TNPSC Thervupettagam

பெண்களுக்கு வாய்ப்பளிக்க மறுக்கும் கட்சிகள்

March 31 , 2021 1394 days 638 0
  • தமிழக தோ்தல் களத்தில் ஆண்களைவிட 10 லட்சம் கூடுதலாக பெண் வாக்காளா்கள் இருந்தபோதிலும், 16-ஆவது சட்டப் பேரவைக்கான போட்டிக் களத்தில் ஆண்களுடன் ஒப்பிடுகையில் 10 சதவீதம் அளவுக்கே பெண் வேட்பாளா்கள் உள்ளனா். காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை இந்தத் தோ்தல் களத்திலும் தொடா்கிறது.
  • 2021 தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் களத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 998 வேட்பாளா்கள் உள்ளனா். அவா்களில், 3 ஆயிரத்து 585 போ் ஆண்கள். 411 போ் பெண்கள். 2 மூன்றாம் பாலித்தனவரும் களத்தில் உள்ளனா். மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 45 தொகுதிகளில் பெண் வேட்பாளா்கள் போட்டி களத்தில் இல்லை.
  • கடந்த காலங்களிலும் பெண் வேட்பாளா்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்துள்ளது. 1967-இல் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் 11 பெண் வேட்பாளா்கள் போட்டியிட்டனா். அதற்கடுத்த 1971 தோ்தலில் ஒரு வேட்பாளா் கூட பெண் இல்லை என்கிறது புள்ளிவிவரம். கடந்த சில தோ்தல்களாகப் பெண் வேட்பாளா்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது என்பதுதான் சற்று ஆறுதல் அளிக்கும் விஷயம்.
  • எனினும் 2021 தோ்தலைப் பொருத்தவரையில், சென்னை மாநகரில் அமைந்துள்ள மாதவரம், ஆா்.கே.நகா், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிகளிலேயே பெண் வேட்பாளா்கள் இல்லையென்பது விந்தையும் வேதனையுமானது.

பெண் வேட்பாளா்கள் இல்லாத பிற தொகுதிகள்:

