TNPSC Thervupettagam

பெரியாரின் வைக்கம் சிறைவாசங்களும் ஆறுக்குட்டி நினைவகமும்

April 21 , 2023 628 days 1388 0
  • நூற்றாண்டு காணும் வைக்கம் போராட்டம் 1924ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் நாள் தொடங்கியது. அது அனேகமாக 1924 ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் தனது கேரளத் தலைவர்கள் யாவரையும் சிறைக்கு அனுப்பிவிட்டது. கடைசியாக ஏ.கே.பிள்ளை, கேளப்பன், வேலாயுத மேனன் ஆகியோர் 9ஆம் தேதி கைதாயினர். அதற்கு முன்பே மற்ற தலைவர்களான கே.பி.கேசவ மேனன், டி.கே.மாதவன் போன்றோர் கைதுசெய்யப்பட்டுவிட்டனர்.
  • போராட்டத்தின் முன்னவரும் மூலவருமான டி.கே.மாதவன் கோட்டயம் சிறையிலும் பின் சொன்னவர்கள் திருவனந்தபுரம் மத்தியச் சிறையிலும் அடைக்கப்பட்டனர். போராட்டக்காரர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுவிட்ட நெருக்கடியான சூழலில் ஜார்ஜ் ஜோசப்பின் கடிதவழி அழைப்புக்கு இணங்கி தன் வருகையின் தேவையை உறுதிசெய்துகொண்டு பெரியார் ஏப்ரல் 13ஆம் நாள் வைக்கம் போய் இறங்கினார்.
  • அரசை எதிர்த்து போராட வந்த பெரியாரை அரசே எதிர்கொண்டு வரவேற்றது. அது பெரியார் உட்பட எவருமே எதிர்பாராதது. அது ஒரு சுவையான எளிய மக்கள் மனம் கவர்ந்த தனிக் கதை.

முதல் சிறைவாசம்

  • பெரியார் வைக்கத்தில் தினமும் நடந்த சத்தியாகிரகத்தை ஒருங்கிணைத்தார்; தலைமை தாங்கினார்; பிரச்சாரமும் செய்துவந்தார். பெரியாரின் வரவால், செயல்பாட்டால் போராட்டத்துக்குப் பெருகிவந்த ஆதரவைக் கண்டு அச்சமுற்ற அரசு குறிப்பிட்ட நாள்களுக்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாமல், அவர் அங்குத் தங்குவதற்கும் அந்த மாவட்டத்தில் பிரவேசிப்பதற்கும் தடை உத்தரவைப் பிறப்பித்தது.
  • “வைக்கத்திலோ சுற்று வட்டாரங்களிலோ அவரின் வருகையோ தங்குதலோ அமைதியின் பங்கத்திற்கும் கலவரத்திற்கும் காரணமாகக் கூடும் என்று தெரிவதினால் ராமசாமி நாயக்கர் அவர்கள் கோட்டயம் மாவட்டத்தின் எந்த ஒரு பகுதியிலும் வருகைதரவோ தங்கவோ செய்யக் கூடாது” என்று அம்மாவட்ட மாஜிஸ்டிரேட் எம்.வி.சுப்பிரமணிய ஐயர் உத்தரவிட்டார். மாவட்ட மாஜிஸ்டிரேட் என்பது இக்கால மாவட்ட ஆட்சித் தலைவர் பதவிக்கு நேரானது. நீதித் துறையும் வருவாய்த் துறையும் பிரியாத காலம் அது; அப்போது நீதிப் பரிபாலனத்தையும் மாவட்ட ஆட்சித் தலைவரே செய்துவந்தார்.
  • அரசின் உத்தரவைப் பெற்றுக்கொண்ட பெரியார், தான் அதை மீறப்போவதாக 1924ஆம் ஆண்டு மே 17 அன்று அறிக்கை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து நீதிமன்ற விசாரணை 1924 மே 21 அன்று நடைபெற்றது.  விசாரணையை நேரில் காணப் பெரியாரின் மனைவி நாகம்மையாரும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். அரசு சார்பாகக் காவல் துறை அதிகாரிகளான பிச்சு ஐயங்காரும் நாராயண பிள்ளையும் விசாரிக்கப்பட்டனர். விசாரணையின்போது பெரியார், “இந்த நீதிமன்றம் நியாயம் செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை, விசாரணை வெறும் வேஷம், நீதிமன்றத்துடன் ஒத்துழைக்க முடியாது, தான் சமாதானம் உண்டு பண்ணவே வைக்கத்துக்கு வந்தேன் என்றும் எவ்விதமான தண்டனை அளித்தாலும் ஏற்கத் தயார் என்றும்” தெரிவித்தார். தீர்ப்பில் பெரியாருக்கு ஒரு மாத வெறுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. இதுதான் பெரியார் வைக்கத்தில் பெற்ற முதல் சிறைவாசத் தண்டனை.
  • ஏழு நாட்கள் வைக்கம் காவல் நிலையச் சிறையில் வைக்கப்பட்டிருந்த பெரியார் 1924 மே 28 இரவு வைக்கத்திலிருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த ஆறுக்குட்டி கிராமக் காவல் நிலையச் சிறைக்கு நீர் வழியாக அழைத்துச் செல்லப்பட்டார். இப்போது வைக்கத்திலிருந்து ஆறுக்குட்டிக்கு நீர் வழியாகச் செல்ல வாய்ப்பு இல்லை. தவணக் கடவு என்ற ஊர் வரைதான் ஆறு ரூபாய் செலவில் செல்ல முடியும். அங்கு இறங்கித் தரை வழியாக ஆறுக்குட்டிக்குச் செல்லலாம். இந்த ஆறுக்குட்டி என்கிற ஊரின் பெயரை விதவிதமாக எழுதுகிறார்கள்; அருவிக்குத்தி, அரூவிக்குட்டி, ஆறுக்குட்டி என்றெல்லாம் எழுதப்படுகிறது. இன்றைக்கு அவ்வூர்ப் பெயர்ப் பலகையில் ‘ஆறுக்குட்டி’ (Arookutty) என்று எழுதப்பட்டுள்ளது. ஆலப்புழை மாவட்டம், சேர்த்தலை வட்டத்தில் அவ்வூர் இப்போது அமைந்துள்ளது.

