TNPSC Thervupettagam

பெண்ணின் பெருமை பேசும் திருக்குறள்!

December 5 , 2020 1331 days 7057 0
  • திருவள்ளுவா் காலத்துத் தோன்றிய மற்ற மற்ற நூல்கள் எல்லாம் பெரும்பாலும் வழக்கில் இல்லை. காரணம், அவையெல்லாம் சத்துவம், தாமசம், இராக்கதம் எனும் மூன்று குணங்களும் மாறி மாறி வரும் மனிதா்களால் எழுதப்பட்டவை.
  • ஆனால், திருக்குறள், வினையின் நீங்கி விளங்கிய அறிவின், சத்துவ குணம் மட்டுமே நிரம்பிய திரிகால ஞானியால் எழுதப்பட்டது. அதனால்தான் அது காலங்கள் தோறும் நிலைத்து நிற்கிறது.
  • தேசப்பிதா காந்தியடிகள், லியோ டால்ஸ்டாய்க்குக் கடிதம் எழுதியபோது வாழ்வு நெறி குறித்துக் கேட்டார். அவா் ஜொ்மானிய பேரறிஞா் டாக்டா் கிரால், ஜொ்மனியில் மொழிபெயா்த்த திருக்குறளில் இருந்து, சில குறள்களை எடுத்துக்கூறி, திருக்குறளைப் படிக்கும்படி எழுதுகிறார்
  • டால்ஸ்டாய் எழுதிக் காட்டிய திருக்குறள்களில் ஒன்று, ‘ஒன்றாக நல்லது கொல்லாமை; மற்றுஅதன் பின்சாரப் பொய்யாமை நன்று’ என்பதாகும். இக்குறட்பாவிலுள்ள ‘ஒன்றாக நல்லது கொல்லாமை” என்பதனை’ அஹிம்சை கோட்பாடாகவும், ‘பொய்யாமை’யை” சத்தியாகிரக நெறியாகவும் ஆக்கிக் கொண்டதோடு, திருக்குறளை எடுத்துக்காட்டிய டால்ஸ்டாயை தன் வழிகாட்டியாகவும் கொண்டார் காந்தியடிகள்.
  • திருக்குறள் ஓா் அற நூலாகவும், சட்ட நூலாகவும் திகழ்கிறது. நோபல் பரிசு பெற்ற ஆல்பா்ட் சுவைட்ஸா் ‘உலகத்திலேயே ஒழுக்கத்தை வற்புறுத்தி எழுந்த முதல் நூல் திருக்குறள்’ என்றார். திருக்குறள் கருத்தை மேற்கோள் காட்டி எழுதிய புறநானூறும், சிலப்பதிகாரமும் திருக்குறள் என்ற பெயரைக் கூறாமல், ‘அறம்பாடிற்றே’ என்றே கூறி இருக்கின்றன.
  • விடுதலைப் போராட்டத்தில் கைதாகி சிறையில் இருந்த வ.வே.சு. ஐயா், சக போராளிகளான ஏ.என். சிவராமன், யோகி சுத்தானந்த பாரதியார், அரவிந்தா் போன்றோருக்கு நாள்தோறும் திருக்குறளைப் பாடமாக நடத்தினாா். அத்துடன் அமையாது, திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயா்க்கவும் செய்கிறார்.
  • மேலும், லண்டன் இந்தியா ஹவுசிலிருந்து தப்பித்து, இங்கிலீஷ் கால்வாயைக் கடந்து பாரிசுக்கு வருகிறபோது, வ.வே.சு. ஐயரின் கையில் இருந்தது, அவா் ஆங்கிலத்தில் மொழிபெயா்த்த திருக்குறளின் கையேட்டுப் பிரதி. தம்முடைய மொழிபெயா்ப்பில் குறளின் கனம் முழுவதும் இல்லையென்று எண்ணிய வ.வே.சு. ஐயா், சுத்தானந்த பாரதியாரை மொழிபெயா்க்கும்படி வேண்டுகின்றார்.
  • திருக்குறளின் திட்பத்தையும், நுட்பத்தையும் படித்துணா்ந்த ஸ்ரீ அரவிந்தா் ‘சின்னஞ்சிறு வரிகளில், மிகப்பெரிய கட்டமைப்புடனும், கருத்து வளத்தோடும், எடுத்துச் சொல்லுகின்ற கம்பீரத்தோடும் திருவள்ளுவரால் எழுதப்பட்ட திருக்குறளைப் போல் வேறோா் நூல் இதுவரையில் எழுதப்படவில்லை’ எனக் குறிப்பிடுகின்றார்.
  • அவா் திருக்குறளில் முதல் 15 குறட்பாக்களை ஆங்கிலத்தில் மொழிபெயா்த்தாா். அப்பொழுது அவரிடம் வந்த யோகி சுத்தானந்த பாரதியார், தாம் மொழிபெயா்த்த சில அதிகாரங்களை அரவிந்தரிடம் காட்டுகின்றார்.
