- பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு அளிக்கக் கோரிய பொதுநல மனுவை அண்மையில் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் அது மத்திய அரசின் கொள்கை முடிவு என்பதால் நீதிமன்றம் அதில் தலையிட முடியாது எனத் தெரிவித்தது. மாநில அரசுகளுடனும் தொழில் நிறுவனங்களுடனும் இது குறித்து விவாதித்து மாதவிடாய் விடுப்புக்கான மாதிரி மசோதாவை உருவாக்க உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் கே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு அறிவுறுத்தியுள்ளது.
- ‘பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு அளிப்பதைக் கட்டாயமாக்கினால் தொழி லாளர் சந்தையில் இருந்து பெண்கள் விலக்கி வைக்கப்பட அது காரணமாக அமையலாம். பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க நிறுவனங்கள் முன் வராத சூழலும் ஏற்படலாம். பெண்களின் நன்மைக்கு என நாம் முன்னெடுக்கும் திட்டம் அவர்களுக்கு எதிரானதாக மாறிவிடக் கூடாது’ என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தக் கருத்துதான் தற்போது விவாதமாக மாறியுள்ளது. கடந்த ஆண்டும் இதே போன்றதொரு கருத்தை உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
சலுகை அல்ல:
- பெண்களின் அடிப்படை உரிமையான மகப்பேறு விடுப்பையே அவர்களுக்கான சலுகை போலப் பெரும்பாலானோர் கருது கின்ற சூழலில் உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கருத்து பெண்ணுரிமைச் செயற் பாட்டாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாதவிடாய், மகப்பேறு போன்றவை பெண்களின் தகுதிக் குறைபாடுகள் அல்ல. அவை பெண்களின் உடலில் நிகழும் உடலியல் மாற்றங்கள். மனிதக் குல மறு உற்பத்தி யோடு தொடர்புடையவை. இந்தச் செயல்பாடு எந்தத் தடங்கலும் இன்றி நிகழும்போதுதான் அடுத்த தலைமுறை ஆரோக்கியத்துடன் இருக்கும். இந்த அடிப்படை உண்மையைப் புறந்தள்ளி விட்டு, மாதவிடாய் விடுப்பைப் பெண் களுக்கான தனிப்பட்ட சலுகையாகக் கருதுவது தவறு.
- சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நிலவும் பிற்போக்குத்தனங்களையும் சமூக அவலங்களையும் களைந்து சமூகத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்வது தான் சட்டத்துறை, நீதித்துறை போன்ற அமைப்புகளின் நோக்கமாக இருக்க வேண்டும். அதை விடுத்து, சமூகத்தில் மலிந்து கிடக்கிற பெண்களுக்கு எதிரான பிற்போக்குக் கருத்துகளுக்குத் தூபம் போடுவதுபோல் நீதிமன்றங்களும் நடந்துகொள்வது நியாயமல்ல என்பது பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்களின் வாதம்.
முன்னோடிகள்:
- சிக்கிம் உயர் நீதிமன்றம் கடந்த மே மாதம் தங்கள் பெண் ஊழியர்கள் மாதத்தில் 2 – 3 நாள்கள் மாதவிடாய் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என அறி வித்தது. நாட்டின் மிகச் சிறிய நீதிமன்றம் இப்படியொரு முன்னெடுப்பை நிகழ்த்தி முன்னுதாரணமாகத் திகழ்ந்துள்ளது. பிஹாரில் 1992ஆம் ஆண்டிலிருந்தே மாதவிடாய் விடுப்பு அமலில் இருக்கிறது. வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பெண் களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய்விடுப்பு அளிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை 2023 ஆகஸ்டு மாதத்தில் மகாராஷ்டிர அரசு அறிமுகப் படுத்தியது. கேரளத்தின் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவிகள் மாதவிடாய் விடுப்பு எடுத்துக் கொள்ள லாம் என 2023இல் கேரள உயர்கல்வி அமைச்சகம் அறிவித்தது. இதுபோன்ற முன்னெடுப்புகளே மாதவிடாய் நாள்களின் உடல்ரீதியான உபாதைகளில் இருந்து பெண்களுக்கு ஆசுவாசம் அளிக்கும். அவர்களது உடல் நலனை, இனப்பெருக்க நலனைக் காப்பதுடன் தொழிலாளர் சந்தையில் அவர்களது பங்களிப்பை அதிகரிக்கும்.
பெண்களையும் உள்ளடக்கிய கொள்கை:
- பெண்கள் பணிபுரியும் இடங்களிலும் கல்விக் கூடங்களிலும் மாதவிடாய் நாள்களைச் சுகாதாரத்துடன் எதிர்கொள் வதற்கான கட்டமைப்புகளோ அடிப்படை வசதிகளோ இருப்பதில்லை. தண்ணீர், தூய்மையான கழிப்பறை, ஓய்வு எடுக்கும் அறை போன்றவை இல்லாததால் மாதவிடாய் நாள்களில் சுகாதாரம் பேணுவது பெரும்பாலான பெண்களுக்கு இயலாத காரியமாகிவிடுகிறது. சிலரால் அவர்களது அன்றாடப் பணிகளைக் கூடச் செய்ய முடியாத அளவுக்கு மாதவிடாயின் போது வயிற்று வலியும் உடல் சோர்வும் இருக்கும். இதுபோன்ற சூழலில் அலுவலகத்துக்கோ கல்வி நிலையங் களுக்கோ சென்றே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்படுகிறபோது உடல் வலியோடு மனச்சோர்வும் அவர்களை ஆட்டிப்படைக்கிறது.
- நிறுவனங்கள் மாதவிடாய் விடுப்பைக் காரணம்காட்டிப் பெண்களைப் பணி யில் சேர்க்கத் தயங்கக்கூடும் என்று நீதிமன்றங்களே முட்டுக்கட்டை போடு வதற்குப் பதிலாக, பெண்களின் மாதவிடாய் விடுப்பையும் உள்ளடக்கிய நெறிமுறைகளை நிறுவனங்கள் உருவாக்கவேண்டும் எனப் பணி வழங்கு வோருக்கு நிபந்தனை விதிக்க வேண்டும். பெண்களின் உடலில் நிகழும் மாற்றம் அவர்களின் தகுதிக் குறைபாடு அல்ல. எனவே, சமூகத்தின் சரிபாதி அங்கமான பெண்களின் ஆரோக்கியத்தையும் கருத்தில்கொண்டதாகத்தான் அரசின் கொள்கை முடிவுகள் இருக்க வேண்டும். அதை நீதிமன்றங்கள் உறுதிசெய்ய வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (14 – 07 – 2024)