- வளிமண்டலத்தில் கார்பன் அளவு அதிகரிப்பதால் புவி வெப்பமடைகிறது. இதன் தொடர்ச்சியாக பூமியின் வட-தென் தருவ பகுதிகளிலும் இமயமலை போன்ற உயரமான மலைகளிலும் உள்ள பனிப்பாறைகள் உருகி வருகிறது. உருகிய நீர் கடலில் கலந்து விடுகிறது.
- பனிக்கட்டியின் அடர்த்தி குறைவு; நீரின் அடர்த்தி கூடுதல் என்பதால் பனிக்கட்டியாக உள்ளபோது அடைத்துக்கொண்ட இடத்தை விட நீராக மாறும்போது கூடுதல் இடத்தை எடுத்துக்கொள்கிறது.
- பூமி தன்னைத்தானே ஒருநாளில் சுற்றி வருகிறது. எனவே பூமத்தியரேகையில் உள்ள ஒரு புள்ளி மணிக்கு 1,669.8 கி.மீ. வேகத்தில் கிழக்கு நோக்கி செல்லும். அதே சமயம் வட-தென் துருவ புள்ளி அதே இடத்தில் ஒருநாளைக்கு ஒருதடவை சுழல்வதால், அதன் அருகே உள்ள புள்ளிகளில் வேகம் மிக மிக குறைவாக இருக்கும்.
- இந்நிலையில், பனிக்கட்டி உருகி கடலில் கலக்கும் நீரில் கணிசமான பகுதி பூமியின் பூமத்திய ரேகை அருகே குவியும். எனவே பூமத்திய ரேகை அருகே பூமியின் விட்டத்தை கணக்கு செய்தால் 1850களிலிருந்து கூடி வருகிறது.
நடனம் போன்ற சுழற்சி:
- சைக்கிளில் டபுள்ஸ் போகும்போது பின்புறம் உட்கார்ந்து வருபவர் தன் கையில் உள்ள கனமான பையை ஒரு கையிலிருந்து மறு கைக்கு மாற்றும் போது சமநிலை தடுமாறும். அதுபோல வட-தென் துருவ பகுதியில் பனிப்பாறைகளாக குவிந்திருந்த, நீர் உருகி கடலில் கலந்து விட்டதால் நிறையின் இடம் மாறி பூமியின் சுழல் வேகத்தை பாதிக்கிறது.
- பனிச்சறுக்கு விளையாட்டில் தன்னை தானே சுழலும் விளையாட்டு வீரர் தனது கைகளை நீட்டி விரித்தால் அவரது சுழல் வேகம் குறையும்; அதுபோலமார்பின் அருகே கைகளை மடக்கி பிடித்துக்கொண்டால் சர் என்று அவரது சுழல் வேகம் கூடும். சுழல் உந்தம் அழியாமை விதி எனும் இதே இயற்பியல் விதியின் விளைவாக பூமியின் உருவம் பெரிதானால் அதன் சுழல் வேகம் குறைந்து தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எடுக்கும் நேரம் கூடிவிடும்.
- மாவு டப்பாவை தட்டினால் மாவு கெட்டிப்பட்டு மேலே இடம் உருவாவது போல, நிலநடுக்கம் காரணமாக பூமியின் அடர்த்தி கூடி அதன் உருவம் நுண் அளவில் சிறுத்துவிடலாம். சுனாமியை ஏற்படுத்திய 2004இல் 9.1 ரிக்டர் அளவு இந்தோனேசிய பூகம்பத்தின் விளைவாகப் பூமியின் அளவு சற்றே இளைத்துக் கூடுதல் வேகத்தில் பூமி சுழன்றது.
லீப் வினாடி:
- சூரியனின் இயக்கத்தோடு சரியாக இணைக்க நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிப்ரவரி மாதத்தில் ஒருநாள் கூடுதலாக லீப் நாள் சேர்ப்பது போல லீப்வினாடி என்பதை விஞ்ஞானிகள் கணக்கிடுகின்றனர். அவ்வப்போது ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாக இதுவரை பூமியின் வேகம் கூடி கூடி சென்றதால் 1972இல் முதல் லீப் வினாடி இணைக்கப்பட்டது.
- இப்படி இதுவரை 27 முறை லீப் வினாடிகள் சேர்க்க வேண்டி வந்தது. அடுத்த லீப் வினாடியை 2026இல் புகுத்த வேண்டும். ஆனால், பனி உருகி கடல் மட்டம் உயர்ந்துள்ளதால் பூமியின் சுழல் வேகம் குறைந்து லீப் வினாடியை சேர்க்கும் நேரம் தள்ளிப்போய்விட்டது.
- அநேகமாக 2030இல் தான் அடுத்த லீப் வினாடியை சேர்க்க வேண்டி இருக்கும். ஆனால், மென்மேலும் பூமியின் சுழல் வேகம் குறைந்து வருவதால், இனி வரும் காலங்களில் லீப் வினாடியை நீக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
நன்றி: இந்து தமிழ் திசை (04 – 06 – 2024)