பெரியவர்களுக்கும் தடுப்பூசி தேவை
- சிகிச்சையைவிட நோயைத் தடுப்பதே சிறந்தது என்பதை மருத்துவர்களாகிய நாங்கள் தொடர்ந்து கூறிக் கொண்டே வருகிறோம். என்னைச் சந்திக்க நண்பர் ஒருவர் வந்தார். அவர் சில விஷயங்களைப் பேசிவிட்டு, அவரின் அம்மாவுக்கு வந்த காய்ச்சலைப் பற்றிப் பேசினார்.
- அப்போது, முதியவர்களுக்கான தடுப்பூசி பற்றிக் கூறினேன். வந்த நண்பரும் தடுப்பூசி பற்றி நல்லவிதமாகப் பேசினாலும், வாட்ஸ்அப்பில் வரும், ‘இந்தத் தடுப்பூசியைப் போடாதீர்கள்’ என்பது போன்ற குறுந்தகவல்கள் பற்றிப் பேசத் தொடங்கி விட்டார். உண்மையில் அந்த நண்பர் மட்டுமல்ல; பலருக்கும் தடுப்பூசிகள் குறித்த தவறான எண்ணம் இருக்கிறது.
கட்டுக்கதைகள்:
- குழந்தைகள் நலனை முன்னிட்டு மட்டுமே மக்களிடேயே தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு இருக்கிறது. பிறந்து ஐந்து வருடங்கள் வரை தொடர்ச்சியாக மருத்துவமனைகளுக்கு வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்கிறவர்கள் நம் மக்கள் என்பதைச் சில நேரம் ஞாபகப்படுத்த வேண்டும்.
- அதேபோல் இளம் வயதினர், முதியோருக்கான தடுப்பூசிகள் இருப்பதைப் பற்றித் தெரிந்துகொள்ளாமல் பலர் இருக்கிறார்கள். ஏனென்றால், இளம் வயதினர், முதியோருக்கான தடுப்பூசிகள் பலவிதமான பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும் என்கிற கட்டுக்கதைகள் நம்மிடையே உலாவுகின்றன.
- தடுப்பூசிகளைப் பொறுத்தவரை, தீவிரமாகப் பரிசோதிக்கப்பட்டுப் பல ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்தான், மக்களின் பயன்பாட்டுக்கு வரும். எந்தவொரு தடுப்பூசியும், நோய் ஏற்பட்டுப் பாதிக்கப்படும் விளைவினைவிட, மிகச்சிறிய பக்கவிளைவுகளை மட்டுமே ஏற்படுத்தும்.
- நம்மைச் சுற்றிப் பலவிதமான கிருமிகள் லட்சக்கணக்கில் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கின்றன. இந்தக் கிருமிகளிடமிருந்து எளிதாக மனிதர்களுக்குத் தொற்றும் நோய்கள் ஏற்படக்கூடும். நம்மையும் நம் சுற்றுப் புறத்தையும் தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் சில நோய்களின் தொற்றைக் கட்டுப் படுத்தலாம். அந்தக் கிருமிகளால் நாம் பாதிக்கப்படாமல் இருக்கவும், பாதிப்பைக் குறைப்பதற்கும் மட்டுமே தடுப்பூசி நமக்கு உதவுகிறது.
உடலைப் பாதுகாக்கும்:
- பொதுவாக ஒரு கிருமி நமது உடலுக்குள் நுழைந்தவுடன், நமது உடம்பில் சில பாதிப்புகள் ஏற்படும். உதாரணத்துக்கு, நுரையீரலுக்குள் செல்லும் கிருமி, நுரையீரலைப் பாதிக்கும். உடனே, நமது உடல் இந்தக் கிருமியின் தாக்கத்திலிருந்து உடலைப் பாதுகாக்க நோய் எதிர்ப்புப் பொருள்களை (Antibody) உருவாக்குகிறது.
