TNPSC Thervupettagam

பெண்களின் பாதுகாப்பு: தண்டனைகளோடு விழிப்புணர்வும் அவசியம்

January 17 , 2025 4 days 23 0

பெண்களின் பாதுகாப்பு: தண்டனைகளோடு விழிப்புணர்வும் அவசியம்

  • பெண்கள் – சிறுமியருக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகளைத் தமிழக அரசு கடுமையாக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. காவல் துறையினர், ஆயுதப்படையைச் சேர்ந்தவர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள், மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் அதிகாரிகள் போன்றோர் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் தண்டனைக் காலத்தை இரட்டிப்பாக்கி 20 ஆண்டுகளாக உயர்த்தியிருப்பது பெண்களின் நலன் மீதான அரசின் அக்கறையைக் காட்டுகிறது.
  • சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகச் சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பான முதல் பத்து பெருநகரங்களில் சென்னையும் கோவையும் இடம்பெற்றிருக்கின்றன எனவும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் வேலைக்குச் செல்லும் மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குவதாகவும் குறிப்பிட்டார்.
  • சென்னை அண்ணாநகரில் சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டது குறித்தும் அதில் தொடர்புடைய நபர் கைதுசெய்யப்பட்டிருப்பது குறித்தும் பேசிய முதல்வர், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க சென்னை, திருநெல்வேலி, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் ஏழு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என அறிவித்திருக்கிறார். பெண்கள் - சிறுமியர் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் வகையில் மத்திய அரசின் 2023 பி.என்.எஸ். சட்டத்தில் தமிழ்நாட்டுச் சூழலுக்கு ஏற்பச் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 12 வயதுக்கு உள்பட்ட சிறுமியர் மீதான பாலியல் குற்றங்கள், 18 வயதுக்கு உள்பட்ட பெண்கள் மீதான வல்லுறவுக் குற்றங்கள் போன்றவற்றுக்குக் குறைந்தபட்சம் ஆயுள்தண்டனை முதல் அதிகபட்சம் மரண தண்டனை வரை தண்டனை உயர்த்தப்பட்டுள்ளது.
  • பாலியல் குற்றவாளிகள் தண்டனைக் காலத்துக்கு முன்னர் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என்கிற திருத்தமும் மிக முக்கியமானது. பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேரைத் தண்டனைக் காலம் முடிவடைவதற்கு முன்பே 2022இல் குஜராத் நீதிமன்றம் விடுதலை செய்ததையும், இதையடுத்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தை அணுகியதையும் கருத்தில்கொண்டு இந்தச் சட்டத் திருத்தத்தை அணுக வேண்டும். பாலியல் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை என்பது அவர்களால் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கப்படுகிற நீதி ஆகிவிடாது என்கிறபோதும் சட்டம் நமக்குத் துணைநிற்கிறது என்கிற குறைந்தபட்ச ஆறுதலையாவது அவர்களுக்கு அளிக்கும். தமிழக அரசு அதை உறுதிசெய்திருப்பது பாராட்டுக்குரியது.
  • ஆனால், சட்டங்கள் கடுமையாக்கப்படுவதால் மட்டுமே குற்றங்கள் குறைந்துவிடாது. தண்டனை கிடைக்கும் என்கிற அச்சம் குற்றங்களை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தினாலும் தண்டனையே பெறாமல் குற்றவாளிகள் எளிதாகத் தப்பித்துவிடுவதும், நீதிமன்றங்களில் வழக்காடும் காலத்தை நீட்டித்துப் பாதிக்கப்பட்டவர்களை அலைக்கழிப்பதும், குற்றவாளிகள் தங்கள் அரசியல் - பொருளாதாரச் செல்வாக்கைப் பயன்படுத்திப் பாதிக்கப்பட்டவர்களைப் புகார் அளிக்கவிடாமல் செய்வதும் சட்டங்களின் நோக்கத்தைக் கேள்விக்குறியாக்கிவிடுகின்றன. வழக்குகள் குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு உடனுக்குடன் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்போதுதான் இதுபோன்ற சட்டத் திருத்தங்களுக்கு அர்த்தம் இருக்கும். இல்லையெனில், இவை ஏட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் பெயரளவுக்கான சட்டங்களாக மட்டுமே இருக்கும்.
  • பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட்டிருக்கும் அதேநேரம், குற்றங்கள் நிகழாத வண்ணம் சமூகச் சூழலை மாற்ற வேண்டியதும் அரசின் கடமை. பள்ளி - கல்லூரிகளில் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு ஆலோசனைக் குழுக்களையும் அமைக்க வேண்டும். காட்சி ஊடகங்களிலும் பொழுதுபோக்கு ஊடகங்களிலும் பெண்கள் அநாகரிகமாகக் காட்சிப்படுத்தப்படுவதைத் தடைசெய்வதோடு பாலினச் சமத்துவத்துக்கான பாதைகளையும் வகுக்க வேண்டும். இதில் பொதுச் சமூகமும் பங்கெடுக்க வேண்டும். அப்போதுதான் எல்லா நிலைகளிலும் பெண்கள் - சிறுமியரின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்.

நன்றி: இந்து தமிழ் திசை (17 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்