TNPSC Thervupettagam

பூகோள நெருக்கடியை எப்போது பேசப் போகிறோம்

July 29 , 2023 345 days 235 0
  • இந்தியாவில் இலக்கியத்துக்கான உயரிய விருதான ஞானபீட விருதைப் பெற்ற முதல் ஆங்கில மொழி எழுத்தாளர் அமிதாவ் கோஷ். இந்தியா - தென் கிழக்கு ஆசியாவை முதன்மைக் கதைக்களங்களாகக் கொண்ட இவருடைய வரலாற்றுப் புனைவு நாவல்கள், சமகால உலக இலக்கியத்தின் இந்திய முகமாக அவரை முன்னிறுத்துகின்றன. ‘The Great Derangement: Climate Change and the Unthinkable’ (2016), ‘The Nutmeg’s Curse: Parables for a Planet in Crisis’ (2021) என இவரது அல்புனைவு நூல்கள், காலநிலை மாற்றத்தின் உலகளாவிய சொல்லாடலுக்கு முதன்மைப் பங்களித்துள்ளன. ‘Smoke and Ashes: A Writer's Journey through Opium's Hidden Histories’ (2023, HarperCollins வெளியீடு) என்கிற அவரது சமீபத்திய நூலின் வெளியீட்டுக்காகச் சென்னை வந்திருந்த அமிதாவ், ‘இந்து தமிழ் திசைக்கு அளித்த சிறப்பு நேர்காணல்:

காலநிலை மாற்றம் சார்ந்த ஈடுபாடு உங்களிடம் ஆழம்பெறத் தொடங்கியது எப்போது?

  • விவரிக்க முடியாத வழிகளில் ஒன்று மாறிக்கொண்டிருக்கிறது என்பதை, சுந்தரவனம் (Sundarbans) பற்றிய என்னுடைய ஆராய்ச்சி தீவிரமடைந்த 2000ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் புரிந்து கொண்டேன். ஏனென்றால், ஏற்கெனவே சுந்தரவனத்தில் ஏதோ விசித்திரமான ஒன்று நடைபெறுகிறது என்பது தெளிவாகி இருந்தது.
  • காலநிலை மாற்றத்தின் சில விளைவுகளை அங்கு காண முடிந்தது; உயிர்ப்பன்மை இழப்பின் விளைவுகளையும்கூடக் காண முடிந்தது. மேலும் இதுபோன்ற வேறு நெருக்கடிகளும் அங்கு மேலெழுந்துவந்தன. இது அழுத்தமாகப் பேசப்பட வேண்டிய விஷயம் என நினைத்தேன்.
  • நம்பமுடியாத அளவுக்குப் பூச்சியினங்களை இழந்துகொண்டிருக்கிறோம். தொழில்நுட்பங்கள் முதலில் அதிசயமாகத் தோன்றும்; ஆனால், அவற்றின் எதிர்பாராத விளைவுகள் பேரழிவைக் கொண்டு வருவதை நாம் பார்த்திருக்கிறோம் - காலநிலை மாற்றத்தின் அடிப்படையும் இதுதான்.
  • வேளாண்மைக்கு, குறிப்பாகப் பெருந்தொழில் வேளாண்மைக்கு, பூச்சிக்கொல்லிகள் முதலில் வரப்பிரசாதமாகத் தோன்றின. ஆனால், பூச்சிக்கொல்லிகளின் மோசமான விளைவுகளை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக, தேனீக்களின் மீது பூச்சிக்கொல்லிகள் ஏற்படுத்திய விளைவுகள் அபாயகரமான பேரழிவை ஏற்படுத்தியிருக்கின்றன. தேனீக்கள் இல்லாமல் மனிதகுலம் நீடித்திருக்க முடியாது. எனவே, காலநிலை மாற்றம் பற்றி மட்டுமே பேசுவது நாம் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடியின் தன்மையைக் குறுக்கிப் பார்ப்பதாகும். பூகோள நெருக்கடியைப் (planetary crisis) பற்றிப் பேசுவதையே முக்கியமாகக் கருதுகிறேன்.
  • காலநிலை மாற்றத்துக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் தரவேண்டுமா என இப்போதெல்லாம் நிறைய யோசிக்கிறேன். ஏனென்றால் நம்மைச் சுற்றி நிகழ்ந்துகொண்டிருக்கும் பல்வேறு நெருக்கடிகளில், காலநிலை மாற்றமும் ஒன்று. அந்த நெருக்கடிகளில் முக்கியமானது உயிர்ப்பன்மை இழப்பு.
  • ஆந்த்ரோபோசீன் செயல்திட்டக் குழுவிலிருந்து (AWG) அதன் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான ஏர்ல் எல்லிஸ் ராஜினாமா செய்திருக்கிறார். ஆந்த்ரோபோசீனுக்கான வரையறையை ஒற்றைப்படையாகக் குறுக்கும் நடவடிக்கையை எதிர்த்து ராஜினாமா செய்திருப்பதாகக் கூறும் எல்லிஸ், ‘1950-க்குமுன்னர் தொழில்துறை, காலனியாதிக்க நாடுகளால் ஏற்பட்ட தாக்கங்கள் புவியின் தன்மையை மாற்றியமைக்கும் அளவுக்குக் குறிப்பிடத்தகுந்தவை இல்லையா?’ என்கிற முக்கியக் கேள்வியை முன்வைக்கிறார்.

