- இன்றைய நிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறை, குற்றங்கள் உலகின் எல்லா நாடுகளிலும் குறைந்துள்ளன. முற்காலங்களில் உலகெங்கிலும் பெண்கள் மீது ஆண்களின் ஆதிக்கம் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு, சர்வசாதாரணமாக நடைபெற்று வந்தது.
- இது குறித்த விவரங்கள் மனித வளர்ச்சிக்கான ஆய்வுகளில் விரிவாக ஆராயப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
முற்காலங்களில் பெண்களின் மீதான அடக்குமுறை பல வகைகளில் வெளிப்பட்டன. பாலியல் வன்கொடுமை, துரத்தித் துன்புறுத்தும் வன்முறைகளுடன் கணவர்மார்களின் அடக்குமுறையும் அடங்கும். நாடுகள் வளர்ச்சி அடைந்தவுடன், பெண்களின் அடிபணிதல் மிகவும் அவசியம் என எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட காலத்தில், தங்கள் அடிமைத்தனத்தை பெண்கள் ஒப்புக்கொண்டு ஆண்களுக்கு கட்டுப்பட்டு நடந்தார்கள்.
நிகழ்வுகள்
- வட அமெரிக்காவில் மக்கள் குடியேறிய காலத்தில் பின்வரும் நிகழ்வுகள் சர்வசாதாரணமாக நிகழ்ந்தன எனக் கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதாவது, கணவன் -மனைவி போன்று தனியாக வாழும் ஆண்கள் - பெண்கள் பழங்காலங்களில் நிலையான குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லை.
- சில ஆண்களுடன், சில பெண்கள் வாழும்போது பெண்கள் துன்புறுத்தப்பட்டு வெளியேறி வேறு சில ஆண்களுடன் சேர்ந்து வாழ்வது ஒப்புக்கொள்ளப்பட்ட நடைமுறை. எனவே, பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். அது வெளிவராத தகவலாக இருக்கும் எனக் கூறுகிறார் கில்பேட்ரிக் எனப்படும் சமூக ஆய்வாளர்.
- அந்தக் காலகட்டத்தில் 20 சதவீத பெண்கள் அவர்கள் வாழ்நாளில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள். இது வெளிவந்த தகவல்களில் அந்தக் காலத்தில் உருவான கணக்கீடு. வெளிவராத தகவல்களையும் சேர்த்தால் 50 முதல் 90 சதவீதம் வரையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
காரணங்கள்
- ஓர் ஆண்டில், 15 லட்சம் பெண்கள் தங்களுடன் நட்புடன் பழகிய ஆண்களால் பாலியல் தொடர்பு கொண்டு, பின் தகராறு உருவாகி அடித்துத் துரத்தப்பட்டுள்ளனர் எனக் கூறுகிறார் குன்ராடி எனும் ஆய்வாளர். அந்தக் காலகட்டத்தில் மனித நடத்தைக்கான எந்தச் சட்டமும் கிடையாது என்பதை நாம் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
- இதுபோலும், இதைவிடவும் மோசமான நிலையிலும் பிற நாடுகளில் பெண்கள் நடத்தப்பட்டிருக்கலாம் என்பதும், இதை அன்றைய பெண்கள் தங்களின் தவிர்க்க முடியாத வாழ்க்கை முறை என நம்பியதும் காரணங்களாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
- சரித்திர காலம் தொடங்கிய காலகட்டத்திலிருந்தே பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடைமுறையில் இருந்துள்ளன என்பது ஆய்வாளர்களின் கணிப்பு.
- பொது சட்டமுறையிலான நடவடிக்கைகள் உருவான வேளையில், பெண்களுக்கெதிராக ஆண்கள் வன்முறையில் ஈடுபட்டால் அது குற்றம் என்ற நிலைப்பாடு கிடையாது. பெண்களை ஆண்கள் அடக்கி வாழ்வது ஒப்புக்கொள்ளப்பட்ட நடைமுறையாக இருந்துள்ளது.
- 1768-ஆம் ஆண்டில் சட்டப்படி ஓர் ஆண் தனது மனைவியைக் கட்டுப்படுத்த ஒரு கம்பினை உபயோகித்து அடிக்கலாம். ஆனால், அந்தக் கம்பு பெருவிரல் தடிப்பிற்கு மேல் இருக்கக் கூடாது என இருந்ததாம் நடைமுறை. இந்த பெருவிரல் விதி 1867 வரை நடைமுறையில் இருந்தது எனக் கூறுகிறார் ஸ்ட்ராஸ் எனும் ஆய்வாளர்.
