- இந்திய பொருளாதார நடவடிக்கைகளில் வங்கிகளின் பங்களிப்பு மிக அதிக அளவில் உள்ளது என்பது நமக்குத் தெரியும். ஆனால், இந்த நடவடிக்கைகளால் உருவாகியுள்ள பொருளாதார குழறுபடிகள் கூர்ந்து கவனிக்கப்படுவதில்லை என்பதை நாம் உணர வேண்டும்.
- வங்கிகளின் தலைமை அமைப்பான ரிசர்வ் வங்கி, சமீபத்தில் விவரித்தபடி, வங்கியை நிர்வகிப்பவர்கள், மக்களைப் பார்த்து "உங்களின் பணத்தைஎடுத்து, பெரிய வியாபார நிறுவனங்களுக்குக் கொடுப்பதுதான் எங்களது வேலை' எனக்கு கூறுவது போல் உள்ளது.
- இதை சரியானபடி நாம் புரிந்து கொள்ளாமல் வங்கிகளின் நடவடிக்கைகளை மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியாக பாராட்டுகின்றோம். இந்தியாவில், மக்களுக்கு மிகுந்த பலன் அளிக்கும் பல செயல்கள் நடைபெறுவதாக அரசியல்வாதிகளும், பத்திரிகைகளும் பாராட்டுவது வழக்கமாகிப் போனது. வணிக பெருநிறுவனங்கள் நஷ்டம் அடைந்தால், அதனால் பாதிக்கப்படப்போவது அவற்றிற்கு பணம் கொடுத்த வங்கிகளே.
- சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஓர் அறிக்கையில், வங்கிகள் பற்றிய அறிவிப்புக்களில் கவனிக்கப்படவேண்டிய மூன்று அம்சங்கள் முக்கியமானவை. முதலாவது அறிவிப்பின்படி, மிகப் பெரிய வியாபார நிறுவனங்கள், வங்கிகளை ஆரம்பித்து தங்கள் வியாபாரங்களை நடத்த பண பலத்தை உருவாக்கலாம்.
- இரண்டாவது அறிவிப்பின்படி, இப்போது வங்கிகள் அல்லாத, பணப்பட்டுவாடா வியாபாரம் செய்யும் நிறுவனங்கள் கடன் வழங்க முடியும். ஆனால் பண முதலீடுகளைப் பெற முடியாது. அந்த நிறுவனங்களும், கடன் வழங்குவது போல, வாடிக்கையாளர்களிடம் பண முதலீடுகளை பெறுவதற்கும் வாய்ப்பளிக்க வேண்டும்.
- மூன்றாவதாக, இது போன்ற நிறுவனங்களில், இன்றைய விதிகளின்படி, இவற்றின் நிறுவனர்கள், 15 சதவீத பங்குகளையே வைத்திருக்க முடியும் என்ற விதியைத் தளர்த்தி 26 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
- இந்தக் கோரிக்கைகளை முழுமையாகப் புரிந்துகொள்ள, வங்கிகளின் நடைமுறை விதிகள் என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பொருளாதாரத்தின் பல பங்குகளுக்கு பணம் செல்வதும், அவற்றைத் திரும்பப் பெறுவதும் வங்கிகளின் மூலம்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
- மக்கள் தங்கள் வருமானத்தின் மூலம் சேமிக்கும் பணத்தில், தங்கள் தேவைக்கு செலவு செய்தது போக மீதமுள்ளதை, வங்கிகளில் டெபாஸிட்டாக இருப்பு வைத்து, அதில் வரும் வட்டியை லாபமாக ஈட்டுகிறார்கள்.
- வங்கிகள் இதுபோன்ற டெபாஸிட் பணத்தை, நமது நாட்டின் பல தொழில்களுக்கு கடனாக வழங்குகின்றன. அந்த பணம், பொருளாதார உற்பத்திக்கும் மற்றும் பல பொருளாதார செயல்களுக்கும் உதவுகிறது. இதனால் கிடைக்கும் நன்மைகள் எல்லா மக்களையும் சென்றடைந்து, அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறது.
