- இந்தியாவின் குறிப்பிட்ட சில இனங்களைச் சேர்ந்த பெண்களின் இல்லறக் கடமையாகச் சொல்லப்பட்ட ‘சதி’யைப் போருக்குப் பிந்தைய சூறையாடல்களில் இருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்கும் அந்நாளில் பெண்கள் கைகொண்டது வேதனையானது. சில நேரம் மன்னர்களின் இறப்பைத் தொடர்ந்து அரசக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தங்களை மாய்த்துக்கொண்ட கொடுமையும் நடந்திருக்கிறது. நெசவாளர், நாவிதர் போன்ற உழைக்கும் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மத்தியிலும் அன்றைக்கு ‘சதி’ நடைமுறையில் இருந்துள்ளது.
- 1724இல் ஜோத்பூர் மார்வார் அஜித் சிங்கின் மரணத்துக்குப் பிறகு 66 பெண்களும் பூந்தி அரசர் புத் சிங்கின் மரணத்தைத் தொடர்ந்து 84 பெண்களும் ‘சதி’க்குத் தங்களைப் பலிகொடுத்தனர். ராஜபுத்திரர்கள் மட்டுமல்லாமல் சீக்கியர்கள், மராட்டியர்களில் சில பிரிவினர் மத்தியிலும் ‘சதி’ வழக்கத்தில் இருந்தது. ‘சதி’ வழக்கத்தைக் கண்டித்ததோடு அதைச் சீக்கியர்கள் மத்தியில் தடைசெய்வதாக மூன்றாம் சீக்கிய குரு அமர்தாஸ் வலியுறுத்தியபோதும் ராஜா ரஞ்சித் சிங் இறந்தபோது 11 பெண்கள் தங்களை ‘சதி’யின் பெயரால் மாய்த்துக்கொண்டனர்.
ஆண்கள் துணைநிற்க வேண்டும்
- அந்நியர்கள் தங்கள் மண்ணில் நுழைந்த தற்காகப் பெண்கள் மடிய, அந்த அந்நியர்களே ‘சதி’க்கு எதிரான நடவடிகைகளில் ஈடுபட்டது முரண். இந்தியாவில் முஸ்லிம்களும் நிஜாம் மன்னர்களும் ‘சதி’ நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதற்கு எதிரான உத்தரவுகளைப் பிறப்பித்தனர். பெண்களின் விருப்பத்தோடுதான் ‘சதி’ கடைபிடிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க ஒரு குழுவை அக்பர் நியமித்திருந்தார். அரசின் அனுமதிப் பத்திரம் இருந்தால்மட்டுமே ‘சதி’யை நிறைவேற்ற முடியும் என முகாலய மன்னர்கள் சிலர் உத்தரவிட்டனர். பாம்பே அரசு 1800களில் குஜராத்தின் அரச குடும்பத்தினர் மத்தியில் ‘சதி’ கடைபிடிக்கப்படுவதற்குத் தடை விதித்தது. ஆனால், இது போன்ற உத்தரவுகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் பலத்த எதிர்ப்பு நிலவியது. இது தங்களது பண்பாட்டோடு நேரடியாகத் தொடர்புடையது என இந்திய அரசக் குடும்பத்தினர் வாதிட்டனர்.
- 19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின்போது சீர்திருத்தவாதிகள் அன்றைக்கு நிலவிய பல்வேறு சமூகக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடினர். அப்படி ஓங்கி ஒலித்த குரல்களில் முக்கியமானது சீர்திருத்தவாதி ராஜா ராம்மோகன் ராயின் குரல். பெண்களின் விடுதலை பெண்களால் மட்டும் சாத்தியப்படாத சூழல்களில் ஆண்களின் பங்களிப்பு அவசியமாகிறது. காரணம், இது பெண்களின் பிரச்சினை மட்டுமல்ல; சமூகப் பிரச்சினை. பெண்களின் விடுதலைக்காக ஆண்கள் பேசுவதுகுறித்து ‘பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா, எங்காவது நரிகளால் ஆடு, கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா?’ என்று விமர்சித்த பெரியார்கூடப் பெண்கள் பொதுவெளிக்கு வருவதற்கும் மாநாடுகளில் பங்கேற்பதற்கும் ஆண்கள் துணைநிற்க வேண்டும் என்றார். ஆண்கள் அதைத் தங்கள் கடமையாகச் செய்ய வேண்டும் என்றார்.
சீர்திருத்த குரல்
- பெண்களின் உரிமைக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் வட இந்தியாவில் பாடுபட்டவர் ராஜா ராம்மோகன் ராய். சமய சீர்திருத்தத்தையும் சமூக சீர்திருத்தத்தையும் வலியுறுத்தியவர் அவர். குறிப்பாகப் பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடினார். குழந்தைத் திருமணத்தையும் பலதார மணத்தையும் எதிர்த்த அவர், கைம்பெண் மறுமணத்தை ஆதரித்தார். பெண்கள் அறிவுத்தளத்திலும் சமூக அளவிலும் ஆணுக்குக் கீழானவர்கள் அல்லர் என்று தொடர்ந்து பரப்புரை செய்தார். பெண்களுக்கு வாரிசுரிமையும் சொத்துரிமையும் வேண்டும் என ஒலித்த குரலும் இவருடையதுதான். மேற்கத்திய கல்வி முறையை ஆதரித்து, கல்கத்தா இந்துக் கல்லூரியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டார். பின்னாளில் அது மாநிலக் கல்லூரியாக வளர்ச்சியடைந்தது.