பெண்களின் வாழ்க்கைத் தரம்
- இதை விடவும் கொடுமையான நடைமுறை, கணவரைப் பார்த்து ஒரு பெண் மிரட்டும் வகையில் சண்டையிட்டாலோ, மத குருவிடம் எதிர்த்துப் பேசினாலோ, பொருள்களைத் திருடினாலோ, விபசாரம் செய்தாலோ உயிருடன் எரித்துக் கொல்லப்படுவார் என்பதே.
- 1800-ஆம் ஆண்டு தொடங்கி பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது எனக் கூறலாம். 19-ஆம் நூற்றாண்டின் நடுவில், திருமணம் செய்துகொண்ட பெண்களின் சொத்துக்கான சட்டம் அமெரிக்காவின் எல்லா மாநிலங்களிலும் நிறைவேறியது. அந்த நாட்டில் மக்கள் குடியேறி 700 ஆண்டுகள் ஆன பின்னர், பெண்களின் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் உருவாகியதை இது குறிப்பிடுகிறது எனலாம். இதனால், உடனடியாக ஆண்களுக்குச் சமமான நிலைக்கு பெண்கள் வந்துவிட்டனர் எனக் கூற முடியாது என்றாலும், பழைய காலகட்டத்தில் அந்த நாட்டில் இருந்த நிலை கட்டுப்பாட்டுக்குள் வந்து பெண்கள் முன்னேற வழிவகுத்தது எனக் கூறலாம்.
- ஒரு பெண் ஓர் ஆணைத் திருமணம் செய்துகொண்டு வாழும் நிலை உருவான பின்னரும், பெண்ணின் சொத்துகள் யாவும் கணவருக்குச் சொந்தமாகிவிடும் நிலை அமெரிக்காவில் இருந்ததாம். கணவர் இறந்தபின், சொத்துகள் யாவும் குழந்தைகளுக்குச் சென்று விடுமாம். 1830-ஆம் ஆண்டில் பெண்களுக்கான சொத்துகளை திருமணமான பின் அவர்களே பராமரிக்கும் வகையில் சட்டங்கள் உருவாகின. எனினும், அந்தச் சொத்துகளை அவர்கள் தங்கள் கணவர்களின் அனுமதியின்றி விற்க முடியாது.
குடும்ப வாழ்க்கை
- அன்றைய கால (1830) அமெரிக்காவின் ஒரு சில மாநிலங்களில், சமூக சொத்துரிமை நடைமுறை என்பது உருவாகியது. மணமான தம்பதியர் சம்பாதித்த வருமானத்தில் கணவருக்கும் மனைவிக்கும் சமமான பங்கு உருவாக்கப்பட்டது. அந்த வருமானத்தில் வாங்கப்பட்ட சொத்துகளிலும் சமமான பங்கு இருவருக்கும் உரித்தானது.
- இருந்தபோதிலும் இந்தச் சொத்துகள் எல்லாவற்றையும் பரிபாலனம் செய்யும் உரிமை கணவருக்கே உண்டு.
- காலங்கள் கடந்து அந்த நாட்டில் ஏற்பட்ட அனுபவத்தில், சில ஆண்கள் தங்களுக்கு உள்ள உரிமையை தவறுதலாகப் பயன்படுத்தியது தெரியவந்தது. மேலும், 1940-ஆம் ஆண்டு தொடங்கி, தனி மனிதனின் குடும்ப வாழ்க்கையில் வன்முறை அதிகமாகி பெண்கள் பாதிக்கப்பட்டது அந்தச் சமூகத்தின் கவனத்துக்கு வந்தது.
- குடும்ப வாழ்க்கை, அதில் ஏற்படும் அவலங்கள் சமூகத்தின் கவனத்தை ஈர்த்தது. பெண்கள், குழந்தைகளை அடித்துத் துன்புறுத்தும் கணவர்கள் மீது குற்றம் சுமத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வகையில் அமெரிக்காவின் பல மாநிலங்களில் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் சமூகத்தின் கீழ்நிலை மக்களின் குடும்பத்துக்கே பொருந்தும் எனவும் கூறப்பட்டது. காரணம், அந்த நாட்டின் மேல்தட்டு மக்கள் இதுபோல குடும்பத்துப் பெண்களை துன்புறுத்துவதில்லை எனக் கூறப்பட்டது.
