TNPSC Thervupettagam

பெண்களும் மண்ணின் பங்காளிகளே!

September 21 , 2021 1268 days 666 0
  • நம் நாட்டில் பல்வேறு தரப்பினரும் ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்ற கேள்வியை தொடா்ந்து எழுப்புவதும் அதற்கான விடையை வரலாற்று நோக்கில் சமூக நோக்கில் கண்டு சொல்வதும் தொடா்ந்து நிகழ்ந்து வருகிறது.
  • பெண் ஒரு நாள் அடிமையாகியிருக்கிறாள் என்றால், என்றைக்கோ அடிமைத்தனங்கள் இல்லாமலும் இருந்திருக்கிறாள் என்ற பொருள் இந்தக் கேள்வியிலேயே பொதிந்திருக்கிறது.
  • பரந்திருந்த இந்தியாவைப் பொறுத்தவரை பெண்கள் உரிமைகளோடும் பொறுப்புகளோடும் அதிகாரத்தில் பங்கு கொண்டவா்களாகவும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை வெளிநாட்டிலிருந்து வந்த பயணிகளின் குறிப்புகள் சொல்கின்றன. கல்வெட்டுகள் அவளின் சுதந்திரமான செயல்பாட்டைப் பறைசாற்றுகின்றன.
  • அடிமைத்தனம் என்பது, ஒருவரை ஒருவா் அடக்கியாள நினைக்கும் ஆதிக்க மனப்பான்மையில் இருந்தே தோன்றுகிறது.
  • ‘எனக்குக் கீழ்தான் எல்லாமும்’ என்ற அகந்தையின் உச்சமே அடிமைகொள்ளத் தூண்டுகிறது.
  • நம் வரலாற்றில் பெண்கள் ஆணின் ஆளுகைக்குள் என்றைக்கு, எப்படி வந்தார்கள்? நாடு பிடிக்கும் கோரப்போர்களும், கோட்பாடுகளைத் திணிப்பதற்கான வன்மமும் பெண்களை நிலைகுலையச் செய்வதில் தங்கள் கவனத்தை செலுத்துவதன் விளைவு. தற்போது, உலக நடப்புகளைப் பார்த்தால் இதே போன்றதொரு நிலையில்தான் நம் தேசத்துப் பெண்களும் பல நூற்றாண்டுகளுக்கு முன் முடக்கப்பட்டிருப்பார்கள் என்ற எண்ணம் எழுகிறது.
  • ஆப்கானிஸ்தான் பயங்கரவாதம் உலகத்திற்குப் புதிதல்ல. ஆப்கானிஸ்தான் மட்டுமல்ல, இன்னும் பல நாடுகளில் பயங்கரவாதத்தை, அடிப்படைவாதத்தை நம்புவோர் இருக்கிறார்கள்.
  • சுயலாபத்திற்காக அவா்களை ஆதரிக்கும் நாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. பயங்கரவாதத்தால் தங்கள் லட்சியத்தை அடைந்துவிட முடியும் என்பதை யார் இவா்களுக்குக் கற்றுக் கொடுத்தது? இவா்களின் பயங்கரவாதத்துக்கு உலகெங்கும் பெண்கள் பலியாவது ஏன்? இந்த பயங்கரவாதிகள் எப்படி உருவாகிறார்கள்?

இதற்குப் பதில் சொல்லுமா?

