TNPSC Thervupettagam

பூவுலகைக் காக்க நிலக்கரிக் கொள்கையைக் கைவிடுங்கள்!

May 21 , 2020 1701 days 833 0
  • இந்தியாவை தற்சார்பு பொருளாதாரமாக மாற்றும் நோக்குடன் நிலக்கரி வணிகம் மற்றும் பயன்பாட்டை ஊக்குவிக்கும் கொள்கையை மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் கொள்கைக்கு  எதிர்திசை

  • காலநிலை மாற்றத்தையும், அதன் தீய விளைவுகளையும் கட்டுப்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு வகுத்துக் கொடுத்துள்ள பாதைக்கு எதிர்திசையில் பயணிக்கும் இக்கொள்கை மிக ஆபத்தானதும், பேரழிவை ஏற்படுத்தக்கூடியதும் ஆகும்.
  • இந்தியாவில் நிலக்கரி சுரங்கங்கள் இப்போது வரை அரசின் கட்டுப்பாட்டில் மட்டும் தான் உள்ளன. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக 500 நிலக்கரி சுரங்கங்கள் ஏல முறையில் தனியாருக்கு வழங்கப்படும் என்றும், முதல்கட்டமாக 50 சுரங்கங்கள் உடனடியாக வழங்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • அதுமட்டுமின்றி, இந்த சுரங்கங்களில் இருந்து எடுக்கப்படும் நிலக்கரியை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து உள்ளிட்ட கட்டமைப்புகளை உருவாக்க ரூ.50,000 கோடி செலவிடப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்.
  • தூய்மை மின்சாரம் தத்துவத்தை பன்னாட்டு அமைப்புகள் வலியுறுத்தி வரும் நிலையில், நிலக்கரி பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிடுவது, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியாவை பல பத்தாண்டுகள் பின்னோக்கி அழைத்துச் சென்று விடும். உலகம் இப்போது எதிர்கொண்டு வரும் மிகப்பெரிய நெருக்கடியான கொரோனா வைரஸ் உருவானதற்கு முக்கியக் காரணம் காலநிலை மாற்றம் ஆகும். புவிவெப்பநிலை உயர்வை 2030-ஆம் ஆண்டுக்குள் 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்தாவிட்டால், பேரழிவுகளை உலகம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வெப்பநிலை உயர்வுக்கு படிம எரிபொருட்களை பயன்படுத்துவதும், நிலக்கரியை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதும் தான் மிக முக்கியக் காரணங்கள் ஆகும். 2018-&ஆம் ஆண்டில் வளிமண்டலத்தில் சேர்ந்த மாசுக்காற்றில் 30% நிலக்கரி பயன்படுத்தும் அனல் மின்நிலையங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவை என்று பன்னாட்டு எரிசக்தி முகமை கூறியுள்ளது.
  • காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவுகளில் இருந்து உலகத்தைக் காப்பாற்ற இப்போது செயல்பட்டு வரும் அனல் மின்நிலையங்களில் மூன்றில் இரு பங்கை 2030-ஆம் ஆண்டுக்குள் மூட வேண்டும் என்று ஐநா காலநிலை அறிவியலாளர்கள் பேரவை (IPCC) அறிவித்துள்ளது.
  • அதேபோல், 2020-ஆம் ஆண்டுக்கு பிறகு புதிய அனல் மின்நிலையங்களை அமைக்கக்கூடாது என்று 2019-ஆம் ஆண்டு ஐ.நா. காலநிலை மாநாட்டில் பேசும் போதும், ஆசியான் மாநாட்டில் பேசும் போதும் ஐ.நா. தலைமைச் செயலர் ஆண்டனியோ கட்டரஸ் வலியுறுத்தியுள்ளார்.

