- அண்டெஸ் மலைத்தொடரின் கிழக்கில் இருந்து அமேசான் மழைக் காடு தொடங்குகிறது. இது உலகின் மிகப் பெரிய மழைக் காடாகும். சுற்றுச்சூழலின் அதிமுக்கியத்துவத்தை உணர்த்தும் வனங்களைக் கொண்டது.
கரியமில வாயுவை அதிகளவில் உட்கொள்ளும் திறன் வாய்ந்த இந்தக் காடுகள், 20 சதவீத ஆக்சிஜனை இந்த பூமிக்குத் தருகின்றன. வனப்பும், வசீகரமும் கொண்டவை இந்தக் காடுகள். எண்ணற்ற செடி, கொடிகளையும், மூலிகைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள அமேசான் மழைக் காடுகளில் ஆபத்தும் நிறைந்திருக்கிறது. அதனால்தான் இந்தக் காடுகளுக்குள் சென்று விட்டு எளிதில் மீண்டுவர முடியாது. அதற்கு காரணம், அங்கு வாழும் விலங்குகளின் இயற்கை அமைப்புகளும், தண்ணீரின் ஓட்டமும், இருட்டான சூழ்நிலையும்தான்.
அமேசான் காடுகள்
- அமேசான் காடுகளை உருவாக்கிய பெருமை அமேசான் நதிக்கே சேரும்.
அமேசான் காடுகளின் ஜீவாதாரமாய் விளங்கும் அமேசான் நதி உலகின் மிகப்பெரிய நதியாகும். உலகின் மூன்றில் ஒரு பங்கு விலங்கினங்கள், இந்தக் காடுகளில்தான் வசிக்கின்றன. அமேசான் நதி, மேற்கில் இருந்து கிழக்கு நோக்கிப் பாயும் ஆறாகும். இதற்கு 17 பெரிய ஆறுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய கிளை ஆறுகளும் உள்ளன.
- மீன்கள், பறவைகள், நிலநீர் வாழும் உயிரினங்களை உள்ளடக்கிய ஒரு மர்மமான மற்றும் சக்திவாய்ந்த இடமாக இந்த மழைக்காடு கருதப்படுகிறது.
மக்கள்தொகைப் பெருக்கம், நெடுஞ்சாலைத் திட்டம் போன்றவற்றால் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.
- சுமார் 25 லட்சம் வகையான பூச்சி இனங்கள், ஆயிரக்கணக்கான தாவர வகைகள், ஏறத்தாழ 2,000 பறவையினங்கள், பாலூட்டிகள் முதலானவற்றுக்கு உயிரியல் வளம் மிக்க இந்த மழைக் காடுகள் வாழ்விடமாக விளங்குகின்றன. அமேசான் காடுகள் பெரும்பாலும் பிரேசில் நாட்டில் அமைந்துள்ளதால், அந்த நாடு உலகிலேயே ரஷியாவுக்கு அடுத்து இரண்டாவது பெரிய வனவளத்தை, அதாவது 47,76,980 ஹெக்டேர் பரப்பளவு கொண்டுள்ளதாக அமைந்துள்ளது.
உலக உயிரினங்கள்
- உலக உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு, அமேசான் காடுகளில்தான் வசிக்கின்றன. அமேசான் ஆற்றுப் படுகையில் 54 லட்சம் சதுர கிலோமீட்டர் அளவுக்கு மழைக் காடுகள் அமைந்துள்ளன. அமேசான் மழைக் காடுகள், உலகின் மிகப் பெரிய உயிரியல் ஆய்வுப் பிரதேசமாக விளங்குகிறது. இங்கு ஓடும் அமேசான் பிரதான ஆறு 4,080 மைல் (சுமார் 6,566 கிலோமீட்டர்) நீண்டுள்ளது. அதன் வடிகால் 27,22,000 சதுர மைல்களை (சுமார் 70,49,980 சதுர கிலோமீட்டர்கள்) உள்ளடக்கியது.
- உலகில் உள்ள மொத்த நதி நீரில் 16 சதவீதம் அமேசான் டெல்டா வழியாகப் பாய்கிறது. 28 பில்லியன் கேலன்கள் நீர் ஒவ்வொரு நிமிஷத்துக்கும் அட்லாண்டிக் கடலுக்குள் பாய்கிறது. இந்த ஆற்றுத் தண்ணீர் கடலுக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட மைல் வரைக்கும் கலந்து கடலின் உப்புத் தன்மையின் செறிவைக் குறைக்கிறது.
