பெண்களின் கைவண்ணப் பண்டிகை
- ஓணம் கேரளத்தின் தனித்துவமான திருவிழா. பத்து நாள் பண்டிகையாகக் கொண்டாடப்படும் இந்தத் திருவிழாவில் பெண்களின் பங்களிப்பும் எடுத்துச்சொல்ல வேண்டியதாகும். ஓணத்தில் ஆண்கள் பங்குகொள்ளும் ஆரமுள வல்லங்களி (படகுப் போட்டி) போல் பெண்களுக்கென்று திருவாதிரைக்களியும் (சாப்பிடும் களியல்ல. களி - ஆட்டம்) உண்டு. தமிழ்க் கும்மி வடிவத்தில் அமைந்த ஒரு நடன முறைதான் இந்தத் திருவாதிரைக்களி. வட்டமாகச் சுற்றி நின்று பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து நடனமாடுவார்கள். இது ஓணம் அல்லாது திருமணச் சடங்குகளிலும் நிகழ்த்தப்படும். இதே நடனத்தைக் கிறித்தவப் பெண்கள் மார்க்கங்களி என்கிற பெயரில் நிகழ்த்துகிறார்கள்.
- ஓணத்தின் இன்னொரு சிறப்பு பெண்கள் வரையும் அத்தப்பூக்களம். அத்தம் என்பது மலையாள சிங்க மாதத்தின் நாளைக் குறிக்கும். ஓணம் அத்தம் நாளில்தான் தொடங்குகிறது. அன்றிலிருந்து வீட்டு முற்றத்தில் பூக்களால் ஒரு கோலம் வரைவர். இதைத்தான் அத்தப்பூக்கோலம் என அழைக்கிறார்கள். கீழ் உலகத்திலிருந்து மேலே நாட்டைப் பார்க்க வரும் மாபலிச் சக்கரவர்த்தியை வரவேற்பதற்காக வரையப்படுவது எனவும் சொல்லப்படுவதுண்டு.
- ஓணம் என்றதுமே கேரளத்தையும் தாண்டிப் பிரபலம் அதன் ‘சத்ய’ ஆகும். சத்ய என்றால் விருந்து எனப் பொருள். தமிழ்ப் பண்பாட்டில் பொங்கல் அன்று படையல் வைப்பதைப் போன்றது இந்த சத்ய விருந்து. எல்லாக் காய்கறிகளும் சமைக்கப்பட்டு ஒவ்வொரு கறியாகப் பரிமாறப்படும். ஓணம் விருந்தின் சிறப்பை உணர்த்த ‘காணம் விற்றும் ஓணம் உண்ணனும்’ என்றொரு பழமொழியே மலையாளத்தில் உண்டு. சொத்தை விற்றாவது ஓணம் சத்ய சாப்பிட வேண்டும் என்பது அதன் பொருள். ஓணம் விருந்துக் கறிகள் ஒவ்வொரு பகுதிக்கும் எண்ணிக்கை கூடக் குறைய இருக்கிறது. திருவனந்தபுரம் பகுதிகளில் 18 வகைக் கறிகள் சமைக்கப்படும். வாழைப்பழ சிப்ஸ், சர்க்கர வரட்டி, வாழைப்பழம், உப்பு, அப்பளம், மாங்காய் ஊறுகாய், எலுமிச்சைப் பழ ஊறுகாய், இஞ்சிக் கறி, முட்டைக்கோஸ் பொரியல், ஓலன், கூட்டுக்கறி, எரிசேறி, அவியல், பீட்ரூட் பச்சடி, காளன், பருப்பு, சாம்பர், புளிசேரி, மோர், பால் பாயசம், அடைப் பிரதமன் என ஓணம் சத்ய நீண்ட உணவு வகைகள் கொண்டது. பெரும்பாலும் இதே வரிசையில்தான் பரிமாறுவார்கள். மாற்றிப் பரிமாறிவிட்டால் சொந்த பந்தங்களுக்குள் தகராறே வந்துவிடும். அந்த அளவுக்கு இந்த வரிசை முக்கியத்துவம் வாய்ந்தது.
- இந்த ஓணம் விருந்தைத் தயாராக்கு வதற்குப் பெண்கள் காட்டும் சிரத்தை ஓணத்தைப் போல விசேஷமானது. ஒரு காய்கறிக் கடையே வீட்டுச் சமைலறைக்குள் குவிக்கப்பட்டிருக்கும் அளவுக்கான காய்கறிகளைத் திறமையாகக் கையாள்வார்கள். ஓணம்விருந்துக்குக் காய்கறிகளை வெட்டுவதும் நுட்பமானது. ஒவ்வொரு காயையும் அதற்கு ஏற்ற முறையில்தான் நறுக்க வேண்டும். விசேஷ நாளில் பெண்கள் இதைக் கூட்டாகச் சேர்ந்து சமைப்பார்கள். ஒற்றை ஆளாக இவை அனைத்தையும் செய்து முடிப்பவர்களும் உண்டு. மற்ற பண்டிகையைப் போல் அல்லாமல் ஓணத்தில் சத்யவும் பண்டிகையின் ஒரு பகுதி. அதைப் போல் அத்தப்பூக்களமும் திருவாதிரைக்களியும் அதற்கு மேலும் அழகூட்டுபவை. அதனால் ஓணத்தின் களிப்பே பெண்கள் இல்லாமல் சாத்தியம் இல்லை எனலாம்.
நன்றி: இந்து தமிழ் திசை (15 – 09 – 2024)