- அந்தக் கிருமி அதனுடைய வேலையாக நினைத்து நமது உடலைப் பாதித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், உடலும் ஆன்டிபாடிகளைத் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டேயிருக்கும். நம் உடலுக்குள் தேவையான அளவு ஆன்டிபாடிகள் இருக்கும்போது, கிருமியின் வீரியம் குறைந்துவிடும். நமக்கு எதிர்ப்புச் சக்தி குறையும்போது, கிருமியின் தாக்கம் அதிகமாகி, உடல் பாதிப்படைய ஆரம்பித்துவிடும். இந்த நேரத்தில் கிருமி வென்றுவிடும், உடலில் உற்பத்தியாகும் ஆன்டிபாடிகள் தோற்றுவிடும்.
- பொதுவாக, ஆய்வுக்கூடங்களில் வைத்து, அந்தக் கிருமியைச் செயலிழக்க வைத்துவிடுவார்கள். அந்தச் செயலிழந்த கிருமியியைத் தடுப்பூசியின் வழியாக நம் உடலுக்குள் செலுத்தும்போது, அது உடலில் பாதிப்பை ஏற்படுத்தாது. அதேநேரம், உடலில் ஆன்டிபாடிகள் மட்டும் உற்பத்தியாகிக் கொண்டிருக்கும். இந்த ஆன்டிபாடிகள் உடலில் இருக்கும்போது, அதே வகைக் கிருமி உடலைத் தாக்கினால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருந்தாலும், தடுப்பூசி உடலைப் பாதுகாக்கும்.
- தற்போதைய மழை - குளிர்காலங்களில் நாம் அனைவரும் வைரஸ், பாக்டீரியாவால் ஏற்படும் நுரையீரல் மற்றும் சளி காய்ச்சலால் பாதிக்கப்படுவோம். சளி, இருமலுடன் காய்ச்சல் இருக்கும்போது சிலர் மாத்திரை எடுத்து நலமடைவார்கள். சிலர் ஊசி, மாத்திரைகள் கலந்த சிகிச்சையால் நலமடைவார்கள்.
- இந்தச் சிகிச்சைகள் எல்லாமே சில நாள்களில் பெரும்பாலும் உடலை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்துவிடும். இளம் வயதினர் உடலுக்குள் இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியின் தன்மையினால் எளிதாக மீண்டு விடுவார்கள். வயதானவர்களுக்குத்தான் பாதிப்பு அதிகம்.
பாதுகாப்பு வழிகள்:
- வயதானவர்களுக்குக் காய்ச்சல் பரவ விடாமல் பாதுகாக்க வேண்டும். முகக்கவசம் அணிந்துகொண்டு பெரியவர்களிடம் பேச வேண்டும். பெரியவர்களும் வீட்டிலிருப்பவர் களுக்குக் காய்ச்சல் சரியாகும்வரை முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். நெரிசல் அதிகமான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், பல தொற்றுகள் காற்றின் மூலம் பரவக்கூடியவை. நுரையீரல் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கு, இவர்களுக்கென்று இரண்டு விதமான தடுப்பூசிகள் உண்டு.
நிமோகாய்ச்சல் தடுப்பூசி:
- ஸ்ட்ரெப்டோ காக்கஸ் நிமோனியா பாக்டீரியாவுக்கு எதிரான தடுப்பூசி இது. இந்த வகையான தடுப்பூசிகள் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நிமோனியா காய்ச்சலால் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக் கின்றன. இந்தத் தடுப்பூசியைச் சிலருக்கு ஒரு முறை மட்டும் செலுத்தலாம், சிலருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை போட வேண்டும். இந்தத் தடுப்பூசி, நோயின் தீவிரத்தைக் குறைப்பதுடன், முதியவர்கள் பாதிக்கப்பட்டாலும் சாதாரண காய்ச்சல் - சளியுடன் முடிந்துவிடும்.
