TNPSC Thervupettagam

பூக்கட்டும் மானுடவியல் புதுமைகள்

January 18 , 2020 1777 days 806 0
  • திருக்குறளின் முதல் அதிகாரம் எந்தவொரு இறைவனையும் குறிப்பிட்டு பெயர் சொல்லி வாழ்த்தவில்லை. பாத மலர்களை மட்டுமே படம்பிடித்துக் காட்டுகிறார் திருவள்ளுவர். காரணம், முகம் அவரது மதத்தினைக் காட்டிக் கொடுத்துவிடுமே.

ஆதி பகவன்

  • ஆதிபகலன் என்பதே பழைய சுவடியில் ஆதி பகவன் என்றும் பதிவாகி இருக்கலாம். பகவன் என்ற சொல் சங்க இலக்கியங்களில் பயிலவில்லை. சிலப்பதிகாரத்திலும் (10-177), மணிமேகலையிலும் (3-61; 26-54; 28-174) முறையே அருகப் பெருமானையும் புத்தரையும் குறிக்கும் இடுகுறிப் பெயராக இது இடம்பெறுகிறது.
    வட இந்தியாவில் புத்த கயாவில் மிகப் பழைமையான சூரியச் சிற்பம் ஒன்று கிடைத்துள்ளது. சூரியனுக்குத் தனியொரு கோயில் இருந்ததை "உச்சிக்கிழான் கோட்டம்' (மணிமேகலை 9:11) என்கிறார் சீத்தலைச் சாத்தனார். உண்மையில் "ஞாயிறு போற்றுதும்' என வணங்கப்படும் ஆதவனே ஆதி பகவன்.
    வேத, இதிகாசங்களும், விவிலியங்களும், ஜண்ட-அவஸ்தாவாகிய பாரசீக மறைகளிலும், பழந்தமிழ் இலக்கியங்களிலும் ஆதித்தியக் கடவுளே முதலாவது வழிபாட்டுத் தெய்வம்.
  • ரிக் வேதத்தில் (1-164-2) இதே கருத்து "ஏகம் ரதம் சப்த யுஜாந்தி' (ஒரு சக்கரம், எழு குதிரை) என்று வருகிறது. ரதம் என்பது பிற்காலத்தில் தேர் என்ற பொருளில் இலக்கியங்களில் இடம்பெறுகிறது.
  • பன்னிரண்டு ராசிகளில் சூரியன் சஞ்சரிப்பதால் பன்னிரு ஆதித்யர் ஏற்பட்டிருக்கலாம் என அம்சுமத் பேதாகமம், சுப்ர பேதாகமம் மற்றும் சில்ப ரத்னம், மத்ஸ்ய புராணம் ஆகிய நூல்கள் விளக்குகின்றன. ஆதித்யர் பெயர்களாவன: தாத்ரி, மித்ரா, ஆர்யமன், ருத்ர, வருண, சூரிய, பாகா, விவஸ்வான், பூஷண், சவித்ரி, த்வஷ்டரி, விஷ்ணு.