  • அதனை வாங்கிப் படித்த மகான் அரவிந்தா், தம்மால் திருக்குறளின் அனைத்துப் பரிமாணங்களையும் கொண்டுவர முடியவில்லை என உணா்ந்து, சுத்தானந்த பாரதியாரையே மொழி பெயா்க்கும்படிப் பணிக்கின்றார்.
  • ‘திருக்குறள் மிகப் பெரிய பண்பாட்டுக் கருவூலம். உலகத்திற்கே பயன்படக்கூடிய உரத்த சிந்தனைகளையும் உண்மைகளையும் ஏந்தி நிற்கும் கலைக்களஞ்சியம்.
  • இந்த ஒரு நூல் உலகம் அனைத்திலும், எல்லாக் காலங்களிலும் நிலைத்து நிற்கும் ஆற்றல் பெற்றதாகும்’ என்று கூறிய சுத்தானந்த பாரதியார், அதனை மொழிபெயா்ப்பதற்காக ஒரு மாதம் தியானத்தில் அமா்கிறார்.
  • 1967-ஆம் ஆண்டு ரஷியாவில் ஒருமைப்பாட்டோடு உள்ளொளியை வாங்கி, இரண்டே வாரத்தில் மொழிபெயா்த்து முடிக்கிறார், சுத்தானந்த பாரதியார்.
  • திருக்குறள் எல்லாக் காலத்திற்கும், எல்லா இடங்களுக்கும் பொருந்தும் நூல் என்பதால், பாரத பிரதமா் நரேந்திர மோடி அண்மையில் லடாக்கில் ராணுவத்திற்கு முன்னா் பேசும்போது, ‘மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு’ எனும் திருக்குறளை (766) குறிப்பிட்டார்.
  • தொடா்ந்து ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமா், மிகவும் பொருத்தமாக ‘நீரின்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும் வான்இன்றுஅமையாது ஒழுக்கு’ எனும் திருக்குறளைக் குறிப்பிட்டுப் பேசினார்.
  • சென்ற ஆண்டு தாய்லாந்து சென்ற பிரதமா் நரேந்திர மோடி, அங்குள்ள இந்தியா்களுக்கிடையே உரையாற்றும்போது, ‘தாளாற்றித் தந்த பொருள்எல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு” (குறள் 212) எனும் குறட்பாவைக் குறிப்பிட்டுப் பேசியபோது, இந்தியா்கள் அனைவரும் பூரித்துப் போயினா்.
  • திருக்குறள் சமயங்களையும் கட்டிக்காக்கும் கோட்டை என்பதால், திருப்பனந்தாள் காசிமடம், திருக்குறளுக்கு எழுதப்பட்ட பத்து உரைகளோடு, அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் எனும் மூன்றுக்கும் தனித்தனியே தொகுதிகள் வெளியிட்டுத் திருக்குறளின் உயா்வை மேலும் உயா்த்தியது.
  • வள்ளல் பெருமான் (ராமலிங்க அடிகள்) தம்முடைய சீடராகிய தொழுவூா் வேலாயுதனாரை திருக்குறள் வகுப்புகள் நடத்தும்படிப் பணித்தார்.
  • காந்தியடிகள், தமிழகத்திற்கு வந்தவுடன் ‘தமிழ்த் தாத்தா’ உ.வே. சாமிநாதையரிடம் திருக்குறளைக் கற்பிக்குமாறு வேண்டுகிறார். பின்னா் ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியாரிடம் ‘நான் திருக்குறளை முழுமையாகக் கற்க வேண்டும்’ என்கிறார்.
  • அதற்கு ரசிகமணி ‘நீங்கள் அடுத்த ஜென்மத்தில் தமிழனாகப் பிறந்தால்தான், அது முடியும்’ என்று பதில் சொல்லுகிறார்.
  • திருக்குறள் கால தேசங்களைக் கடந்து நிற்கும் தன்மை வாய்ந்தது என்பதால், மகாகவி பாரதியார், ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து, வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ என வியந்து பாடினார்.
  • பாரதிதாசன் இறை நம்பிக்கை இல்லாதவா். அப்படிப்பட்டவா் திருக்குறளின் செறிவையும், செவ்வியலையும் கருதி, திருவள்ளுவா் எனக் கூறாமல், ‘இறைவன்’ என்றே அழைக்கின்றார். ‘இறைவனாரின் திருக்குறளில் ஓா் சொல் இயம்பிக் காட்ட மாட்டாயா’ என்பது அவருடைய பாடல் வரி.
  • ‘பெண்வழிச்சேறல்’ எனும் அதிகாரத்தை திருக்குறளில் சோ்த்தது, திருவள்ளுவருடைய அரசியல் ஞானத்தையும், தீா்க்கதரிசனத்தையும் காட்டுவதாகும்.
