர்கள் தங்களுடைய மதமே உயர்வானது என்பதால் மத எதிரிகளை அழிக்க போர் நடத்தப்போவதாக அறிவித்து வன்செயல்களைத் தூண்டுகின்றனர். கௌதம புத்தர், மகாத்மா காந்தி, பிரான்ஸ் நாட்டின் அசிசி போன்ற மிகச் சில மத நம்பிக்கையாளர்கள் தங்களுடைய மத நம்பிக்கையை வெற்றிகரமாக எடுத்துரைத்ததுடன் பிற சமூகங்களுடனும் பிற மதத்தாருடனும் சுமுகமாக வாழ தாங்களே முன்னின்று செயல்பட்டனர்.
- தொழில்நுட்ப வளர்ச்சியால் இப்போது இருப்பதைவிட சுகமான வாழ்க்கைக்கு நாம் சென்றுவிட முடியும் என்ற தவறான நம்பிக்கையை உடைக்கிறார் பேராசிரியர் நாசிர். போகங்களை அனுபவிக்கத்தான் பிறந்தோம் என்ற எண்ணங்களிலிருந்து விடுபட்டு உள்ளிருக்கும் ஆன்ம சக்தி மீது அக்கறை செலுத்துமாறு அழைப்பு விடுக்கிறார். இயற்கைக்கு மரியாதை செலுத்துங்கள், இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதில் சுயக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடியுங்கள், இதற்காக தீவிர மதப்பற்றாளனாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்கிறார்.
- சுற்றுச்சூழல் நெருக்கடியைத் தீர்க்க நிறுவனங்கள் மூலமான மாற்றங்களும் அவசியம். அதிகாரம் அனைத்தும் மையத்தில் குவிக்கப்படாமல் பரவலாக்கப்பட வேண்டும், வெளிப்படையான செயல்பாட்டைக் கைக்கொள்ள வேண்டும், அரசு நிர்வாகத்தில் ஜனநாயகரீதியிலான பிரதிநிதித்துவம் அடி முதல் நுனி வரையில் இருக்க வேண்டும்.
- நிலக்கரிச் சுரங்க அதிபர்களும் பெட்ரோலிய எண்ணெய் நிறுவனங்களின் உரிமையாளர்களும் - தேர்தலுக்கு எப்படி நன்கொடை தர வேண்டும், தேர்தலில் எதைப் பேச வேண்டும், எந்த அடிப்படையில் அரசு செயல்பட வேண்டும், சட்டங்கள் எப்படித் திருத்தப்பட வேண்டும், செய்தி ஊடகங்கள் எதைப் பேச வேண்டும், எதைப் பேசக் கூடாது என்பதையெல்லாம் தீர்மானிக்கும் இடத்தில் இருப்பது சூழல் காக்கப்பட வேண்டிய பொறுப்புக்கு நேர்விரோதமான சூழலாகும்.
நன்றி: அருஞ்சொல் (07 – 12 – 2023)