ஆரண்ய காண்டம்

  • வால்மீகி ராமாயணத்தில் ஆரண்ய காண்டத்தின் 23-ஆம் சர்க்கத்தில் முதல் 15 ஸ்லோகங்களில் சூரிய கிரகணம் பற்றிய தகவல் உள்ளது. கிரகணத்திற்குக் காரணம் ராகு என்றும் சுட்டப்படுகிறது.
  • பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் இயங்கும்போது சூரிய கிரகணம் நிகழும் என்று ஆரம்பப் பள்ளிக் குழந்தையும் பாடம் நடத்திவிடும். அப்படியானால், ஒவ்வொரு அமாவாசையிலும் சூரிய கிரகணம் தோன்றுவது இல்லையே. காரணம், பூமி, சூரியனைச் சுற்றும் தளமும், சந்திரன் பூமியைச் சுற்றும் தளமும் ஒன்றுக்கு ஒன்று ஏறத்தாழ 5 பாகை சாய்மானத்தில் உள்ளன. அதனால், ஒவ்வொரு 223 அமாவாசைகளுக்குப் பிறகும் முழுச் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இது வானவியல்.
  • மோகினியாக வடிவெடுத்த திருமால், தேவர்களுக்கு அமுது வழங்கும்போது வரிசையில் நின்ற சூரிய, சந்திரர் இருவருக்கும் நடுவில் புகுந்தாராம் இராகு . திருமால் தமது கையில் இருந்த சட்டுவத்தால் இராகு தலையில் அடித்தார். தலை இராகு என்றும் தேகம் கேது என்றும் பிளந்தது. இராகு கரும்பாம்பு. கேது செம்பாம்பு. இவர்கள் முறையே திருமாலிடம் காட்டிக் கொடுத்த சந்திர, சூரியர்களை அவ்வப்போது மறைப்பதுதான் சந்திர, சூரியக் கிரகணங்களாம். இது தொன்மவியல் கருத்து.
  • அறிவியலுக்கும் வாழ்வியலுக்கும் சூரியன் முதன்மையானவன். வேளாண் மக்களுக்கு அறுவடைத் திருநாள் பொங்கல் விழா. பண்டைத் தமிழரின் மங்கல வழக்கு. இந்த உலகத்துக்கு வெளிச்சமாகவும், "கார்போஹைட்ரேட்' மாவுப் பொருள் தரும் தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்கு உதவியாகவும் இருப்பது சூரிய ஆற்றல் மட்டுமே. மத, இன, மொழி, கட்சி பேதம் இன்றி அனைவருக்கும் இலவசமாக ஒளி வழங்கும் அமுதசுரபி. பூமிக்கு வெளியில் இருந்து வரும் ஒரே அண்டவெளி முதலீடு சூரிய ஒளி.
  • "வான மூழ்கிய வயங்கு ஒளி நெடுஞ்சுடர்க் கதிர்காயத்து எழுந்து அகம் கனலி ஞாயிறு' (163) என்பது கன்னம்புல்லனார் இயற்றிய நற்றிணைப் பாடல். அறிவியல் செறிவு மிக்க அற்புத வரிகள். "அகம் கனலி' என்கிற சொல்லாட்சி அருமை. சூரிய உள்ளகத்தில் அதீத வெப்ப அணுப் பிணைவு நிகழ்கிறது. ஹைட்ரஜன் அணுக் கருக்கள் ஹீலியமாக உருவாகும் அணு உலை சூரியன்.
  • அதிலும் ஏறத்தாழ 15 லட்சம் குறுக்களவு கொண்ட பிரம்மாண்ட சூரிய அணுப் பந்தின் மையத்தில் இருந்து ஒரு நியூட்ரினோ இம்மி மேற்பரப்புக்கு வருவதற்கே பல லட்சம் ஆண்டுகள் பிடிக்கும் என்றால் வேறு சொல்வானேன்?
    "வயங்கு ஒளி' சூரியனின் வெப்ப ஒளிப்படலம். பல லட்சம் பாகை அழல் நாக்குகள் நீட்டிச் சுடர்கின்ற "நெடுஞ்சுடர்க் கதிர்', சூரியப் புறப்படலம் அல்லவா? ஜெர்மனி ஹெய்டல்பர்க் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சிக் கூடத்தினர்  அண்மையில் நடத்திய பரிசோதனை, சூரியனின் பிறப்பை அளந்தறிய முயற்சிக்கிறது. 
  • ஏறத்தாழ 456 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அடர்த்தியான மூலக்கூறு முகில் திரள்கள் அதீத ஈர்ப்பு விசையினால் அசுர வேகத்தில் கவர்ந்து இழுக்கப்பட்டன. அவை முட்டி மோதியதால் சூழ்ந்திருந்த வாயுக்களும் தூசுக்களும் இறுகிச் சுழல ஆரம்பித்ததாம்.

