TNPSC Thervupettagam

பெருமை சேர்ப்பதாக இல்லை

June 30 , 2021 1128 days 492 0
  • ஒற்றைச்செயல் சாதனையாளன் வாஞ்சிநாதனின் 110-ஆவது நினைவு நாளான ஜூன் 17 அன்று நான் செங்கோட்டையிலுள்ள வாஞ்சிநாதன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின், செங்கோட்டை பூங்காவில் மாநில அரசு கட்டியிருக்கும் வாஞ்சியின் மார்பளவு சிலை இருந்த வாஞ்சி மணிமண்டபத்திற்குச் சென்றேன்.
  • சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னால் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்ட மணிமண்டபமே பராமரிப்புக்கு ஏங்கிக் கொண்டிருக்கும்போது பாதையை யார் கவனிப்பார்? வெளியே வரும்போது என் சிந்தனை மணிமண்டபங்களைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தது.
  • தேசியத் தலைவர்களுக்கு சிலை வைக்கும் வழக்கம் காந்தியின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்டது. சிலை வைப்பதற்கு பிள்ளையார் சுழி போட்டவர்கள் வெள்ளைக்காரர்கள்தான்.
  • எட்வர்ட் அரசர், விக்டோரியா மகாராணி என்று தொடங்கி, பின்னர் வந்த ராஜ பிரமுகர்களுக்கும் சிலை வைக்கும் வழக்கம் விரிவடைந்தது. சென்னை தீவுத்திடலின் எதிரே குதிரையில் அமர்ந்திருக்கும் மன்றோ சிலை இதற்கொரு எடுத்துக்காட்டு.
  • இன்று, சென்னை அண்ணா சாலையிலுள்ள அண்ணா சிலை இருக்கும் இடத்தில், ஆதியில் கொடுங்கோலன் நீல் சிலை இருந்தது.
  • தேச பக்தர்களைத் துன்புறுத்தி இன்பங்கண்ட அவன் சிலையை எடுக்க வேண்டுமென அன்று காங்கிரஸ் போராடியபோது ஆட்சிக்கு வந்த ராஜாஜி, "போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்கிறது' என்று சொல்லி அதை அகற்ற, இன்று நீல் சிலை இப்போதும் சென்னை அருங்காட்சியகத்தில் ஒரு ஒதுக்குப்புறமாக நின்று கொண்டிருக்கிறது.
  • தமிழ் அறிஞர்களுக்கு சென்னை மெரீனா கடற்கரையில் எழுப்பப்பட்ட சிலைகள் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டிற்கு சாட்சியாக நிற்கின்றன.
  • இவற்றிற்கு எதிரே அமைந்துள்ள விவேகானந்தர் சிலையும், மாநிலக் கல்லூரியில் உள்ள "தமிழ் தாத்தா' உ.வே. சாமிநாதையர் சிலையும் குறிப்பிடத்தக்கவை.