- ஒன்றரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு அமேசான் நதி பசிபிக் பெருங்கடலில் மேற்கு நோக்கிப் பாய்ந்துள்ளது. தென் அமெரிக்க தகடு மற்றொரு டெக்டானிக் தட்டின் மீது நகர்த்தப்பட்ட இயற்கை மாற்றத்தால் அண்டெஸ் மலைகள் மெதுவாக உயர்ந்தன. அமேசான் சூழல் கடுமையாக மாற்றப்பட்டது. பிறகு, அமேசான் நதிக்கு, அட்லாண்டிக் நோக்கி கிழக்கு வழி திறக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இவை பழங்கால பூகோள மாற்றங்களாகக் கருதப்படுபவை.
பழங்காலங்களில்
- பண்டைக்காலம், இடைக்காலம், இக்காலம் என்று மூன்று பிரிவுகளாக பிரித்தோமேயானால், சுமார் 50 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வடக்கே லாரேசியா, தெற்கே கோண்டுவானா என இரண்டு நிலப்பரப்புகளாக இருந்தது. அதன் பின் சற்றேறக்குறைய 27 கோடி ஆண்டுகள் கடந்து பாஞ்சயா ஒற்றைத் திட்டாக பூமி மாறி விட்டது. புவித் தட்டு நகர்வால் பாஞ்சயாவும் உடைந்து இப்போதுள்ள கண்டங்கள் உருவாகின என்பதை புவியியல் ஆய்வாளர்கள் ஆராய்ச்சியின் வழியாகக் கண்டறிந்திருக்கிறார்கள்.
- பாஞ்சயா கண்டமாக இருந்த காலத்தில் கங்கோவின் தொடக்ககால ஆற்றுப் பகுதியில் அமேசான் மேற்கு நோக்கிப் பாய்ந்து வந்தது. இதே காலகட்டத்தில் தென் அமெரிக்காவில் இருந்து ஆப்பிரிக்கா துண்டிக்கப்பட்டு எதிர்த்திசையில் நகர்ந்தது. இந்த இடைவெளியின் நடுவே உருவானதுதான் அட்லாண்டிக் பெருங்கடல். அதுவரை அமேசான் ஆறு மேற்கு நோக்கி பசிபிக் பெருங்கடலில் கலந்து கொண்டிருந்தது.
- அந்தக் காலத்தில்தான் உலகின் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. தென் அமெரிக்கா பூமித் தட்டும், நாஸ்கா தட்டும் ஒன்றுடன் ஒன்று நெருங்கியதன் விளைவாக உருவானதுதான் அண்டெஸ் மலைத்தொடர்.
- அண்டெஸ் மலையின் எழுச்சியும், உலகில் நிகழ்ந்த நிலவியல் மாற்றங்களும் அமேசான் ஆற்றையும், போக்கையும் மாற்றின. சுமார் 1,000-த்துக்கும் மிகுதியான துணை ஆறுகளைக் கொண்டுள்ளது அமேசான். இவற்றில் 17 ஆறுகள் 1,000 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டவை.
உருவாக்கம்
- அண்டெஸ் மலைத்தொடர் உயரத்தால் பிரேசில் கயானாவில் இருந்த பாறைத் திட்டுக்கள் அமேசானின் ஓட்டத்தைத் தடுத்தன. இதே காலகட்டத்தில்தான் அமேசான் ஆற்றின் கரையின் இருபுறமும் நீரோட்டம் அதிகரித்து, அமேசான் மழைக் காடுகள் உருவாகின. பல கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான அமேசான் இன்று தனிச்சிறப்புடன் தனது ஓட்டத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
- இத்தகைய ஆகச் சிறந்த பண்டைய வரலாற்றைப் பெற்றிருக்கும் இந்தக் காடுகளை அழிக்கும் நடவடிக்கை ஒவ்வொரு காலகட்டத்திலும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்பது வருத்தத்துக்குரியது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 593 சதுர கிலோமீட்டர் பரப்பளவு காடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் பரப்பளவில் உலகின் 5-ஆவது மிகப் பெரிய நாடான பிரேசில், 53 லட்சம் சதுர கிலோமீட்டர் அடர்ந்த காடுகளைக் கொண்டதாகும். இதில் பெரும் பகுதி அமேசான் நதியையே சுற்றி அமைந்திருக்கிறது.
