TNPSC Thervupettagam

பெரியாரின் பார்வையில் சமூக நீதி

September 17 , 2021 1050 days 1024 0
  • மனித உரிமை, சமூக நீதி இரண்டும் 20-ம் நூற்றாண்டின் அரசியல், பொருளாதார விவாதங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள்.
  • சுற்றுச்சூழல் உள்ளிட்ட 21-ம் நூற்றாண்டின் முக்கிய விவாதங்களிலும் இந்த வார்த்தைகளின் பயன்பாடு தொடர்கிறது.
  • முறையே தனிநபரையும் சமூகத்தையும் குறிக்கும் இந்த இரண்டு வார்த்தைகளும் ஏறக்குறைய நெருக்கமான பொருளைத் தரக்கூடியவை. ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவையும்கூட. சமூக நீதி என்பது தனிமனித உரிமைகளின் தொகுப்பு என்ற பார்வையும் உண்டு.
  • சமூக நீதிக் கோட்பாட்டினைப் ‘பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய நீதி’ என்றே ஜான் ராவ்ல்ஸ் வழிவந்த அரசியல் அறிஞர்கள் வரையறுக்கிறார்கள். இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் அதே பொருளில்தான் இந்த வார்த்தைகள் பயன்பாட்டில் இருக்கின்றன.
  • சமூக நீதியை அடைவதற்கான வழியாக வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்... அதை அடைவதற்கான வழியாக கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என அது நீள்கிறது. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமே சமூக நீதியின் முழு அர்த்தமாக ஆகிவிடுவதில்லை.
  • ஆனால், இடஒதுக்கீட்டுக்கான போராட்டங்களே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், சம உரிமையையும் சம வாய்ப்பையும் உறுதிப்படுத்துவதே சமூக நீதி என்றாகிவிட்ட நிலையில் இருக்கிறோம்.