வாஞ்சி மணியாச்சி

  • முதல் இந்திய தமிழ் நீதிபதி என்ற வரலாற்றுக்குச் சொந்தக்காரரான சர் எஸ். முத்துசாமி ஐயரும் அவருக்கடுத்த தமிழ் நீதிபதியும் சென்னை பல்கலைக்கழகத்தின் முதல் இந்திய துணைவேந்தருமான எஸ். சுப்ரமணிய ஐயரும் கால்களில் செருப்பில்லாமல் சிலையாக அமர்ந்திருக்கிறார்கள்.
  • தங்களின் தேசப்பற்றையும், ஆளுமையையும், அறிவுசால் திறமையையும் மீறி முத்துராமலிங்கத் தேவரும், அம்பேத்கரும் ஜாதியக் காரணங்களுக்காக தமிழ்நாடெங்கும் சிலைகளாக நிற்பதும், அந்தச் சிலைகள் அவமதிக்கபட்டதாக சொல்லி எழும் ஜாதிச் சண்டைகளும் தமிழக அரசியலின் சோக அத்தியாயங்கள்.
  • மறைந்த பெரியோர்களுக்கு மணிமண்டபம் எழுப்புவது புதிய பழக்கம் அல்ல. மன்னர்கள் ஆண்ட காலத்திலேயே புகழ் பெற்ற மன்னர்களுக்கும், போரில் புகழுடம்பு எய்திய வீரத் தளபதிகளுக்கும், புலவர்களுக்கும், போற்றப்பட்ட ராஜமாதாக்களுக்கும் நினைவு மண்டபங்கள் கட்டப்பட்டதாக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் எடுத்துரைக்கிறார்கள்.
  • திருவள்ளுவருக்கு மயிலாப்பூரில் தனிக் கோயில் உள்ளது. மரணமடைந்த மன்னர்களும், புகழ்வாய்ந்த ராஜமாதாக்களும், வீரத்தளபதிகளும் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கட்டப்பட்டவைதான் "பள்ளிப்படைகள்'.
  • இறந்தவர் உடலை வணங்கி பூஜிப்பது இந்துக்களின் மரபல்ல. ஆகவே தான் ஒடுக்கம் செய்யப்பட்ட இடத்தில் சிவலிங்கம் அல்லது பிள்ளையார் சிலைவைத்து குருபூஜை நடத்தப் படுகிறது.
  • இதனாலேயே காரைக்குடியில் உள்ள கம்பர் சமாதி "இந்து அறநிலையத்துறை ஆளுகைக்குட்பட்ட ஒரு மத நிறுவனம் அல்ல' என சென்னை உயர்நீதிமன்றம் பல ஆண்டுகளுக்கு முன்பே தீர்ப்பு வழங்கியது.
  • இன்றைய சூழ்நிலையில் அரசியல் தலைவர்களுக்கும், பிரபலங்களுக்கும் சிலை வைப்பது போல், மணிமண்டபங்கள் வைப்பதும் ஒருவித அரசியல் மரபு சார்ந்த நாகரிகம் ஆகி விட்டது.
  • வாஞ்சிநாதனையே எடுத்துக் கொள்வோம். அன்று செங்கோட்டை பிரிட்டிஷ் இந்தியாவில் இல்லை. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகைக்குட்பட்ட ஒரு பகுதியாக இருந்தது.
  • ஆனால், இன்று சிலர் சொல்வதுபோல், இந்தியா என்றொரு தேசமே கிடையாது என்று வாஞ்சியும் அவருடைய நண்பர்களும் நினைக்கவில்லை.
  • அண்டைய மாநிலமான சென்னை ராஜதானியில் வ.உ. சிதம்பரம் பிள்ளைக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்குப் பழி வாங்க, ஜாதிய பூகோள எல்லைகளைப் பார்க்காமல் அவர்கள் எடுத்த முடிவுதான் உதவி கலெக்டர் ஆஷ் கொலையில் முடிந்தது. அத்துடன் அந்த ஒற்றைச் செயல் வீரரின் கதையும் முடிந்தது.
  • பின்னாளில், காந்தியின் அகிம்சை, சத்தியாகிரகம் என சுதந்திர போராட்ட தேசிய இயக்கமாக மாறியதால் இந்த ஒற்றைச் செயல் சாதனையாளனுக்கு முறையான அங்கீகாரம் கிடைக்கவில்லை என நினைத்த குமரி அனந்தன், வாஞ்சி சரித்திரம் படைத்த மணியாச்சி ரயில் நிலையத்திற்கு "வாஞ்சி மணியாச்சி' எனப் பெயர் வைக்கப் போராடி வெற்றி பெற்றார்.

