TNPSC Thervupettagam

பெண்ணுக்கு வேண்டும் திருமண உரிமை

November 9 , 2023 429 days 254 0
  • தூத்துக்குடி மாவட்டத்தில் காதல் தம்பதி ஆணவக் கொலை செய்யப்பட்டவிவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் தம்பதிகளுக்குப் பெரும்பாலும் தடையாக இருப்பது சாதிதான். இதில் அதிகம் பாதிக்கப்படுவது பட்டியல் சாதியினர்தான். இந்த அவலத்துக்கு முடிவுகட்ட சமூக அளவில் பெரும் பிரயத்தனங்கள் நடந்துவரும் நிலையில், தூத்துக்குடி சம்பவத்திலோசாதிப் பிரச்சினைகளைத் தாண்டிய காரணிகள் இருப்பதாக வெளியாகும் செய்திகள், இதன் இன்னொரு கோர முகத்தை வெளிப்படுத்துகின்றன.
  • கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வீரப்பட்டியைச் சேர்ந்த ஒரு காதல் தம்பதி அவர்கள் வீட்டில் வைத்தே கொல்லப்பட்டனர். தூத்துக்குடியில் இப்போது கொல்லப்பட்ட மாரிசெல்வம் – கார்த்திகா தம்பதியைப் போல் வீரப்பட்டி காதல் தம்பதி மாணிக்கராஜா - ரேஷ்மா இருவரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள்தாம். மாணிக்கராஜா பொருளாதாரரீதியில் பின்தங்கிய நிலையில் இருந்தவர். ரேஷ்மா கல்லூரியில் படித்துவந்தவர். மாரிசெல்வமும் கார்த்திகாவும் கோவில்பட்டியில் தஞ்சமடைந்ததுபோல, மாணிக்கராஜாவும் ரேஷ்மாவும் மதுரையில் தஞ்சமடைந்தனர்.
  • சொந்த ஊர் திரும்பிய பிறகு, தனது தந்தையால் ரேஷ்மா கணவருடன் படுகொலை செய்யப்பட்டார்சாதி ஆணவப் படுகொலைகளைப் போலவே, ஒரே சாதியைச் சேர்ந்த காதல் தம்பதியினரும் படுகொலை செய்யப்படுவதை இந்தச் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. மேலோட்டமாகப் பார்த்தால், இப்படியான கொலைகளுக்குப் பொருளாதார நிலைதான் முக்கியக் காரணம் எனத் தோன்றும். ஆனால், பெண் தனக்கான துணையைத் தேர்ந்தெடுப்பதைக் கடுமையாக எதிர்க்கும் ஆண்களின் மனப்பான்மைதான் இதற்குப் பிரதான காரணம்.
  • தூத்துக்குடி சம்பவத்தில் வட்டித் தொழிலில் ஈடுபடுபவரான பணக்காரத் தந்தைக்கு, ஏழைக் குடும்பத்தைச் சேந்த இளைஞரைத் தனது மகள் மணமுடித்தது பிடிக்கவில்லை. தனது வார்த்தைகளை மீறி அந்த இளைஞரைத் தன் மகள் திருமணம் செய்ததால், ஆத்திரத்தில் இருவரையும் படுகொலை செய்திருக்கிறார் அந்தத் தந்தை.
  • பெண்ணை உடைமைப் பொருளாக மட்டுமே பார்க்கும் மனநிலை இன்னும் தொடர்வதற்கான உதாரணங்கள் இந்தச் சம்பவங்கள். பெண், மனைவி, மகள் என்று எந்த நிலையில் இருந்தாலும் அவர்களைத் தனி உயிராகச் சமூகம் மதிப்பதில்லை. அவர்களின் விருப்பங்களை - குறிப்பாகத் திருமண உரிமையை, குடும்ப அமைப்பு பெரும்பாலும் மறுத்துவருகிறது. பல வீடுகளில் திருமணத்தை மட்டுமே மையமிட்டு பெண்கள் வளர்க்கப்பட்டுவரும் அவலமும் இங்கு இருக்கிறது.
  • இன்னொரு புறம், தவறான துணையைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அந்தப் பெண்களின் நிலை அதைவிடப் பரிதாபம். தங்களை எதிர்த்து மணம் முடித்ததால், அதற்கான பொறுப்பை முழுக்க முழுக்க அந்தப் பெண்தான் ஏற்க வேண்டும் எனப் பெற்றோர் முடிவெடுத்துவிடுகின்றனர். இந்நிலை மாற வேண்டும். எந்தச் சந்தர்ப்பத்திலும் தங்கள் குழந்தையின் பக்கம் நிற்க வேண்டியது கடமை என்பதைப் பெற்றோர் உணர வேண்டும். எல்லாக் காதல் திருமணமும் தோல்வியில் முடிவதில்லை. அப்படி ஒருவேளை காதல் திருமணம் தோல்வி அடைந்தால், பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு ஆதரவை வழங்க வேண்டும்.
  • நமது அரசமைப்பின் கூறு 21 இந்தியக் குடிமக்களுக்கான திருமணம் செய்யும் உரிமையைப் பற்றித் தெளிவாகக் கூறுகிறது. ஆனால், நடைமுறையில் இவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றன. இந்த உரிமை குறித்துப் பரவலான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். விரும்பியவரை மணமுடிக்கும் உரிமை ஒவ்வொரு தனிமனிதருக்கும் கிடைப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (09 - 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்