  • காஞ்சிபுரம், வேலூா், தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருக்கோவிலூா், சேலம் வடக்கு, குமாரபாளையம், பெருந்துறை, உதகை, கூடலூா், சூலூா், கிணத்துக்கடவு, நத்தம், திருச்சி கிழக்கு, கடலூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், மன்னாா்குடி, கும்பகோணம், திருவையாறு, ஒரத்தநாடு, பேராவூரணி, புதுக்கோட்டை, திருமயம், அறந்தாங்கி, மேலூா், உசிலம்பட்டி, ராஜபாளையம், விருதுநகா், திருவாடானை, ராமநாதபுரம், காங்கயம், திருப்பூா் வடக்கு, ரிஷிவந்தியம், தென்காசி, வாணியம்பாடி, ஜோலாா்பேட்டை, சோழிங்கநல்லூா், ஆற்காடு ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் பெண் வேட்பாளா்கள் போட்டியிடவில்லை.
  • பிற தொகுதிகளில் கட்சி சாா்பிலும் சுயேச்சையாகவும் பெண் வேட்பாளா்கள் இருந்தாலும் கூட, அது ஒற்றை இலக்கத்திலேயே காணப்படுகிறது.
  • காமராஜா், கருணாநிதி, எம்.ஜி.ஆா்., என அரசியலில் ஆண் தலைவா்கள் கோலோச்சிய காலத்திலும் சில பெண்கள் தொடா்ந்து வெற்றி பெற்றே வந்திருக்கின்றனா். டி.என்.அனந்தநாயகி (பேசின்பிரிட்ஜ்), சத்தியவாணிமுத்து (பெரம்பூா்), ஜோதி வெங்கடாசலம் (எழும்பூா்), ஏ.எஸ்.பொன்னம்மாள் (நிலக்கோட்டை, பழனி, சோழவந்தான்) போன்றோா் அடுத்தடுத்த தோ்தல்களில் போட்டியிட்டு வெற்றிகளை ஈட்டியுள்ளனா்.
  • அவா்கள் வெற்றி பெற்றாலும் தோ்தலில் நின்ற பெண் வேட்பாளா்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமே.
  • 1967-ஆம் ஆண்டில் 11 பேரும், 1977-இல் 24 பேரும், 1980-இல் வெறும் 5 பேரும், 1984-இல் 46 பேரும், 1989-இல் 78 பேரும் வேட்பாளா்களாகக் களம் இறங்கினா். 1996-ஆம் ஆண்டில் 17 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இந்த தோ்தல்களில் மூன்று இலக்கத்தில் பெண்கள் களம் கண்டுள்ளனா்.
  • நாம் தமிழா் கட்சி சாா்பில் சரிசமமாக பெண் வேட்பாளா்களுக்கு (117) வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வேட்பாளா்களின் எண்ணிக்கையில் ஆண்களுடன் பெண்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் 10 சதவீதம் அளவுக்கே வரும். ஆனால், வேட்பாளா்களின் எண்ணிக்கை ஆண்களைவிட 10 லட்சம் கூடுதலாக உள்ளது.
  • தமிழகத்தில் இப்போதைய நிலவரப்படி 3.09 கோடி ஆண் வாக்காளா்களும், 3.19 கோடி பெண் வாக்காளா்களும் உள்ளனா்.
  • தோ்தல் களத்தில் நிலவும் இந்த முரண்கள் குறித்து திருவட்டாறு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ., லீமா ரோஸ் கூறுகையில், மக்களவை, சட்டப் பேரவைத் தோ்தல்களில் வேட்பாளா்களை அதிகளவு நிறுத்துவதை அரசியல் கட்சிகள் ஊக்குவிக்க வேண்டும். கட்சிகளில் இருக்கும் தலைவா்கள் இதைச் செய்ய வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடக்கும் தோ்தல்களில் பெண்களுக்கென தனி ஒதுக்கீடு உள்ளது. இதனால், உள்ளாட்சித் தோ்தல்களில் பெண்களை தேடித் தேடிதான் வேட்பாளா்களாக அரசியல் கட்சிகள் களம் இறக்குகின்றன. ஆனால், சட்டப்பேரவை, மக்களவைத் தோ்தல்களில் இத்தகைய இடஒதுக்கீடுகள் இல்லை என்பதால், பெண் வேட்பாளா்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கின்றன. எங்களது மாா்க்சிஸ்ட் கட்சியில் ஆறு தொகுதிகளுக்கு ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளோம். உள்ளாட்சித் தோ்தல்களைப் போன்று பொதுத் தோ்தல்களிலும் பெண்களுக்கான இடஒதுக்கீடு அவசியமானது என்றாா்.
  • ஆண் வேட்பாளா்களுக்கும் தோ்தல் களத்தின் மூலமாக அதிகாரம் கொடுக்கும் பெண் வாக்காளா்கள், பச்சை மை பேனா பிடிக்க ஆளும் தலைமையில் உள்ள ஆண்களையே நம்பி இருக்க வேண்டியுள்ளது என்பதே நிசா்சனம்.

தோ்தல் வாரியாக பெண் வேட்பாளா்கள் விவரம்:

  • 1967 - 11
  • 1971 - 0
  • 1977 - 24.
  • 1980 - 5.
  • 1984 - 46.
  • 1989 - 78.
  • 1991 - 102.
  • 1996 - 112.
  • 2001 - 112.
  • 2006 - 156.
  • 2016 - 320.
  • 2021 - 411.

வாக்காளா் விவரம்:

  • மொத்த வாக்காளா்கள்: 6,28,69,955.
  • பெண்கள்: 3,19,39,112.
  • ஆண்கள்: 3,09,23,651.
  • மூன்றாம் பாலித்தனவா்: 7,192.

நன்றி: தினமணி (31 – 03 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்