- தனி மனிதர்களின், பண சேமிப்பு வங்கியில் சேர்வதால் அவை சமூகத்தில் தொழிற்சாலைகளை நடத்துபவர்களுக்கு கடனாக தரப்படுகிறது. இந்த பணம் தொழிற்சாலைகளுக்குத் தேவையான பல உற்பத்தி கருவிகளை வாங்குவதற்கும், தொழில் செய்யத் தேவையான மூலப் பொருட்களை வாங்கவும், வேலை செய்பவர்களுக்கு சம்பளம் வழங்கவும் உபயோகப்படுகிறது.
- ஆக, நமது பணம் தொழிற்சாலை நடத்துபவர்களுக்கு லாபகரமாகவும், தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களுக்கு சம்பளமாகவும், வங்கியில் பணம் சேமித்தவர்களுக்கு வட்டியாகவும் கிடைக்கிறது.
- இந்த பொருளாதார சுழற்சி நடவடிக்கை இல்லாத வகையில் தங்களுக்குக் கிடைத்த பணத்தை தங்கள் இடங்களிலேயே பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு எந்த லாபமும் இல்லை என்பது மட்டுமல்லாமல், மற்றவர்கள் யாருக்குமே எந்த பலனும் கிடையாது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய அம்சம்.
- நவீன பொருளாதாரத்தில் மேலே நாம் விவரித்த செயல்களைச் செய்யும் உயர்வான பணி வங்கிகளுக்கே உரியது. இதுபோன்ற சூழ்நிலையில் வங்கிகளின் உரிமையாளர்களுக்கும், அவர்களைச் சார்ந்த தொழிலதிபர்களுக்கும் மிக அதிகமான லாபம் ஈட்டும் வாய்ப்பு உருவாகிறது.
- முன்னாள் பிரதமர், இந்திரா காந்தி 1969-ஆம் ஆண்டில் நாட்டின் வங்கிகளை அரசுடைமை ஆக்கினார். அதற்கு முன், பெரிய வங்கிகள் பல நம் நாட்டின் பெரிய தொழில் நிறுவனங்களினால் உருவாக்கப்பட்டு நடத்தப்பட்டன.
- இந்த வங்கிகளை, சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளுக்கும், தங்களுக்கு வேண்டிய பல தொழிற்சாலைகள் மற்றும் வியாபாரிகளுக்கும் பணம் வழங்க உபயோகப்படுத்திக் கொண்டன.
- இது பற்றி விளக்கிய விவேக் கௌல் எனும் பொருளாதார நிபுணர், 1967-ஆம் ஆண்டில் வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்களில், 25 % கடன்கள் வங்கி இயக்குநர்களுக்கு தொடர்புடையவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன என்பதை சுட்டிக்காட்டினார்.
- வங்கிகள் தேச உடமையாக்கப்பட்ட பின் இந்த நிலைமை ஓரளவுக்கு மாறியது. அரசு வங்கிகளில் பணம் எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்த முடிந்தது. நம் நாட்டில், முதன் முறையாக விவசாயிகளுக்கு வங்கிகள் கடன் வழங்கின.
- மக்களின் பணம் சேவை செய்யப்பட்டு வங்கிகளில் வட்டியை எதிர்பார்த்து சேமிக்கப்பட்டது. பெரிய தொழிற்சாலை ஆனாலும், சிறுதொழில் ஆனாலும், அவர்களுக்கு சரிசமமான விதத்தில் வங்கிகளால் கடன்கள் வழங்கப்பட்டன. சிறு தொழில்களுக்கு உதவ, அரசின் தொழிற்துறையில் கூட்டுறவு வங்கிகள் உருவாக்கப்பட்டன.
- ராஜீவ் காந்தி ஆட்சியில் தனியார் தொழிற்சாலைகளை உருவாக்கி வளர்ப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. அதற்கு முந்தைய காலகட்டத்தில், பொதுத்துறை நிறுவனங்களை அரசு உருவாக்கி நடத்தியது.
- அது, எதிர்பார்த்த அளவில் வெற்றியடையாத காரணத்தால், பழைய நடைமுறையில் தனியார் தொழில்களே ஊக்குவிக்கப்பட்டன. 1991-ஆம் ஆண்டில், நரசிம்ம ராவ் ஆட்சியில் தனியார் தொழிற்சாலைகள் ஊக்குவிக்கப் பட்டன.
- அடுத்த இருபதுஆண்டுகளில், தனியார் நிறுவனங்கள், அடிப்படைத் தொழிற்சாலைகளையும், தொழில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களையும் உருவாக்கி நடத்தும் நிலை உருவாகியது.
