- சென்னைப் பெருநகரத்தின் முதலாவது தலித் பெண் மேயராகத் தேர்ந்தெடுக்கப் படவிருப்பது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- சென்னையையொட்டி அமைந்துள்ள புதிய மாநகராட்சிகளான தாம்பரம், ஆவடி ஆகியவற்றிலும் முதல் மேயராக தலித் பெண் பிரதிநிதிகளே பதவியேற்கவுள்ளனர்.
- தவிர, ஒன்பது மாநகராட்சிகளிலும் பெண்கள் பொதுப் பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப் படவுள்ளனர்.
- தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் 50% ஆக உயர்த்தப்பட்டிருப்பது, இனி வரும் காலத்தில் அரசியலில் பெண்களுக்கான இடத்தைத் தவிர்க்கவியலாததாக மாற்றும்.
- 1992-ல் அரசமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 73 மற்றும் 74-வது திருத்தங்களின்படி தேசிய அளவில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் 33% ஆக நிர்ணயிக்கப் பட்டது.
- பெண்களுக்கான அரசியல் உரிமைகளைக் குறித்து தீவிரமாக விவாதிக்கும் தமிழ்நாடு, அந்த இடஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்தியதன் வாயிலாக முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாகத் தன்னையும் நிறுவிக்கொண்டுள்ளது.
- தமிழ்நாடு தவிர கேரளம், ஆந்திரப் பிரதேசம், மஹாராஷ்டிரம், திரிபுரா ஆகிய மாநிலங்களிலும் பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் சரிபாதி பிரதிநிதித்துவம் அளிக்கப் பட்டுள்ளது.
- அதே நேரத்தில், அரசியலில் பெண்களுக்கு அதிகாரமளித்தலே உள்ளாட்சி அமைப்பில் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கான நோக்கம்.
- எனவே, தேர்ந்தெடுக்கப்படும் பெண் பிரதிநிதிகள் சுதந்திரமாகச் செயல்படுவதற்கான சூழலை உருவாக்குவதன் வாயிலாகவே பெண்களை அதிகாரமயப்படுத்துதல் என்ற இலக்கை எட்ட முடியும்.
- உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் சரிபாதியாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டு வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை 33% ஆக நிர்ணயிப்பதற்கான சட்டத்தை நிறைவேற்ற இயலாத நிலை நெடுங்காலமாக நீடித்துவருகிறது.
- மக்களவையில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் தற்போது 14% என்ற அளவிலேயே உள்ளது. கடுமையான போட்டி நிலவும் சட்டமன்ற, மக்களவைத் தேர்தல்களில் பெண் வேட்பாளர்களை நிறுத்த அரசியல் கட்சிகள் தயங்குகின்றன.
- அரசியல் துறையில் பெண்களின் கள அனுபவங்கள் குறைவாக இருப்பதே அதற்கு ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.
- அதனால் சட்டமன்ற, மக்களவைத் தேர்தல்களின்போது பெண்களின் பிரதிநிதித்துவம் என்பதைக் காட்டிலும் அரசியல் கட்சிகளின் வெற்றியே பிரதானமாகிவிடுகிறது.
- இந்த நடைமுறைச் சிக்கலுக்கு, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு அளிக்கப்படும் பிரதிநிதித்துவம் ஒரு தீர்வாக அமைய முடியும்.
- உள்ளாட்சி அமைப்புகளில் சிறப்பாகச் செயல்படும் பெண் பிரதிநிதிகள் இட ஒதுக்கீட்டுக்கான சுழற்சிமுறைக் காலம் முடிந்த பிறகும், பொதுத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை அரசியல் கட்சிகள் வழங்க வேண்டும்.
- அவர்களது உள்ளாட்சி அனுபவங்கள், சட்டமன்றத்தை நோக்கியும் நாடாளுமன்றத்தை நோக்கியும் பயணிப்பதற்கான படிக்கல்லாகவும் அமைய வேண்டும்.
- உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவோடு தேர்ந்தெடுக்கப் படுவதால், கட்சி வகுத்த பாதையில் மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தையும் உள்ளாட்சித் தலைவர்களின் மீது சுமத்திவிடக் கூடாது.
- உள்ளாட்சிகளின் தன்னாட்சி மேம்பட வேண்டும், சட்டமியற்றும் சபைகளுக்கான பயிற்சிக் களமாக அவை மாற வேண்டும்.
நன்றி: தி இந்து (01 – 03 – 2022)