TNPSC Thervupettagam

பெண்களுக்கான நுண்கடன்களே வாழ்வாதாரங்களை மேம்படுத்தும்

February 19 , 2021 1426 days 674 0
  • கடந்த ஆறு ஆண்டுகளில் இந்திய ஊரகப் பகுதிகளில் ஒரு மௌனப் புரட்சி நடந்திருக்கிறது. பெண்களின் லட்சக் கணக்கான சுய உதவிக் குழுக்கள் வங்கிகளுடன் இணைக்கப்பட்டு, அவர்களது வாழ்வாதாரத் திட்டங்களுக்கு மிதமான வட்டியில் நுண்கடன்கள் வழங்கப் பட்டுள்ளன. பெரும்பாலும் இந்தக் கடனுதவிகள் பொதுத் துறை வங்கிகளால் அளிக்கப் பட்டுள்ளன.
  • தீன்தயாள் அந்த்யோதயா யோஜனாவின் கீழ் அமைந்த தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டமானது (என்ஆர்எல்எம்) விளிம்புநிலையில் இருக்கும் பெண்களுக்கு, பொதுவாக வங்கிக் கடனுதவிகளைப் பெறுவதற்கு வாய்ப்பில்லாமல் இருந்தவர்களுக்கு அத்தகைய வாய்ப்பை வழங்கும் நோக்கத்தைக் கொண்டது.
  • ஜன் தன் யோஜனாவின் கீழ் வங்கிக் கணக்கு தொடங்கும் மோடி அரசின் பிரச்சாரமானது என்ஆர்எல்எம் திட்டம் அத்தகைய பெருவெற்றியைப் பெறுவதற்கான உத்வேகத்தை அளித்தது.

பெண்களுக்கு வங்கிக் கணக்கு

  • வங்கிக் கணக்கு தொடங்குவதன் வாயிலாக நிதித் துறையின் கீழ் அனைவரையும் உள்ளடக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்தால், அதைத் தொடர்ந்து விளிம்புநிலையில் வாழும் பெண்கள் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் செயல்பாடுகளுக்காகக் கடனுதவி செய்வதற்கான திட்டங்கள் முழுமை அடைந்திருக்காது. ஊரகப் பகுதிகளில் அனைவரையும் உள்ளடக்கிய நுண்கடனுதவிகளுக்கு முதற்படியாக வங்கிக் கணக்குகள் அமைந்தன.
  • ‘பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா’வின் கீழ் குறைந்தபட்சம் 20.05 கோடிப் பெண்கள் தங்களுக்கென்று வங்கிக் கணக்குகள் வைத்திருப்பதாகத் தெரிகிறது.
  • இதன் காரணமாக நிவாரணத் திட்டங்களுக்கான ‘ஆத்மநிர்பார் நிதி ஒதுக்கீ’ட்டின் ஒரு பகுதியாக ‘பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா’வின் கீழ் அளிக்கப்பட்ட ரூ.500 நிவாரணத் தொகையைக் கணிசமான பெண்கள் பெற்றிருக்கிறார்கள்.
  • என்ஆர்எல்எம் திட்டத்தின் கீழ், சமீபத்திய மதிப்பீடுகளின்படி ஏறக்குறைய 34 லட்சம் சுய உதவிக் குழுக்கள் வங்கிக் கடன்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.
  • வீட்டிலேயே உணவுப் பொருட்கள் தயாரித்தல், உணவு பதப்படுத்துதல், பசு வளர்ப்பு, தையல், சிறுவணிகம் மற்றும் குறுகிய பரப்பில் மலர் சாகுபடி செய்தல் போன்ற நடவடிக்கைகளுக்காக இந்தச் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்குச் சிறு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • ஒவ்வொரு சுய உதவிக் குழுவும் குறைந்தபட்சம் 10 அல்லது அதிகபட்சம் 20 பெண்களைக் கொண்டிருக்கிறது. எனவே, மொத்தப் பயனாளிகளைக் கணக்கில்கொண்டால், அவர்கள் அனைவருமே பெண்கள் என்பதோடு அவர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 3.5 கோடியாக இருக்கும். 3.5 கோடி வீடுகளுக்குக் கடனுதவி அளிக்கப்பட்டிருப்பதாகவும் இதைப் பொருள்கொள்ளலாம்.
  • என்ஆர்எல்எம் திட்ட விவரங்களின்படி, இதுவரை 60 லட்சம் சுய உதவிக் குழுக்கள் வங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் வங்கிக் கணக்கைக் கொண்டிருக்கிறார்கள். எனவே, எந்த விதச் சிரமமும் இல்லாமல் மேலும் 25 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்குக் கடனுதவி அளிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று நாம் புரிந்துகொள்ளலாம்.

