- 1955 இல் அமெரிக்காவின் ‘லைஃப்’ இதழில் ஒரு விளம்பரம் வெளிவந்தது. ஞெகிழியால் தயாரிக்கப்பட்ட தட்டுகள், கோப்பைகள், கரண்டிகளை ஒரு குடும்பம் காற்றில் வீசும் ஓர் ஒளிப்படம் அதில் இடம்பெற்று இருந்தது. ‘இந்தப் பொருள்களைச் சுத்தப்படுத்த நேரமாகாது; இனி இல்லத்தரசிகள் கவலைப்பட வேண்டியதில்லை; பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறியுங்கள்’ என்கிற வாசகம் இடம்பெற்றிருந்தது.
- இந்த அளவுக்குக் கொண்டாடப்பட்ட ஞெகிழி எப்படி ஆபத்தானதாக மாறியது. அந்த ஒளிப்படத்தில் உள்ள ஞெகிழிக் குப்பை எப்போது தரையில் விழுந்ததோ, அப்போதி லிருந்தே அது ஆபத்தானதாக மாறிவிட்டது.
ஆபத்தின் வீரியம்:
- 1950இல்தான் ஞெகிழி உற்பத்தி பரவலாகத் தொடங்கியது. இருப்பினும், இன்று 900 கோடி டன்களுக்கு மேலான ஞெகிழியைச் சமாளித்தாக வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். அதில், 700 கோடி டன்களுக்கு மேலானவை ஞெகிழிக் கழிவுகளாக மாறியுள்ளன. அதிலும் 630 கோடி டன் மறுசுழற்சி நிலையைச் சென்றடைய வில்லை. இதிலிருந்து நாம் எதிர்கொண்டிருக்கும் ஆபத்தின் வீரியத்தைப் புரிந்துகொள்ளலாம்.
எப்படிப் புரிந்துகொள்வது?
- 2015இன் மதிப்பீட்டின்படி, கடலோரப் பகுதிகளிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் 53 லட்சம் முதல் 140 லட்சம் டன் வரை மறுசுழற்சி செய்யப் படாத ஞெகிழிக் கழிவு கடலில் கலக்கிறது. இவற்றில் பெரும் பங்கு நிலத்திலோ ஆறுகளிலோ பொறுப்பற்ற முறையில் மனிதர் களால் கவனக் குறைவாகக் கொட்டப்பட்ட குப்பையே (குறிப்பாக, ஆசியாவில்). ஆண்டுதோறும் கடலில் கலக்கும் ஞெகிழிக் கழிவின் சராசரி அளவு சுமார் 88 லட்சம் டன்.
- உலகெங்கிலும் உள்ள கடற்கரையின் ஒவ்வோர் அடியிலும், ஞெகிழிக் கழிவு நிறைந்த ஐந்து ஞெகிழி சாக்குகள் இருப்பதைக் கற்பனை செய்து பாருங்கள். 88 லட்சம் டன் கழிவு என்பது அந்த அளவுக்கு இருக்கும். ஞெகிழி மக்குவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. மதிப்பீடுகளின்படி, 450 ஆண்டுகள் ஆகலாம்; சில ஞெகிழிக் கழிவுகள் மக்காமலேயே நீடிக்கலாம்.
மடியும் உயிர்கள்:
- பெருங்கடல்களில் கலந்திருக்கும் ஞெகிழிக் கழிவால், ஒவ்வோர் ஆண்டும் கோடிக்கணக்கான கடல் உயிரினங்கள் மடிகின்றன. இதில் அருகி வரும் 700 கடல் உயிரினங்களும் அடங்கும். ஆழமான கடற்பரப்பின் வண்டல் முதல் ஆர்க்டிக்கில் மிதக்கும் பனிப்பாறை வரை அனைத்து இடங்களிலும் நுண்ஞெகிழி (மைக்ரோபிளாஸ்டிக்) நிரம்பியுள்ளது. கடலில் உள்ள நுண்ம உயிரினத் தொகுதி (ஜூப்ளாங்க்டன்) முதல் திமிங்கிலங்கள் வரை இந்த நுண்ஞெகிழியைச் (மைக்ரோபிளாஸ்டிக்) சாப்பிடுகின்றன.
