TNPSC Thervupettagam

பெண்களின் நிலை மேம்படுமா?

February 7 , 2020 1802 days 1203 0
  • பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் பலாத்கார நிகழ்ச்சிகளை நாம் உணர்வுபூர்வமாக மட்டுமே அணுகுகிறோம். இதைத் தாண்டி, மருத்துவ ரீதியாகவும், மனோதத்துவ ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பார்க்க வேண்டும். பல காரணிகளையும் ஆராய்ந்து இந்தக் கொடுமைக்கு ஒரு தீர்வு காண்பதற்கு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது.
  • மருத்துவ ரீதியாகப் பார்ப்போம், கோவையைச் சேர்ந்த மருத்துவர்  மைதிலி சொல்வதைக் கவனிப்போம். ஆண்களுக்கு "டெஸ்டோஸ்டீரோன்' என்ற ஹார்மோனும் பெண்களுக்கு "ஈஸ்ட்ரோஜன்'என்ற ஹார்மோனும் இயற்கையாகவே சுரக்கின்றன. இதில் "டெஸ்டோஸ்டீரோன்' பாலுணர்வை அதிகரிக்கச் செய்யும் திறன் பெற்றது. "ஈஸ்ட்ரோஜன்' பாலுணர்வை மட்டுப்படுத்தும் திறன் பெற்றது. அதனால், பொதுவாக ஆண்களுக்குப் பாலுணர்வு அதிகமாகவும், பெண்களுக்குக் குறைவாகவும்  உள்ளது.

காரணங்கள்

  • ஆண்களின் "டெஸ்டோஸ்டீரோன்' சுரப்பைத் தூண்டும் விஷயங்கள் பல உள்ளன. "பார்த்தலால் தூண்டுதல்',  பாலுணர்வைத் தூண்டும் காட்சிகள், புத்தகங்கள், படங்கள் போன்றவற்றைப் பார்க்கும் போது, இந்தச் சுரப்பி தூண்டப்பட்டு டெஸ்டோஸ்டீரோன் அதிகமாக உற்பத்தியாகும்.
  • இத்தகு தூண்டுதல் ஏற்பட முக்கிய காரணம் திரைப்படங்கள்தான். திரைப்படங்கள்  பெண்களின் விரசமான காட்சிகளையும்,  ஆபாச நடனங்களையும் அள்ளித் தருகின்றன. இவற்றைப் பார்க்கும் போது "பார்த்தலால் தூண்டுதல்' ஏற்பட்டு டெஸ்டோஸ்டீரோன் அளவு அதிகரிக்கிறது. ஆண்களும் பெண்களும் பல காரணங்களால் இக்காலத்தில் ஒன்றாக இயங்க வேண்டியிருக்கிறது. பெண்கள் நாகரிகம் என்ற பெயரில் அரைகுறையாக  உடை உடுத்தினால், அதைப் பார்க்கும் ஆணுக்கு இந்த ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது.
  • தெருவில் சுவரொட்டிகள், பத்திரிகைகளில் விளம்பரங்கள் ஆகியவற்றில் பெண்களைக் கண்ணியக் குறைவாகச் சித்தரிக்கிறார்கள். கணினி, செல்லிடப்பேசி, சமூக வலைதளங்கள் இவற்றில் எல்லாம் பாலுணர்வைத் தூண்டும் மிக மோசமான காட்சிகள் சுலபமாகக் கிடைக்கின்றன. இவை  "பார்த்தலால் தூண்டுதல்' ஏற்படுத்தி டெஸ்டோஸ்டீரோனை  அதிகரிக்கச் செய்கின்றன. 
  • அடுத்து "தொடுதலால் தூண்டுதல்'. அதாவது, ஆண்களும் பெண்களும் பள்ளிப் பருவத்திலிருந்தே ஒன்றாகப் பழகும் நிலை இப்போது தோன்றியுள்ளது. இவர்கள் கண்காணிப்பையும் கட்டுப்பாடுகளையும் விரும்புவதில்லை. பிறந்த நாள் விழா, கல்லூரி விழாக்கள், காதலர் தினம், நண்பர்களுடன் சேர்ந்து படித்தல் என்று இரவு நேரங்களில்கூட இரு பாலரும் பெற்றோர், ஆசிரியர் கண்காணிப்பு இல்லாமல் தனியாகப் போகிறார்கள். இங்கெல்லாம் இயல்பாகவே ஒருவரையொருவர் தொட்டுப்பேச நேரிடுகிறது. இத்தகைய தொடுதலாலும் தூண்டுதல் நேரிடலாம்.