எங்ஙனம் சாத்தியம்

  • சென்னை சட்டமன்றத்துக்கு நடந்த முதல் பொதுத் தேர்தலில் 65 பொதுத் தொகுதிகளில் பிராமணர் அல்லாதாருக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டபோதே நீதிக் கட்சி தனது சமூக நீதிப் பயணத்தைத் தொடங்கிவிட்டது.
  • நீதிக் கட்சியின் காலத்தை சமூக நீதி வரலாற்றின் தொடக்கமாகக் குறிப்பிடுவதற்குக் காரணம், அதன் ஆட்சிக்காலத்தில் இடஒதுக்கீட்டுக்கான முதலாவது அரசாணை பிறப்பிக்கப் பட்டது என்பதால் மட்டுமல்ல.
  • பெண்களின் கண்ணியத்துக்குக் களங்கம் விளைவித்த தேவதாசி முறை ஒழிக்கப் பட்டதையும் கணக்கில் கொண்டுதான் அவ்வாறு குறிப்பிடப்படுகிறது.
  • நீதிக் கட்சி ஆட்சியில் இருந்த இருபது களின் தொடக்கத்தில் பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதும், அங்கேயே வகுப்புவாரி உரிமைப் போராட்டத்தைத் தொடங்கி விட்டிருந்தார்.
  • 1920-ல் திருநெல்வேலியில் நடந்த மாநில காங்கிரஸ் மாநாட்டில், பெரியார் தலைமையில் முன்மொழியப்பட்ட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத் தீர்மானத்தை மாநாட்டுத் தலைவர் எஸ். சீனிவாசய்யங்கார் ஏற்றுக்கொள்ளவில்லை.
  • திருநெல்வேலியை அடுத்து தஞ்சை, திருப்பூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாநாடுகளிலும் அத்தீர்மானத்தை நிறைவேற்று வதற்கான பெரியாரின் முயற்சிகள் தொடர்ந்து தோல்வியுற்றன.
  • இதற்கிடையில், முக்கியப் பாதைகளில் அனைவரும் நடந்துசெல்லும் உரிமைக்கான வைக்கம் போராட்டத்திலும் சமபந்தி உரிமைக்கான சேரன்மாதேவி குருகுலப் போராட்டத்திலும் பெரியார் தீவிரமாகப் பங்கேற்றார்.
  • நீதிக் கட்சியால் மட்டுமே தமிழ்நாட்டில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் நிலை  நாட்டப் பட்டு விடவில்லை.
  • நீதிக் கட்சி ஆதரவில், சுப்பராயன் முதல்வராக ஆட்சியில் தொடர்ந்தபோது, அப்போதைய பதிவுத் துறை அமைச்சராகப் பதவி வகித்த எஸ்.முத்தையாவே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை முழுதாகச் செயல்படுத்த ஆணை பிறப்பித்தவர்.
  • பிராமணர் அல்லாதவர்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எனத் தனி இடஒதுக்கீட்டை முதலில் அறிமுகப்படுத்தியவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வரான ஓமந்தூர் ராமசாமி.
  • முத்தையாவையும் ராமசாமியையும் பெரியார் முழுமனதோடு ஆதரித்து நின்றார்.
  • ஓமந்தூரார் நடைமுறைப்படுத்திய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ ஆணையைச் சுதந்திர இந்தியாவின் புதிய அரசமைப்பின்படி செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து 1950 ஆகஸ்ட் 14-ம் தேதியை வகுப்புரிமை நாள் என்று அறிவித்துப் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தார் பெரியார்.
  • அதன் விளைவு, அரசமைப்பின் முதலாவது திருத்தங்களில் ஒன்றாக பிற்பட்டோருக்கான இடஒதுக்கீடு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • சென்னை மாகாணச் சங்கம், காங்கிரஸ், நீதிக் கட்சி, தன்மதிப்பு இயக்கம், திராவிடர் கழகம் என்று பெரியாரின் நீண்ட நெடிய அரசியல் பயணம் வகுப்புரிமையையே தனது அச்சாகக் கொண்டிருந்தது.
  • பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரின் சமூக நீதிப் பார்வை குறித்து மறுவாசிப்புக்கான தேவை எழுந்துள்ளது.
  • பெரியார் தனது எழுத்திலும் பேச்சிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்ற வார்த்தைகளுக்கே அதிக முக்கியத்துவமும் அழுத்தமும் கொடுத்தவர்.
  • சுதந்திர இந்தியாவின் புதிய அரசமைப்பு இயற்றப்பட்ட பிறகே, இந்திய அரசியல் வெளியில் சமூக நீதி என்ற வார்த்தைகள் பரவலாகப் புழங்க ஆரம்பித்தன. பிற்பட்டோர் நலன் குறித்த விவாதங்கள் அந்த வார்த்தையைத் தவிர்த்து முழுமை பெற முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது.
  • ஆனால், சமூக நீதி என்பது இடஒதுக்கீட்டுக்குள் அடங்கிவிடுவதன்று. அது அனைவரையுமே உள்ளடக்கிய சமத்துவ நிலையை இலக்காகக் கொண்டது. அதன் முழுமையான பரிமாணத்தை நூறாண்டுகளுக்கு முன்பே தெளிவாக உணர்ந்திருந்தவர் பெரியார்.
  • சமூக நீதிக்கான குரலாக ‘குடிஅரசு’ ஏட்டைத் தொடங்கிய ஆறு மாதங்களில் அவர் எழுதியது இது: ‘என்றைக்கிருந்தாலும் இரு சமூகத்தினரும் ஒன்றுபட்டுத் தானாக வேண்டும்.
  • அங்ஙனம் ஒன்றுபடுவதற்கு அவரவர்களுடைய குற்றங்குறைகளை எடுத்துக்கொள்ளப் பயந்து கொண்டு, மேற்பூச்சுக்கு மாத்திரம் பிராமணர்களிடம் அன்பர்களாய் நடந்து கொள்வதில் இரு சமூகத்தாருக்கும் ஒரு பிரயோஜனம் ஏற்படாது எனக் கருதியே, யாருடைய நிஷ்டூரம் ஏற்பட்டாலும் அதைப் பற்றிக் கவலையில்லாமல், உண்மையை எடுத்துக்கூறி குற்றங்களைக் கீறி ஆற்றி திருத்தப்பாட்டடையச் செய்து இரு சமூகமும் உண்மையான சகோதர அன்பில் கட்டுப்பட்டு, நமது நாடு உண்மையான விடுதலை பெறவே உழைத்துவரப்படுகிறது.
  • இதை ஆரம்பத்திலேயே குடிஅரசின் முதலாவது இதழ் தலையங்கத்தில் “மக்களுக்குள் தன்மதிப்பும் சமத்துவமும் சகோதரத்துவமும் ஓங்கி வளரல் வேண்டும். மக்கள் அனைவரும் அன்பின் மயமாதல் வேண்டும்…
  • அனைத்துயிரும் ஒன்றென்று எண்ணும் உண்மையறிவு மக்களிடம் வளர்தல் வேண்டும்...” என நமது அபிப்ராயத்தைத் தீர்க்க மாகக் குறிப்பிட்டிருக்கிறோம்.’ (குடிஅரசு, 1.11.1925)
  • சமூக நீதி நாளுக்கான உறுதிமொழியில் இடம்பெற்றுள்ள சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம், மானுடப் பற்று, மனிதாபிமானம் ஆகிய வாசகங்கள் பெரியாரால் ஏறக்குறைய நூறாண்டுகளுக்கு முன்பே பேசப்பட்டவை.
  • பிறப்பின் பெயரால் ஒருவருக்கொருவர் நிரந்தரப் பகையைப் பேணிடின் மானுடப் பற்று எங்ஙனம் சாத்தியம்?

நன்றி: இந்து தமிழ் திசை (17 - 09 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்