TNPSC Thervupettagam

பெரியாரின் பெருங்கனவு!

September 17 , 2024 70 days 109 0

பெரியாரின் பெருங்கனவு!

  • சா​தி​களால் ஆன இந்தியச் சமூகத்தை ஆழமாகப் புரிந்​து​கொள்​வதுடன் அக்கற்​பனைக் கோட்பாட்டை அழித்​தொழிப்​ப​தற்கான தேவையை உணர்ந்​தவர்​களால் மட்டும்தான் பெரியாரின் பொருத்​தப்​பாட்​டையும் சாதியொழிந்த ஒரு சமூகத்தை உருவாக்க, அரை நூற்றாண்டுக் காலம் அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்​பையும் உணர்ந்​து​கொள்ள முடியும்.
  • அவர் நாள்தோறும் எழுதி​யதும் உரையாடியதும் போராடியதும் சிந்தித்​ததும் பிறவி இழிவை முற்றாக அழித்து, சுயமரி​யாதை​யுடன் கூடிய சமத்துவச் சமூகத்தை உருவாக்கு​வதற்​காகவே என்பதை இந்த நாடும் சமூகமும் புரிந்​து​கொண்​டிருந்​தால், இந்நாட்டின் உயரிய விருது அவருக்கு நல்கப்​பட்​டிருக்​கும்.

முன்னு​தா​ரணமற்ற தலைவர்:

  • முடியாட்சி முதல் குடியாட்சி வரை, அரசியல்தான் மக்களின் அனைத்துச் சிக்கல்​களையும் தீர்க்கும் அருமருந்​தாகக் கருதப்​படு​கிறது. அது உண்மையெனில், இந்தியாவில் ஈராயிரம் ஆண்டு​களுக்கு மேல் நிலவும் வர்ண - சாதி முரண்களை மட்டும் அது ஏன் தீர்க்க​வில்லை எனக் கேட்ட பெரியார், அதற்காகவே அரசியலை முற்றாகத் தவிர்த்த ஓர் ஒப்பற்ற இயக்கத்தைத் தோற்று​வித்​தார்.
  • தம்முடைய இயக்கத்தைச் சேர்ந்​தவர்கள் எவ்விதத் தேர்தல் அரசியலிலும் பங்கேற்கக் கூடாது என்பதை இயக்கத்தின் முதன்மைச் சட்டமாக்கி, தம் இயக்கம் இறுதிவரை ஒரு சமூகப் பண்பாட்டு இயக்க​மாகவே செயல்​படும் என்றார். வரலாற்றில் புத்தரைத் தவிர, உலகளவில்​கூடப் பெரியாரின் இத்தகைய அரசியல் தவிர்த்த அணுகு​முறைக்கு முன்னு​தா​ரணமாக எவரையும் குறிப்​பிட்டுச் சொல்வது கடினம்.
  • “சுயமரியாதை இயக்க​மானது, அரசியல்​களின் பெயரால் நமது நாட்டில் உள்ள பல கட்சிகளைப் போல் அல்லாமல், அந்நியர்​களிட​மிருந்து யாதொரு விதமான சிறு விஷயத்​தையும் எதிர்​பாராமல் மக்களின் அறிவை விளக்கி - அவரவர்​களின் மனப்பான்மையை மாற்றுவதன் மூலமே - உண்மையான விடுதலை​யையும் சமத்து​வத்​தையும் தன்மதிப்​பையும் உண்டாக்​கக்​கூடியதான ஒரு இயக்க​மாகும்” (‘குடிஅரசு’, 25.08.1929) எனத் தன்னுடைய இயக்கத்தைப் பெரியார் வரையறுத்​தார்.
  • அரசியல் உரிமை​களால் நிறைவடைந்தோர் அவ்வுரிமைகளை நடைமுறைப்​படுத்து​வதற்கான போராட்​டங்களை முன்னெடுக்​கின்​றனர். அதற்குப் பல நிலைகளிலும் ஆதரவு கிடைக்​கிறது. ஆனால் சமூக, மத, பண்பாட்டு உரிமைகள் முழுமை அடையும்​போது​தான், அதன் மீது கட்டப்​படும் அரசியல் உரிமைகள் பாதுகாக்​கப்​படும் என்பதை அவர்கள் இன்றுவரை உணர்ந்​த​தாகத் தெரிய​வில்லை. அரசியலில் சமத்து​வமும் சமூக நிலையில் ஏற்றத்​தாழ்வு​களும் நீடிப்​பதையே இந்நாட்டின் முதன்மை முரணாகக் கண்டறிந்து, அதைக் களைவதற்கான போராட்​டத்தையே பெரியார் இறுதிவரை நிகழ்த்​தினார்.
  • தமக்குத் தேசாபி​மானமோ, பாஷாபி​மானமோ, குலாபி​மானமோ இல்லை என்று அறிவித்த பெரியார், எந்தப் புலவரும் அறிஞரும் செய்யத் துணியாத தமிழ் மொழிச் சீர்திருத்​தத்தைச் செய்தார். இன்றுவரை கற்பு, கைம்பெண், விபச்சாரி போன்ற சொற்கள் எல்லாம் பாலினச் சமமின்மையை வலியுறுத்தி, ஆணாதிக்​கத்தை நிலைபெறச் செய்வ​தால், பக்தியின் ஆதிக்கம் நிறைந்​திருக்கும் செம்மொழியைக் காட்டுமிராண்டி மொழி என விமர்​சித்தார். அத்துடன் தமிழுக்கும் மதத்துக்​குமான தொடர்பை நீக்கி அதை மதச்சார்​பற்ற, பாலினச் சமத்து​வத்​துடனான அறிவியல் மொழியாக்க விழைந்தார் பெரியார்.

