TNPSC Thervupettagam

பெண் சிசுக்கொலை

March 12 , 2020 1767 days 1324 0
  • கரோனா நோய்த்தொற்றுப் பிரச்னை, உசிலம்பட்டி பெண் சிசுக்கொலை விவகாரத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்று நினைத்துக்கொண்டிருந்த பெண் சிசுக் கொலை மீண்டும் தலைதூக்கியிருப்பது எதிர்பாராத விபரீதம். இன்னும்கூட பெண் குழந்தைகள் பெற்றோருக்கு அழையா விருந்தாளியாக இருப்பது சமுதாயத்தின் முதிர்ச்சியின்மையைத்தான் வெளிப்படுத்துகிறது.

சர்வதேச அளவில்...

  • தமிழகத்திலும் இந்தியாவிலும் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும்கூட பெண்களுக்கு சம உரிமை, சம வாய்ப்பு, சம அந்தஸ்து என்பவை ஏட்டளவில்தான் காணப்படுகின்றன.
  • எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் உடை அணிவதும், செயல்படுவதும் மட்டுமே பெண் விடுதலையின் நோக்கங்கள் என்கிற கருத்து தவறானது மட்டுமல்ல, போலித்தனமானதும்கூட. அதனால் ஏற்படும் பின்விளைவுகளையும் பாதிப்புகளையும் ஆண்களின் மீது மட்டுமே சுமத்துவது புரிதலின்மை. மேலை நாடுகளில் இருப்பதுபோன்ற பெண்ணிய நடவடிக்கைகளை அப்படியே பின்பற்ற விரும்புவது மாறுபட்ட சமூகக் கோட்பாடுகளைச் சிதைக்கப் பயன்படுமே தவிர, பெண்களுக்குச் சம உரிமையும், பாதுகாப்பும், மரியாதையும் ஏற்படுத்தித் தராது என்பதுதான் அனுபவபூர்வ நடைமுறை உண்மை.
     மேலை நாடுகளில் விருப்பம்போல மண உறவும், பாலியல் சுதந்திரமும் பெண்களுக்கு இருக்கிறது என்றும், இந்தியாவைப்போல பெண்கள் போகப் பொருள்களாகக் கருதப்படுவதில்லை என்றும் கூறுபவர்கள் மேலைநாட்டு நாகரிகத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே எடுத்தியம்புகிறார்கள். மேலை நாடுகளில் வெளியாகும் பெண்களை மையப்படுத்திய ஆபாச புகைப்படங்களும், விடியோ படங்களும், விளம்பரங்களும் பெண்மையை அதைவிட மோசமாகக் கொச்சைப்படுத்திவிட முடியாது என்கிற அளவில் இருப்பதை மறந்து விடுகிறோம்.
     இந்தியாவையே எடுத்துக்கொண்டால் குடியரசுத் தலைவராகவும், பிரதமராகவும், ஆளுநர்களாகவும், முதல்வர்களாகவும் பெண்களால் பதவி வகிக்க முடிந்திருக்கிறது. பெண்ணியவாதிகளின் லட்சிய நாடான அமெரிக்கா இன்றுவரையில் அதிபராக பெண்களை ஏற்றுக் கொண்டதில்லை. கடந்த அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் தோற்கடிக்கப்பட்டார் என்றால், வரவிருக்கும் தேர்தலில் பெண் ஒருவர் அதிபராகும் வாய்ப்பு முறியடிக்கப்பட்டு விட்டது.