கடுங்காவல் தண்டனை

  • ஆறுக்குட்டியில் ஒரு மாதம், அதாவது 1924 ஜூன் 21 வரை சிறைக் கொடுமையை அனுபவித்துவிட்டு பெரியார் விடுதலை ஆனார். அங்கு அவர் அடைக்கப்பட்டிருந்தது காவல் நிலையச் சிறையில் ஆகும். தவிர அது திருவனந்தபுரத்தில் அமைந்தது போன்ற கைதிகள் தங்கியிருப்பதற்கான ஏற்பாடுகள் உள்ள சிறை அல்ல. தனக்குச் சாப்பாடு முதலியன வெளியிலிருந்துதான் வரவழைத்துத் தரப்பட்டன என்று பெரியார் பின்னாளில் இச்சிறைவாசத்தை நினைவுகூர்ந்தார்.
  • பெரியாரின் விடுதலையை ஒட்டி பாணவல்லியில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் வைக்கம் வந்த அவரைப் படகுத் துறையிலிருந்து சத்தியாகிரகத் தன்னார்வலர்கள் பெரிய ஊர்வலமாக ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது நடைமுறையில் இருந்த பிரவேசத் தடை ஆணைக்குத் தான் பணியப்போவதில்லை என்று பெரியார் அறிவித்தார்.
  • கோட்டயம் மாவட்டத்துக்குள் பெரியார் வரக் கூடாது என்ற சமஸ்தான அரசின் ஆணை அமுலில் இருக்கும்போது அவரை வைக்கத்தில் நுழைய அனுமதித்தது ஏன் என்று மாவட்ட நிர்வாகம் காவல் துறையைக் கேள்விகளால் துளைத்தெடுத்தது. எனவே, பெரியார் மீண்டும் விசாரணைக்கு உள்ளானார். மாவட்ட மாஜிஸ்டிரேட்டின் உத்தரவை இரண்டாவது முறையாகப் பெரியார் மீறியது விசாரணையில் உறுதிசெய்யப்பட்டது; நான்கு மாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
  • “நாயக்கர் வேண்டுமென்று இரண்டாம் தடவை பிடிவாதமாகச் சட்டத்தையும் உத்தரவையும் மீறி நடந்திருப்பதாகத் தெரிகிறது. அம்மாதிரி நடப்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் தடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. முன்பு உபாயமான தண்டனை விதித்து நடத்தையைத் திருத்தப் பார்த்தும் பிரயோஜனமில்லாததால் கடுமையான தண்டனை இத்தடவை விதிக்கப்பட்டிருக்கிறது” என்று மாஜிஸ்டிரேட் அத்தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார் (‘சுதேசமித்திரன்’, 1924 ஜூலை 22).