- இந்தப் பின்னணியில், அந்நாட்டில் 1960, 1970-ஆம் ஆண்டுகளில், பெண்களுக்கான உரிமை குறித்தும், பெண்களுக்கு இழைக்கப்படும் அடக்குமுறையை எதிர்த்தும் இயக்கங்கள் உருவாயின. இந்த இயக்கங்களின் பிரசாரங்கள் எதுவும் மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்கவில்லை.
- ஆனால், பாதிக்கப்பட்ட பெண்களுக்குச் சேவை செய்யும் இயக்கங்கள் உருவாகி, 1973-ஆம் ஆண்டில் கணவர்களால் அடித்து துன்புறுத்தப்பட்ட பெண்களுக்கான பெண்கள் காப்பகம் ஒன்று மின்னியோபாலிஸ் நகரில் உருவாக்கப்பட்டது. இதுபோன்ற 500 காப்பகங்கள் 1982-ஆம் ஆண்டுவாக்கில் அமெரிக்காவின் பல நகரங்களிலும் உருவாக்கப்பட்டன.
இயக்கங்கள்
- இந்த இயக்கங்கள் உருவான நிலையிலும் பெண்களுக்குத் தேவையான பாதுகாப்புகள் ஏற்படவில்லை. தங்களை கணவர் அடித்து துன்புறுத்துவதாக பெண்கள் புகார் அளித்தால் போலீஸார் மிகப் பெரிய அளவில் அந்தப் புகார்களை விசாரிக்காமல், தம்பதியினரைச் சமாதானப்படுத்தவே முயற்சித்தனர் எனக் கூறப்படுகிறது.
- இதை எதிர்த்து சில பெண்கள், தங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையை எடுக்காத போலீஸார் மீது வழக்கு தொடர்ந்தனர். இதன் விளைவாக அந்த நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இதுபோன்ற புகார்களில் தொடர் நடவடிக்கைகளை போலீஸார் எடுக்கத் தொடங்கினர்.
- இதன் விளைவாக, நாடு முழுவதும் பெண்களுக்கான குடும்ப பாதுகாப்பு பெரிய விவாதப் பொருளாகி நல்ல மாற்றங்கள் ஏற்பட்டன. பெண்களுக்கான பாதுகாப்பை மிகவும் சிறந்த முறையில் ஏற்படுத்தி, தரமான வாழ்க்கையை எல்லாவிதமான பெண்களும் அமைத்துக் கொள்ள அமெரிக்க அரசு உதவியது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் அவர்களுடன் வெளியேறித் தவிக்கும் குழந்தைகளுக்கும் இருப்பிட வசதி, பண வசதியுடன் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றை ஏற்படுத்தித் தந்தது அமெரிக்க அரசு.
வன்முறைகள்
- பெண்களுக்கு எதிரான வன்முறைகளினால் உருவாகும் உடல் பாதிப்பைவிட மன பாதிப்புதான் ஒரு நாட்டைச் சீரழிக்க முடியும் என்பது சரித்திரம் நமக்கு விளக்கும் உண்மை. வன்முறைகளால் அடக்கி ஆளப்படும் பெண்கள் சுயமரியாதையை இழந்து பயம் கலந்த வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள் என்பது, அவர்களின் அனுபவம் உலகுக்கு போதிக்கும் பாடம்.
- பல நாடுகளிலிருந்து வந்து குடியேறியவர்களால் அமைக்கப்பட்ட நாடான அமெரிக்கா, அந்தக் காலத்தில் சரியான அரசாங்கமும், நிர்வாகக் கட்டமைப்பும் இல்லாத நிலையில், மேலே விவரிக்கப்பட்ட நிலையில் பெண்களை நடத்தியது வியப்பாகாது. இது போலவும், இதைவிடவும் பல நாடுகளிலும் பெண்களின் நிலை மிக மோசமாக இருந்தது.
ஆனால், அதுபோன்ற நிலையிலிருந்து வெளிவந்து, இன்றைய நிலையில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் உயர்ந்து நிற்கும் அமெரிக்காவைக் கண்டு நாம் பெருமைப்பட முடியும்.
- பெண்களின் சுதந்திரம், வளர்ச்சி, வளமான வாழ்க்கைத் தரம் முதலானவற்றில் அந்த நாட்டைப் போல் வேறு எங்கும் கிடையாது. அந்தத் தரமான வாழ்க்கையை உலகின் எல்லா நாடுகளும் பின்பற்றுதல் அவசியம்.
நன்றி: தினமணி (29-02-2020)