TNPSC Thervupettagam

பூச்சிக்கொல்லிகள் மேலாண்மை மசோதா

February 28 , 2020 1783 days 970 0
  • நமது உணவையும், இந்திய விவசாயத்தையும் பாதிக்கும் மிக முக்கியமான பிரச்னை குறித்துப் பரவலான விவாதமோ, புரிதலோ இல்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

"பூச்சிக்கொல்லிகள் மேலாண்மை மசோதா - 2020'

  • "பூச்சிக்கொல்லிகள் மேலாண்மை மசோதா - 2020' நாடாளுமன்றத்தில் விரைவிலேயே தாக்கல் செய்யப்பட இருக்கிறது. நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காகத் தாக்கல் செய்யப்பட இருக்கும் மிக முக்கியமான மசோதா ஒன்று, மக்கள் மன்றத்தின் போதிய கவனத்தைப் பெறவில்லை. பூச்சிக்கொல்லிகளின் விற்பனையும், பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் பாதிப்புகளுக்குத் தயாரிப்பாளர்கள் போதிய இழப்பீடு வழங்குவதும் இந்த மசோதாவின் மூலம் முறைப்படுத்தப்பட இருக்கின்றன. 
  • அமெரிக்காவிலும், ஏனைய வளர்ச்சி அடைந்த பல நாடுகளிலும் "பாயர் மொன்சான்ட்டோ' பன்னாட்டு ரசாயன பூச்சிக்கொல்லி தயாரிப்பு நிறுவனம் இழப்பீடு கோரி நூற்றுக்கணக்கான வழக்குகளை எதிர்கொள்கிறது. அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளான  "ரவுண்ட் அப்', "டிகாம்பா' பூச்சிக்கொல்லிகள் இரண்டும் புற்றுநோய்க்குக் காரணம் என்று பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் ஆய்வுகள் வெளிப்படுத்தியிருக்கின்றன.
  • மிகவும் ஆபத்தான பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாயத்தில் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. உலகின் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனையில் 59% இந்தியாவில்தான் காணப்படுவதாக அந்தப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஜப்பான் 52%, பிரேஸில் 49%, அமெரிக்கா 36%, பிரிட்டன் 11% என்று  அந்தப் பட்டியல் நீளுகிறது.

வகைப்பாடு

  • "மனித ஆரோக்கியத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் நச்சு ரசாயனங்கள் அதிக அளவில் காணப்படும் பூச்சிக்கொல்லிகளை மிக ஆபத்தான பூச்சிக்கொல்லிகள்' என்று உலக சுகாதார நிறுவனமும், ஐ.நா. சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனமும் வகைப்படுத்துகின்றன. அந்த வகையில் பார்த்தால், "ரவுண்ட் அப்' பூச்சிக்கொல்லியில் காணப்படும் "க்ளைஃபோசேட்' மனிதர்களுக்குப் புற்றுநோயை ஏற்படுத்தும் என்று சர்வதேச  புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
  • சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான வழக்குகள் தொடரப்பட்டன. நச்சுப் பூச்சிக்கொல்லிகள் தடை செய்யப்பட வேண்டும் என்று கோரித் தொடரப்பட்ட அந்த வழக்குகளுக்கு எதிராக "பாயர் மொன்சான்ட்டோ' பன்னாட்டு நிறுவனமும் பிரசாரத்தில் ஈடுபட்டது. ஐரோப்பிய ஆணையமும், அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பும் புற்றுநோய்க்கும் க்ளைஃபோசேட்டுக்கும் இடையேயான தொடர்பை ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பது அந்த நிறுவனத்தின் எதிர்வாதம்.
  • கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி, மிசெளரியைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு 265 மில்லியன் டாலர் (ரூ.1,899 கோடி) இழப்பீடு வழங்க அமெரிக்க பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. தனது பண்ணையை ஒட்டிய இன்னொரு பண்ணையில் அடிக்கப்பட்ட "டிகாம்போ' பூச்சிக்கொல்லியால் தனது விளைச்சலும் நச்சாகி விட்டதாக அவரால் நிரூபிக்க முடிந்தது. இதுபோல "டிகாம்போ'வுக்கு எதிராகப் பல வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன.

இந்திய விவசாயிகள்

  • "க்ளைஃபோசேட்' என்கிற ரசாயனத்துக்கு எதிராகவும் பல வழக்குகள் தொடரப்பட்டு அமெரிக்க நீதிமன்றங்கள் இழப்பீடு வழங்கியிருக்கின்றன.
  • முதலில் 2.3 பில்லியன் டாலர் (ரூ.16,485 கோடி) இழப்பீடு விதிக்கப்பட்டு, 190 மில்லியன் டாலராக (ரூ.1,361 கோடி) குறைக்கப்பட்டது. "க்ளைஃபோசேட்' ரசாயனத்தால் புற்றுநோய்க்கான வாய்ப்பு உண்டு என்பதை அந்த நிறுவனம் முன்கூட்டியே எச்சரிக்கவில்லை என்பதுதான் இழப்பீட்டுக்குக் காரணம்.
    இந்திய விவசாயிகள் அமெரிக்க விவசாயிகளைப் போல விழிப்புணர்வுடன் இல்லை. சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வலிமையாக இல்லை.
  • ஆண்டுதோறும் இந்தியாவில் 10,000-க்கும் அதிகமான பூச்சிக்கொல்லி நச்சுப் பாதிப்பு வழக்குகள் சராசரியாகப் பதிவு செய்யப்படுவதாக "டவுன் டு எர்த்' என்கிற இதழ் சுட்டிக்காட்டுகிறது. 2015-இல் பூச்சிக்கொல்லியினாலான மரண விபத்துகளின் எண்ணிக்கை 7,060 என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது.
  • அரை நூற்றாண்டுக்கு முன்பே அமெரிக்காவின் "கார்னெல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டேவிட் பிமென்டெல் விடுத்த எச்சரிக்கைக்கு மனித இனம் செவிமடுத்திருந்தால், இந்தப் பிரச்னையே எழுந்திருக்காது. பயிர்களுக்குத் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளில் 99.9% சுற்றுச்சூழலுக்குத்தான் செல்கின்றன. வெறும் 0.01% மட்டுமே பூச்சிகளைக் கொல்கின்றன.
  • பூச்சிக்கொல்லிகள் நச்சு என்பதும், அதனால் மனித இனத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பல பாதிப்புகள் ஏற்படும் என்பதும் தெரிந்தும், வேறு மாற்று கண்டுபிடிக்காமல் அதைப் பயன்படுத்தியது யாருடைய குற்றம்?'
  • ரூ.20,000 கோடி அளவிலான பூச்சிக்கொல்லி தயாரிப்புத் துறை, ஆண்டொன்றுக்கு 8.1% என்கிற அளவில் 2024-ஆம் ஆண்டு வரை வளரக்கூடும் என்பது தொழில் துறையின் கணிப்பு.
  • அதனால், இப்போதே பூச்சிக்கொல்லித் தயாரிப்பு நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடு விதிப்பதும், பயன்பாட்டை முறைப்படுத்துவதும், அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதும் அத்தியாவசியமாகிறது. 
    "பூச்சிக்கொல்லிகள் மேலாண்மை மசோதா - 2020' உடனடியாகத் தாக்கல் செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்படுவதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

நன்றி: தினமணி (28-02-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்