பூரண மதுவிலக்கு சாத்தியமா?
- கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 67 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மதுவிலக்கு குறித்தான கோரிக்கைகள் நாளும் வலுத்துவருகின்றன. மதுவிலக்கைத் தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும்; மாநிலங்களுக்கு மத்திய அரசே இழப்பீடு தர வேண்டும் என்கிற கோரிக்கைகளும் மேலோங்கி நிற்கின்றன.
- இந்தச் சூழலில், வரலாற்றைச் சற்றே திரும்பிப் பார்த்தால் சில உண்மைகள் புலப்படும். காந்தி பிறந்த குஜராத் மாநிலம் தவிர்த்து, சுதந்திர இந்தியாவில் மதுவிலக்கு அமலில் இருந்த ஒரே மாநிலம் தமிழ்நாடுதான் என்றால் நம்ப முடிகிறதா?
- இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. சுதந்திரத்துக்குப் பின்னர் ஏறத்தாழ 24 ஆண்டுகள் வரை தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலில் இருந்தது. ஆனால், அதன் பின்னர் நிலைமை தலைகீழாக மாறியது. மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல், மது விற்பனைக்கென்றே ஒரு நிறுவனத்தை அரசு நிறுவி, அதைச் செயல்படுத்தி வருகிறது.
- அது மட்டுமல்ல, மது விற்பனையை அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துச் செயல்படும் மாநிலமாகத் தமிழ்நாடு இருப்பது வேதனையிலும் வேதனை. இந்தச் சூழ்நிலையில்தான், தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று பல்வேறு குரல்கள் ஓங்கி ஒலித்து வருகின்றன.
வரலாறு என்ன சொல்கிறது?
- தமிழ்நாட்டில் 1937ஆம் ஆண்டு முதலில் மதுவிலக்கு அமலானது. மதுவிலக்கை ரத்து செய்துவிட்டு, கள்ளுக்கடைகளைத் திறக்கத் திட்டமிட்டது அன்றைய ஆங்கிலேய அரசு. அதை ராஜாஜி கடுமையாக எதிர்த்தார். ஆனால், அந்த எதிர்ப்பையும் மீறி, 1944ஆம் ஆண்டு மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டுக் கள்ளுக்கடைகள் திறக்கப்பட்டன. இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு, மீண்டும் மதுவிலக்கு நடைமுறைக்கு வந்தது. சுதந்திர இந்தியாவில், 1971ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் மதுவிலக்கு நடைமுறையில் இருந்தது. தமிழக முதலமைச்சராக இருந்த ராஜாஜியில் தொடங்கி, ஓமந்தூர் ராமசாமியார், குமாரசாமி ராஜா, காமராஜர், பக்தவத்சலம், அண்ணா வரை எந்த முதலமைச்சரும் மதுவிலக்கை ரத்து செய்ய முன்வரவில்லை.
- திமுக 1967ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியபோது, மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டும் என அதிகாரிகள் பரிந்துரைத்தனர். மதுவிலக்கை ரத்து செய்தால், 600 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என அதிகாரிகள் அன்று கூறிய ஆலோசனையை நிராகரித்தார் அண்ணா. ‘மதுவிற்பனை மூலம் வரும் வருவாய், தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெயை வாங்குவதற்குச் சமம்’ என்றார். ஆனால், அண்ணாவுக்குப் பின்னர், தமிழக முதல்வரான மு.கருணாநிதி மதுவிலக்கை நீக்கினார். 1971ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்போதைய திமுக அரசு மதுவிலக்கை ரத்து செய்து அவசரச் சட்டம் கொண்டுவந்தது. இதன் பின்னணியை ஆராய்ந்தால், வியப்பாக இருக்கும்.
- அப்போது இந்தியாவில் பல மாநிலங்களில் மதுவிலக்கு நடைமுறையில் இல்லாததால், மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு மானியம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ‘தமிழகத்தில் மதுவிலக்கு நடைமுறையில் உள்ளது; எனவே, எங்களுக்கும் மானியம் தர வேண்டும்’ என அப்போதைய முதல்வர் கருணாநிதி கேட்டபோது, அதை ஏற்க மறுத்துவிட்டது மத்திய அரசு.
மதுவிலக்கும் நீக்கமும்:
- ஏற்கெனவே மதுவிலக்கை நடைமுறைப்படுத்தியுள்ள மாநிலங்களுக்கு மானியம் கிடையாது என்று மத்திய அரசு கூறியது. ‘மதுவிலக்கை நடைமுறைப்படுத்தியதற்கு இப்படியொரு தண்டனையா?’ என்று கேள்வி எழுப்பிய தமிழ்நாடு, பின்னர் மதுவிலக்கை நீக்கும் முடிவை எடுத்தது.
- பல ஆண்டுக் காலம் நடைமுறையில் இருந்த மதுவிலக்கு திடீரென ரத்து செய்யப்பட்டது மக்களிடையே பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. அதையும் மு.கருணாநிதி சமாளித்தார். ‘அக்னி வளையத்துக்குள் இருக்கும் கற்பூரமாகத் தமிழ்நாடு இருக்கிறது. நான் என்ன செய்வது? மற்ற மாநிலங்களில் மதுவிற்பனை நடக்கும்போது நான் மட்டும் என்ன செய்ய முடியும்?’ எனச் சாமர்த்தியமாகப் பதிலளித்தார் அவர். இந்த விளக்கம் அவரது முடிவை நியாயப்படுத்தியது.
