TNPSC Thervupettagam

பெ.தெ.லீ.செங்கல்வராயர் 150: தொழிற்கல்வி தந்த வள்ளல்!

October 27 , 2024 6 days 27 0

பெ.தெ.லீ.செங்கல்வராயர் 150: தொழிற்கல்வி தந்த வள்ளல்!

  • இந்தியாவில் முதன்முதலில் தொழிற்கல்வியை அறிமுகம் செய்தவர் பெ.தெ.லீ.செங்கல்வராயர் ஆவார். அதனால் அவர் தொழிற்கல்வி நாயகர் என்றும் போற்றப்படுகிறார். தனது 45 ஆண்டு கால வாழ்வில் சேமித்த செல்வங்கள், சொத்துக்கள் யாவற்றையும் ஏழை, எளிய குழந்தைகளின் கல்விக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கும் பயன்படும்படி உயில் எழுதி வைத்தவர்.
  • சென்னையில் 1857இல் கொடும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது சூளை கர்னல் காலின்ஸ் சாலையில் தான் குடியிருந்த வீட்டிற்கு அருகிலேயே பெரிய கஞ்சிக் கொட்டகை அமைத்து, மக்களுக்கு உணவிட்டார் செங்கல்வராயர். 1866இல் பெரும் பஞ்சத்தால் ஒடிஷா மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. போக்குவரத்துப் பாதைகள், இந்தியாவின் பிற மாநிலங்களுடன் சரியாக இணைக்கப்படாததன் காரணமாக, இப்பஞ்சத்தில் சுமார் 4 கோடிக்கும் மேலான மக்கள் பாதிக்கப்பட்டனர். ஒடிஷா மக்களுக்கு உதவும்படி அன்றைய சென்னை மாகாண ஆளுநர் நேப்பியர் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், தனது குமாஸ்தாவான பசவப்பிள்ளை மூலமாக உணவு, உடை, மருந்துப் பொருள்கள் அடங்கிய மூட்டைகளை செங்கல்வராயர் கப்பல்களில் ஏற்றி ஒடிஷாவுக்கு அனுப்பிவைத்தார்.
  • தொழிற்கல்வி நாட்டிற்கு மிகவும் தேவை என்பதை உணர்ந்து, தான் எழுதிய விருப்ப உயிலில் தொழிற்கல்வி பள்ளி ஒன்றைத் தொடங்கி, அப்பள்ளியில் தாய், தந்தையரை இழந்த, பொருளாதாரத்தில் நலிவுற்ற பிள்ளைகள் இலவசமாக உணவு, உறைவிடத்துடன் கல்வி கற்க அறக்கட்டளையை ஏற்பாடுசெய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில், 1880இல் ஆதரவற்றோர் ஆரம்பப் பள்ளி ஒன்றும் தொடங்கப்பட்டது. 1886இல் இது, வணிகப் பயிற்சிப் பள்ளியாகவும், தொழிற்பள்ளியாகவும் மாற்றப்பட்டது. இந்தியாவில் தொழிற்கல்விக்காகத் தொடங்கப்பட்ட முதல் பள்ளி இதுவே. இத்தொழிற்பள்ளி தற்போது பல்தொழில்நுட்பக் கல்லூரியாகச் செயல்பட்டு வருகின்றது.
  • வேதாந்த வித்யா விலாச சபா என்கிற அச்சுக்கூடத்தைத் தனது வீட்டுக்கு அருகிலேயே சுமார் ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில் செங்கல்வராயர் நடத்திவந்தார். இந்த அச்சுக்கூடத்தின் மூலமாக திருக்குறள், ஆழ்வார்கள் அருளிய பக்திப் பாடல்கள் போன்றவற்றைத் தெலுங்கு மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இதற்காகத் தனது தோட்டத்தில் ஆசிரமப் பள்ளி ஒன்றை நிறுவினார். அப்பள்ளியில் சிவப்பிரகாச சுவாமிகள் (கரப்பாத்திர சுவாமிகள்), சுப்பையா சுவாமிகள், ஆனந்த போதினி என்.முனுசாமி, சைவ சித்தாந்த சண்ட மாருதம் என்றழைக்கப்பட்ட சூளை சோமசுந்தரர், டாக்டர் நாராயணந்த ராவ் சாகிப் சுவாமி போன்றோரை இவர் ஆதரித்துவந்தார். வேதாந்த வித்யா விலாச சபா அச்சுக்கூடத்தில் பயன்படுத்தப்பட்ட அச்சு இயந்திரம் இன்றைக்கும் செங்கல்வராய நாயக்கர் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.
  • காஞ்சிபுரத்தை அடுத்து, அரக்கோணம் சாலையில் கோவிந்தவாடி அகரம் கிராமத்தின் வடக்கில் விருது நதி சீராறு என்கிற ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றிலிருந்து கம்மவார்பாளையம் வழியாக, தனது பூர்விகக் கிராமமான புத்தேரிக்குச் சுமார் 4 கி.மீ. தொலைவுக்குக் கால்வாய் ஒன்றை அக்காலத்தில் இவர் வெட்டியுள்ளார். அப்பகுதி மக்களால் இன்றைக்கும் அது செங்கல்வராயன் கால்வாய் என்றே அழைக்கப்பட்டுவருகிறது.
  • காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் வழியாகத் திருப்பதிக்குப் பாதயாத்திரையாகச் செல்லும் பக்தர்களுக்காக ஊவேரியில் தர்ம சத்திரம் ஒன்றை அமைத்துக்கொடுத்தார். இந்தச் சத்திரத்தில் தங்கிச்செல்லும் பக்தர்களுக்கு சாதி வித்தியாசமின்றி உணவளிக்க ஏற்பாடுசெய்தார். அத்துடன் அரிசி, புளி, பருப்பு, உப்பு, மிளகாய், காய்கறிகள், நெய் போன்றவற்றைத் தானமாக வழங்கவும் ஏற்பாடுசெய்தார். ஓய்வூதியம் எனும் திட்டத்தை அரசு செயல்படுத்த முனையாத காலத்திலேயே தனக்குக் கீழே, ‘ஷாண்ட் அன் கோ’ வணிக நிறுவனத்தில் பணியாற்றியவர்கள், தனக்குக் கல்வி கற்பித்த ஆசிரியர், தன்னுடைய தோட்டத்தில் பணிசெய்த பணியாளர்கள், தனது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலருக்கும் தன் வாழ்நாளுக்குப் பிறகு, ஓய்வூதியம் வழங்க வேண்டும் என விருப்ப ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளார்.
  • இன்று செங்கல்வராயரின் 150ஆவது ஆண்டு நினைவு

நன்றி: இந்து தமிழ் திசை (27 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்