ராஜாஜியின் கண்டனம்

  • பெரியார் 1924 ஜூலை 19 அன்று கோட்டயம் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்றும் அங்கு ஒரு மாதச் சிறைவாசம் அனுபவித்த பின்னர் திருவனந்தபுரம் சிறைக்கு அனுப்பப்படுவார் என்றும் ‘தி இந்து’ நாளிதழ் எழுதியது (1924 ஜூலை 21). அதைப் போலவே, கோட்டயத்துக்குப் படகில் அழைத்துச் செல்லும்போது 20 மைல் தூரத்துக்கு மேல் பெரும் மழையினாலும் புயலினாலும் பயணத்தைத் தொடர முடியவில்லை. படகு வைக்கத்துக்குத் திரும்பிவிட்டதாம்.
  • “பெரியார் கோட்டயத்திலிருந்து திருவனந்தபுரத்திற்குக் கொண்டு போகப்படுவார். அவ்விரண்டு இடங்களுக்கும் இடையில் உள்ள 102 மைல் தூரத்தையும் அவர் நடந்து கடக்க உத்தேசித்திருக்கிறார்” (‘நவசக்தி’, 1924 ஆகஸ்ட் 8) என்றும் கருத்துகள் உலா வரத் தொடங்கியிருந்தன.
  • வைக்கத்திலிருந்து கோட்டயம் வழியாகவோ நேரடியாகவோ திருவனந்தபுரம் சிறைக்குப் பின்னொரு நாள் பெரியார் அழைத்துப் போகப்பட்டார். திருவனந்தபுரத்தில் பெரியார் அனுபவித்த சிறைவாசக் கொடுமையைப் பற்றி ராஜாஜி விடுத்த கண்டன அறிக்கையிலிருந்து சில வரிகளைப் பார்க்கலாம்.
  • “தற்போது திருவனந்தபுரம் மத்தியச் சிறையில் சத்தியாகிரகக் கைதியாக இருக்கும் ஈ.வி.ராமசாமி நாயக்கரின் உணவு மற்றும் தங்குமிடம் போன்ற விஷயங்களில் சாதாரணத் தண்டனைக் கைதியாக நடத்தப்படுவதாக நம்பகமான தகவல்கள் எனக்கு வருகின்றன. சிறை உடையை அவர் அணிகிறார்; இரும்பு விலங்குகள் போடப்பட்டிருக்கிறார்; தனிமைச் சிறையில் மற்ற சத்தியாகிரகச் சிறைவாசிகளிலிருந்து ரொம்ப தூரத்தில் வைக்கப்பட்டிருக்கிறார் என்று தெரிகிறது. இவ்வளவுக்குப் பிறகும் நாயக்கர் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
  • அவரைக் கடுங்காவல் சிறைத் தண்டனையில் வைத்திருப்பதும் இரும்பு விலங்கிட்டிருப்பதும் அவருக்குச் சிறை உடை அணிவித்திருப்பதும் மற்ற சத்தியாகிரகக் கைதிகள் சரியாகப் பெற்றுள்ளவைகளை அவருக்கு மறுப்பதும் முழுமையாக நியாயப்படுத்த முடியாதவை” என்று ராஜாஜி கடுமையாக எழுதிய பிறகும், சிறையில் பெரியார் அரசியல் கைதியாக இறுதிவரை நடத்தப்படவில்லை.
  • அரசியல் கைதியாக உடன் சிறையிலிருந்த கேரளக் காங்கிரஸ் தலைவர் கே.பி.கேசவ மேனன் அரசுக்கு இதுகுறித்து கோரிக்கை வைத்தார். எனினும் பயன் ஏதும் விளையவில்லை.

