TNPSC Thervupettagam

பெரியார் பெயரால் பழங்குடிகள் வஞ்சிக்கப்படலாமா?

April 4 , 2023 481 days 279 0
  • ஈரோடு காட்டுப் பகுதியில், தந்தை பெரியார் பெயரில் 80,567 ஹெக்டேர் பரப்பில் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்பட உள்ளதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது, வனத்தை நம்பி வாழ்ந்துவரும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
  • காடுகளில் வாழ்ந்துவந்த பழங்குடிகளை வெளியேற்றி விலங்குகளை வேட்டையாட, கனிம வளங்களை வெட்டியெடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்டதுதான் ஆங்கிலேயர் காலத்து வனச் சட்டம். அதுவேதான் இன்றைக்கு வனவிலங்கு சரணாலயம், தேசியப் பூங்காக்கள், புலிகள் காப்பகம் எனப் பல்வேறு பெயர்களில் கொண்டுவரப்படுகிறது.
  • மின்சாரத் திட்டங்கள், அணைக்கட்டுகள், தேயிலை - காபித் தோட்டங்கள், காகிதத் தொழிற்சாலைகள், செயற்கை நூல் ஆலைகள் போன்றவற்றுக்காகக் காட்டுப் பகுதிகளில் ஏற்பட்ட அழிவுகள் பேசப்படுவதில்லை.
  • உலகம் முழுவதும் காடுகள் அழிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த இன்றுவரை பழங்குடிகள்தாம் போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், பெரும் வாக்கு வங்கியாக அல்லாது - குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் அவர்களது குரல்களை அதிகாரவர்க்கம் செவிமடுப்பதில்லை.
  • நாட்டின் மொத்தப் பரப்பில், சமவெளியில் மூன்றில் ஒரு பங்கும், மலைப்பகுதியில் மூன்றில் இரண்டு பங்கும் காட்டுப் பகுதிகளாக இருக்க வேண்டும் என்கிறது தேசிய வனக் கொள்கை. ஆனால், நிதர்சனம் அதற்கு நேர்மாறானது.
  • விலங்குக் காட்சி சாலைகளில் மனிதர்கள் கண்டுகளிப்பதற்காகவே வனவிலங்குகள் சிறைப்படுத்தப்பட்டு, சித்ரவதைக்குள்ளாகின்றன. இன்னொரு புறம், காடுகளுக்குள் வசதி படைத்தவர்களுக்காக வனச் சுற்றுலாவை வனத் துறை ஏற்படுத்தி வைத்திருக்கிறது. மலைப் பிரதேசங்களில் சமவெளியினர் பழங்குடிகளின் நிலங்களை ஆக்கிரமித்து உல்லாச விடுதிகளை உருவாக்கியிருக்கின்றனர்.
  • இரவு நேர வனச் சுற்றுலாவுக்கு வசதி செய்து தரப்படும் என்று அவர்களது இணையதளத்தில் பதிவிட்டிருப்பதை வனத் துறை கண்டுகொள்வதில்லை. ஆனால், தலைமுறைகளாகக் காட்டுப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடிகள் மீது நியாயமற்ற வகையில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
  • இப்படியான சூழலில், காட்டை நம்பி வாழும் மக்களைக் காட்டின் விரோதிகளாக முத்திரை குத்தும் அவலத்தை மாற்றியமைத்ததுதான் 2006 இல் கொண்டுவரப்பட்ட வன உரிமை அங்கீகாரச் சட்டம். இந்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்திய அன்றைய பிரதமர் மன்மோகன் சிங், ‘இதுகாறும் பழங்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி இந்தச் சட்டத்தின் மூலமாகத் துடைத்தெறியப்படுகிறது’ என்று அறிவித்தார்.
  • ஆனால், 16 ஆண்டுகள் கடந்த பின்பும் அந்தச் சட்டத்தின் பயன்கள் பழங்குடிகளுக்கும் காட்டை நம்பி வாழ்ந்துவருகின்ற மக்களுக்கும் கிடைக்கவில்லை. இந்தச் சட்டத்தை அமல்படுத்தாமல் புதிய வனவிலங்கு சரணாலயமும் புலிகள் காப்பகமும் திறக்கப்படுகின்றன. இவை காட்டுப் பகுதிகளில் வாழும் பழங்குடிகள் விரட்டியடிக்கப்படவே வழிவகுக்கின்றன.
  • இந்நிலையில், காலம்காலமாகக் காடுகளை நம்பி வாழ்ந்துவந்த மக்களின் உரிமைகள் தந்தை பெரியார் பெயரால் பறிக்கப்படுவதைத் தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது. வன உரிமை அங்கீகாரச் சட்டம் 2006 வழங்கியிருக்கும் பாரம்பரிய உரிமைகள் பழங்குடி மக்களுக்குக் கொண்டுசெல்லப்பட்ட பின்புதான், வனவிலங்கு சரணாலயத்தின் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். பழங்குடிகள் இல்லாமல் வனத் துறை மட்டும் காட்டைப் பாதுகாத்துவிட முடியாது; கூட்டு வன மேலாண்மை மட்டுமே காட்டைக் காப்பாற்றும். அரசு இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

நன்றி: தி இந்து (04 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்