- இவை போதாது என்று, ஞெகிழியில் சேர்க்கப் படும் வேதிப்பொருள்கள் நுண் ஞெகிழியை மேலும் சிதைத்து நானோ ஞெகிழியாக மாற்றுகின்றன. இந்த நானோ ஞெகிழி மீன்கள், மனிதர்களின் திசுக்களுக்குள்ளும் செல்லக்கூடும். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், நானோ ஞெகிழித் துகள்களை நாம் கண்டறிய முடியாது என்பதே. நானோ ஞெகிழித் துகள்கள் ஏற்கெனவே நம்முடைய திசுக்களில் நுழைந்துவிட்டன.
கட்டுப்பாடில்லா உற்பத்தி:
- 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்தான் ஞெகிழியைக்கொண்டு எதையும் உருவாக்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டது. அவை மலிவாக இருந்ததால், சந்தையில் அந்தப் பொருள்கள் நிரம்பிவழிந்தன. கடந்த 15 ஆண்டுகளில் ஞெகிழி உற்பத்தி அபரிமிதமாக உயர்ந்தது.
- இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட ஞெகிழியில் பாதியளவு கடந்த 15 ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்டதே. தற்போது ஞெகிழி உற்பத்தியின் வளர்ச்சி, கழிவு மேலாண்மைத் திறனைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. ஞெகிழிக் கழிவால் இன்று நாம் சந்திக்கும் நெருக்கடிக்கு இதுவே அடிப்படை காரணம்.
நமது பங்களிப்பு:
- ஞெகிழிக் கழிவு எப்படி உருவாகிறது என்பது நமக்குத் தெரியும்; அதை மறுசுழற்சி செய்வது எப்படி என்பதும் நமக்குத் தெரியும். நாம் செய்ய வேண்டியது எல்லாம், அதற்குத் தேவையான நிறுவனங்களையும் அமைப்புகளையும் திட்டங் களையும் உருவாக்குவதே. மீளமுடியாத நிலைக்குச் செல்வதற்கு முன் இவற்றை நாம் உருவாக்க வேண்டும்.
- இந்த நோக்கில்தான், ஐநாவின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) பல முன்னெடுப்புகளைச் செயல் படுத்திவருகிறது. இந்தத் திட்டத்தின் உண்மையான, நிலையான வெற்றிக்கு நம் அனைவரது பங்களிப்பும் ஒத்துழைப்பும் அவசியம் தேவை.
- 50,000 கோடி ஞெகிழி பைகள் ஒவ்வோர் ஆண்டும் பயன்படுத்தப்படுகின்றன.
- 1,30,00,000 டன் ஞெகிழி ஒவ்வோர் ஆண்டும் கடலில் கலக்கிறது.
- 1,70,00,000 பீப்பாய் (Barrels) கச்சா எண்ணெய் ஞெகிழி உற்பத்திக்கு ஒவ்வோர் ஆண்டும் பயன்படுத்தப்படுகிறது.
- 10,00,0000 ஞெகிழி பாட்டில்கள் ஒவ்வொரு நிமிடமும் வாங்கப் படுகின்றன.
- 1,00,0000 கடல் உயிரினங்கள் ஒவ்வோர் ஆண்டும் ஞெகிழியால் உயிரிழக்கின்றன.
- 90 சதவீத பாட்டில் தண்ணீரில் ஞெகிழித் துகள்கள் இருக்கின்றன.
- 83 சதவீதக் குழாய் நீரில் ஞெகிழித் துகள்கள் இருக்கின்றன.
- 50% சதவீத ஞெகிழி ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
- உலக சுற்றுச்சூழல் நாள் (ஜூன் 5)
நன்றி: தி இந்து (03 – 06 – 2023)