சூரிய முகில்

  • அந்தச் "சூரிய முகில்' ஆகிய நெபுலாவில் இருந்து கோள்கள், சந்திரன்கள், குறுங்கோள்கள், கோளாங்கற்கள், வால்விண்மீன்கள் எல்லாம் உருண்டு திரண்டன. சூரியக் குடும்பத்தில் உருவான முதலாவது திடப் பொருள் கால்ஷியம்-அலுமினியம் அடங்கிய சுதைப் பொருள் தானாம். இரண்டாம் நிலை அயன நிறைமாலையளவி போன்ற நவீன உபகரணங்களால் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • அண்மையில் "எஃப்ரெமோவ்கா' என்கிற விண்தாதுவில் இருந்து வெளிப்படும் கன உலோக அணுக்கருக்களின் கதிர்வீச்சுகள் பதிவாகியுள்ளன. சூரியக்காற்று வீச்சின்போது விண்தாதுக்களில் படிந்த பல்லாடியம், ஹாஃப்னியம், இண்டியம், புளூட்டோனியம் போன்றவற்றின் அணுத்துகள்கள் இவை. இந்த விண்கொள்ளிகளின் அணுக்கதிர் வீச்சுகள், சூரியப் புயலின் நவீன எக்ஸ்-கதிர்வீச்சினைக் காட்டிலும் பல லட்சம் மடங்கு வீரியம் கொண்டவை. அண்மையில் "நேச்சர் அஸ்ட்ரானமி' என்கிற இயற்கை வானவியல் இதழில் வெளியான தகவல் இது.
  • அவற்றுள் குறைந்த ஆயுள் கொண்ட அலுமினியம்-26, கால்சியம்-41, மாங்கனீஸ்-53, இரும்பு-69 ஆகிய தனிமங்களும் உள்ளன. இயல்பினைவிடக் கூடுதல் அணுநிறை (புரோட்டான் துகள்கள்) உடையவை. பிரபஞ்சத்தில் குறைந்த ஆயுள் என்பது அற்பாயுசு இல்லை. சராசரி 100-110 ஆண்டுகள். சூரிய மண்டல உருவாக்கத்தில் இந்த விண்தாதுக்களின் பங்கு கணிசமானது.
  • இத்தகைய குறை ஆயுள் அணுக்கருக்களே சூரியக் குடும்பத்தின் கோள்களும் சந்திரன்களும் உருவாகக் காரணம்.

சூரியன்

  • நமக்கு அருகில் இருக்கும் ஒரே விண்மீன் சூரியன். ஏறத்தாழ 15 கோடி கி.மீ. தொலைவில் இருக்கிறது. துல்லியமாகச் சொன்னால் 14,95,97,870.696 கி.மீ. ஆனால், 2004-இல் கிரிகொரி ஏ. கிராசின்ஸ்கி மற்றும் விக்டர் ஏ. ப்ரம்பர்க் ஆகியோர் பூமிக்கும் சூரியனுக்குமான இடைவெளி ஆண்டுதோறும் அரை அடி வீதம் அதிகரிப்பதாக ஆராய்ந்து அறிவித்தனர். அப்புறம் என்ன, சூரியன் நம்மை விட்டு விலகுகிறது. அதனால், பூமியில் வெப்பம் குறைந்துவிடும் என்று மட்டும் கற்பனை செய்ய வேண்டும்.
  • இன்றைய மஞ்சள் சூரியன், வெப்பம் தணிந்து சிவப்புச் சூரியனாக ஊதிப் பெருகி நமக்கு அருகில் வந்துவிடும். இப்படி ஒரு கணிப்பும் இருக்கிறது. சூரியன் ஒவ்வொரு விநாடியிலும் இழக்கும் பொருள் அளவு 60 லட்சம் டன்கள். கிட்டத்தட்ட 3 லட்சம் சரக்கு லாரி எடைக்குச் சமம் என்றால் பாருங்களேன். ஒவ்வொரு கணப்பொழுதும் அண்டவெளிக்குள் ஆற்றலை இறைத்துவரும் சூரியனின் பொருண்மையும் அதன் ஈர்ப்புவிசையும் குறைகிறது. அதனால்,  சூரியனை பூமி சுற்றிவரும் வேகமும் 100 ஆண்டுகளுக்கு 3 மில்லி விநாடி (ஒரு மில்லி-விநாடி என்பது ஒரு விநாடியின் ஆயிரத்தில் ஒரு பங்கு) வீதம் தளர்ந்து வருகிறது.
  • உண்மையில் சந்திரனின் சுற்றுவட்டமும் ஆண்டுதோறும் 4 செ.மீ. வீதம் விரிவடைந்து வருகிறது. சந்திரனின் பருமனும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறதாம். நிலவின் முகத்தில் வயதான சுருக்க ரேகைகள் மாதிரி, அதன் தரைப்பரப்பில் பல்வேறு "முண்டு விரிசல்கள்' பதிவாகியுள்ளன. நிலவு கண்காணிப்புச் சுற்றுகலன் அனுப்பிய தகவல் இது.