பாதுகாப்பற்ற சூழல்

  • அடுத்து "உணவுப் பொருள்களால் தூண்டுதல்'. அதிக புரதச் சத்து உள்ள மாமிச உணவுகளைச் சாப்பிடுவதும் டெஸ்டோஸ்டீரோன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். 
  • இப்படி ஏதோ ஒரு வகையில் தூண்டப்பட்டு டெஸ்டோஸ்டீரோன் அதிகரிக்கும் வேளையில்,  ஒரு ஆணோ அல்லது பல ஆண்களோ இருக்கும்போது, அங்கு பாதுகாப்பற்ற சூழலில் ஒரு பெண் வர நேர்ந்தால் அந்தப் பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக நேரிடுகிறது.
  • அப்படியானால் அந்தக் காலத்தில் ஆண்கள் - பெண்கள் இல்லையா, அப்போதெல்லாம் பெண்கள் மீதான குற்றங்கள் இவ்வளவு இல்லையே என்று கேட்கலாம். ஆணின் உடற்கூறு எப்போதும் ஒன்றுதான். ஆனால், அப்போது டெஸ்டோஸ்டீரோனைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கக்கூடிய சூழ்நிலைகள்  இயல்பாகவே அமைந்திருந்தன.  
  • உடல் ரீதியான அதிக வேலை, பக்தி, உபவாசம், உணவுக் கட்டுப்பாடுகள், பெரியவர்களுக்குப் பயந்து நடத்தல், முக்கியமாக பெண்களை நிமிர்ந்தும் பாராதிருத்தல் போன்ற சமநிலைப்படுத்தும் வழிகள் அப்போது இருந்தன. மேலும், ஆண்கள் மதிக்கும் வகையிலேயே நடை, உடை, பேச்சு, பழக்கம் ஆகியவற்றை பெண்கள் கொண்டிருந்தார்கள்.
  • மனோதத்துவ ரீதியாகப் பார்ப்போம். இந்தக் காலத்தில் வேலை காரணமாக ஓரிடத்தை விட்டு வேறிடத்துக்குச் செல்ல  நேரிடுகிறது. இதில் எல்லோருக்கும் குடும்பத்தோடு இருக்கும் சூழ்நிலை அமைவதில்லை. தொடர்ந்து மாதக்கணக்கில் தனியாக இருக்கும் ஆண்கள் தனிமையைப் போக்க, செல்லிடப்பேசி, கணினி, திரைப்படம் என்று தேடுகிறார்கள். மேற்சொன்ன பல காரணங்களால் அதிகமாகும் டெஸ்டோஸ்டீரோன் சுரப்புக்கு  வடிகால் தேடும் இவர்கள், பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்.

பள்ளிக் கூடங்களில்...

  • பள்ளிக் கூடங்களில் பலாத்காரங்கள் பல, மனச்சிதைவின் காரணமாகவே நடைபெறுகின்றன. வளர்பருவ வயதில் இருக்கும் ஆண், பெண் குழந்தைகளுக்கு உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. எளிதில் கிடைக்கும் பாலுணர்வு பற்றிய தவறான செய்திகள் அவர்களைக் குழப்புகின்றன.
  • ஆண்-பெண் ஈர்ப்பு உள்ள வயதில் பள்ளியில், "ட்யூஷன்' என இரு பாலரும் ஒன்றாக இருக்க நேரிடுகிறது. இது குறித்தெல்லாம் மனம் விட்டுப் பேசித் தெளிவு பெறப் பெரும்பாலும் பெற்றோர் இருப்பதில்லை; வேலைக்குப் போய்விடுகிறார்கள்.  குழந்தைகள் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். பல வக்கிரமான எண்ணங்களை மனதுக்குள்ளே அழுத்தி வைக்கிறார்கள். இதனால், சம வயதுடைய பெண் குழந்தைகள் அல்லது மிகவும் சிறு பெண் குழந்தைகள் மீது இந்த வக்கிரம் பாய்கிறது. 
  • சமூக ரீதியா, பெண் என்பவள் "போகப் பொருள்' என்று ஒட்டுமொத்த சமூகமும் நினைப்பது பெரும் கொடுமை. ஒரு தமிழ் நாவலின் சில பகுதிகளை ஒரு இலக்கியப் பத்திரிகையில் படிக்க நேர்ந்தது. காவல் துறையினர் ஒரு கிராமத்தில் இருக்கும் பெண்கள் மீது செய்யும் அத்துமீறல்களைக் கதாசிரியர் விலாவாரியாக எழுதியிருந்தார்.
  • அந்த நாவலுக்குச் சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. சமூகத்தில் நல்லவையே நடப்பதில்லையா? கெட்ட நிகழ்வுகளையே வெளிச்சம் போட்டு எழுதி, மேலும் மேலும்  மனங்களை வக்கிரப்படுத்தலாமா? 
  • ஊடகங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒரு பாலியல் வன்முறை குறித்த செய்தியை வெளியிடும்போது, அது எப்படி நடந்தது, என்னென்ன மாதிரி நடந்தது என்று மிகக் குரூரமான முறையிலேயே கொடுக்கின்றனர். இவ்வாறு குற்றச் செயல்களை விளக்கி காட்சி ஊடகங்களும் சமூக ஊடகங்களும் வெளியிடுவதைத் தவிர்ப்பது அவசியம்.
  • ஆண்களும் பெண்களும் உடைகளை உடுத்துவதில் கவனம் கொள்வதில்லை. மாறாக, மறைக்கப்பட வேண்டிய உடல் உறுப்புகள் தெரியும் அளவுக்கு ஆண்களும் பெண்களும் உடைகளை அணிகின்றனர்; மேலும் உடல் நலனுக்குக் குறைவை ஏற்படுத்தும் வகையில் இறுக்கமான உடைகளை அணிகின்றனர். கல்விக்கூடங்களிலும், அலுவலகங்களிலும், கோயில்களிலும் ஆடைக்கட்டுப்பாடு கொண்டு வந்தால், "எங்கள் சுதந்திரம் பறிபோய்விட்டதே!' என்று கூச்சலிடுகின்றனர்.