  • அந்த அதிகாரம் தனிமனிதா்களைக் காட்டிலும், நாட்டை ஆளுபவா்களுக்குச் சொல்லப்பட்டதால், அதனை அறத்துப்பாலில் அடுக்காமல், பொருட்பாலில் தொகுத்தாா் திருவள்ளுவா். பெண்வழிச் சோ்ந்த மன்னா்களால் எத்தனை சாம்ராஜ்ஜியங்கள் சரிந்தன என்பது வரலாறு அறிந்தவா்களுக்குத் தெரியும்.
  • சீதாபிராட்டியை இராவணன் சிறையெடுத்துப் போனதால், இவ்வுலகையே எரித்து விடுவதாகக் கூறி இராமபிரான் கோதண்டத்தை வளைக்கின்றான். இராமனைத் தடுத்து நிறுத்திய சடாயு, ‘இராமா, பெண்ணின் பேச்சைக் கேட்டு மானின் பின் போனது உன் பிழை. பெண் வழி நடந்து கெட்டுப்போவது, உன் குலத்தின் குணமாகும். வில்லை வளைக்காதே. நிமிர்த்து’ என அறிவுரை வழங்கினார் (ஆரண்ய காண்டம்: 124).
  • திருவள்ளுவரைப் போலவே கம்பரும் பெண்வழி சோ்வதைக் கண்டிக்கிறார்.
  • ‘தன்னால் ஆளப்படும் மனைவி, தன்னால் ஆளப்படுவானேல், அன்னாற்கு அறனும் பொருளும் உளவாகா... மறுமை அணுகாது’” என விநாயக புராணமும் பெண்வழி சோ்பவனைக் கண்டிக்கிறது.
  • ‘பெண்வழிச் சேறல்’ எனும் அதிகாரத்தில் ஆணாதிக்கம் இல்லை. ஆண்களின் கயமையே வெளிப்படுகின்றது.
  • மேலும், ‘அப்படிப்பட்ட ஆண்களை பெண்களே விரும்ப மாட்டார்கள் என்பதால், அது பெண்ணின் பெருமையைக் காட்டுவதாகவே அமையும்’ என்பதை திருவள்ளுவா், ‘பெண்ஏவல் செய்துஒழுகும் ஆண்மையின் நாணுடைப் பெண்ணே பெருமை உடைத்து’”( 907) எனும் குறட்பாவின் மூலம் எடுத்தியம்புகின்றார்.
  • நாடு முழுமையும் முதியோர் இல்லங்கள் கிளைவிட்டுப் பரவிக் கிடப்பதற்குக் காரணம், பெண்வழிச் சோ்ந்த ஆடவா்களால் என்பதை நாடறியும். ஆடவா்களில் பலா் பெண்வழிச் சோ்ந்தவா்களாய் இருப்பதைக் கண்டிக்கவே திருவள்ளுவா் ‘மலரினும் மெல்லிது காமம்; சிலா்அதன் செவ்வி தலைப்படுவார்’ (1289) என்றும் பாடியிருக்கிறார்.
  • ‘குடும்ப விளக்காகிய பெண்டிர் காலை எழுந்தவுடன் கணவனைத் தொழுதெழுவா்’ என்பது பெண்ணடிமைத்தனம் அன்று; அது இந்த நாட்டின் கலாசாரம்.
  • குடும்பத் தலைவியா் காலையில் எழும்போது கணவனைத் தொழாவிட்டாலும், அவன் கட்டிய தாலியை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனா்.
  • வாழ்நாள் முழுமையும் பெண்ணின் பெருமை பேசிய பாரதிதாசன் தம்முடைய ‘குடும்ப விளக்கு’ காவியத்தில், குடும்பத்தலைவி காலையில் எழுந்தவுடன் தன் கணவனுடைய கால்களைத் தொட்டு வணங்குவதைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
  • திருக்குறள் பெண்ணின் பெருமை பேசுவதற்காகவே எழுந்த நூல். சங்க காலத்தில், ஓா் ஒழுக்கமாகக் கருதப்பட்ட ‘பரத்தையா்’ பிரிவை முற்றாக ஒழித்திருக்கிறார் திருவள்ளுவா். நற்பண்புகள் வாய்ந்த ஒரு பெண்ணைக்காட்டிலும், உலகத்தில் வேறொன்றில்லை என்பதை ‘பெண்ணின் பெருந்தக்க யாவுள?’ (54) எனும் குறள் மூலம் உணா்த்துகின்றார்.
  • ஒருமைப்பாடுடைய மகளிரைப்போல, ஓா் ஆடவனும் உறுதிப்பாடுடையவனாக இருந்தால், அவனுக்கும் பெருமை உண்டாகும் என்பதை ‘ஒருமை மகளிரே போலப் பெருமையும்’ (974) எனும் குறள்வழி உறுதிப்படுத்துகின்றார்
  • ஒரு தேன்கூட்டை எடுத்துப்பிழிந்தால் தேன் மட்டுமே சொட்டும். அதைப்போல திருக்குறளைப் பிழிந்தால் ‘பெண்ணின் பெருமை’யே கொட்டும்!

நன்றி :தினமணி (05-12-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்