உயர் எண்ணங்​களின் சோலை:

  • தனித் தமிழ்நாடு கோரிக்கையாக இருந்​தா​லும், இந்தி / சம்ஸ்​கிருத எதிர்ப்புப் போராட்டமாக இருந்​தாலும் இடஒதுக்​கீட்டைப் பாதுகாத்து, பரவலாக்க முன்னிறுத்திய செயல்​திட்டமாக இருந்​தாலும் கடவுள், மத எதிர்ப்பாக இருந்​தாலும் அவை அனைத்தையுமே பெரும்​பான்மை மக்களிடையிலான சாதிய முரண்​களைப் பலவீனப்​படுத்​தவும் சமூகத்தை ஜனநாயகப்​படுத்​தவுமே பெரியார் பயன்படுத்தினார்.
  • ஏனெனில், தமிழர்​/​திரா​விடர் ஓர்மை என்பது, ஓர் அரசியல் ஓர்மையாக இல்லாமல் அது ஒரு சமூக ஓர்மை​யாகப் பரிணமிக்க வேண்டும் என்பதே பெரியார் போராட்​டங்​களின் அடிநாதம். ஆனால், உயர் எண்ணங்​களின் சோலையாக மலர்ந்த பெரியார் செயல்​திட்​டங்​களின் அகவயமான கூறுகள் புறந்​தள்​ளப்​பட்டு, புறவயமான அரசியல் முழக்​கங்களே தற்போது முன்னிறுத்​தப்​படு​கின்றன.
  • தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடைபெறும்​போது, பெரியார் அம்மக்​களுக்கு ஆதரவாக இல்லை என்றொரு விமர்சனம் தொடர்ச்​சியாக முன்வைக்​கப்​படு​கிறது. சாதி ஒழிப்பைத் தன் உயிர்​மூச்​சாகக் கொண்டு செயல்பட்ட ஒரு சிந்தனை​யாளர், அவ்வமைப்பால் கடுமை​யாகப் பாதிக்​கப்​படும் மக்களுக்கு எதிராக இருந்தார் என்று குற்றம்​சாட்டுவது, ஆதாரமற்றது; உள்நோக்கம் உடையது.
  • தலித் மக்களுக்கு எதிராக வன்கொடுமைகள் நடைபெறும்​போது, அம்பேத்​கரின் நிலைப்பாடு எத்தகையதாக இருந்ததோ அதே தன்மை​யில்தான் பெரியாரின் அணுகு​முறையும் அமைந்​திருந்தது. வன்கொடுமை​களுக்கு எதிராக மட்டுமே செயல்​படுவது என்பது, அதன் தோற்று​வாயான சாதியையும் அதற்கு உறுதுணையாக நிற்கும் மதத்தையும் எதிர்க்​காமல், அதன் வெளிப்​பாடான தீண்டாமையை மட்டுமே எதிர்க்கும் காந்திய அணுகு​முறையைப் போன்றது. அம்பேத்​கரும் பெரியாரும் இத்தகைய அணுகு​முறைக்கு நேர் எதிரானவர்கள்.

நவீனப் பார்வை:

