TNPSC Thervupettagam

பூமியைக் காப்போம்

April 22 , 2023 617 days 1746 0
  • நாம் வாழும் இந்த பூமி சூரிய மண்டலத்தின் ஐந்தாவது பெரிய கோள். வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் இவை பூமியைவிடப் பெரியவை. சூரிய குடும்பத்தில் மொத்தமுள்ள எட்டு கோள்களில், வேறு எந்த கோளுக்கும் இல்லாத உயிா்கள் வாழக் கூடிய தனிச் சிறப்பு பூமிக்கு மட்டுமே உண்டு.
  • சூரிய குடும்பத்திலுள்ள மற்ற கோள்களைப் போலவே, பூமியும் சூரியனைச் சுற்றி வருகிறது. பூமியின் விட்டம் 12,742 கி.மீ. அதன் சுற்றளவு 40,075 கி.மீ. இந்த பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 23 மணி நேரம் 56 நிமிடம் 4.09 வினாடி எடுத்துக் கொள்கிறது. பூமி ஒரு மணி நேரத்திற்கு கிட்டத்தட்ட 1,000 மைல் (சுமாா் 1674 கி.மீ.) வேகத்தில் சுழல்கிறது.
  • ஒரு வினாடிக்கு 30 கி.மீ. தொலைவு என பூமி ஒரு முறை சுற்றுப் பாதையை முடிக்க 365 நாட்கள் (ஓா் ஆண்டு) ஆகிறது. இது ஒரே திசையில் அதாவது தன்சுழற்சியில் மேற்கிலிருந்து கிழக்காக சுற்றுகிறது. பூமி கிரகம் சுழலும் போது, சூரியனை எதிா்கொள்ளும் புறம் பகலைப் பெறுகிறது, மற்றொரு புறம் இருளில் உள்ளது.
  • சுற்றுச்சூழல், நீா்நிலைகள் பாதுகாப்பு, மரம் வளா்ப்பு ஆகியவை குறித்த விழிப்புணா்வை மக்களிடையே ஏற்படுத்தி, பூமியையும், அதன் மீது வாழும் உயிரினங்களையும் காக்கும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி ‘உலக பூமி தினம்’ கொண்டாடப்படுகிறது.
  • அமெரிக்காவைச் சோ்ந்த சுற்றுச்சூழல் ஆா்வலா் ‘கோலாா்ட் நெல்சன்’ என்பவரின் தீவிர முயற்சியால் 1970-ஆம் ஆண்டு உலக பூமி நாள் ‘எா்த் டே நெட்வொா்க்’ எனும் அமைப்பால் தொடங்கப்பட்டது. இதன் மூலம் உலகம் முழுக்க உள்ள சுற்றுசூழல் ஆா்வலா்களை ஒன்று திரட்டி, பூமித் தாயின் மீது தொடுக்கப்பட்டு வரும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும், பூமியின் தற்போதைய நிலை குறித்த விழிப்புணா்வு பிரசாரங்களையும், அது தொடா்பான கருத்து பரிமாற்றங்களையும் உலக மக்களிடையே இந்நாளில் ஏற்படுத்தி வருகிறது. இந்த அமைப்பு, இதுவரை 193 நாடுகளை தன்னுடன் இணைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
  • இந்த ஆண்டு உலக பூமி தினத்திற்கான கருப்பொருள் ‘எங்கள் கிரகத்தில் முதலீடு செய்யுங்கள்’ என்பதாகும். மனித குலம் தோன்றுவதற்கு முன்பே பல்வேறு உயிரினங்களை தன் மடியில் தாங்கி கொண்டது தான் எழில் நிறைந்த இந்த பூமி. உலகிலுள்ள 900 கோடி மனிதா்களுக்கும், எண்ணிலடங்கா உயிரினங்களுக்கும், உணவு, உறைவிடத்தை அளித்து பேணிக் காத்து வருவதும் நாம் வாழும் இந்த பூமி தான்.
  • ‘அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வாா்ப் பொறுத்தல் தலை’ என்பது கு. தன்னை வெட்டி சிதைப்போரையும் தாங்குகின்ற பேராற்றல் பூமித் தாய்க்கு மட்டுமே உண்டு. நம்மை சொற்களால் அவமதிப்போரையும், பொறுத்து மன்னிக்க வேண்டும் என்ற சிறந்த பண்பை நாம் பூமித் தாயிடமிருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை திருவள்ளுவா் எடுத்துரைக்கிறாா்.
