TNPSC Thervupettagam

பெருந்தொற்றுக் காலத்தில் காந்தி

October 2 , 2020 1570 days 729 0
  • பம்பாயில் 1896-ல் இறக்குமதியான பிளேக் தொற்று இந்தியாவில் 10 லட்சம் உயிர்களைக் கொள்ளை கொண்டது.
  • அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் அதாவது, 1894-ல் தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில், இந்தியர்களின் உரிமையை மீட்க உருவாக்கப்பட்ட நட்டால் காங்கிரஸின் செயலாளராகத் தன்னுடைய 26 வயதில் பொறுப்பேற்ற காந்தி 1896 -ல் இந்தியா வந்திறங்கினார்.
  • இந்தியாவின் முக்கிய நகரங்களுக்குச் சென்று, தென்னாப்பிரிக்க இந்தியர் நிலையை அவர் தெரியப்படுத்தினார்.
  • முதன்முறையாக சென்னை வந்த காந்தி பத்தாயிரம் துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து விநியோகித்தார்.
  • அடுத்ததாக ராஜ்கோட் நகர பிளேக் கமிட்டியில் உறுப்பினராக இணைந்தார். வேகமாகப் பரவிய பிளேக்கை மட்டுப்படுத்துவதற்காக ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று ஆய்வுசெய்து, சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
  • உயர் வகுப்பினர் வசித்த வீடுகளில் வீட்டுப் புறக்கடை, முன்வாயிலில் இருந்த கால்வாய்கள் கழிப்பிடங்களாக உபயோகப்படுத்தப்பட்டன.
  • அங்குள்ள மனிதர்களோ இந்தச் சுகாதாரச் சீர்கேட்டைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளவில்லை. காந்திக்கு அந்த முடைநாற்றம் பொறுக்க முடியாத அளவில் இருந்தது. ஆனால், பரம ஏழைகளான தாழ்த்தப்பட்டவர்களின் வசிப்பிடங்கள் ஓரளவுக்குச் சுத்தமாக இருந்தன.
  • அந்தக் காலகட்டத்தில் காந்தி, இரண்டு வாளிகள் முறையைக் கடைப்பிடிக்கச் சொன்னார்; ஒரு வாளியில் சிறுநீரையும், மற்றொரு வாளியில் மலத்தையும் சேமித்து அப்புறப்படுத்தக் கோரினார்.
  • காந்தியின் அறைகூவல்களுக்கு எளிய மக்கள் செவிசாய்த்தனர். ஆக, அவர்களுடைய வீடுகளில் சுகாதாரச் சூழல் நல்லபடியாக முன்னேற்றமடைந்தது.

