TNPSC Thervupettagam

பெண்கள் இடஒதுக்கீடு நோக்கமும் தேக்கமும்

October 2 , 2023 462 days 283 0
  • நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றங்களிலும் பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டினை வழங்க வேண்டும் என்கிற மசோதா, புதிய நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட சிறப்புக் கூட்டத்தொடரில் மக்களவை, மாநிலங்களவை என இரண்டு அவைகளிலும் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டிருப்பது பெண்கள் அனைவருக்கும் மகிழ்வளிக்கும் செய்தி என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
  • ஒவ்வொரு நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போதும் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றிட வேண்டி, கட்சி பேதமின்றி அனைத்துப் பெண் உறுப்பினர்களும் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டிருந்தார்கள். இவ்வளவு நீண்ட காலமும் எதற்கும் ‘அசைந்து கொடுக்காமல்’ கிடந்த அந்த மசோதா, இப்போது சற்றே அசைந்திருக்கிறது; அவ்வளவுதான்.
  • அந்த அசைவுக்குப் பின் இருக்கும் ‘தந்திரம்’தான் இங்கு முதன்மையானது. அரசியலில் பெண்கள் பங்குகொள்ள ஆரம்பித்து நூறாண்டுகளைக் கடந்துவிட்டோம். நம் நாட்டைப் பொறுத்தவரை ஏதோ இப்போதுதான் பெண்கள் இடஒதுக்கீடு குறித்துப் பேசுவதான சொல்லாடல்கள் உருவாகியுள்ளன.

நோக்கமும் தேக்கமும்

  • சமுதாய மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்துப் பரிந்துரைக்க அப்போதைய காங்கிரஸ் அரசால் 16 ஜனவரி 1957இல் அமைக்கப்பட்ட பல்வந்த் ராய் குழு அளித்த அறிக்கை, அரசியலில் பெண்களுக்கு அதிகப் பொறுப்புகள் அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது. 1970களில் உருவாக்கப்பட்ட இந்தியப் பெண்கள் அந்தஸ்து பற்றிய அறிக்கையும், அரசியல் துறைகளில் அதிக இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது.
  • அடுத்து 1977இல், ஜனதா அரசில் அமைக்கப்பட்ட அசோக் மேத்தா குழுவின் அறிக்கை அளித்த 138 பரிந்துரைகளில், பட்டியல் சாதியினர், பழங்குடியினரின் மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். அதிலும் மூன்றில் ஒரு (1/3) இடம் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • இந்தக் குழுக்கள் அளித்த பரிந்துரைகள் காலம் கடந்து 1992இல் பஞ்சாயத்து ராஜ் சட்டமாக உருவானது. ஆனாலும் பெண்களுக்கான இடஒதுக்கீடு என்பது மட்டும் இங்கு எளிதில் ஏற்கப்படவில்லை. அதற்குக் காரணம் அவ்வளவு மனத்தடைகள், பெரும்பாலான அரசியல் கட்சிகளிடம் மண்டிக் கிடந்தன. படிப்படியாகவே மாற்றங்கள் இங்கு நடைமுறைக்கு வந்தன. பெண்களும் ஓரளவு அதிகாரத்துக்கு வர முடிந்தது. ஆனாலும் உள்ளாட்சித் தேர்தல்களைக் கடந்து 33% முழுமை பெறவும் இல்லை; நடைமுறைப்படுத்தப்படவும் இல்லை.