சாதனைகள் – பெண்கள்

  • பல்வேறு துறைகளில் பெண்கள் புதிய சாதனைகள் படைத்து வருகிறார்கள். சமூக, அரசியல், பொருளாதார, அறிவியல் துறைகளில் பெண்களின் பங்களிப்பு உலக அளவில் அதிகரித்திருக்கிறது. ஆண்களுக்கு நிகராகவோ அவர்களைவிடச் சிறப்பாகவோ செயல்பட முடியும் என்பதை அநேகமாக எல்லா நாடுகளிலும் பெண்கள் நிரூபித்துவருகிறார்கள். ஆனாலும்கூட, பெண்களுக்குச் சம வாய்ப்பு, சம உரிமை என்பது இப்போதும்கூட விரும்பத்தக்கதாகவும், தேவையானதாகவும் பலராலும் கருதப்படுவதில்லை என்பதுதான் உண்மை.
     ஐ.நா. சபையின் இரண்டு நிறுவனங்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கைகள் இதை உறுதிப்படுத்துகின்றன. 1995-இல் பெய்ஜிங்கில் நடந்த வரலாற்றுப் புகழ்பெற்ற உலக மகளிர் மாநாட்டிற்குப் பிறகு பல மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்பட்டிருப்பது என்னவோ உண்மை. அதே நேரத்தில், பெண்களும் சிறுமிகளும் பல கடுமையான பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள் என்கிறது யுனிசெஃப் அறிக்கை.
     ஐ.நா. வளர்ச்சித் திட்டம் என்கிற அமைப்பு, பாலியல் சமூகக் குறியீடு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, பெண்கள் குறித்த மனநிலையில் எந்தவித மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை என்று தெரிகிறது. பெண்கள் குறித்த பாலியல் சமநிலைக்கு எதிரான கருத்தை 90% ஆண்கள் கொண்டிருப்பதாக அந்தக் குறியீடு தெரிவிக்கிறது. வேடிக்கை என்னவென்றால், பெரும்பாலான பெண்களும் அதேபோன்ற கருத்தைக் கொண்ட, தன்னம்பிக்கை அற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான்.
     ஐ.நா. வளர்ச்சித் திட்ட அறிக்கை, 75 நாடுகளிலிருந்து புள்ளிவிவரங்களைத் திரட்டியது. அதன்படி, உலகின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களைவிட ஆண்கள்தான் அரசியல் தலைவர்களாகச் செயல்படுவதில் சிறந்தவர்கள் என்று கருத்துக் கூறியிருக்கிறார்கள். 40% பேர் ஆண்களுக்கு பெண்களைவிட நிர்வாகத் திறமை அதிகம் என்று கருதுகிறார்கள். 28% ஆண்களும், பெண்களும் மனைவியரை அடிக்கும் உரிமை ஆண்களுக்கு உண்டு என்று நம்புகிறார்கள்.
     இந்தியாவைப் பொருத்தவரை பாலியல் சமத்துவம் எதிர்பார்த்த அளவில் இல்லை என்பது மட்டுமல்ல, குறைந்து வருகிறது என்பதுதான் அதிர்ச்சி அளிக்கிறது.
  • 2008-இல் 38.9% பெண்கள் வேலைக்குப் போய்க் கொண்டிருந்ததுபோய், 2019-இல் அதுவே 26.7%-ஆகக் குறைந்திருக்கிறது. பணியிடங்களில் பெண்களுக்குப் போதுமான பாதுகாப்பும் மரியாதையும் இல்லாமல் இருப்பதுதான் காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

புள்ளிவிவரம்

  • பள்ளி, கல்லூரிக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கையும், வேலைவாய்ப்புத் தகுதி பெற்ற பெண்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்திருக்கிறது. அதே நேரத்தில், சமநிலை இல்லாத சமூகச்சூழல் காணப்படுகிறது. பாலியல் தொழிலுக்கு உட்படுத்தப்படும் பெண்களின் எண்ணிக்கையும், தாக்குதலுக்கு உள்ளாகும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. மனநிலை பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், பதின்ம வயதுப் பெண்கள் மத்தியில் தற்கொலைகள் அதிகரித்திருப்பதும் சுட்டிக்காட்டப்படுகின்றன.
  • ஏழை நாடோ, பணக்கார நாடோ, கல்வி, வாய்ப்பு, ஊதியம், பங்களிப்பு, நீதி இவை அனைத்திலுமே இன்னும் பாலியல் சமநிலை இல்லை என்பதுதான் உலக அளவிலான நிலை. அதனால், உசிலம்பட்டி பெண் சிசுக்கொலை ஆச்சரியப்படுத்தவில்லை!

நன்றி: தினமணி (12-03-2020)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்