அமேசான் என்பது ஓர் ஆச்சரியம்.
- ஆண்டு முழுவதும் கொட்டித் தீர்க்கும் மழை, சூரிய வெளிச்சமே பார்க்காத தரை, மரங்களின் இறுக்கமும், நெருக்கமும் கொண்டு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பின்னிப் படர்ந்த அடர்ந்த காடுகள். அதில் வசிக்கும் எண்ணற்ற அபூர்வ பறவைகள், விலங்கினங்கள். அமேசான் என்கிற ஆச்சரியத்தில் இதுவரை வெளி உலகத்தையே பார்த்திராத பழங்குடியினர். மேலும் 6,992 கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டு, பெரிய ஆற்றுப் படுகையைக் கொண்டவை.
- இதன் மொத்த அளவை எடுத்துக் கொண்டீர்கள் என்று சொன்னால், உலகின் 8 பெரிய ஆறுகளின் நன்னீரின் அளவை விடப் பெரியது.
ஆபத்து
- இத்தகைய பெருமையும் பழைமையும் பெற்ற அமேசான் காடுகளுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பலமுறை இந்தக் காடுகள் பற்றி எரிந்துள்ளன. 2018-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மழைக் காடுகள் பற்றி எரியும் நிகழ்வானது 83 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக பிரேசில் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவிக்கிறது.
- இந்த ஆண்டு இதுநாள் வரை 72,000 காட்டுத் தீ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 7,900 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள அமேசான் மழைக்காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த பரப்பளவு லண்டன் நகரைப் போல 5 மடங்குகளாகும். சட்ட
விரோதமாக மரங்கள் வெட்டப்படுவதே இதற்குக் காரணம். குறிப்பாக, பிரேசிலில் ரொரைமா, ஆக்ரி, ரோந்தோனியா மற்றும் அமசோனாஸ் ஆகிய பகுதிகள் இந்தக் காட்டுத் தீ சம்பவங்களால் மிகவும் மோசமாகப் பாதிப்படைந்திருக்கின்றன.
- அமேசானின் காட்டுத் தீ சம்பவங்கள் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்வதுதான். ஜூலை-அக்டோபர் இடையேயான காலகட்டத்தில், மின்னல் வெட்டின் காரணமாக காட்டுத் தீ ஏற்படும். ஆனால், நிலைமை தற்போது அவ்வாறு இல்லை. உலகளாவிய நிதி அமைப்பும், காடுகள் அழிப்பும்தான் இந்தக் காட்டுத் தீக்கு காரணம் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.
- இந்தக் காட்டுத் தீ மற்றும் காடுகள் அழிப்பால் முதலில் பாதிக்கப்படுவது அமேசானில் வாழும் பழங்குடிகள்தான். ஏறத்தாழ 9 லட்சம் பழங்குடிகள் பிரேசிலில் உள்ள அமேசான் வனப் பகுதியில் வாழ்கிறார்கள். அமேசானுக்கு ஏற்படும் எந்த ஒரு சிறு பாதிப்பும் முதலில் இவர்கள் மீதுதான் தாக்கம் செலுத்துகிறது.
ஏற்படும் தீங்குகள்
- காடுகள் அழிவதால் அது சேமித்து வைத்திருக்கும் கரியமில வாயு அதிகளவு காற்று மண்டலத்தில் கலந்து மனிதர்களுக்கு உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். புவி வெப்பமயமாதலையும் இது ஊக்குவிக்கும் என்ற கவலையை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
- அடுத்த 50 ஆண்டுகளில் அமேசான் மழைக்காடுகளில் 65 சதவீத பரப்பளவு அழியும் ஆபத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது தனது 18 சதவீத பரப்பளவை அது இழந்துள்ளது. எங்கோ ஓர் இடத்தில் இருக்கும் அமேசான் காடுகளில் காட்டுத் தீ பரவுவதால் நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அதற்கு பிரான்ஸ் அதிபர் மெக்ரானின் சுட்டுரைதான் பதில். நம் வீடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது .
- நாம் அனைவரும் நல்ல காற்றை சுவாசிக்க வேண்டுமானால், உயிருடன் அமேசான் காடுகள் இருக்க வேண்டும்.
நன்றி: தினமணி(29-08-2019)