ஆந்த்ரோபோசீனை எப்படி அணுகுவது?

  • ஆந்த்ரோபோசீன் பற்றிப் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் சில விமர்சனங்கள் நியாயமானவை என்று நான் கருதுகிறேன். எல்லிஸின் கருத்துடன் நான் முழுமையாக உடன்படுகிறேன். இப்பிரச்சினையை வரலாற்றுப் பார்வையுடன் அணுக வேண்டும் என்றே நான் கூறிவருகிறேன். வரலாற்றுக்குப் போதுமான கவனம் கொடுக்காதவரையில், நாம் எளிதாகத் திசைமாறிவிடுவோம்.
  • 1950 எனத் திட்டவட்டமாக ஒரு பகுப்பை உருவாக்குவது, நாம் வாழும் காலகட்டத்துடன் முந்தைய காலகட்டங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்கிற பிம்பத்தை உருவாக்கிவிடுகிறது. இப்போது நாம் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடியை நகர்த்திச் செல்வது உலகளாவிய ஏற்றத் தாழ்வு தான். இந்த ஏற்றத்தாழ்வு எப்படி உருவானது? அதன் வேர் காலனிய வரலாற்றில் ஆழப் பட்டிருக்கிறது. ஆக, வரலாற்றுரீதியில் இந்தப் பிரச்சினைகளை அணுகாதவரையில், தீர்வுகளை நோக்கி நாம் நகர முடியாது.
  • 2070ஆம் ஆண்டினை பூஜ்ய உமிழ்வுக்கான இலக்காக இந்தியா நிர்ணயித்திருக்கிறது. 2075இல் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உயரும் என கோல்ட்மன் சாக்ஸ்கணித்திருக்கிறது. இந்தியாவின் பொருளாதார லட்சியங்களும் காலநிலை சார்ந்த இலக்குகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்து பயணிப்பது சாத்தியமா?
  • காலநிலை மாற்றம் போன்ற நெருக்கடிகளைத் தொழில்நுட்பச் சொற்களைக் கொண்டு மட்டுமே சிந்திப்பதில் உள்ள சிக்கல்களில் ஒன்றாக, ‘பூஜ்ய உமிழ்வுஎன்கிற பதத்தின் பயன்பாட்டைப் பார்க்க முடியும். பூஜ்ய உமிழ்வு என்கிற ஒன்றே உண்மையில் கிடையாது.
  • பூஜ்ய உமிழ்வு என்பது போலியானது; எதையுமே உண்மையில் பூஜ்யமாக ஆக்க முடியாதபோது, ‘பூஜ்யஉமிழ்வு என்பது எதைக் குறிக்கிறது. குறிப்பிட்ட ஆண்டில் நிகர பூஜ்ய உமிழ்வை எட்டி விடுவோம் என்பன போன்ற இலக்குகளில் எந்த அர்த்தமும் இல்லை. உண்மையிலேயே தன் கரிம வழித்தடத்தைக் குறைத்துக்கொள்ள நினைக்கும் ஒரு நாடு, நிலக்கரிச் சுரங்கங்களுக்காகக் காடுகளை அழிக்காது. அதே நேரம் இந்த நிலைமைக்கு இந்தியாவை மட்டுமே நாம் குற்றம்சாட்ட முடியாது.
  • புதைபடிவ எரிபொருள்கள் மூலம் பெரும் செல்வம் ஈட்டிய பிரிட்டன், நார்வே போன்ற நாடுகள் இன்னும் அதிகமாகப் புதைபடிவ எரிபொருள் தேடலுக்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இதற்கு அர்த்தம்தான் என்ன? நார்வே போன்ற நாடுகளே புதைபடிவ எரிபொருள் தேடலைக் கை விட முன்வராதபோது இந்தியா, இந்தோனேசியா, கென்யா, பிற தெற்கு நாடுகளையும் (global south) புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைக் கைவிடச் சொல்வது எந்த வகையிலும் அர்த்தமற்ற ஒன்று. எந்த நாடும் அதைச் செய்ய முன்வராது. அதற்குக் காரணம் மிக எளிமையானது: புதை படிவ எரிபொருள்கள் மீது முற்றாதிக்கம் கொண்டிருந்த மேற்குலகம், அந்த ஆதிக்கத்தை முற்றிலும் தவறாகப் பயன்படுத்தி உலகின் பிற பகுதிகளைச் சுரண்டியது.