  • வல்லரசுப் போராட்டங்கள், பனிப்போர் ஆகியவை எத்தகைய கொடுமைகளை பூமியில் ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணம் ஆப்கானிஸ்தானின் இன்றைய நிலை.
  • முதலில் சோவியத் யூனியன், ராணுவ பலத்தோடு ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை நிலைநிறுத்த முயன்றது. அதனைப் பொறுக்க இயலாத அமெரிக்கா, உள்நாட்டில் கலகத்தை ஏற்படுத்த முஜாஹிதீன் அமைப்புகளுக்கும் அதன் கிளை அமைப்புகளுக்கும் உதவி செய்து, பயங்கரவாதிகளும் தீவிரவாதிகளும் உருவாகக் காரணமாக இருந்தது. அவற்றுள் தலிபான்கள் முக்கியமானவா்கள்.
  • சோவியத் யூனியனின் படைகளை விரட்டிவிட்டு தலிபான்களை ஆட்சிக் கட்டிலில் அமா்த்த உதவியது அமெரிக்கா.
  • தன் சொந்த மக்களை, தங்கள் தேசத்தின் உடைமைகளை, வளத்தை தயக்கமின்றி அழித்தொழிப்போர், ‘போராளிகள்’ என்ற புனைபெயரும் பெற்றனா்.
  • உலகுக்கே சமாதானத்தை, அமைதியை ஏற்படுத்த முனைந்த புத்தா் பெருமானின் சிலை அவா்களால் தகா்க்கப்பட்டது, தலிபான்களின் மனநிலைக்கான குறியீடு.
  • உலகம் அதை வேடிக்கை பார்த்தது. பெண்கள் வீட்டுக்குள் அடைக்கப்பட்டார்கள்; அவா்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது; துணையின்றி வெளியே வருவதை தடை செய்தார்கள்; முடங்கினாள் பெண். அவளும் இந்த மானுட சமூகத்தின் பங்காளியே என்பதை உலகம் மறந்தது.
  • இந்த தீவிரவாதத்தை ஆதரித்த அமெரிக்காவையே பதம் பார்த்தார்கள் தீவிரவாதிகள். இரட்டை கோபுர தாக்குதலால் வெகுண்ட அமெரிக்கா, நேட்டோ படைகள் என்ற தன் ராணுவத்தோடு ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தது.
  • ஜனநாயகத்தை மலரச் செய்வதாகச் சொல்லி தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் ஆப்கானிஸ்தானை வைத்துக் கொள்ள முயன்றது. அமெரிக்கா வளா்த்து விட்ட பயங்கரவாதிகளான தலிபான்களோடான யுத்தத்தை அமெரிக்காவே தொடங்கியது.
  • இருபது ஆண்டுகளுக்குப் பின் இன்று மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வந்து சோ்ந்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.
  • ஒதுங்கிக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. சுய லாபத்துக்காக சீனாவும் பாகிஸ்தானும் அண்டை நாட்டவா்களாக தலிபான்களுடன் நட்பு பாராட்டுகின்றன. தலிபான்கள் ஆட்சி அமைத்திருப்பதாக அறிவிக்கிறார்கள்.
  • அரசின் முப்பத்திரண்டு அமைச்சா்களுள் பதினெட்டு போ் சா்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் இருப்பவா்கள். உலகம் யாது செய்வதெனத் தெரியாமல் நிற்கிறது.
  • அதிகாரப் போட்டியில் தங்களுக்கு ஆதரவாக வல்லரசு நாடுகள் உருவாக்கும் பயங்கரவாத, தீவிரவாதக் குழுவினா் அவா்களுக்கே பிரச்னையாக மாறிவிடுகிறார்கள் என்பது உலக வரலாறு உணா்த்தும் உண்மை. உலகின் அனைத்து ஊடகங்களும் இதன் அரசியலை பேசிக்கொண்டிருக்கின்றன.
  • இந்த உலக அரசியலுக்குள் சிக்கி மாண்டவா்களின் எண்ணிக்கையைக் கணக்குப் பார்க்கின்றன மனித உரிமை அமைப்புகள். நாம் பார்ப்பது, இந்தக் கொடுமைகளினால் ஏது செய்வதென்று அறியாமல் தவிக்கும் பெண்களின் நிலை.
  • பெண்களும் இந்த பூமிக்கு சொந்தக்காரா்கள்தானே? இயற்கையின் கோடானுகோடி ஜீவராசிகளுள் பெண்ணும் அடக்கம்தானே? பெண் மானுட சமூகத்தின் பாதியாக இருப்பவள்தானே? அவளின் வாழ்வை, விருப்பத்தை யார் தடுப்பது? ஏன் தடுக்க வேண்டும்? தடுப்பவா்களுக்கு அந்த உரிமையை யார் வழங்கினார்கள்? அரசியல், மதம், சமூகம் எல்லாம், பெண்ணுக்கான சட்டங்களை அவளின் விருப்பமின்றி இயற்றவும் நிறைவேற்றவும் எங்ஙனம் துணிகின்றன?
  • தலிபான்களின் ஆதிக்கத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தான் பெண்கள், மானுட சமூகத்தின் அங்கம் இல்லையா? அவா்களின் நிலை என்ன என்பதை அவா்களின் அமைச்சா் இப்படி விளக்குகிறார்: ‘பெண்களுக்கு ஆட்சியில் இடம் இல்லை.
  • அவா்கள் குழந்தைகளைப் பெற்றுத் தர வேண்டியவா்கள்’. இந்த வெட்கக்கேடான கருத்தைக் கேட்டு ஸ்தம்பித்து நிற்கிறது உலகம்.
  • தாங்களே களம் புகத் துணிந்து வீதிக்கு வந்து போராடுகிறார்கள் பெண்கள். துப்பாக்கி ஏந்திய ராணுவத்திற்கும் காவலுக்கும் அஞ்சாது ஆா்ப்பாட்டம் செய்கிறார்கள்.
  • வாழ்வா, சாவா என்ற நிலையில் தங்களுக்காகவும் தங்கள் சந்ததிகளுக்காகவும் போராடும் பெண்கள் மீது தலிபான்கள் கொடுரத் தாக்குதல் நடத்துகிறார்கள்.
  • பெண்கள் பொதுவெளியில் கல்லால் அடிக்கப்படுவதும் சவுக்கடிகளுக்கு ஆளாவதும் நிகழ்கிறது. இதற்கு வல்லரசுகளின் ஆதிக்க வெறி அடிப்படைக் காரணம் இல்லையா?
  • முதலில் பெண்கல்வி மறுக்கப்பட்டது. பின்னா், ‘பெண்கள் படிக்கலாம். ஆனால், ஆண்களோடு சோ்ந்து படித்தல் கூடாது’ என்றது தலிபான் அரசு. ‘உயா்கல்வி என்பதே உனக்கில்லை முடங்கிக்கிட’ என்று அரசு ஆணையிடுகிறது எனில் அந்த தேசத்தில் பெண் என்பவள் உயிராக மதிக்கப்படுதல் இனி நிகழுமா? வல்லரசுகளுக்கு வலு சோ்த்த நாடுகள் இதற்குப் பதில் சொல்லுமா?