பிளேக்கின் தாக்கம்

  • 1904-ல் தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரில் உள்ள கூலித் தொழிலாளர் குடியிருப்பில் பிளேக் பெருந்தொற்று வெடித்தது. சு
  • காதாரச் சீர்கேடும், மிதமிஞ்சிய ஜன நெருக்கடியும் (1,500 நபர்கள் தங்கும் இடத்தில் 3,190 பேர்), போதிய விழிப்புணர்வின்மையும் அந்தக் குடியிருப்பை அச்சுறுத்தும் வகையில் அமைந்திருந்தன.
  • 1904-ன் தொடக்கத்தில் ஜோகன்னஸ்பர்க்கில் 17 நாட்கள் தொடர்ச்சியாக அசாதாரணமான மழை பொழிந்தது; நகரமே தண்ணீரால் சூழ, கூலிக் குடியிருப்பின் நிலையோ மிகவும் பரிதாபமாகக் காட்சியளித்தது.
  • ஜோஹன்னஸ்பர்க்குக்கு அருகில் இருந்த சுரங்கத்தில் பணிபுரிந்த கறுப்பினத் தொழிலாளர்களிடையே பிளேக் முதலில் பரவியது.
  • அங்கு சில இந்தியர்களும் பணியில் இருந்தனர். மார்ச்10-ல் பிளேக்கால் பாதிக்கப்பட்டு ஒரு கறுப்பினத்தவர் மரணமடைந்தார். நகர சுகாதாரக் குழுவினர் தமது மெத்தனப் போக்கால் பிளேக் பரவலைக் கணடறிய தவறிவிட்டனர். அதன் தாக்கம் பெரிய அளவில் மார்ச் 18 அன்று வெளிப்பட்டது.
  • இறக்கும் தறுவாயில் 15 இந்தியர்கள், ரிக்‌ஷாக்களில் கூலிக் குடியிருப்புக்குக் கொண்டுவரப்பட்டனர். அதில் ஒருவர் இறந்த செய்தி காந்தியின் காதுகளுக்கு எட்டியது.
  • நிலைமையை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு காந்தி தெரியப்படுத்துகிறார். அரசாங்கத்தின் உதவி கிட்டாத நிலையில் தனது உயிரைப் பற்றித் துளியும் பயம் இல்லாமல் செயலில் இறங்கினார் காந்தி.
  • அவருடைய இந்தியன் ஒப்பீனியன்பத்திரிகையில் பணிபுரிந்த மதன்ஜித், மருத்துவர் காட்பிரே ஆகியோருடன் இணைந்து காந்தி 14 நோயாளிகளுக்கு முதலுதவி அளித்தார்.
  • மேலும், தன்னுடைய குமாஸ்தாக்கள் நால்வரையும் அழைத்து செவிலியப் பணியில் ஈடுபடுத்தினார். பிளேக் கிருமி தொற்றும் பட்சத்தில் மரணம் நிச்சயம் என்ற நிலையில் காந்தி தன் சகாக்களுடன் பெருந்தொற்றுடனான யுத்தத்துக்குத் தயாரானார்.