- இதற்கு மிக அதிக அளவில் பணம் தேவைப்பட்டது. அது, "ஸ்டாக் மார்க்கெட்' எனப்படும் பங்குச் சந்தையிலும், வங்கிகளிலும் தொழில் தொடங்குபவர்களுக்குக் கிடைத்தது.
- இந்தப் பணம், பொதுவுடமையாக்கப்பட்ட வங்கிகளிடம் இருந்தும், அரசினால் உருவாக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கான நிதி நிறுவனங்களில் இருந்தும், தொழில் தொடங்குபவர்களுக்கு வழங்கப்பட்டது.
- அரசு வங்கிகளில் இருந்த பொதுவுடமைப் பணம் அதிக அளவில் செலவிடப்பட்டு, தொழில்கள் தொடங்கப்பட்டு, லாபங்கள் தனியாரின் கைகளுக்கு சென்றன.
- இதுவே, நமது பொது கொள்கையான பொதுவுடமையாக்கப்பட்ட தனியாரின் முயற்சிக்கான அடையாளம். ஆனால், இதன் முடிவுகள் நம் நாட்டின் பல முயற்சிகள்போல நஷ்டமான நிகழ்வுகளையும் உருவாக்கியது.
- நம் நாட்டின் பொதுத்துறை வங்கிகள், கட்டுக்கடங்காத அளவில் வாராக்கடன்களால் சிரமப்பட்டன. காரணம், நிறைய தனியார் தொழிற்சாலைகள் நஷ்டம் அடைந்தன. இவை, தொடங்கப்பட்டதே பொதுத்துறை வங்கிகள் வழங்கிய கடன்களால்தான்.
- இதை முழுமையாக ஆராய்ந்தபோது, இந்தத் தனியார் தொழிற்சாலைகள், பொதுத்துறை வங்கிகளிடம் கடன் வாங்கி, தொழில் தொடங்கும்போது நிறைய பணத்தை இதன் முதலாளிகள் தங்களுக்கு லாபமாக்கிக்கொண்டது தெரிய வந்தது.
- தொழிற்சாலைக்கான இயந்திரங்களை வாங்கும்போது கமிஷனாக சரியான தொகை தொழில் தொடங்குபவருக்கு கிடைத்துவிடும். சுயலாபத்தை கணக்கிட்டு, திட்டம் வகுக்கப்படும்.
- ஒரு பெரிய தொழிற்சாலையை நிறுவ சுமார் 1,000 கோடி ரூபாய் தேவைப்படும் எனில், திட்டத்தை உருவாக்கும் போது 1,250 கோடி ரூபாய் தேவைப்படும் என திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்.
- இந்த அறிக்கையை முன்னிறுத்தி, 80% கடனாகவும், 20% தொழில் தொடங்குபவர் தனது பங்காக கொண்டு வர வேண்டும் என்றும் முடிவு செய்யப்படும். ஆனால், சொந்தப் பணத்தைக் கொண்டு வராமலும் தொழில் தொடங்கிவிட முடியும். இதுபோல இந்தியாவில் மோசமான வங்கிக் கடன்கள் உருவாக்கப்பட்டன.
- இதுபோன்ற கடன்களை வழங்கிய ஐஎல்எஃப்எஸ் வங்கி, பிஎம்சி வங்கி, லக்ஷ்மி விலாஸ் வங்கி ஆகியவை இதுபோன்ற ஏமாற்று கடன்களை வழங்கியதால் பாதிக்கப்பட்டன. இது நடந்தது எப்போதென்றால், ரிசர்வ் வங்கி, இதுபோன்ற தவறான கடன்களை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை எடுப்பதாக கூறியபோதுதான்.
- இதன் பின்னணியில்தான், ரிசர்வ் வங்கியின் கமிட்டியில் பெரிய வியாபார மற்றும் தொழிற்சாலை நிறுவனங்கள், வங்கிகளை ஆரம்பித்து நடத்த வழிவகுக்கக் கூடாது என்ற கருத்து உருவாகியது.
- இதற்கு முந்தைய காலங்களில் பெருநிறுவனங்கள் வங்கிகளை வைத்து தவறான நடைமுறைகளில் பணம் ஈட்டி நம் பொருளாதாரத்தைப் பின்னுக்குத் தள்ளின என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
நன்றி :தினமணி (10-12-2020)