பெரியாரின் அறிக்கை

  • திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு வெளியே இருந்துவந்து போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைப்பட்டவர்களின் பட்டியல் - அ (List A) ஒன்றையும் திருவாங்கூரைச் சேர்ந்த முன்னணி எதிர்ப்பாளர்களின் பட்டியல் - ஆ (List B) ஒன்றையும் 18.10.1924 தேதியிட்ட கடிதத்தில் சமஸ்தானத்தின் காவல் துறை ஆணையாளர், தலைமைச் செயலாளருக்கு அனுப்பியுள்ளார்.
  • அந்தப் பட்டியல் (A) ஒன்றில் ஈரோடு ஈ.வி.ராமசாமி நாயக்கர், கும்பகோணம் சக்கரவர்த்தி ஐயங்கார், மேலக்கூடலூர் சன்னாசி கெளடன், வேலுசாமி ஆசாரி, சேரன்மாதேவி வெங்கு ஐயர், சேலம் சி.சுப்பா ஐயர், (பிரிட்டிஷ்  இந்தியா) அய்யா முத்துக் கவுண்டர் ஆகியோரின் பெயர்கள் உள்ளன. திருவாங்கூர் தண்டனைச் சட்டம் விதி 181 கீழ் நான்கு மாதக் கடுங்காவல் தண்டனையும் (கொல்லம் ஆண்டு 1.12.99), அதே விதி 181 கீழ் ஒரு மாதம் வெறுங்காவல் தண்டனையும் (கொல்லம் ஆண்டு 9.10.99) பெரியாருக்கு வழங்கப்பட்ட விவரமும் தரப்பட்டுள்ளது.
  • மகாராணி ரீஜண்ட் பதவி ஏற்றதை அடுத்தும் யுவராஜா பட்டத்துக்கு வந்ததை ஒட்டியும் கெடுகாலம் முடியும் முன்பே பெரியார் 18 சத்தியாகிரகக் கைதிகளுடன் 30.8.1924 அன்று விடுதலை செய்யப்பட்டார். பெரியார், கேசவ மேனன், ஜார்ஜ் ஜோசப் ஆகியோர் திருவனந்தபுரம் சிறையிலிருந்தும் டி.கே.மாதவனும் மற்றொருவரும் கோட்டயம் சிறையிலிருந்தும் விடுதலை ஆகினர்.
  • “வைக்கம் உள்பட எல்லா இடங்களிலும் பொது ரஸ்தாக்களில் எல்லோரும் நடமாடலாம் என்று அரசாங்கத்தார் அனுமதிப்பதற்கு அறிகுறியாகவே எங்கள் விடுதலையைக் கொள்ள நாங்கள் ஆவலாய் இருக்கிறோம். அப்படி இல்லாவிடில் வைக்கம் போராட்டத்தை இனியும் நடத்துவோம். அதைப் பற்றிச் சந்தேகப்பட வேண்டாம்” என்று பெரியார், கேசவ மேனன் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுச் சிறையிலிருந்து வெளியே வந்ததும் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