  • நவீனக் கருத்​தரிப்பு குறித்​தெல்லாம் 80 ஆண்டு​களுக்கு முன்பே கணித்த பெரியார், ‘இனிவரும் உலகம்’ (1944) என்ற தமது நூலில், விமானப் போக்கு​வரத்து அதிகமாகும், கம்பி​யில்லா தந்திச் சாதனம் ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்​கும், ரேடியோ ஒவ்வொருவர் தொப்பி​யிலும் அமைக்​கப்​பட்​டிருக்​கும், உருவத்தைத் தந்தியில் அனுப்பும்​படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக்​கொள்​ளத்தக்க செளகரியம் ஏற்படும். மேற்கண்ட சாதனங்​களால் ஓரிடத்​திலிருந்​து​கொண்டே பல இடங்களில் உள்ள மக்களுக்குக் கல்வி கற்றுக்​கொடுக்கச் சாத்தி​யப்​படும் என்றார்.
  • ஆனால், இதைப் பலரும் முன்கூட்டியே அவதானித்த பெரியாரின் நவீன தொழில்​நுட்பச் சிந்தனை என்றளவில் மட்டுமே சிலாகிக்​கின்​றனர். உண்மையில் நவீனம் (Modernity) என்பதைப் பெரியார் வெறும் தொழில்​நுட்பக் கண்டு​பிடிப்புகளாக மட்டுமே பார்க்க​வில்லை. தான் கணித்த உலகில், இழிவான வேலை இருக்​காது, அடிமைத்தனம் இருக்​காது, பெண்களுக்குக் காவல் கட்டுப்பாடு இருக்​காது, போர் இருக்​காது, அதிசயப் பொருள்களை மக்கள் எல்லோரும் ஒன்றுபோல் அனுபவிக்கும் வாய்ப்பு ஏற்படும், உலகில் எந்தத் தனிப்பட்ட மனிதனுக்கு ஏற்படும் சங்கடத்​தையும் குறைபாடு​களையும் ஒவ்வொரு​வரும் (சமூகமே) தங்களுக்கு ஏற்பட்​டதுபோல் நினைக்​கும்​படியும் அனுபவிப்​பதுபோல் துடிக்​கும்​படியும் அவ்வளவு கூட்டு வாழ்க்கையும் ஒற்றுமை உணர்ச்​சியும் ஏற்படும் என்றார் பெரியார். ஆக, சாதிகள் ஒழிந்த, சமத்துவம் நிறைந்த, நாட்டின் வளங்களை அனைவரும் பாகுபாடின்றி அனுபவிக்​கக்​கூடிய உன்னதமான ஜனநாயகப் பண்பாட்​டைத்தான் (இனிவரும்) நவீன உலகமென்று பெரியார் கணித்​தார்.
  • கடவுள், மதம், சமூகம், கலை, இலக்கியம், பண்பாடு, குடும்பம், தேசியம், மொழி, நாடு என எதுவாக இருந்​தாலும் அது சாதியைப் பாதுகாப்பதாக இருக்கக் கூடாது; பாலின ஏற்றத்​தாழ்வு​களைக் கொண்டதாக இருக்கக் கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பாக இருந்தார் பெரியார். தவிர, ஆரியர் - திராவிடர் முரணையும் அவர் ரத்தப் பரிசோதனை செய்து, இன்னொரு இனப்பாகுபாட்டுக்கு வித்திட்​ட​வரல்ல. பெரும்​பான்மை மக்களாக இருக்கும் இந்தியத் தொல்குடி​யினர் மீது நிகழ்த்​தப்பட்ட மத, பண்பாட்டுப் படையெடுப்பை அறவழி​யிலும் அறிவுப் பிரச்​சா​ரத்தின் மூலமும் நேர் செய்வதையே வாழ்க்கையின் முழு நேரத் தொண்டாகக் கொண்டிருந்​தார்.
  • மனிதர்​களிடையே ஏற்றத்​தாழ்வு​களைக் கற்பிக்கும் மதத்தைக் கண்டிக்கும் பெரியார், உண்மையில் மதம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் விவரிக்கத் தயங்க​வில்லை: “என்னை மத விரோதி என்று சில மதவாதிகள் சொல்லுகிறார்கள். மதங்கள் ஒழிக்​கப்பட வேண்டும் என்று நான் சொல்லு​வதும் இப்படிப்பட்ட (ஏற்றத்​தாழ்வு​களைக் கொண்ட) மதங்களைத்தானே ஒழிய, மனிதனிடம் மனிதன் அன்பாய், உபகாரி​யாய், சமுதா​யத்​துக்கு ஏற்ற ஒழுக்​க​மாய், நாணயமாய், பிறர் நலத்தில் பற்றுள்ள நண்பனாய், மற்றவர்​களுக்குத் தொல்லை இல்லாதவனாய் நடந்து​கொள்ளும் தன்மையை மதம் என்றால் அதைப் போற்றுகிறவனே ஆவேன். நானும் கூடுமானவரை அப்படிப்பட்ட மதவாதியே ஆவேன்” (‘குடிஅரசு’ - 15.02.1947).
  • ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்று பெரியார் முன்வைத்த திட்டம் இன்று செயல்​வடிவம் பெற்றுள்ள​தால், அவர் நெஞ்சில் தைக்கப்​பட்​டிருந்த அந்த முள் அகற்றப்​பட்டு​விட்​ட​தாகப் பலரும் மன நிறைவு​கொள்​கின்​றனர். உண்மை​யில், “பன்னூற்​றாண்​டு​களாகப் பிறப்பின் காரணமாகப் படிநிலையின் கீழ்நிலையில் உள்ள சூத்திரர்​களும் பஞ்சமர்​களும்கூட, கருவறைக்குள் நுழைய​லாம்” என்ற அளவில்தான் உரிமை கிடைத்​துள்ளதே தவிர, அதனால் பிறவி இழிவு எள்ளளவும் நீங்க​வில்லை.
  • “இருளை உணராதவர்கள் ஒருபோதும் ஒளியைத் தேடிக் கண்டடைய மாட்டார்கள்” என்றார் அம்பேத்கர். பிறப்பு உருவாக்கி​யுள்ள இவ்விருளை ஆழமாக உணர்ந்​தவர்​களால் மட்டும்​தான், பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை நிரந்​தரமாக நீக்க முடியும்.

நன்றி: இந்து தமிழ் திசை (17 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்