- தொடர்ந்த மனித முயற்சியால் முழுமையாக ஒழிக்கப்பட்ட நோய்களில் ஒன்று பெரியம்மை. 30 கோடி மக்களின் உயிரைப் பறித்த அந்த நோய், 1977-ல் முற்றிலும் இல்லாமல் ஆனது. காய்ச்சல், தோல் அரிப்பு போன்ற அறிகுறிகளைக் கொண்ட இந்தப் பெரியம்மையை இந்தியாவில் ஒழித்ததில் பெண்களின் பங்கு மிகப் பெரியது. ஒரு பெரிய கொள்ளைநோயை ஒழிப்பதில் பெரும் பங்கு வகித்த பிரதிநிதிகளாக மேரி குனைன், கார்னெலியா இ.டேவிஸ் இருவரும் இந்திய அனுபவங்களைப் புத்தகங்களாகவும் எழுதியுள்ளனர். மேரி குனைனின் நூல் பெயர், ‘அட்வென்சர்ஸ் ஆஃப் எ பீமேல் மெடிக்கல் டிடெக்டிவ்: இன் பர்சூட் ஆஃப் ஸ்மால்பாக்ஸ் அண்ட் எய்ட்ஸ்’. கார்னெலியா இ.டேவிஸ் எழுதிய நூலின் பெயர் ‘சர்ச்சிங் ஃபார் சீதளமாதா’.
- இந்தியா நிலவியல்ரீதியாகவும் மக்கள்தொகை அடிப்படையிலும் மிகப் பெரியது. அதனால், இங்கே பெரியம்மை ஒழிப்பு மிகப் பெரிய சவாலான பணியாக இருந்தது. 1962-லேயே இந்திய அரசு, தேசிய அளவில் திட்டத்தைத் தொடங்கிவிட்டாலும், மொத்த ஜனத்தொகைக்கும் தடுப்பூசி போடும் காரியம் மிக மெதுவாகவே நடந்தது.
உலக சுகாதார நிறுவனம்
- உலக சுகாதார நிறுவனம், இந்தியாவில் தங்கள் தன்னார்வலர்களை ஈடுபடுத்தியிருக்காவிட்டால் இந்தப் பணி நிறைவேறியிருக்காது. உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் ஈடுபட்ட தன்னார்வலர்களில் நிறைய பேர் பெண்கள். விண்வெளி வீராங்கனையாக ஆக நினைத்தவர் மேரி குனைன். அக்காலத்தில் பெண்களை நாசாவின் ஆய்வு மையங்களில் எளிமையான பணிகளுக்குக்கூட அமர்த்தும் சூழல் இல்லாத நிலையில், மருத்துவர் ஆனார். எபிடெமிக் இன்டெலிஜென்ஸ் சர்வீஸ் புரோகிராமில் இரண்டு ஆண்டு பயிற்சி எடுத்து, இந்தியாவில் பெரியம்மை ஒழிப்புத் திட்டத்தில் பணியாற்ற விண்ணப்பித்தார். அக்காலத்தில் பெண் தன்னார்வலர்களை இந்திய அரசு ஏற்கவில்லை. அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. உலக சுகாதார நிறுவனத்தின் மூலம் அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியிடம் கோரிக்கை வைக்கப்பட மூன்று மாதங்கள் சேவைக்கு அனுமதி தரப்பட்டது.
- 1975-ல், குனைன் இந்தியாவுக்கு வந்தபோது, பெரியம்மை வடமாநிலங்களில் மட்டுமே இருந்தது. அவர் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள குக்கிராமங்களில் உள்ளூர் சுகாதாரப் பணியாளர்களுடன் பணியாற்றினார். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள். அமெரிக்கா திரும்பிய பின்னர் அங்கே பெரும் கொள்ளைநோயாக வடிவெடுத்த எய்ட்ஸைத் தடுப்பதிலும் சிறப்பாகச் செயல்பட்டவர் இவர்.
பெரியம்மை ஒழிப்புத் திட்டம்
- பெரியம்மை ஒழிப்புத் திட்டத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் பணியாற்றிய அனுபவங்களை எழுதியுள்ள இன்னொரு பெண், ஆப்பிரிக்க அமெரிக்கரான கோர்னெலியா இ.டேவிஸ். கலிபோர்னியா மருத்துவக் கல்லூரியில் அக்காலத்தில் சேர்ந்து படிக்க முடிந்த சில கருப்பினப் பெண்களில் அவரும் ஒருவர். அவர் படித்த வகுப்பில் இரண்டு கருப்பினப் பெண்களையும் சேர்த்து ஐந்து கருப்பினத்தவரே மாணவர்கள்.
- இரண்டு ஆண்டுகள் இந்தியாவில் பணியாற்றிய அவர் முதலில் டார்ஜிலிங், ஜல்பைகுரி, கூச் பிகார் போன்ற மலைப்பகுதிகளில் பணியாற்றினார். நீண்ட தூரம் வயல்கள் வழியாக நடந்து குக்கிராமங்களுக்குச் செல்ல வேண்டியதாக அவரது பணி இருந்தது. எங்காவது பெரியம்மை இருந்தால் அதுகுறித்துத் தெரிவிப்போருக்குப் பணப் பரிசும் அறிவிக்கப்பட்ட சமயம் அது. பெரியம்மை வங்கத்தின் எல்லைகளிலும் பரவியதாக உருவான வதந்தியை அடுத்து அபாயகரமான சூழ்நிலைகளில் எல்லைகளில் வசிக்கும் மக்களுக்குத் தடுப்பூசிகளைப் போட்ட பணி அவருடையது.
- ராஜஸ்தான் மாநிலத்தின் ஒட்டுமொத்த பெரியம்மை ஒழிப்புப் பொறுப்பை விரைவிலேயே ஏற்ற டேவிஸ், அங்கே ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றினார். இப்படியாக 1977-ல் இந்தியாவில் பெரியம்மை ஒழிக்கப்பட்டது.
- ஆண்களே ஆதிக்கம் செலுத்திய சர்வதேச பொது சுகாதாரத் துறையில் குனைன், டேவிஸ் ஆகியோரின் பணியும் பங்களிப்பும் காத்திரமானது!
நன்றி: இந்து தமிழ் திசை (13-12-2019)