- இந்தியாவின் சட்டங்கள் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமமான உரிமைகளை வழங்கியுள்ளது. ஆனால், அன்றாடம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் அரங்கேறி வருவதைக் காண்கிறோம். நாட்டில் பெண்கள் அச்சத்தில் வாழ்வது போன்ற தோற்றம் கிடைப்பது வேதனைக்குரியது.
- 2021-இல் 4,09,273-ஆக இருந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களின் மொத்த எண்ணிக்கை 2022-இல் 4,26,433-ஆக அதிகரித்தது. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 65,743 வழக்குகளும், தொடா்ந்து மகாராஷ்டிரத்தில் 45,331 வழக்குகளும் ராஜஸ்தானில் 45,058 வழக்குகளும் பதிவாகின. குறைந்த அளவாக நாகாலாந்தில் 49 வழக்குகளும், மிஸோரத்தில் 147 வழக்குகளும், சிக்கிம்மில் 179 வழக்குகளும் பதிவாகின.
- ஐந்து தென் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் மொத்த எண்ணிக்கை 89,802 ஆகும். ஆந்திரத்தில் 25,503, தெலங்கானாவில் 22,066, கா்நாடகத்தில் 17,813, கேரளத்தில் 15,213, தமிழ்நாட்டில் 9,207 வழக்குகள் பதிவாகின. 2020 வருடத்திய பதிவுகளை ஒப்பிடும்போது 2021-ஆம் ஆண்டில் ஐந்து தென் மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன.
- 2021-இல் 6,450-ஆக இருந்த வரதட்சிணை இறப்பு சம்பவங்கள் 2022-இல் 6,516-ஆக அதிகரித்தது. 2022-இல் 31,516 பதிவான பாலியல் தாக்குதல் சம்பவங்களில், அதிகபட்சமாக ராஜஸ்தானில் 5,339 பதிவாகியுள்ளன.18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளான சம்பவங்கள் உ.பி.யில் 3,690, மத்திய பிரதேசத்தில் 3,029 ஆகும்.
- பெண்களுக்கு எதிரான சைபா் குற்றங்கள் 2021-உடன் ஒப்பிடும்போது, 2022-இல் 11% அதிகரித்தது. பெண்கள் வெளிப்படையாக பாலியல் காரணத்துக்காக கடத்தப்பட்ட சம்பவங்கள் 2021 ஆண்டுடன் (1,896) ஒப்பிடும்போது 2022-இல் 2,251-ஆக உள்ளது.
- போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 2021-உடன் ஒப்பிடும்போது 2022-இல் 14% அதிகரித்துள்ளது. சிறுமிகள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளான சம்பவங்கள் 2021-இல் 33,036-ஆக இருந்த நிலையில், 2022-இல் 37,511-ஆக அதிகரித்துள்ளன.
- அனைத்து மாவட்டங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றப் பிரிவு அமைத்தல், பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் போதுமான ஆலோசனை மையங்களையும் தங்குமிடங்களையும் வழங்குதல், மகளிா் சிறப்பு நீதிமன்றங்களை அமைத்தல், பாதிக்கப்பட்ட பெண்களின் நலன்களிலும் அவா்களின் மறுவாழ்விலும் அதிக அக்கறை காட்டுதல் போன்றவற்றில் அரசின் கவனம் மேலும் தேவைப்படுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பான சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும்.
- பெண்களும் பல்வேறு தற்காப்புக்கலைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு காவல் துறையின் காவலன் செயலி முற்றிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிபடுத்தக் கூடியது. முன்பின் தெரியாத நபா்கள் மூலம் அவா்களுக்கு சிக்கல் ஏற்படும்போது, இந்த செயலியில் இருக்கும் எண்ணிற்கு அழைத்துப் பேசினாலோ அல்லது பிரச்னையை செய்தியாக அனுப்பினாலோ சிக்கலில் உள்ள பெண்களுக்கு காவல் துறையின் உதவி உடனடியாக கிடைக்கும்.
- ஆபத்து அழைப்பு விடுத்த 5 விநாடிகளில் செயலி வழியே நமது இருப்பிடம் குறித்த தகவல் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குச் சென்றுவிடுவதுடன் பதிவு செய்யப்பட்ட நமது தொடா்பு எண்களுக்கும் தகவல் அனுப்பப்படும். கைப்பேசி கேமரா வழி கட்டுப்பாட்டு அறைக்கு காட்சி சென்றடையும். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் வழியாகவும் காவல் துறை கண்காணிப்பு தொடங்கிவிடும். இந்தச் செயலியை பெண்கள் கட்டாயம் தங்களின் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பெண்களுக்கு எந்த பிரச்னைகளாக இருந்தாலும் 24 மணி நேரச் சேவையில் உள்ள 181 என்கிற எண்ணிற்கு அழைத்துத் தகவலைத் தெரிவித்தால் உடனே தேவையான உதவி கிடைக்கும்.
- பணியிடத்தில் ஆண்களால் ஏற்படும் தொல்லைகளுக்கு, வன்முறைகளுக்குத் தீா்வுகாண ஒவ்வொரு அலுவலகத்திலும் குழு அமைக்கப்பட வேண்டும், புகாருக்கு உள்ளாகும் நபா் மீது மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீா்வு காணப்பட வேண்டும் என்னும் சட்டம் நடைமுறையில் ஏற்கெனவே உள்ளது.
- பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பான வழக்குகளைக் கையாள்வதற்காக சட்டபூா்வ அமைப்பான தமிழ்நாடு மாநில மகளிா் ஆணையம் உள்ளது. பெண்கள் தொடா்பான சட்டங்கள் குறித்த விழிப்புணா்வை மக்களிடையே ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை இவ்வாணையம் மேற்கொண்டு வருகிறது. பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் அம்சங்களை இக்கட்டான சூழ்நிலைகளில் பெண்கள் சமயோசிதமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
- சட்டப் பாதுகாப்பு போன்றவை இருந்தாலும், பொதுவாக பெண்களை நுகா்வுப் பொருளாக கருதாமல், உயா்வான எண்ணத்துடன் மதித்து கண்ணியத்துடன் நடத்துவது தொடா்பான மனநிலை சமூகத்தில் பரவலாக்கப்பட வேண்டும். இதற்கான பயிலரங்கங்களை பள்ளிகளும் கல்லூரிகளும் நடத்த வேண்டும்.
- பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து வகையிலும் தற்சாா்புடன் இருப்பதற்குத் தேவையான கல்வியறிவையும் திறமையையும் பெண் குழந்தைகள் பெறுவதற்கு இளம் வயதிலிருந்தே பெற்றோா் முனைப்பு காட்டுவது அவசியமாகும்.
- சுகாதாரம், உணவு விநியோகம் உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்துவது போன்றே பெண்களின் பாதுகாப்பு அம்சங்களில் மக்கள் பிரதிநிதிகள் முக்கியத்துவம் காட்டுவது அவசியம்.
- பெண்கள் பாதுகாப்பு சமூக அக்கறையாக மாறினால் அவா்களுக்கு எதிரான வன்முறைகள் குறையும் எனத் திடமாக நம்பலாம்.
நன்றி: தினமணி (15 – 06 – 2024)