மீண்டும் வைக்கம்

  • முதன்முறை சிறையிலிருந்து வெளியே வந்த பெரியார் வீடு திரும்பாமல் மீண்டும் வைக்கம் சென்றதைப் போலவே இம்முறையும் தொடர்ந்து போராடச் சென்றார். பல்வேறு ஊர்களில் 10 நாள்களின் பிரச்சாரத்துக்குப் பிறகே செப்டம்பர் 10ஆம் தேதி ஈரோடுக்குத் திரும்பினார். ஊர் திரும்பிய பெரியாரை 1924 செப்டம்பர் 11 அன்று சென்னை மாகாணக் காவல் துறை அதற்காகவே காத்திருந்ததைப் போல கைதுசெய்தது.
  • ஆறு மாதங்களுக்கு முன் சென்னை, மந்தைவெளியில் பெரியார் பேசிய பேச்சு ஒன்றை ராஜ துரோகப் பேச்சு எனக் காரணம் காட்டி அந்தக் கைது நிகழ்த்தப்பட்டது. வேறொரு அரசு வேறொரு காரணத்துக்காக வேறொரு இடத்தில் கைதுசெய்து இருந்தாலும் மீண்டும் அவர் வைக்கம் போராட்டத்துக்குச் செல்லக் கூடாது என்பதற்காகத்தான் அது நிகழ்ந்தது என்பதைப் புரிந்துகொள்ளப் புலனாய்வுப் புலியாக இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை.
  • ஆக, வைக்கம் போராட்டத்துக்காகப் பெரியார் இரண்டு முறை சிறைக்குச் சென்றார். சேலம் சி.சுப்பா ஐயரைத் தவிர வேறு பிரிட்டிஷ் இந்தியர் யாரும் இரண்டு முறை தண்டிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை. பெரியார் முதல்முறை வெறுங்காவல் தண்டனையும் இரண்டாம் முறை கடுங்காவல் தண்டனையும் அனுபவித்தார். அய்யா முத்துக் கவுண்டர் ஒருமுறை ஒரு மாதம் சிறையில் இருந்தபோது கடுங்காவலில் இருந்தார். தவிர வேறு எவரும் பெரியார் அனுபவித்த முறையில் சிறைத் தண்டனையை அனுபவித்ததாகத் தெரியவில்லை.
  • இந்தக் குறிப்பு காவல் துறை ஆணையாளரின் (18.10.1924) தலைமைச் செயலருக்கு எழுதிய கடிதத்தின்படி எழுதப்படுகிறது. பெரியார் முதல்முறை 31 நாள்களும், இரண்டாம் முறை, விதிக்கப்பட்ட தண்டனைக் காலம் நான்கு மாதங்களாக இருப்பினும் முன்னரே விடுதலையானதால் 43 நாள்களும் சிறையில் கழித்தார். ஆகமொத்தம் 74 நாட்கள் சிறையில் இருந்தார்.

வைக்கம் வீரர் பெரியார்

  • இதுவரை கிடைத்திருக்கிற ஆதாரத்தின்படி ஏழு முறை போராட்டத்துக்காகப் பெரியார் வைக்கம் சென்றுள்ளதாகத் தெரிகிறது. அயல் மண் சென்று அரும்பணியாற்றிய பெரியாரை ‘வைக்கம் வீரர்’ எனத் திரு.வி.க. அளித்த பட்டத்தால் அழைப்பது அவரது தியாகத்துக்குப் பொருத்தமானது.
  • வைக்கம் போராட்டம் முடிவுக்கு வந்ததை அடுத்து பெரியார் தலைமையில் வைக்கத்தில் 1925 நவம்பர் 29 அன்று வெற்றி விழா நடைபெற்றது. சத்தியாகிரக ஆசிரமச் செயலாளரும் நான்கு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவரும் ‘கேரள காந்தி’ எனப் பின்னாளில் புகழ்பெற்றவருமான கேளப்பனும் சவர்ண ஜாதாவைத் தலைமை தாங்கி நடத்தியவரும் நாயர் சேவைச் சங்கத் தலைவருமான மன்னத்து பத்மநாபனும் சத்தியாகிரகிகள் சார்பாக ஏற்பாடு செய்த வெற்றி விழாக் கூட்டம் அது.
  • வைக்கம் போராட்டத்தில் இக்கட்டான கட்டத்தில் கலந்துகொண்டு அதை வீழாமல் காத்தவரும் பிரச்சாரம், செயல்பாடு, சிறைவாசம், நிர்வாகம் ஆகியவற்றின் மூலம் போராட்டத்துக்குப் பல மாதங்கள் உழைத்தவருமான பெரியாரைச் சமகால சத்தியாகிரகிகளான சகோதரன் அய்யப்பன், கே.பி.கேசவ மேனன், சிவதாணு பிள்ளை, அய்யாமுத்து ஆகியோர் மெச்சிப் புகழ்ந்த வாசகங்கள் வரலாற்றில் வாசிக்கக் கிடைக்கின்றன.
  • வெற்றி விழாவுக்குத் தலைமை தாங்க அழைக்கும்படி கேரளர்கள் அவரை மதித்திருப்பதும் தெரியவருகிறது. வரலாற்று ஆசிரியர்களான டி.கே.ரவீந்திரன், கே.கே.குசுமான் ஆகியோரும் பெரியாரின் பங்கை வரலாற்றில் பதித்துள்ளனர். இத்தகைய முக்கியப் பணியைப் பிற்காலத் தலைமுறையினர் நினைவுகூரும் விதமாகப் பெரியாருக்கு வைக்கத்தில் ஒரு நினைவிடத்தைத் தமிழ்நாடு அரசு பராமரித்துவருகிறது.