பெரியாரின் குரல்

  • இங்கே 80 ஆண்டுகளுக்கு முன்னரே தந்தை பெரியார், பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று எழுப்பிய குரலின் எதிரொலியாக, சுயமரியாதை இயக்கத்தில் பங்கேற்றுத் தீவிரமாக இயங்கிய பெண்கள் பலரும் தங்களுக்கான இடஒதுக்கீடு பற்றி மேடைதோறும் பேசியதுடன் தங்கள் இயக்கம் சார்ந்த பத்திரிகைகளிலும் தொடர்ந்து எழுதிவந்திருக்கிறார்கள்.
  • பெண்களுக்கென்று தனியாக ஓர் அரசாங்கம் வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கைகளில் ஒன்று. ‘குடி அரசு’ பத்திரிகையில் கிரிஜா தேவி எழுதிய ‘பெண்கள் ஆட்சி’ என்னும் கட்டுரையில் நிர்வாகத் துறை, கல்வித் துறை, அரசியல் போன்ற அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்குச் சம பங்கு அளிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இப்படி இதற்கு ஒரு நீண்ட பின்னணி உள்ளது.
  • நாடு, சமூகப் பிரச்சினைகள் என வரும்போது பெண்களும் அதில் சம பங்கேற்றுச் செயல்படலாம் என்பதைப் பல்வேறு நாடுகளின் அரசியல் பிரச்சினைகளும் தெளிவுபடுத்தியிருக்கின்றன. இந்நிலையில், ‘பெண்களுக்குச் சுயமாக அரசியல் ஈடுபாடற்ற நிலையில், இடஒதுக்கீட்டின் மூலம் வலிந்து அவர்களை அரசியலுக்குள் திணிப்பதால், ஆண் உறுப்பினர்களின் பினாமிகளாகவே பெண் உறுப்பினர்கள் இருப்பார்கள்’ என்ற ஒரு சாராரின் கூச்சலும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.
  • ஆனால், கள நிலவரம் இந்தக் கூச்சல்கள் அனைத்தையும் முறியடிக்கிறது. புதிய பஞ்சாயத்து ராஜ் சட்டத்துக்குப் பிறகு, உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்கள் அதிகளவில் பங்கேற்றதன் மூலமும் அவர்களில் பெரும்பான்மையானவர்கள் பலரும் சிறப்பாகச் செயல்படுவதன் வழியாகவும் இதனை உணர முடிகிறது. இதற்கு முன்னதாகச் சமூகம் குறித்த பார்வையோ அக்கறையோ ஏதுமற்ற பல பெண்கள் பஞ்சாயத்து அமைப்புகளுக்குத் தேர்வாகியிருந்தாலும், பின்னர் சமூகம் குறித்த புரிதலையும் புதிய பார்வையையும் களத்தில் பெற்ற அனுபவங்களின் வாயிலாக அவர்கள் பெற்றதையும் அறிந்துகொள்ள முடிந்தது.

பெண்கள் வெறும் வாக்காளர்களா  

  • உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிஎன்.வி.ரமணா, பெண் நீதிபதிகளுக்கு அளித்த வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில், “பெண்களுக்குப் போதிய அளவில் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதி நியமனங்களில் வாய்ப்புகள் இல்லை. தற்போது முறையே 11.5%, 9.8% பெண்கள் மட்டுமே நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறார்கள். பெண்களுக்கு 50% அளிக்க வேண்டியது அவசியம்” என்று கூறியதோடு - ‘உரக்க உரிமைக் குரல் எழுப்புங்கள்’ என்றும் அவர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார்!
  • உச்ச நீதிமன்றத்திலும்கூடப் பெண்கள் இடஒதுக்கீட்டின் அவசியம் குறித்தே பேசப்படுகிறது. பெண்கள் அரசியலில் பங்கேற்பதன் மூலம் அவர்களால் செயலூக்கம் பெறும் ஜனநாயக முடிவுகள் என்பவை அவர்களையும் சமூகத்தையும் மென்மேலும் உயர்த்தக்கூடியதாகவே இருக்கும். எனவே, கண்டிப்பாகப் பெண்களுக்கு இடஒதுக்கீடு விரைந்து அளிக்கப்படுவது அவசியமாகும்.
  • இங்கு எல்லாவற்றிலும் ஊடுருவியிருக்கும் அரசியலைப் போலவே, அரசியல் துறையிலும் ஓர் உள்ளார்ந்த ‘அரசியல்’ ஊடாடிக்கொண்டிருக்கிறது. அதிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு என்றால் கேட்கவா வேண்டும்? பெண்களின் வாக்குகளை மட்டும் குறிவைக்காமல் உண்மையில் பெண்கள் இடஒதுக்கீடு என்பது எப்போது சாத்தியமாகும், எப்போது நடைமுறைக்கு வரும் என்பதுதானே இங்கு முதன்மையான கேள்வி. அதன் பின்னர்தான் 50% எல்லாம்!

நன்றி: இந்து தமிழ் திசை (02 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்