முன்னுதாரணமாக அமையட்டும்

  • நான் தென்காசி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது, சுதந்திரத்திற்காக உயிர் நீத்த வாஞ்சிநாதனுக்கு செங்கோட்டையில் சிலை அமைக்க வேண்டும் அல்லது அங்குள்ள அரசு இடைநிலைப் பள்ளிக்கு அவர் பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை எழுப்பினேன்.
  • அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். இரண்டு கோரிக்கைகளையும் ஏற்று வாஞ்சிக்குச் சிறப்பு செய்தார். பின்னாளில், முதல்வரான ஜெயலலிதா பூங்கா சட்டத்தை மீறி, 23.12.2013 அன்று செங்கோட்டை நகராட்சி பூங்காவில் பல லட்ச ரூபாய் செலவில் வாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் எழுப்பினார்.
  • அந்த மண்டபத்தில் வாஞ்சிநாதனின் மார்பளவு சிலை மட்டுமே உள்ளது. வாஞ்சிநாதனைப் பற்றிய குறிப்புகளோ, படங்களோ, அவருடைய வரலாறோ, செங்கோட்டையுடனான அவருடைய தொடர்பைப் பற்றிய சிறு விளக்கமோ, அவருடைய உச்சபட்ச தியாகத்தை பற்றிய குறிப்புகளோ இல்லை.
  • வாஞ்சி மணிமண்டபத்தைச் சுற்றி காணப்பட்ட அகற்றப்படாத மது பாட்டில்கள் மணிமண்டபத்துக்கு வரும் "குடிமகன்'களின் வாஞ்சையை விளக்குவதாக உள்ளது.
  • இதற்கு எதிர்மறையாக, அண்ணல் காந்தியடிகளின் அழைப்பை ஏற்று தென்னாப்பிரிக்காவில் அவருடன் போராடி, அண்ணலின் ஆசியைப் பெற்ற தில்லையாடி வள்ளியம்மையின் மண்டபத்தில் அவருடைய போராட்ட வாழ்க்கை, அன்றைய முதல்வர் கருணாநிதியின் ஏற்பாட்டில் சித்திரங்களாக வரையப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.
  • மகாத்மா காந்தியின் மறைவுக்குப் பின் சென்னையில் ஆளுநர் மாளிகை வளாகத்தில் காந்தி மண்டபம் எழுப்பப்பட்டது.
  • காமராஜர், ராஜாஜி இருவரும் காந்திஜியின் சீடர்கள் எனச் சொல்லி அவர்கள் மணி மண்டபங்களாக, காந்தி மண்டபத்துக்கு அருகே துவாரபாலகர்களாய் நிற்கிறார்கள்.
  • இன்று, அந்த இடங்கள் இந்தத் தலைவர்களைப் பற்றிய எந்தவிதமான விளக்கமும் இன்றி வெறும் செங்கல் கட்டடங்களாய் நிற்கின்றன. தலைநகர் சென்னையில் இருப்பதால் சுமாரான பராமரிப்பு இருக்கிறது.
  • நடிகர் சிவாஜிக்கு அவருடைய நண்பர் கருணாநிதி, சென்னை கடற்கரையில் சிலை வைத்தார். அது காந்தி சிலையை மறைப்பதாகக் கூறி ஒருவர் வழக்கு போட, ஜெயலலிதாவின் அரசு, அது போக்குவரத்துக்கு இடைஞ்சல் என கருத்து தெரிவிக்க சிவாஜி சிலை கடற்கரையில் இருந்து அடையாற்றின் கரையில் ஒரு மணிமண்டபத்திற்கு இடம் மாறியது. அங்கே, சிவாஜி சிலையாக மட்டுமல்ல, சித்திரங்களாகவும் நிற்கிறார்.
  • அண்ணாவுக்கு மெரீனா கடற்கரையில் சமாதி அமைய, பின்னர் அது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி என பல கோடி ரூபாய் செலவில் நீட்சியடைந்தது. புனரமைப்பு செலவுகள் தனி.