அர்ப்பணிப்பு மிக்க சேவை

  • எப்போதும் கண்டிராத, கேட்டிராத நோயாளிகளின் மரண வேதனையை - அவஸ்தையை அன்றைய தற்காலிக மருத்துவமனையில் இருந்தவர்கள் உணர்ந்ததாக காந்தி கூறிப்பிடுகிறார்.
  • நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் ஒருவர் பின் ஒருவராக மாண்டார்கள். காந்தியின் அறைகூவலுக்கு செவிசாய்த்த இந்தியச் சமுதாயம் பெரிய கூட்டம் போட்டு ஒரே நாளில் 1,000 பவுண்ட்கள் சேகரித்துக் கொடுத்தனர்.
  • சிலர் தம்முடைய வாழ்நாள் சேமிப்பு அனைத்தையும் தானம் செய்தனர். இன்னும் சிலர் பிறரிடம் கடன் வாங்கிப் பொருளுதவி ஈட்டினர். நோயாளிகளுக்கு சேவை செய்ய 30 இந்தியத் தன்னார்வலர்கள் முன்வந்தனர்.
  • அது ஒரு பயங்கரமான இரவு; தூக்கமில்லாத இரவு; தன்னலமில்லாத சேவையுடன் மனதை ஒருங்கிணைத்த இரவு; அதற்கு முன் பல நோயாளிகளுக்கு முதலுதவி அளித்தபோதும் முதல்முறையாக பிளேக் பாதித்தவர்களுடன் கழித்த இரவு; பல உயிர்கள் அடுத்தடுத்து செத்து விழுந்ததை அருகில் இருந்து பார்த்த இரவு. நோயாளிகளுக்கு மருந்து கொடுப்பது, அவர்களுக்குத் தேவையான படுக்கை வசதிகள் செய்துகொடுப்பது, அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவது; மேலும், அவர்களை உற்சாகப்படுத்துவது இவைதான் நங்கள் செய்த வேலைகள். பணியாற்றிய இளைஞர்களின் அசைக்க முடியாத வைராக்கியமும் அச்சமின்மையும் என்னை அளவிட முடியாத பேரானந்தத்தில் ஆழ்த்தினஎன்று காந்தி மார்ச் 18-ம் தேதி இரவைப் பற்றி தன்னுடைய சுயசரிதையில் குறிப்பிடுகிறார்.
  • காந்தியுடன் சேவை செய்த 27 வயது செவிலியர் எமிலி புபோனிக் பிளேக்கால் மார்ச் 31, 1904-ல் உயிர்நீத்தார். இவருடைய கல்லறை 1904-ல் நோயாளிகளைத் தனிமைப்படுத்த உருவாக்கப்பட்ட ரைட்ஃபோன்டைன் (Rietfontein) பிளேக் மருத்துவமனையில் உள்ளது.
  • 1905-ல் ராண்ட் பிளேக் கமிட்டி அறிக்கையின்படி, 1904 மார்ச் 18 முதல் ஜூலை 9 வரை ஜோஹன்னஸ்பர்க்கில் 161 நபர்கள் பிளேக் தொற்றுக்கு ஆளானார்கள். அதில் இந்தியர்கள் மட்டுமே 71%. 113 பேர் நிமோனிக் பிளேக்கால் பாதிக்கப்பட்டனர்.
  • அதில் 111 பேர் இறந்துள்ளனர். பிழைத்த இருவரும் இந்தியர்கள். அவ்விருவருக்கும் காந்தி மண் சிகிச்சை அளித்தார்.
  • தனிமைப்படுத்தப்பட்ட இந்தியர்களை உற்சாகப்படுத்த காந்தி கிளிப்ஸ்ப்ரூட் முகாமுக்கு தினமும் ஜோஹன்னஸ்பர்கிலிருந்து சைக்கிள் மூலமாக 20 கி.மீ. சென்றுள்ளார்.
  • நகர சபையானது இந்தியர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடத்தினாலும், உரிமைப் போராட்டங்களுக்கு மத்தியில் காந்தி இந்தியர்களை எச்சரிக்கவும் தவறவில்லை.
  • 4 ஜூன் 1903-ல் தமிழ், ஆங்கிலம், குஜராத்தி, இந்தி என நான்கு மொழியில் ஆரம்பிக்கப்பட்ட இந்தியன் ஒப்பீனியன்பத்திரிகையில் தொடர்ச்சியாக பிளேக் குறித்து விழிப்புணர்வுக் கட்டுரைகளை காந்தி எழுதினார்.
  • பிளேக் போன்ற பெருந்தொற்றுக் காலங்களில் பாமர மக்களுக்கும் அரசாங்கத்துக்குமிடையே ஒரு பாலமாக மற்ற செய்திதாள்களுக்கு முன்னுதாரணமாக இந்தியன் ஒப்பீனியன்திகழ்ந்தது.
  • பிளேக் வெடித்த பின், நகரின் பிற பகுதிகளில் பரவாமல் இருக்க போர்க் கால நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் எடுத்தது.
  • காந்தி பலமுறை கமிஷன் முன்பு புகார் அளித்தபோது அலட்சியமாக இருந்த நிர்வாகம், அங்குள்ள ஐரோப்பியர்கள் எந்தப் பாதிப்புக்கும் உள்ளாகக் கூடாது என்று பம்பரமாய்ச் சுழன்றது.
  • காந்தி அப்போதும் அவர்களது பணியை முழு மனதுடன் பாராட்டியதோடு, அவர்களுடன் இணைந்து பணியாற்ற இந்திய இளைஞர்களை ஆயத்தம் செய்து பெருந்தொற்றிலிருந்து ஜோஹன்னஸ்பர்க் நகரைக் காப்பாற்றியதில் முன்னின்று செயல்பட்டார்.
  • உண்மையில், அவர் தனது கருத்தியல்ரீதியான எதிர்த் தரப்புக்கும் நன்மையே செய்தார்.

நன்றி: தி இந்து (02-10-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்