பெரும் தீங்கு

  • இவ்வளவுக்கும் மேலாக காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான 2015-ஆம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கை, 1992-ஆம் ஆண்டின் காலநிலை மாற்ற கட்டுப்பாட்டுக்கான ஐக்கிய நாடுகள் செயல்திட்ட உடன்படிக்கை உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்களில் இந்தியா கையொப்பம் இட்டுள்ளது.
  • அவ்வாறு இருக்கும் போது நிலக்கரி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் 500 புதிய நிலக்கரி சுரங்கங்களுக்கு அனுமதியளிப்பது சுற்றுச்சூழலுக்கு இழைக்கப்படும் பெரும் தீங்கு ஆகும்.
  • உலக அளவில் நிலக்கரியை அதிகமாக பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 2005 முதல் 2015 வரையிலான பத்தாண்டுகளில் நிலக்கரியை எரிபொருளாக பயன்படுத்தும் அனல் மின்நிலையங்களில் வெளியாகும் மாசுக்காற்றின் அளவு 180% அதிகரித்துள்ளது. அதனால் உலகில் அதிக மாசுக்காற்றை வெளியிடும் 4 ஆவது பெரிய நாடாக இந்தியா உருவாகியுள்ளது.
  • பொருளாதார அடிப்படையில் பார்த்தாலும் நிலக்கரியை ஆதாரமாகக் கொண்ட மின்திட்டங்கள் லாபம் அளிப்பவையாக இல்லை.
  • நிலக்கரி சார்ந்த மின்திட்டங்களை விட சூரிய ஒளி மின்திட்டம், காற்றாலை மின்திட்டம் போன்ற புதுப்பிக்கவல்ல எரிசக்தி உற்பத்தி குறைந்த செலவு கொண்டவையாக இருப்பதால் அதிக லாபம் தருகின்றன. அதுமட்டுமின்றி அவை சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
  • நிலக்கரி மின்சாரத்தை விட புதுப்பிக்கவல்ல மின்சாரத்தின் விலை 14% குறைவாக இருப்பதால் அதற்கு தான் தேவை அதிகமாக உள்ளது. இந்த போட்டியை சமாளிக்க முடியாததால் 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு செயல்படுத்தப்படுவதாக இருந்த நிலக்கரியை எரிபொருளாகக் கொண்ட மின்திட்டங்களில் 84% திட்டங்கள் கைவிடப்பட்டு விட்டன.
  • நிலக்கரி திட்டங்களில் முதலீடு செய்யப்போவதில்லை என்று பன்னாட்டு நிதி நிறுவனங்களும், அவற்றுக்கு காப்பீடு செய்வதில்லை என்று பன்னாட்டு காப்பீட்டு நிறுவனங்களும் அறிவித்து விட்டன. இத்தகைய சூழலில் 500 நிலக்கரி சுரங்கங்களை அமைப்பதும், ரூ.50,000 கோடியை முதலீடு செய்வதும் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு எந்த வகையிலும் உதவாது.
  • இதற்கெல்லாம் மேலாக இன்றைய சூழலில் இந்தியாவிற்கு பொருளாதார வளர்ச்சியை விட, மக்கள் நலனும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் தான் மிகவும் முக்கியமாகும்.
  • காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகள் நம்மைத் தாக்கத் தொடங்கி விட்டன. வங்கக் கடலில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை காலங்களில் தான் புயல்கள் உருவாகும். ஆனால், கடந்த சில நாட்களில் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ‘ஆம்பன் (Amphan)’ புயல் வங்கக்கடலில் தான் உருவாகியுள்ளது.
  • கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வங்கக் கடலில் ஃபானி புயல் உருவாகி ஒதிஷாவைத் தாக்கியது. ஆம்பன் புயலும் ஒதிஷா அல்லது மேற்கு வங்கத்தைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • கடந்த 150 ஆண்டுகளில் ஒதிஷாவை கோடைக்காலப் புயல் தாக்குவது அது தான் மூன்றாவது முறை என்றும், 43 ஆண்டுகளில் வங்கக்கடலில் உருவாகி ஒதிஷாவைத் தாக்கிய முதல் புயல் ஃபானி தான் என்றும் கூறப்பட்டது.
  • 150 ஆண்டுகளில் மூன்றாவது முறையாகவும், 43 ஆண்டுகளில் முதல் முறையாகவும், அதாவது சராசரியாக 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை வங்கக்கடலில் ஏற்படக்கூடிய கோடைக்காலப் புயல் இப்போது அடுத்த ஆண்டே ஏற்பட்டிருப்பது காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகள் பூவுலகை அடுத்தடுத்துத் தாக்கத் தொடங்கி விட்டன என்பதையே காட்டுகிறது.
  • இந்த நேரத்தில் நமது கவனம் முழுவதும் இயற்கையையும், சுற்றுச்சூழலையும் காப்பாற்றுவதில் தான் இருக்க வேண்டும்.
  • தூய்மை எரிசக்தியை நோக்கி உலகம் நகரத் தொடங்கியுள்ள நிலையில், நிலக்கரி சுரங்கங்களை அமைப்பதில் ஆர்வம் காட்டுவதும், அதிக முதலீடுகளை செய்வதும் சுற்றுச்சூழல் பேரழிவுகளை விலை கொடுத்து வாங்குவதற்கு ஒப்பானது ஆகும்.
  • எனவே, ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் நிலக்கரி கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். அதற்கு பதிலாக சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், அதன் மூலமாக புவி வெப்பமயமாதலின் தீய விளைவுகளை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி: தி இந்து (21-05-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்