இரு மாநிலங்களின் கொண்டாட்டம்

  • வைக்கத்துப் பெண்ணை மணந்தவரான எம்.ஜி.ராமச்சந்திரன் முதல்வராக இருந்த காலத்தில் 3.11.1985 அன்று நாவலர் நெடுஞ்செழியனால் திறக்கப்பட்ட அந்த நினைவகத்தில் ஒரு காட்சியகம் இயங்கிவருகிறது. பத்தாண்டுக்குப் பிறகு அவ்வளாகத்தில் உட்கார்ந்த நிலையில் பெரியார் சிலை ஒன்றும் 30.8.1994 அன்று நிறுவப்பட்டுள்ளது.
  • நூற்றாண்டை ஒட்டி அந்த நினைவகத்தைப் புனரமைப்பதோடு பெரியாரின் சிறைவாசத்தை நினைவுகூரும் முகமாக அவர் முதல்முறை சிறையிருந்த ஆறுக்குட்டி இடத்தைப் பெரியார் நினைவிடமாகப் பேணலாம் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பை நாம் வரவேற்கலாம். சிறைவாசம் இருந்த இடத்தைத்தான் நினைவிடமாக்க விரும்புகிறோம், சிறையை அல்ல. சிறையையே நினைவிடமாக்கும் நேர்வுகளும் இந்தியாவுக்குப் புதிதல்ல.
  • ஆறுக்குட்டியில் சிறை வைக்கப்பட்டிருந்த காவல் நிலையம் தற்போது அங்கிருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள பூச்சக்கல் என்ற இடத்துக்கு 1963 - 64லேயே இடம் மாறிவிட்டது. இப்போது அந்தப் பழைய இடம் செடி, கொடிகள் வளர்ந்து புதரிடமாக விளங்குகிறது. 30.3.2023 அன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவிடமாக்கும் அறிவிப்பைத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவித்தார்.
  • அதேபோல், 1.4.2023 அன்று கேரள அரசு எடுத்த வைக்கம் நூற்றாண்டுத் தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராகச் சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்  அந்த விருப்பத்தைக் கேரள முதல்வர் பினராய் விஜயன் முன்னிலையிலும் வெளியிட்டார். அந்த மேடையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாட்டுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் வீற்றிருந்தார். எனவே, தமிழ்நாட்டின் விருப்பம் விரைவில் ஈடேற அதிக வாய்ப்பு இருக்கிறது.
  • வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்களிப்பை நினைவூட்டும் விதமாக ஆறுக்குட்டியில் பெரியார் நினைவகம், அதுவும் வைக்கம் போராட்ட நூற்றாண்டில் அமைவது சிறப்பு. எல்லை கடந்துச் சென்று மனித உரிமையை நிலைநாட்டுபவர்களுக்கு ‘வைக்கம் விருது’ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எழுச்சியூட்டும் களமாக இந்நினைவிடம் வரலாற்றால் உள்வாங்கப்பட்டு நின்றுநிலைக்கும்.
  • இந்த விருதையும் தமிழ்நாடு அரசு அங்கு வைத்து வழங்கும் முறையையும் கடைப்பிடிக்கலாம். இப்போதைய சந்தர்ப்பத்தைவிட நல்லதொரு அரசியல் சூழல் அமையுமா என்றும் தெரியவில்லை. கே.பாலகிருஷ்ணனின் முயற்சியால் கேரள முதல்வர் பினராய் விஜயனின் ‘திருமனசு’ தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் விருப்பத்தை அங்கீகரிக்கட்டும். அந்த நாள் விரைவில் வரட்டும்!

நன்றி: அருஞ்சொல் (21 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்