  • அப்படியான அதிகாரத்தை மேற்குலகம் மீண்டும் கைகொள்ளும் நிலை ஏற்படுவதற்கு தெற்கு நாடுகள் இன்றைக்கு அனுதிக்காது. ஏனென்றால், புத்திசாலித்தனமாகவோ வேறு எந்த வகையிலோ பெறப்பட்ட அந்த அதிகாரத்தை மனிதகுலத்தின் நலனுக்காகப் பயன்படுத்தாமல், தங்களுக்கான செல்வக் குவிப்புக்காக மட்டுமே பயன்படுத்தி, உலகின் பிற பகுதிகளை மேற்குலகம் வறுமைக்குள் தள்ளியது. எனவே, மேற்குலகம் ஒரு முன்மாதிரி நடவடிக்கையை மேற் கொள்ளாதவரை இந்தியா, இந்தோனேசியா, வேறு எந்த நாடுகளிடமிருந்தும் பூஜ்ய உமிழ்வுபோன்ற நடவடிக்கைகளை எதிர்பார்க்க முடியாது.
  • இந்தியாவில் காலநிலை மாற்றப் பிரச்சினை விவரிக்கப்படும் மொழி, முதன்மையாக ஆங்கிலம் தான். பல்வேறு மொழிகள் பேசப்படும் நாட்டில், காலநிலை மாற்றம் பற்றிய மக்களின் புரிதலை மேம்படுத்தும் சொல்லாடலை முன்னெடுக்கும் வழிமுறை என்ன? - காலநிலை மாற்றத்தின் மொழி, இந்தியாவில் மட்டுமல்ல உலகளவிலும் ஆங்கிலமாகத்தான் உள்ளது. காலநிலை மாற்றம் சார்ந்து வெளிவரும் அறிவியல் ஆய்வுகளில், 98% பிரிட்டன்-அமெரிக்காவிலிருந்து (Anglosphere) ஆங்கிலத்தில் தான் வெளிவருகின்றன; அந்த வகையில், மொழி ஒரு பெரிய பிரச்சினை என்பது உண்மைதான்.
  • இதனால் ஒட்டுமொத்த சொல்லாடலும் பல்வேறு விதங்களில் பாதிக்கப்படுகிறது. ஆனால், கால நிலை மாறிக் கொண்டிருக்கிறது என்பதையும், அது ஏன் மாறிக் கொண்டிருக்கிறது என்பதையும் எளிய மக்கள் அறிந்திருக்கின்றனர். என்னுடைய சமீபத்திய கென்யப் பயணத்தில், டாக்ஸி ஓட்டுநர் ஒருவருடன் நிகழ்ந்த உரையாடலை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.
  • கிழக்கு ஆப்பிரிக்காவில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் மழைப்பொழிவுக்குப் பிறகு ஜூன், ஜூலை மாதங்களில் வறண்ட வானிலையே நிலவும். ஆனால், இப்போது முன்கணிக்க முடியாத அளவுக்கு ஜூன், ஜூலை மாதங்களிலும் மழைப் பொழிகிறது என அந்த ஓட்டுநர் கூறினார். ஏன் காலநிலை மாறிக் கொண்டிருக்கிறது என்று கேட்டேன். நாம் வளிமண்டலத்தில் சேர்த்துக் கொண்டிருக்கும் பசுங்குடில் வாயுக்கள்தான் அதற்குக் காரணம் என்றார்.
  • பசுங்குடில் வாயு வெளியீட்டைக் குறைக்க புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என உங்களுக்குத் தோன்றவில்லையா என நான் திருப்பிக் கேட்டபோது அவர் சொன்னார்: நாங்கள் ஏன் குறைத்துக்கொள்ள வேண்டும்... மேற்கத்திய நாடுகளின் கரிம வெளியீட்டுடன் ஒப்பிடுகையில் எங்கள் பயன்பாடு சிறு துரும்புதான்’.
  • இதுவொரு புவி அரசியல் பிரச்சினை என்பதை மேற்கத்திய நாடுகளைவிட, பிற நாடுகளின் மக்கள் துல்லியமாகப் புரிந்துகொண்டுள்ளனர். காலநிலை மாற்றத்தின் காரணமாக தெற்காசியாவிலோ ஆப்பிரிக்காவிலோ ஒரு கிளர்ச்சி வெடிக்குமானால், மேற்கு நாடுகளின் தூதரகங்களையே மக்கள் முதலில் தாக்குவார்கள்; வரலாற்றுரீதியாக அதுவே நடந்து வந்திருக்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (29–07–2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்