பெருநகரமும் பறவைகளும் - ஒரு பார்வை
- இந்தியப் பறவைகள் நிலை 2023 (SoIB 2023) அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது eBird தளத்தில் ஆர்வலர்கள் பதிவேற்றிய 3 கோடிக்கும் அதிகமான தரவுகளைப் பயன்படுத்திப் பறவைகளின் எண்ணிக்கை, அவற்றின் நிலையைப் பற்றிய தகவல்களை நமக்கு அளிக்கின்றது.
- வாழிட இழப்பு என்பது பறவைகளின் எண்ணிக்கை குறைந்துவருவதற்கான பெரிய அச்சுறுத்தல் என்பதற்குச் சான்று பகர்வதுடன், குறிப்பாகப் புல்வெளிகள், சதுப்பு நிலங்கள், காடுகளில் வாழும் பறவை இனங்களுக்கும் இந்த அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது என்று இந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
- சுமார் 60% பறவை இனங்கள் நீண்ட கால வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. மேலும் 40% பறவைகளின் எண்ணிக்கை தற்போது குறைந்துவருகிறது. இந்தத் தரவானது இயற்கை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, உலகெங்கிலும் நகர்ப்புறங்களில் உள்ள பறவையினங்கள் குறைந்து வருவது கவலைக்குரிய செய்தி. இதற்குச் சென்னை நகரத்தையே ஓர் எடுத்துக்காட்டாகக் கொண்டால், சென்னையின் புள்ளினங்களில் பல குறைந்துள்ளதையும் சில மறைந்துவிட்டதையும் நம்மால் உணரமுடியும்.
பழைய சென்னை:
- சென்னை ஒரு காலத்தில் பல்வேறு பறவை இனங்களின் முக்கிய வாழ்விடமாக இருந்தது. இதற்கு முக்கியக் காரணம் சென்னையின் பல பகுதிகள் இயற்கையாகப் பல்லுயிர்களின் வாழ்விடமாக அமைந்திருந்ததே. இன்றைய மந்தைவெளி, அன்றைக்கு ஆடு மாடு மந்தைகள் மேய்ப்பதற்கான வெளியாக இருந்தது. பனந்தோப்பு, புளியந்தோப்பு, மாந்தோப்பு, திருமுல்லைவாயில், அல்லிக் கேணிகள் (திருவல்லிக்கேணி) போன்ற பகுதிகளின் பெயர்கள் பல மரங்களின், தாவரங்களின் பெயர்களை உள்ளடக்கி உள்ளதே இதற்குத் தெளிவான சான்று.
- மேலும் அடுக்குமாடிக் கட்டிடங்கள் இன்று இருப்பதுபோல் அன்றைக்கு இல்லை. அன்று வீடுகள் தனி வீடுகளாகவும், ஒவ்வொரு வீட்டு மனையிலும் தோட்டம், தென்னை, மா, பலா எனப் பல மரங்களும் இருந்தன. சென்னையின் புறநகரப் பகுதிகளாக இருந்த மாமல்லபுரம் சாலை, செம்பரம்பாக்கம் ஏரி, மேடவாக்கம் பகுதிகள் நீர்நிலைகளாக இருந்தன.
- பல உள்ளூர்ப் பறவைகளின் வாழிடங்களாகவும், வலசைப் பறவைகளின் புகலிடமாகவும் இப்பகுதிகள் இருந்துவந்தன. ஆனால், இன்றைக்குச் சரியான திட்டமிடல் இல்லாமல் செயல்படுத்தப்பட்ட அல்லது தவறான திட்டங்களால் இந்தப் பகுதிகள் முற்றிலுமாகப் பறவைகள் வாழத் தகுதியில்லாதவையாக மாறிவிட்டன.
நகர விரிவாக்கம்:
- சென்னையின் கட்டுமீறிய வளர்ச்சி நகரத்தின் நிலப்பரப்பைக் கணிசமாக மாற்றியுள்ளது. பசுமைப் பகுதிகளாக இருந்தவை இன்று உயரமான கட்டிடங்கள், பரந்து விரிந்த காங்கிரீட் காடுகள், தொடர்ந்து விரிவாக்கப்பட்டுவரும் சாலைகள் ஆகியவையாக மாற்றப்பட்டுள்ளன.
- சில பத்தாண்டுகளுக்கு முன் செம்பரம்பாக்கம் ஏரியைச் சுற்றி உள்ள பகுதிகள் நீர்நிலை களாகவும், முட்புதர்க் காடுகளாகவும் இருந்தன. இங்கு வானம்பாடி, கௌதாரி, காடை, ஆள்காட்டி போன்ற நிலத்தில் முட்டையிட்டு வாழும் பறவைகளும், தேன்சிட்டு, கதிர்க்குருவி, கொண்டைக்குருவி போன்ற பறவைகளும் இருந்தன. இங்கிருந்த ஈச்சமரங்களில் தூக்கணாங்குருவி கூடு கட்டி வாழ்வதையும் காண முடிந்தது. ஆனால், இன்றைக்கு இவை காணாமல் போய்விட்டன.