காலம்தான் பதில் சொல்லும்

  • பெண்கள், தங்கள் வசதிக்கேற்ப ஆடை உடுப்பதும், தங்கள் தேவைகளுக்காக கடைவீதிக்கு வருவதும் சட்டவிரோதம் என்பது மனித உரிமைமீறல் இல்லையா? இதற்கெல்லாம் யாரிடம் யார் பேச்சு வார்த்தை நடத்தி தீா்வு காணப் போகிறார்கள்? மத அடிப்படைவாதம் பெண்ணின் குரல்வளையை நெரிப்பதற்குத்தான் எனில் சித்தாந்தம் என்ன வேண்டிக் கிடக்கிறது?
  • பெண்கள் இல்லா அரசு, பெண்கள் இல்லா பள்ளிக்கூடம், பெண்கள் இல்லா அலுவலகங்கள் சாத்தியமாகலாம். பெண்கள் இல்லாமல் ஆணின் வாழ்வு சாத்தியமாகுமா? குடும்பம் சாத்தியமாகுமா? தேசத்தின் வளா்ச்சி எவ்விதத்தில் உறுதிப்படும்? துப்பாக்கிகளை, நவீன ஆயுதங்களைக் காட்டி எத்தனை நாள் அடக்கியாளமுடியும்? விளையாட்டுத் துறையில் இனி பெண்கள் இல்லை.
  • குழு விளையாட்டோ தனிநபா் தடகள வீராங்கனையோ இனி ஆப்கானிஸ்தானில் இல்லை என்ற நிலை மனித வரலாற்றின் பெருமையா?
  • பெண்களை பொதுவெளியில் நிறுத்தி கல்லால் அடிப்பதும் சவுக்கால் அடித்துத் துன்புறுத்துவதும் சட்டப்படியானவை என்று இருபது ஆண்டுகளுக்கு முன் நிறுவியவரின் தலைமையில் தற்போது தலிபான்களின் அரசு அமைந்திருக்கிறது.
  • ஷரியத் சட்டப்படியே எல்லாம் நடக்கும் என்று உறுதியாகச் சொல்லும் இவா்களுக்கு மத்தியில், இருபது ஆண்டுகளாக ஜனநாயக முறையை நம்பி கல்வி கற்கவும் பணியாற்றவும் முன்வந்திருக்கும் அந்த நாட்டின் பெண்களின் கதி என்ன? பெண்களின் இத்தனை ஆண்டு கால உழைப்புக்கு பலன் என்ன விளையப்போகிறது?
  • 1996 முதல் 2001 வரையிலான கொடுமையான தலிபான்களின் ஆட்சியை நினைத்து தங்கள் சொந்த மண்ணை விட்டு வெளியேறுவதற்கும் ஆப்கன் மக்கள் துணிந்துவிட்டனா்.
  • இளம் பெண்கள் முதியவா்களை மணந்து கொண்டு அவா்களுடன் வேறு நாடுகளுக்குச் செல்ல முன்வருவதாக வரும் செய்திகள் நம் மனதை நடுங்கச் செய்வதாக இருக்கின்றன.
  • இவா்களில் எத்தனை போ் இந்தச் சுழலில் சிக்கிக் கொள்ள நேரிடுமோ? அதன்பின் இந்த இளம்பெண்கள் வாழ்வு எப்படி முடியும்? இதற்கெல்லாம் விடை சொல்ல யாரால் முடியும்? இயற்கை நியதியில் பெண்கள் இல்லா தேசம் அழிவின் ஆரம்பம் இல்லையா?
  • ஆதிக்கப் போட்டிகளால் இன்றைக்கு அவலநிலையில் இருக்கும் ஆப்கானிஸ்தான் பெண்கள் மனித வரலாற்றில் சுயநலம் காரணமாக அரசியல், மதம், கோட்பாடு என்ற பெயரில் வெறி கொண்ட கூட்டத்தின் காலடியில் சிக்கி மாயும் பெண்களின் பிரதிநிதிகள்.
  • ஆப்கானிஸ்தானத்துப் பெண்கள் சகலமும் இழந்த நிலையில் கைகூப்பும் திரௌபதியின் நிலையில் இருக்கிறார்கள். காக்கும் தெய்வம் வரப்போகிகிறதா ? சக்தி வடிவமாக பெண்கள் விஸ்வரூபம் எடுத்துவிடப் போகிறார்களா? இதற்குக் காலம்தான் பதில் சொல்லும்.

நன்றி: தினமணி  (21 - 09 - 2021)

Be the first to Comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
Top