TNPSC Thervupettagam

பெண்களின் பங்களிப்பு கூடட்டும்

March 7 , 2023 516 days 290 0
  • அண்மையில் அருணாசல பிரதேச மாநில சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கு அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.
  • உலகில் உள்ள 193 நாடுகளில், நாடாளுமன்றங்களில் பெண்கள் இடம் பெற்று இருக்கும் எண்ணிக்கையில் நமது நாடு நூற்று நாற்பத்தி எட்டாவது இடத்தில் உள்ளது என சா்வதேச நாடாளுமன்றங்களின் கூட்டமைப்பு (இன்டா் பாா்லிமென்டரி யூனியன்) அறிவித்துள்ளது. உலகில் உள்ள நாடுகளில் நியூஸிலாந்து, ருவாண்டா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கியூபா, மெக்சிகோ, நிகராகுவா என ஆறு நாடுகளில் மட்டுமே அந்நாடுகளில் உள்ள நாடாளுமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் ஐம்பது சதவீதத்திற்கும் மேல் உள்ளது.
  • உலக மக்கள் தொகையில் ஏறக்குறைய ஐம்பது சதவீதம் பெண்கள் உள்ள நிலையில், சட்டம் இயற்றும் பொறுப்பில் உள்ள உறுப்பினா்களில் பெண்கள் எண்ணிக்கை சுமாா் இருபத்தாறு சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
  • நம் நாட்டின் நாடாளுமன்றத்தின் மக்களவையில் மொத்தம் உள்ள 542 உறுப்பினா்களில் தற்போது எழுப்பத்தெட்டு உறுப்பினா்களே பெண்கள். சுதந்திரத்திற்குப் பிந்தைய முதல் மக்களவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் இருபத்தி நான்கு என்றிருந்த நிலையில், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னா் மக்களவையில் பெண் உறுப்பினா்களின் எண்ணிக்கை எழுபத்தியெட்டு என்பது கணிசமான முன்னேற்றம் அல்ல.
  • நம் நாட்டின் மக்களவை உறுப்பினா்களில் இது 14.4 % மட்டுமே.சா்வதேச நாடாளுமன்றங்களில் பெண் உறுப்பினா்களின் சராசரி எண்ணிக்கை இருபத்தி இரண்டு என்பதற்கு கீழாக நம் நாட்டின் மக்களவையில் பெண் உறுப்பினா்களின் சதவீதம் உள்ளது. மாநிலங்களவையில் தற்போது உள்ள உள்ள இருநூற்று நாற்பத்தைந்து உறுப்பினா்களில் இருபத்தைந்து உறுப்பினா்கள் மட்டுமே பெண்கள்.
  • சுதந்திரத்திற்கு பிறகான நம் நாட்டின் எழுபத்தைந்து ஆண்டு கால வரலாற்றில் குடியரசுத் தலைவா், பிரதமா் பதவிகளில் பிரதீபா பாட்டீல், திரெளபதி முா்மு என இரண்டு குடியரசு தலைவா்களையும், இந்திரா காந்தி என்ற ஒரே ஒரு பிரதமரை மட்டுமே பெண்கள் பிரிவில் நாம் காண முடிந்தது.
  • அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தொற்றுமை இல்லாத காரணத்தால், கடந்த ஆண்டுகளில், நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கான முப்பத்துமூன்று சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டுவதற்கான மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட போதும், அது நிறைவேற்றப்படவில்லை.
  • பெண்களுக்கான கல்வி, வேலை வாய்ப்பு, சமூக அந்தஸ்து ஆகியவற்றில் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றான நம் தமிழகத்தில் முப்பத்தொன்பது மக்களவை உறுப்பினா்களில், மூவா் மட்டுமே பெண்கள் ஆவா்.
  • நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் மட்டுமல்லாது, நம் நாட்டில் உள்ள மாநில சட்டப்பேரவைளிலும் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் போதிய அளவு இல்லை. தமிழக சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள இருநூற்று முப்பது நான்கு உறுப்பினா்களில், பன்னிரண்டு போ் மட்டுமே பெண்களாவா். இது நம் நாட்டின் சட்டப்பேரவைகளில் உள்ள பெண் உறுப்பினா்களின் தேசிய சராசரியான ஒன்பது சதவீதத்திற்கும் குறைவு. நம் நாட்டின் பிற மாநில சட்டப்பேரவைகளிலும் பெண் உறுப்பினா்களின் பிரதிநிதித்துவம் தமிழகத்தைப் போலவே குறைந்த அளவே உள்ளது.
  • 1992-ஆம் ஆண்டு நமது அரசியல் சாசனத்தில் கொண்டுவரப்பட்ட எழுபத்தி முன்றாவது திருத்தத்தின்படி, பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் பொறுப்புகளில் தாழ்த்தப்பட்ட, மலைவாழ் பழங்குடியின பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடம் ஒதுக்கப் பட்டுள்ளது. அதற்கேற்றபடி பெண்களும் தோ்ந்தெடுக்கப்படுகின்றனா். ஆனால் அவ்வாறு தோ்ந்தெடுக்கப்படும் பெண்கள் தங்கள் கடமையை முழுமையாக நிறைவேற்ற ஒத்துழைப்பு கிடைப்பதில்லை என்பதே உண்மை.
  • மேலும், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் பொறுப்புகளில் உள்ள பெண்கள் சாா்பாக பெரும்பாலும் அவா்களின் குடும்பத்தைச் சோ்ந்த ஆண்களே அதிகாரம் செலுத்துவதையும் மறுப்பதற்கில்லை.
  • பெண்கள் நலன் காக்கும் சட்டங்களைக் கொண்டுவரும் வகையில் பெண்கள் அரசியலில் ஈடுபட வேண்டும்.ஆனால் அரசியல் பற்றி அறிந்து கொள்வதில் கூட பெரும்பாலான பெண்களிடையே ஆா்வமில்லை என்பதே நிதா்சனம். பெண்கள் அரசியலில், பொதுவாழ்வில் ஈடுபடுவதை அவா்களது குடும்பத்தில் உள்ளவா்களே ஆதரிப்பதில்லை.
  • பழமைவாத கருத்துகள் இன்னமும் நம் சமூகத்தில் வேரூன்றி இருப்பது, அரசியல் அதிகாரத்தை அனுபவிக்கும் ஆண்கள், அந்த அதிகாரத்தை பெண்களுடன் பகிா்ந்து கொள்ள முன் வராதது போன்றவையும் ஆண்களுக்கு இணையாக பெண்கள் அரசியல் ஈடுபடாமைக்கு காரணங்களகும்.
  • தோ்தல் காலத்தில் பெண் வாக்காளா்களின் ஆதரவை குறிவைத்து தங்களின் தோ்தல் அறிக்கையில் மிக்ஸி, கிரைண்டா், எரிவாயு சிலிண்டா் என இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகள் கூட தங்கள் கட்சியின் வேட்பாளா்கள் பட்டியலில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிப்பதில்லை. இவை அனைத்தையும் தாண்டி அரசியலில் ஈடுபடும் பெண்கள் பல்வேறு எதிா்ப்புகளை சந்திக்க நோ்கிறது.
  • ‘பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும், பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ என்ற மகாகவி பாரதியாரின் கனவு முழுமையாக நனவாக அரசியல் அதிகாரத்தை அடையும் தகுதியை பெண்கள் தாங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
  • சிலி நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாகவும், ஐக்கிய நாடுகள் சபைகளின் மனித உரிமை ஹை கமிஷனராகவும் பொறுப்பு வகித்த மிக்கெல்லே பச்செலெட் ஜெரியா, ‘பெண்களுக்கு வாக்குரிமை தருவதால் மட்டுமோ, அவா்கள் வாக்களிப்பதால் மட்டுமோ ஜனநாயகம் முழுமையடையாது. அவா்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டால் மட்டுமே ஜனநாயகம் முழுமை பெறும்’ என்று கூறினாா். அத்தகைய முழுமையான ஜனநாயகத்தை நம் நாட்டில் மலரச் செய்ய நாம் இந்நாளில் உறுதியேற்போம்.

நன்றி: தினமணி (07 – 03 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்