- ஒரு காலத்தில் சென்னை வீடுகளில் காணப்பட்ட சிட்டுக்குருவி இப்போது அரிதாகி விட்டது. சுவர்களில் உள்ள துளைகள், பாரம்பரியக் கட்டிடங்களின் இடுக்குகளில் கூடு கட்டும் இவை, தட்டையான நவீன மேற்கூரைகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளால் கூடு கட்டும் இடங்களை இழந்துவிட்டன. மேலும், இனப்பெருக்கக் காலம் அல்லாத வேளைகளில், அவை அடைக்கலம் புக அடர்த்தியான புதர்களோ செடிகொடிகளோ இல்லை.
- இவை அழிந்ததற்கு இன்னொரு முக்கியக் காரணம், குஞ்சுகளுக்கு அவை உணவாகக் கொடுக்கும் புழு பூச்சிகள் இல்லாமல் போய்விட்டது. முன்புபோல் சாக்கு மூட்டைகளில் அரிசி போன்ற தானியங்கள் விற்கப்படுவதில்லை. அதனால் இவை சிந்துவதற்கான வாய்ப்பு இல்லாததால் சிட்டுக் குருவிகளுக்கும் உணவில்லாமல் போனது. இப்படிப் பல காரணங்களால் சிட்டுக்குருவிகள் சென்னையில் இல்லாமல் போயின.
- செம்பருந்தும் சென்னையில் இருந்து மறைந்துவிட்டது. கரும்பருந்துபோல் இறைச்சிவெட்டுமிடங்கள், மீன் பிடிக்கும் இடங்கள் போன்ற பகுதிகளில் கிடைக்கும் கழிவுகளில் இருந்து எடுத்து உண்ணும் பறவைகளாக இவை இருந்தாலும், இன்று இவை காணப்படுவதில்லை. கரும்பருந்துகளின் எண்ணிக்கையும் குறைந்தே உள்ளது.
- அடுக்குமாடிக் கட்டிடங்களின் கீழ்ப் பகுதி வாகனங்கள் நிறுத்துமிடமாக உள்ளதால், அங்கு செடிகளோ மரங்களோ வளர்வதற்கான சாத்தியம் இல்லாமல் போய்விட்டது. ஒரு சில குடியிருப்புகளில் புல்வெளிகள் பராமரிக்கப் பட்டாலும், அவை எந்த வகையான பல்லுயிர் களுக்கும் பயன்படுவதில்லை. இதனால் தோட்டங்களில் பொதுவாகக் காணப்பட்ட தவிட்டுக் குருவி காணாமல் போனது. பூச்செடிகளை அண்டி வாழ்ந்து வந்த தேன்சிட்டு, தையல்சிட்டு போன்றவையும் அருகிவிட்டன.
- இப்படி வாழிடங்கள் துண்டாக்கப் படுவதாலும், அழிக்கப்படுவதாலும், பறவை இனங்கள் குறைந்து வருவது உண்மை. ஆயினும் சென்னையில் உள்ள கிண்டி தேசிய பூங்கா, தியசாபிகல் சொசைட்டி, நன்மங்கலம் காப்புக்காடு, சிறுதாவூர் முட்புதர் பகுதிகள், பள்ளிக்கரணை, அடையாற்றின் முகத்துவாரம் போன்ற பகுதிகள் இன்றும் பல புள்ளினங்களுக்கு வாழிடங்களாக உள்ளன. இன்றும் இப்பகுதிகளில் அரிய பழுப்பு ஆந்தை, வலசைக் காலத்தில் சென்னை வரும் ஆறுமணிக் குருவி, செந்தலைப் பூங்குருவி போன்ற பறவைகளைக் காண முடிகின்றது.
பறவைகளும் நாளைய சென்னையும்:
- சென்னைப் போன்ற நகர்ப்பகுதிகளைப் பறவைகளுக்கு உகந்த இடமாக மாற்றுவது அவசியம். இதற்கு நம் ஊர்ச் செடிகள், மரங்களை நடுவது இன்றியமையாதது. இவை புள்ளினங்களுக்கு உணவு, புகலிடம் வழங்குபவையாக இருக்க வேண்டும். அதைவிட முக்கியமாக இப்போது இருக்கும் வாழிடங்களைப் பாதுகாப்பதும் அவற்றை மேம்படுத்துவதும் மிக அவசியம். முக்கியமாகப் பள்ளிக்கரணை, பழவேற்காடு போன்ற நீர்நிலைகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இது போன்ற குறிப்பிட்ட வாழிடங்களுக்குப் பாதுகாப்பு தருவதோடு அதைச் சுற்றி உள்ள பத்து கிலோமீட்டர் பகுதியும் பாதுகாக்கப்பட்டால், அவை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலங்களாகப் பயன்படும்.
- சென்னையில் பறவைகள் குறைந்து வருவது கவலைக்குரிய விஷயமே. ஆனால், சென்னையில் பறவைகளுக்கான வாழிடங்கள் இன்னும் எஞ்சி இருக்கின்றன. அவற்றைப் பாதுகாத்து மேம்படுத்துவதோடு, புதிதாகப் பசுமைப் பகுதிகளை உருவாக்குவதன் மூலம் சென்னையைப் பறவைகளின் வாழ்க்கைக்கு ஏதுவான நகராக மீண்டும் மாற்ற முடியும். இதன் மூலம் சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதோடு, நகர வாழ்க்கையில் இயற்கையின் அழகையும் சேர்க்க முடியும். சென்னையில் வாழும் நாமும் புள்ளினங்களின் குரலோசையைக் கேட்டு மகிழ முடியும்.
நன்றி: இந்து தமிழ் திசை (14 – 09 – 2024)