வணிக வாய்ப்பு

  • இந்த வாய்ப்பைச் சமூக அடுக்கின் அடித்தட்டில் இருப்பவர்களுக்குக் கடனுதவி வழங்கும் சமூகக் கடமையாகவோ கட்டாயப்படுத்தப்பட்ட கடனாகவோ வங்கிகள் பார்க்க வேண்டியதில்லை, இது ஒரு சாத்தியமான வணிக வாய்ப்பும்கூட. பங்குதாரர்களின் மதிப்பு அதிகரிக்கவும் கூடும்.
  • இந்தியாவின் மிகப் பெரும் கடன் வழங்குநரான பாரத ஸ்டேட் வங்கியானது அனைவரையும் நிதித் துறையின் கீழ் உள்ளடக்குதல்/ நுண்கடன் சந்தை (எஃப்ஐஎம்எம்) என்ற பிரிவைத் தொடங்கி, துணை மேலாண்மை இயக்குநரை நியமித்து, அத்தகைய புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கான முதலடியை எடுத்து வைத்துள்ளது.
  • வாராக்கடன் பிரச்சினைகளுக்கு வாய்ப்பில்லாத இந்த முறையின் கீழ் கடன்களை வழங்குவதற்கு அரசும் ரிசர்வ் வங்கியும்கூடப் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுவருகின்றன. வாழ்வாதாரங்களுக்கான இந்தக் கடன்களின் வாராக் கடன் விகிதமானது பெருநிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவானதாகும். நிதியிழப்பு ஏதுமில்லை, கடன் வழங்குவதற்கான கவர்ச்சிகரமான அறிவிப்புகளும் இல்லை. மூலதன இழப்பு நடந்துவிட்டதைச் சொல்லும் விவரங்களும் காட்டப்படுவதில்லை.
  • கடன்களைப் பெறுவதற்காகப் பெருநிறுவனங்கள் செய்யும் வழக்கமான தந்திர வலைவீச்சுகளும் இல்லை. அளிக்கப்பட்ட கடனின் ஒவ்வொரு அலகைப் பொறுத்தவரையிலும் வேலைவாய்ப்புக்கான சூழலை உருவாக்குவதில், சந்தேகங்களுக்கு இடமின்றிப் பெருநிறுவனங்களுக்கு அளிக்கப்படும் கடன்களைக் காட்டிலும் இத்தகைய நுண்கடன்களே சிறந்து விளங்குகின்றன.