இன்ஃபுளூயன்சா தடுப்பூசி:
- இன்ஃபுளூயன்சா வைரசால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும், நுரையீரலைப் பாதுகாப்பதற்கும் முதியவர் களுக்கு வருடத்திற்கு ஒருமுறை தடுப்பூசி செலுத்த வேண்டுமென்று வலியுறுத்துகிறோம். மேலும், ஜோஸ்டர் என்கிற வைரஸ், அம்மையை உண்டாக்கக்கூடியது. சில நேரம் இந்த வைரஸ் தோலில் பாதிப்பை ஏற்படுத்தும். முதியவர்களின் தோலில் அரிப்பையும் எரிச்சலையும் ஏற்படுத்தும். அவர்களால் இந்த வலியைத் தாங்க முடியாது. இதற்கு ‘Shingles Vaccine’ நடைமுறையில் இருக்கிறது.
- இந்த மூன்று தடுப்பூசிகளுடன் இன்னும் சில தடுப்பூசிகளும் செயல்பாட்டில் இருந்தாலும், 85% பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இவற்றை நாம் முறையாகப் பயன்படுத்தும்போது, தொற்று வியாதியால் ஏற்படும் மரணங்களை நாம் எளிதில் தடுக்க முடியும்.
கருப்பைவாய்ப் புற்றுநோய்:
- இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் புற்று நோய்களில் கருப்பைவாய்ப் புற்று நோய் இரண்டாமிடத்தில் இருக்கிறது. கருப்பைவாய்ப் புற்றுநோய் மனித பாப்பிலோமா வைரஸால் (Human Papilloma Virus) ஏற்படுகிறது. அதற்காகவே, மருத்துவத் துறை, இந்த நோயின் தாக்கத்திலிருந்து பெண்களைப் பாதுகாப்பதற்கு Human Papilloma virus Vaccine (HPV) தடுப்பூசியைத் தயாரித்திருக்கிறது.
- அரசும் பெண்களின் ஆரோக்கியத்தை உறுதிசெய்வதற்கு, 9 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பூசியைப் பரிந்துரைக்கிறது. மேலும், இந்தத் தடுப்பூசியைப் பள்ளிகளில் செலுத்திக்கொள்ள முடியாதவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் அருகிலுள்ள மருத்துவமனைகளில் செலுத்திக்கொள்ளலாம்.
ரேபிஸ் தடுப்பூசி:
- நாய்கள் மனிதர்களைக் கடிப்பதால் ரேபிஸ் நோய் ஏற்படுகிறது. ரேபிஸால் மனிதன் பாதிக்கப்பட்ட பின் குணமடை வதற்கான சிகிச்சைகள் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. அதனால்தான் மருத்துவர்கள் தடுப்பூசி போடுவதன் வழியாக, ரேபிஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்கிறார்கள்.
- இந்தத் தடுப்பூசியும் எளிதாகவும் உடனுக்குடனும் கிடைக்கிறது. எனவே, நாய் கடித்தவுடன், மருத்துவரின் ஆலோசனைப்படி, ரேபிஸ் தடுப்பூசியை நான்கு அல்லது ஐந்து தவணைகளையும் தொடர்ந்து போட்டுக் கொள்ள வேண்டும்.
- தொப்புளைச் சுற்றி ஊசி போட வேண்டும் என்கிற கட்டுக்கதையை நம்ப வேண்டாம். ரேபிஸ் தடுப்பூசி கைகளில்தான் போடப்படுகிறது. ஆரம்பக் காலத்தில் குழந்தைகளுக்கு மட்டும்தான் தடுப்பூசி வழக்கத்தில் இருந்தது. தற்போது, இளம் வயதினர், முதியவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி இருக்கிறது. இதன் மூலம் மக்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். இதற்கு மக்களின் ஒத்துழைப்பும் விழிப்புணர்வும்தான் உடனடித் தேவை.
நன்றி: இந்து தமிழ் திசை (21 – 12 – 2024)