விக்ரம் விண்கலன்

  • சந்திரனேகூட கடந்த 100 கோடி ஆண்டுகளுக்குள் எந்த விளம்பர மருந்தும் சாப்பிடாமல் உடல் மெலிந்து 100 மீட்டர்கள் அளவு சுருங்கி விட்டது என்கிறார்  அமெரிக்க ஸ்மித்சோனியப் பல்கலைக்கழகத்தின் ஆவுக் குழுத் தலைவரான தாமஸ் வாட்டர்ஸ்; அதாவது, ஒவ்வொரு நூற்றாண்டும் நம் நிலவு 10 மைக்ரோன் அளவு மெலிந்து வருகிறது; இது சராசரி தலைமுடி அளவில் பத்தில் ஒரு பங்கு . இதற்குப் போய்ப் பயப்படுவானேன்? நிலவில் இந்திய "விக்ரம்' விண்கலன், 2019 செப்டம்பர் 7 அன்று மோதி விழுந்தது. மூன்றாம் நாளிலேயே (10-09-2019) விண்வெளித் துறை அதனைக் கண்டு பதிவிட்டது.  2019 அக்டோபர் 10 அன்று சந்திரயான் - 2 சுற்றுகலனில் இடம்பெறும் சூரிய எக்ஸ்-கதிர்ப் படக் கருவியில் சூரியப் புயல் பதிவாகியுள்ளது.
  • இன்னொரு சங்கப் பாடலில் "உரவுச்சினம் திருகிய உருகெழு ஞாயிறு' (புறம். 25:3) என்கிற வரிகளில் ஞாயிறு தன் உடலை முறுக்கிக் கொண்டு இருக்கிறதாகக் காட்டப்படுகிறது. அற்புதமான அறிவியல் உண்மை . இன்றைக்கும் அதன் துருவமுனைகள் ஒரு சுழற்சிக்கு 25 நாள்களும், இடுப்புப் பகுதி 34 நாள்களும் எடுத்துக் கொள்கின்றன. நனைத்த துணி முறுக்கிப் பிழிவது போன்ற தோற்ற திருகிய நிலை.

காரணங்கள்

  • இப்படியாக, வானவியல் உருமாறிக் கொண்டிருக்கிறது. கி.மு. 3000-ஆம் ஆண்டு வாக்கில் தூபான் எனும் விண்மீனே  துருவ விண்மீனாக இருந்தது. இன்று துருவ விண்மீனாகத் தோன்றும் "போலாரிஸ்'கூட நிலையானது அல்ல. காரணம், பூமியின் சுழற்சி அச்சு ஏறத்தாழ ஒவ்வொரு 400 ஆண்டுகளுக்கும் 3 பாகை வீதம் பூமி பம்பரம் போல் தலையாட்டம் போடுகிறது.
  • 1831-ஆம் ஆண்டு ஆர்க்டிக் துருவத்தின் அருகே இருந்த புவிகாந்த மண்டலத்தின் சுழற்சி அச்சு, இன்றைக்கு 2,300 கி.மீ. இடம்பெயர்ந்து ரஷிய நாட்டு சைபீரியாவை நெருங்கி விட்டது. கடந்த 20 ஆண்டுகளில் இதன் இடப்பெயர்ச்சி வேகமும் அதிகரித்துள்ளதாம். ஆண்டுக்கு 55 கி.மீ. இந்த வானத்திரை ஆண்டுதோறும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. மானிடக் கொள்கைகளும் கலாசாரங்களும் மாறிவரும் சமுதாயச் சூழலில் பூமித் தரையிலும் புதுமையான மாற்றங்கள் காண்பது காலத்தின் கட்டாயம்.

நன்றி: தினமணி (15-01-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்