TNPSC Thervupettagam

பெண் வெறுப்பு அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டும்

June 25 , 2023 514 days 359 0
  • பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்புவைத் தரக்குறைவாகப் பேசியதற்காக திமுகவைச் சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்; கைதுசெய்யப்பட்டுள்ளார். அரசியல் பிரபலங்களையும் அரசியலில் ஈடுபடுவோரின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களையும் அரசியலர்கள் மோசமாக விமர்சிப்பது இது முதல் முறையல்ல; இதில் கட்சிப் பாகுபாடே இல்லை. பெண்களும்கூடப் பெண் வெறுப்புப் பேச்சைக் கையில் எடுப்பது வேதனையானது. ட்விட்டர் உரையாடலில் தன்னைத் தவறாகப் பேசியவரைத் திருப்பித் தாக்குவதற்காக அவரது வீட்டுப் பெண்களைப் புண்படுத்தும் விதமாகப் பேசிய குஷ்புவின் செயலே இதற்குச் சான்று.
  • இதுபோன்ற பெண் வெறுப்புப் பேச்சுகளுக்கும் நடத்தை தொடர்பான அநாகரிகக் கருத்துகளுக்கும் சம்பந்தப்பட்ட நபரைக் கட்சியை விட்டு நீக்குவதுதான் அதிகபட்சத் தண்டனையாக இருக்கிறது; விதிவிலக்காகச் சில நேரம் தற்காலிகத் தீர்வுபோல் கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், இந்த நடவடிக்கைகளால் சம்பந்தப்பட்ட அரசியலர்களின் நடத்தையிலோ பேச்சிலோ சிந்தனையிலோ மாற்றங்கள் ஏற்படுவதில்லை என்பது வெளிப்படை.
  • அரசியல் ஆண்களுக்கான களமாகப் பார்க்கப்படும் பார்வையில் மாற்றம் ஏற்படவில்லை என்பதும் இதற்குக் காரணம். 543 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய மக்களவையில் 78 பேர் மட்டுமே பெண்கள். பெண்களின் பிரதிநிதித்துவம் போதுமான அளவில் இல்லாததும் ஆண்களுக்கும் ஆணாதிக்கச் சிந்தனை கொண்ட பெண்களுக்கும் சாதகமாக அமைந்துவிடுகிறது. அநாகரிக, ஆபாசப் பேச்சுகளுக்குப் பயந்தே ஏராளமான பெண்கள் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடத் தயங்குகிறார்கள்.
  • பெண்களைக் கண்ணியக் குறைவாகச் சித்தரிக்கும் பெண் வெறுப்புப் பேச்சுகள், பெண்களின் அரசியல் பங்கேற்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகின்றன. கட்சிகளில் அனைத்து நிலையில் இருக்கிறவர்களும் பெண்களுக்கு எதிரான ஆயுதமாக இதுபோன்ற அநாகரிகப் பேச்சைத்தான் நம்பியிருக்கிறார்கள்.
  • ஆணுக்கு நிகராகப் பெண்ணை மதிக்கும் மனநிலைதான் அவர்களைக் கண்ணியமாக நடத்துவதற்கான முதல் படி. அதுவே அரசியலின் பாலபாடமாகவும் ஆக்கப்பட வேண்டும். பெண்களை அநாகரிகமாகப் பேசுவோரைப் பாரபட்சமின்றிக் கட்சியை விட்டு நிரந்தரமாக நீக்குவதுடன் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையைத் துரிதப்படுத்தி, கடுமையான தண்டனையை வழங்க வேண்டும்.
  • வாக்கு வங்கிகளில் கவனம் செலுத்தும் கட்சிகள், பெண்களே மிகப் பெரிய வாக்காளர் தொகுப்பினர் என்பதைக் கவனத்தில்கொண்டு செயல்பட வேண்டும். அரசியல் கட்சிகள் கடுமையான கட்டுப்பாட்டு நெறிகளைக் கடைப்பிடிப்பதன் வாயிலாக மாற்றங்களை உருவாக்க முடியும். நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்னும் நீண்ட காலக் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்.
  • அதிகாரம் மிக்க பிற அரசியல் பதவிகள், கட்சிப் பதவிகள், அரசுப் பணிகள் ஆகியவற்றிலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். ஆணாதிக்க சிந்தனையை அனைவரும் கைவிட வேண்டுமென்றால் பெண்கள் பதவியில் இருப்பது குறித்த மரியாதை மட்டுமல்ல.. அவர்களுக்கும் அதிகாரம் உள்ளது என்கிற பயமும் தேவைப்படுகிறது.
  • 21ஆம் நூற்றாண்டிலும் நம் சிந்தனைகளில் ஊறிக்கிடக்கும் பிற்போக்குத்தனத்தைக் களைவதற்கான செயல்களில் அரசும் அரசியல் கட்சிகளும் ஈடுபட வேண்டியது அவசியம். அதுதான் சமூக நீதி அரசியலுக்கான அடித்தளமாக அமையும்.

நன்றி: தி இந்து (25 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்