  • கடவுள் மறுப்பில் ஆரம்பித்த திராவிடத் தொண்டர்கள், சமாதியில் மொட்டையடிப்பதும், சூடம் ஏற்றுவதும், தயிர்வடை, பேனா, "முரசொலி'யை வைத்து ஆராதிப்பதுமாக, புதிய வர்ணாஸ்ரம தர்மம் தோன்றிவிட்டது.
  • அரசு கணக்கின்படி, ஒரு மணிமண்டபம் கட்ட ரூ.50 லட்சம் முதல் ஒரு கோடி வரை செலவாகிறது. நிலத்தின் மதிப்பு இடத்திற்கு தக்கபடி கூடும். ஒரு மணிமண்டபத்தைப் பராமரிக்க குறைந்தபட்சம் செய்தித் துறையிலிருந்து ஒரு நிர்வாகி, பராமரிப்புப் பணியாளர்கள் இருவர், மின்சாரச் செலவு, பராமரிப்புச் செலவு என ஆண்டுதோறும் வரும் செலவுகள் தனிக்கணக்கு.
  • அரசுப் பள்ளி, கல்லூரி, வாசக சாலை, பேருந்து நிலையம், அங்காடி இல்லாத ஊரே தமிழகத்தில் இல்லை.
  • ஒரு தகுதியுள்ள தலைவருக்கு அல்லது ஆளுமைக்கு மரியாதை செலுத்த வேண்டும் என நினைக்கும் அரசு, அந்தத் தலைவர் பிறந்த ஊரிலோ அல்லது அருகிலுள்ள பெரிய ஊரிலோ இருக்கும் ஒரு பள்ளிக்கோ கல்லூரிக்கோ அவரது பெயரைச் சூட்டலாம்.
  • அவருடைய பெயரில் பேருந்து நிலையம், அங்காடி, வாசகசாலை போன்ற பொது உபயோக இடங்களை அமைக்கலாம். அந்தத் தலைவரின் பெயரை சூட்டி புதிய கட்டடங்கள், ஹாஸ்டல்கள், பரிசோதனைக் கூடங்கள் கட்டிக் கொடுக்கலாம்.
  • வாசகசாலையை விரிவுபடுத்தி அந்தத் தலைவர் சம்பந்தமான புத்தகங்களை வாங்கி வைக்கலாம். இளம் தலைமுறையினர் அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள அவை உதவியாக இருக்கும்.
  • மீண்டும் செங்கோட்டைக்கே வருகிறேன். உங்களில் எத்தனை பேருக்கு எஸ்.எஸ். சுப்பையா சிவசங்கர நாராயணப் பிள்ளை என்கிற கணித மேதையைத் தெரியும்? குறைந்த பட்சம் கூகுளில் போய் எஸ்.எஸ். பிள்ளை என்று தேடுங்கள்.
  • இன்று செங்கோட்டையில் எஸ்.எஸ். பிள்ளை என்ற தெருவின் பெயரில் அந்த கணித மேதையின் வரலாறு சுருங்கிவிட்டது. குறைந்தபட்சம் சுரண்டை அல்லது கடையநல்லூரிலுள்ள அரசு கல்லூரிக்கு அவருடைய பெயரைச்சூட்டி, அந்தக் கல்லூரியின் கணிதத் துறையை மேம்படுத்தலாம்.
  • மணிமண்டபம் கட்டுவதற்காகவும் அதனைப் பராமரிப்பதற்காகவும் வீணடிக்கப்படும் பணத்தை, பள்ளி, கல்லூரி, வாசகசாலை போன்ற அறிவுசார் செயல்பாடுகளுக்கு செலவு செய்தால் என்ன?
  • திருவாரூரில் கருணாநிதிக்கு மணிமண்டபம் கட்டாமல், மதுரையில் அவர் பெயரில் ஒரு மாபெரும் வாசகசாலை கட்டப்போவதாக அறிவித்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நான் பாராட்டுகிறேன். இது ஏனைய மண்டபங்களுக்கு முன்னுதாரணமாக அமையட்டும்.

நன்றி: தினமணி  (30 - 06 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்