- எனினும், 1974ஆம் ஆண்டு மு.கருணாநிதி தலைமையிலான திமுக அரசு மீண்டும் மதுவிலக்கை அமல்படுத்தியது. 1983இல் எம்.ஜி.ராமச்சந்திரன் ஆட்சியின்போது மீண்டும் மதுவிலக்கு ரத்தானது. 1987ல் மீண்டும் மதுவிலக்கு அமலானது. 1990 முதல் 1991 வரை பிளாஸ்டிக் பைகளில் மலிவு விலை மதுவை விற்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. 1991இல் முதல் முறையாகத் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஜெ.ஜெயலலிதா முதல் கையொப்பமிட்டு இதனை ரத்து செய்தார்.
- தொடர்ந்து கள்ளச்சாராயம் பெருகியதால் பலர் உயிரிழந்தனர். அப்போது தனியார் வசம் மதுக்கடைகள் இருந்ததால், பெரும் பணத்தை அவர்களே ஈட்டி வந்தார்கள். 2001இல் ஜெ.ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சரான பிறகு அவ்வருமானங்கள் அரசு நிறுவனமான ‘டாஸ்மாக்’ நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. இன்று தேசிய அளவில் அதிக வருவாயை ஈட்டித்தரும் பொதுத் துறை நிறுவனம் டாஸ்மாக்தான். இவ்வருமானத்தின் மூலம் அரசு நடைபெறுவதும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திவருகிறது.
- தமிழகத்தில் குடிப்பழக்கம் இன்று பரவலாகிவிட்டது. தமிழகத்தில் 28.5 சதவீதம் ஆண்கள் மது அருந்தும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். இவ்விஷயத்தில் அகில இந்திய அளவில் தமிழகத்துக்கு 19ஆவது இடம். முதலிடம் சத்தீஸ்கர். இந்தியாவில் 7இல் ஒருவர் மதுகுடிக்கும் பழக்கம் உள்ளவர். பதின் பருவத்தினரிடமும் மதுப்பழக்கம் பரவலாகிவிட்டது என்பது கூடுதல் அதிர்ச்சி தரும் செய்தியாகும்.
- மதுவிலக்கு சாத்தியமா என்பதை ஆராய வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். சமுதாய, பொருளாதார, தனிமனித ஆரோக்கியம் ஆகியவற்றைப் பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக மது அருந்தும் பழக்கம் இருக்கிறது. இதைத் தடுக்க மதுவிலக்கை அமல்படுத்தியே ஆக வேண்டும் என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.
அரசின் கடமை:
- மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சிலர் கூறுகின்றனர். காரணம், கள்ளச்சாராயம் விற்கப்பட்டால் அரசு நடவடிக்கை எடுக்க முடியும். மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால், இப்போது மது குடிப்பவர்களில் 10 சதவீதம் பேர் வேண்டுமானால் சாராயம் அருந்தலாம். ஆனால், மது குடிப்போரின் எண்ணிக்கை இதனால் கணிசமாகக் குறைந்துவிடும் என்பதை மறுப்பதற்கில்லை.
- இதன்மூலம் குற்றங்கள், விபத்துகள் எல்லாம் குறையும். அரசே மது விற்கும்போது அதை வாங்கி அருந்துவது எப்படித் தவறாகும் என்பது மது குடிப்போரின் வாதமாக உள்ளது. எனவே, அரசு மது விற்பனையைக் கைவிடும் நிலையில், மது குடிப்போரின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என்பதில் ஐயம் இல்லை. மதுவிலக்கு அமலானாலும் சிலர் குடிப்பதைத் தடுக்க முடியாது. முழுமையான மதுவிலக்கு என்பது இனிமேல் சாத்தியமில்லை என்று சிலர் கூறுகின்றனர். ஆனாலும், அதனை முயன்று பார்க்க வேண்டியது ஒரு அரசின் தலையாய கடமையாகும்.
- இன்னொரு புறம், மதுவிலக்கு அமலானால் அண்டை மாநிலங்களில் சர்வ சாதாரணமாக மதுபானங்கள் கிடைப்பதைக் காரணமாக்கி அங்கு சென்று மது அருந்துவதோ, அங்கிருந்து ரகசியமாக வாங்கிவந்து விற்பதோ மிக எளிதாகிவிடும். விலை குறைவு என்ற ஒரே காரணத்துக்காகப் புதுவையில் இருந்து ஏராளமான மதுபானங்கள் அண்டை மாநிலங்களுக்குச் செல்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அப்படியிருக்க முழுமையாக மதுவிலக்கு அமலானால், வெளியில் இருந்து மதுவைக் கொண்டுவருவதையும், அங்கு சென்று குடிப்பதையும் தடுக்க முடியாது என்று ஒருசாரார் கருதுகிறார்கள்.
- குடிக்கின்ற ஒவ்வொருவரும் மனம் மாறினால்தான் குடிப்பழக்கத்தை முழுமையாக ஒழிக்க முடியும். மிகப்பெரிய மக்கள் எழுச்சி வந்தால்தான், அரசும் சேர்ந்து மதுக்கடைகளை மூடுவதற்கு வாய்ப்பு உருவாகும். சில நடைமுறைச் சிக்கல்கள் இருந்தாலும்கூட, மதுவிலக்கை நடைமுறைப்படுத்துகிறபோது மிகப்பெரிய மாற்றத்துக்கான ஒரு புதிய பாதை ஒன்று நிச்சயம் உருவாகும்!
நன்றி: இந்து தமிழ் திசை (30 – 09 – 2024)