- 1811இல் அவருடைய சகோதரரின் இறப்புக்குப் பிறகு சகோதரரின் மனைவியும் சகோதரரின் சடலத்தோடு சேர்த்து எரித்துக் கொல்லப்பட்டது ராஜா ராம்மோகன் ராயைப் பதறச் செய்தது. அதைத் தடுக்க முடியாத கையறு நிலையில் இருந்தவர், அதன் பிறகு ‘சதி’க்கு எதிராகப் போராடத் தொடங்கினார். மக்களிடம் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டார். அப்போதைய பிரிட்டிஷ் கவர்னர் வில்லியம் பெண்டிங் ‘சதி’யைத் தடைசெய்யும் வகையில் ‘வங்க சதி ஒழுங்குமுறைச் சட்ட’த்தை 1829இல் நிறைவேற்றியதற்கு ராஜா ராமின் தொடர்ச்சியான செயல்பாடுகளும் முக்கியக் காரணம். ‘சதி’ சட்ட விரோதமானது என அறிவிக்கப்பட்டது. அதன் பிறகும் அந்த நடைமுறை தொடர்ந்தது.
புனிதப்படுத்தப்படும் குற்றங்கள்
- 1847இல் ஹைதராபாத் நிஜாம் ‘சதி’யைத் தடை செய்ய, அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. காரணம், நிஜாம் அரசு இந்துக்களின் சமயச் சடங்குகளில் தலையிடுவதில்லை என ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால், கைம்பெண் தன்னை அழித்துக்கொள்வதை உறவினர்கள் தடுக்க வேண்டும் எனவும் உறவினர்களோடு செல்ல மறுக்கும் பெண்கள் குறித்து அரசுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவிக்கை வெளியிட்டது. அவற்றைத் தடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் ‘சதி’யைக் கண்காணிப்பது அதிகாரிகளின் கடமையாகிவிட்டது. கிறிஸ்தவ அமைப்பினரும் சதிக்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.
- சதியைக் கைவிடும்படி அரசர்களை அன்றைய பிரிட்டிஷ் அரசு 1862இல் கேட்டுக் கொண்டது. அப்போதைய பிரிட்டிஷ் ராணுவத் தலைமை அதிகாரி ஜெனரல் சார்லஸ் நேப்பியர், ‘சதி’ சடங்கை நடத்திவைக்கும் மதகுருவைத் தூக்கிலிட உத்தரவிட்டார். அதன் பிறகும் அங்கொன்றும் இங்கொன்றுமாக ‘சதி’ நடைமுறையில் இருந்தது.
- பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இறப்புகளுக்கும் இன்றைய பெண்களின் வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு என நாம் யோசிக்கலாம். பெண்களைச் சுற்றி எழுப்பப்பட்டிருக்கும் சுவர்கள் காலந்தோறும் நவீனப்படுத்தப்பட்டுவருகின்றன. அவற்றை நாம் மறுத்துவிடக் கூடாது என்பதற்காக ‘கலாச்சார’ வெள்ளையடிக்கும் வேலைகள் நடந்தபடி இருக்கின்றன. ‘சதி’யும் அப்படித்தான் புனிதப்படுத்தப்பட்டது. பெண்கள் ‘சதி’ சடங்கின்போது தங்கள் கைகளின் அடையாளத்தைச் சுவரில் பதித்துச் செல்வார்கள். அவற்றின் எச்சங்களைத் தாங்கிய கோட்டைச் சுவர்கள் வட இந்தியாவில் உண்டு. சில வட இந்தியக் குடும்பங்களில் திருமணம் முடித்து, புகுந்த வீட்டுக்கு வரும் பெண்ணுக்குச் செய்யப்படும் சடங்குகளில் குங்குமம் கரைத்த ஆரத்தி நீரில் கைகளை நனைத்து அதை வீட்டுச் சுவரில் பதிக்கும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது.
- எந்தவொரு சடங்கையும் புனிதப்படுத்தி விட்டால் அதை யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதாலேயே பெண்களுக்கு எதிரான கொடுமைகள் புனிதப்படுத்தப்பட்டுத் தொடர்கின்றன. பெண்களைக் கொன்றுவிட்டு அவர்களைத் தெய்வமாக்கி வணங்குவது நம் பண்பாட்டின் அங்கமாகவே இருந்திருக்கிறது. ‘சதி’க்குத் தங்களைப் பலியிடும் பெண்களுக்கும் கோயில்கள் எழுப்பப்பட்டுள்ளன. தெய்வ நிலையை அடைய விரும்பும் பெண்களின் விருப்பத் தேர்வாக ‘சதி’யை மாற்றும் உத்தி இது. பிரிட்டிஷ் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட ‘சதி’ தடைச் சட்டம் ஒரு நூற்றாண்டு கழித்து மீண்டும் பேசுபொருளானதற்கு 18 வயதுப் பெண் ஒருவர் காரணமாக இருந்தார். யார் அவர்? அடுத்த வாரம் பார்க்கலாம்.
நன்றி: இந்து தமிழ் திசை (24 – 12 – 2023)