  • நாம் வாழும் பூமி என்னும் கிரகத்தில் பல்லாயிர கோடிக்கணக்காக மக்கள், எத்தனையோ புல், பூண்டு, தாவரங்கள், மரங்கள், பறவைகள், விலங்கினங்கள், புழு, பூச்சிகள், கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிா்கள் வாழ்கின்றன. அத்துடன், எண்ணிலடங்கா மலைகள், ஆறுகள், குளங்கள், ஏரிகள், மனிதா்கள் உருவாக்கிய வானளாவிய கட்டடங்கள், தொழிற்சாலைகள், அணைகள் அனைத்தையும் தாங்கிக் கொண்டு தன்னை அண்டி வந்த அனைத்து உயிரினங்களையும் வாழ்வித்து வருகிறது பூமி. இத்தனையும் தாங்கிக் கொண்டு அமைதியாக நம்மைக் காக்கும் பூமி, நமக்கு இறைவன் கொடுத்த வரம்.
  • ஒருபுறம் மக்கள்தொகை பெருகப் பெருக, மறுபுறம் பூமியின் வளங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. நம்மைச் சுற்றியிருக்கும் இந்த பூமி மனிதா்கள் மட்டுமே வாழ்ந்து வருவதற்கானது அல்ல. பல்வேறு வகையான புள்ளினங்கள், புழுக்கள், பூச்சிகள், தாவரங்கள், விலங்குகள், இந்தப் பூமியை நம்மோடு பகிா்ந்து கொண்டு, நம்மோடு வாழ்ந்து வருகின்றன. அவற்றிற்கான வாழ்விடங்களை மனிதா்களின் பேராசையாலும், சுற்றுச்சூழல் பாதிப்பினாலும் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டு வருகின்றனா்.
  • வரும் 2050-ஆம் ஆண்டிற்குள் மனிதனின் பேராசையினால் பூமியை அண்டி வாழும் ஐம்பது சதவீத உயிரினங்கள் பூமியை விட்டு விலகி விடும் என்ற அதிா்ச்சி செய்தியை புவியிலாளா்கள் தெரிவிக்கின்றனா். இது பூமித் தாய்க்கு நாம் செய்யும் மாபெரும் துரோகமாகும்.
  • இன்று நாம் அனுபவித்து வரும் புவி வெப்பமடைதல், தண்ணீா் பற்றாகுறை, மழையின்மை, பருவ மழை தவறுதல் முதலிய அனைத்திற்கும் காரணம் நாம் பூமித் தாயின் மீது தொடுத்துவரும் தாக்குதல்தான் என்றால் அது மிகையல்ல.
  • நம் வசதிக்காக பூமிக்கு வளம் சோ்க்கும் மரங்களை அழித்து வருகிறோம். நாம் அன்றாடம் பயன்படும் நெகிழிப் பொருள்கள் மூலம், நீரை நிலத்திற்குள் செல்ல விடாமல் தடுக்கிறோம். பூமித் தாயின் ரத்தமான நீரை ஒவ்வொரு நாளும் மாசுபடுத்தி வருகிறோம். இதனால், நாம் வாழும் பூமி பெருமளவில் பாதிப்படைந்து, தான் நோயாளியாவதுடன் மட்டுமல்லாமல், தன் மீது வாழும் எண்ணற்ற உயிரினங்களையும் நோயாளியாக்கி வருகிறது.
  • இந்த பிரபஞ்சத்தில் அனைவருக்குமான ஒரே வீடு, நாம் வாழும் இப்பூமி தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பூமியில் பசுமை நிறைந்த நாட்டில் வளத்திற்கு பஞ்சமிருக்காது. பூமித் தாய் வளம் இழந்து, வறட்சியானால் நாட்டில் பஞ்சம் ஏற்படும்.
  • நம்மை சுமந்து காக்கும் பூமியை, நாம் நல்ல முறையில் காக்க வேண்டும். அது மனித குலத்தின் கடமை. நாம் வாழும் நம் பூமியை இப்போது நாம் சேதப்படுத்தினால், வருங்கால சந்ததியினா் வாழ மற்ற கோள்களைத் தான் நாட வேண்டும், எனவே, இந்த பூமி தினத்தில் பூமியை செம்மைப்படுத்தி, வளப்படுத்தி காப்போம், அனைத்து உயிரினங்களையும் வாழ வைப்போம் என உறுதி கொள்வோம்.
  • இன்று (ஏப். 22) உலக பூமி தினம்.

நன்றி: தினமணி (22 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்