குறைவான வாராக் கடன்கள் விகிதம்

  • கடைசியாக, பெருநிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட கடன்கள் நொடிப்புநிலை மற்றும் திவால் சட்டவிதிகளின் கீழ் நடவடிக்கைக்கு ஆளாகும்போது, பிணை வைக்கப்பட்ட சொத்து சந்தை மதிப்பைக்காட்டிலும் 99% மதிப்பிழக்கிறது. பெருநிறுவனங்களுக்கு எதிரான நொடிப்புநிலை நடவடிக்கையில் வங்கிகள் அளித்த ரூ.100 கோடி கடனுக்குப் பதிலாக ரூ.1 கோடியை மட்டுமே திரும்பப் பெறுகின்றன. கடன்களைத் திரும்பப் பெறுவதில் இதைவிடவும் மோசமான நிலை வேறு இருக்க முடியாது.
  • ஒப்பீட்டளவில், வாழ்வாதாரங்களுக்கான கடன்களில் தேசிய அளவிலான வாராக் கடன் விகிதம் என்பது வெறும் 2% மட்டுமே. பிஹார், ஆந்திரப் பிரதேசம், வங்கம் போன்ற சில மாநிலங்களில் அந்த விகிதம் 1% ஆகவோ அல்லது அதற்கும் குறைவாகவோ இருக்கிறது. வங்கிகள் யாருக்குக் கடன் வழங்க வேண்டும் என்று, எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்கு இதைவிடவும் மேலதிகச் சான்றுகள் வேண்டுமா என்ன?
  • இந்தக் கடன்களுக்கான சராசரி வட்டி விகிதம் சுமார் 12% ஆக இருக்கிறது. கடன் வழங்கும் வங்கிகளுக்கு, இது மிகவும் கவர்ச்சிகரமான நிகர வட்டி விகிதமாகும். கடன் பெறுபவர்களுக்கும், இது மிகவும் விரும்பத்தக்க மாற்றுக் கடன் முறையாகும்.
  • ஊரகப் பகுதிகளின் முறைசாராத கடன்வாய்ப்புகளில் வருடாந்திர வட்டி விகிதங்கள் 100%-க்கும் அதிகமாக உள்ள நிலையில், நுண்கடன் நிறுவனங்களின் செலவுகளுக்கான வருடாந்திர லாப விகிதம் 22-24%-க்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஒழுங்குபடுத்தியுள்ளது.
  • தீன்தயாள் அந்த்யோதயா யோஜ்னாவின் வாயிலாக மேலதிகக் கடன்களை வழங்குவதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. ஓராண்டுக் காலத்தில் அளிக்கப்பட்டுவரும் கடன்தொகையை இரண்டு மடங்காக உயர்த்தவும்கூடச் செய்யலாம்.
  • ஊரகப் பகுதிகளை நோக்கிய இந்தப் பெருந்திரள் கடன் திட்டங்களைக் கொண்டுசேர்ப்பதில் பொதுத் துறை வங்கிகள் முன்னணியில் நிற்கின்றன.
  • தீன்தயாள் அந்த்யோதயா யோஜ்னா - தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் வறுமைக்கு ஆளாகியுள்ளதாகக் கண்டறியப்படும் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு பெண், சுய உதவிக் குழுக்களின் வலைப்பின்னலுக்குள் மார்ச் 2022-க்கு முன்னதாகக் கொண்டுவரப்பட வேண்டும்.
  • தீன்தயாள் அந்த்யோதயா யோஜ்னாவின் கீழ் அளிக்கப்படும் கடன்களில் பெரும்பாலானவை விவசாயம் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளுக்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவதானிக்கப்பட்டுள்ளது.
  • கடன்பெறும் பெண்களில் பெரும்பாலானவர்கள் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இந்த நுண்கடன்கள், உழவர் கடன் அட்டைகளைக் காட்டிலும் விவசாய வருமானத்தை மேம்படுத்தும் திறன்கொண்டவை.
  • கரோனா பெருந்தொற்றுக் காலத்திலும்கூட, வேளாண் துறை வளர்ச்சி கண்டுள்ளது. தீன்தயாள் அந்த்யோதயா யோஜ்னாவின் கீழ் சிறு அளவிலான ஊக்கத்தொகைகளை அளிக்கும்பட்சத்தில் (ஓர் ஆண்டு நிறைவுற்ற சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.5,000 என்ற அளவில் மூலதன மானியம் அல்லது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வட்டித்தொகையை அரசே செலுத்தும் திட்டத்தைச் செயல்படுத்துவது போன்று) ஊரகக் குடும்ப வருமானம் இரு மடங்கு அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (19-02-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்