நல்ல எண்ணம்

  • சமூகத்தை முற்றிலுமாகக் கெடுப்பதற்கென்றே இருக்கிறது மதுப் பழக்கம். இருக்கின்ற கொஞ்ச நஞ்ச நல்லெண்ணத்தையும் குடிபோதையில் தொலைத்துவிட்டுக் கொடூரச் செயல்களில் ஈடுபடுகின்ற ஆண்கள் கூட்டம்; "எங்களுக்கும் சம உரிமை உண்டு, நாங்களும் மது அருந்துவோம்' என்று கூறும் பெண்கள் கூட்டம். இவ்வாறு  பல வகையான சமூகச் சீரழிவுகள் பெண்களுக்குத்தான் ஆபத்தாக முடிகிறது.
  • அண்மைக்காலமாக ஆண்கள்மூலம் நடைபெறும் கூட்டு பாலியல் பலாத்கார நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. இத்தகைய நிகழ்வுகளில் பெண் குழந்தைகள், இளம் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். 
  • இத்தகைய நிலை மாறவேண்டுமானால் பெண்களை போகப்பொருளாக  நம் சமுதாயம் நினைப்பது மாற வேண்டும். ஆணுக்கும் பெண்ணுக்கும் படைப்பிலேயே உள்ள வித்தியாசத்தை பெண்கள் ஏற்றுக் கொண்டு, சுதந்திரம் என்ற பெயரில் ஆண்களோடு போட்டி போடாமல் தங்கள் பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ளும் வகையில் நடந்துகொள்ள வேண்டும். தார்மிகப் பொறுப்புடன் ஊடகங்கள் நடந்துகொள்ள வேண்டும். அவர்கள் அப்படி நடந்து கொள்ளாத நிலையில், பல கடும் கட்டுப்பாடுகளை அரசு விதிக்க வேண்டும். 
  • பெண்களே நடத்தும் வங்கிகள், ரயில் நிலையங்கள் எல்லாம் வந்துவிட்டன. பெண் குழந்தைகள் நலன் கருதி பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித் தனியாகப் பள்ளிகளையும் கல்லூரிகளையும் அரசு உருவாக்க வேண்டும். நாடு முழுதும் ஒரே சமயத்தில் மதுவிலக்கு கொண்டு வரப்படவேண்டும். 
  • திரைப்படங்கள், தொலைக்காட்சி, பத்திரிகைகள், சமூக வலைதளங்கள் எல்லாவற்றுக்கும் மிகக் கடுமையான தணிக்கை விதிகள் கொண்டுவரப்பட வேண்டும். பக்தி, உபவாசம், மாமிசம் தவிர்த்த அல்லது குறைந்த உணவுப் பழக்கங்கள், கண்ணியமான உடைகள், நம் பாரம்பரியம் - கலாசாரத்தோடு இணைந்த எளிமையான வாழ்வு ஆகியவற்றுக்கு ஒட்டுமொத்த சமூகமும் திரும்பினால் மட்டுமே பெண்களின் நிலை மேம்படும்.

நன்றி: தினமணி (07-02-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்