- நூறு கோடி டாலர்களுக்கும் மேல் (ஒரு டாலர் = 83.50 ரூபாய்) வருமானம் பெறும் பெரும் பணக்காரர்களுக்கு, கூடுதலாக 2% வரி விதிக்கலாம் என்று பிரெஞ்சு பொருளாதார அறிஞர் கேப்ரியால் ஜிக்மேன் பரிந்துரைத்துள்ளார். பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஜூலை 25-26 நாள்களில் நடைபெறவுள்ள ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டில், தலைவர்களால் விவாதிக்கப்படவிருக்கிறது.
- உலகின் மிகச் சில பணக்காரர்கள், உலக வருமானத்தில் பெரும்பகுதிக்கும் - உலக சொத்துகளில் பெரும்பங்குக்கும் உரியவர்களாக இருப்பதால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கவும், நாடுகளின் வரி வருமானத்தைப் பெருக்கவும், ஏழ்மை ஒழிப்புக்கும் கூடுதலாக ஒரு ‘சிறப்பு வரி’ அவசியம் என்ற கருத்து வலுத்துவருகிறது.
ஏன் இந்த யோசனை?
- உலகின் இப்போதைய முதலாளியப் பொருளாதார முறைமையால் வருமானம், லாபம், சொத்து ஆகியவை ஒரு சில பெரும் பணக்காரர்களிடமே தொடர்ந்து குவிகிறது. அவர்கள் தனிப்பட்ட முறையில் வருமான வரி, நிறுவன வரி போன்றவற்றைச் செலுத்திய பிறகும் இந்தக் குவிப்பு பெரிதாகவே இருக்கிறது. உலக அளவில் பெரும் பணக்காரர்களிடையே செல்வம் சேருவது, அது பல்வேறு இனங்களில் அவர்களால் பிரித்து முதலீடு செய்யப்படுவது, வருமானங்கள் மீது உலகம் முழுவதும் இப்போது அமலில் இருக்கும் வருமான வரிவிதிப்பு அளவு, செல்வ வளத்தைச் சேர்க்க உள்ள கட்டுப்பாடுகள் ஆகிய அனைத்தையும் காப்ரியேல் விரிவாக ஆராய்ந்துள்ளார்.
- இதைத் தடுக்க உலக அளவில் அனைத்து நாடுகளும் இணைந்து பெரும் பணக்காரர்களின் நிகர சொத்து மதிப்பு மீது, ‘பொதுவான குறைந்தபட்ச வரி’ விதித்து தங்களுடைய நிதி வருவாயைப் பெருக்கிக்கொள்ளலாம் என்கிறார் அவர். வரிச் சுமை என்பது பெரும் பணக்காரர்கள் மீது அதிகமாகவும் மற்றவர்கள் மீது தாங்கக்கூடிய அளவுக்கும் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், இப்போது அப்படியில்லை. எனவே, பெரும் பணக்காரர்கள் மீது அதிக வரிவிதிப்பு என்பது, வரி நிர்வாகத்தில் முற்போக்கான நடவடிக்கையாகவும் நியாயமாகவுமே கருதப்படும்.
- பெரும் பணக்காரர்கள் ஓராண்டில் சம்பாதிக்கும் சொத்துகளின் மொத்த மதிப்பு (வரி செலுத்திய பிறகு எஞ்சும் நிகரம்), நிறுவனங்களில் செய்யும் பங்கு முதலீடு, நிறுவனங்களை விலைக்கு வாங்கும் பணமதிப்பு ஆகிய அனைத்தையும் கூட்டி, 100 கோடி அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக இருந்தால், அந்த மொத்த மதிப்பில் 2%ஐ சிறப்பு வரியாக விதிக்கலாம் என்கிறார்.
- உலகம் முழுவதும் இத்தகைய பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை மூவாயிரத்துக்கும் மேல் என்பதால் இந்த வரி மூலம் ஆண்டுக்கு 200 பில்லியன் டாலர்கள் முதல் 250 பில்லியன் டாலர்கள் வரை கிடைக்கும். (ஒரு பில்லியன் நூறு கோடி). அடுத்ததாக, நிகர செல்வ மதிப்பு 10 கோடி அமெரிக்க டாலர்களாக இருப்பவர்கள் மீதும் 2% வரி விதிக்கலாம். இது கூடுதலாக 100 பில்லியன் முதல் 140 பில்லியன் டாலர்களை அரசுகளுக்குப் பெற்றுத்தரும்.
இந்த வரி நியாயம்தானா?
- பெரும் பணக்காரர்கள் மீது இப்படிச் சிறப்பு வரி விதிப்பது ஏன் என்ற கேள்வி எழக்கூடும். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வகம் ஒன்று உலக அளவில் வரி ஏய்ப்பு குறித்து 2024க்கான அறிக்கையைத் தயார்செய்திருக்கிறது. வரி விகிதம் அதிகமாக இருந்தால் பணக்காரர்கள் தங்கள் நாட்டைவிட்டு வெளியேறிவிடுவார்கள் என்று எல்லா நாடுகளுமே அஞ்சி, வரி விகித அளவைக் குறைவாகவே பராமரிக்கின்றன.
- இதனால், பெரும் பணக்காரர்கள் தங்களுடைய மொத்த செல்வ மதிப்பில் செலுத்தும் வரியானது, 0% முதல் 0.5% வரை மட்டுமே என்ற வகையில் மிகக் குறைவாகவே இருக்கிறது. சமூகத்தில் பிற பிரிவினர் அவர்களுடைய மொத்த வருவாயில் நேர்முக – மறைமுக வரியாகச் செலுத்தும் தொகையைக் கூட்டினால், அவர்களுடைய வருவாயில் அது கணிசமாக இருக்கிறது. பெரும் பணக்காரர்களுக்கு அப்படியில்லை. எனவே சிறப்பு வரி யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உலக மக்களில், மிக அதிகமான வருவாய் – சொத்துகள் உள்ளவர்கள் எண்ணிக்கை 0.0001% மட்டுமே. ஆனால் அவர்களுக்கு சேர்ந்த வருமானம் – சொத்துகளின் மதிப்பு 1980களின் நடுப்பகுதியில் கிட்டத்தட்ட நான்கு மடங்கு (400%) உயர்ந்தது. 1987இல் உலகின் பெரும் பணக்காரர்கள் உலகின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் (ஜிடிபி) 3% பெற்றனர். உலக அளவில் நிதி நெருக்கடி ஏற்பட்ட 2008 - 2009 காலத்தில் இது 8% வரை உயர்ந்தது. 2024க்குள் மேலும் வேகமாக வளர்ந்து, உலக ஜிடிபியில் இப்போது 13%க்கும் அதிகமாகிவிட்டது.
- பணவீக்க அளவைக் கழித்துவிட்டால் ஆண்டுக்கு 7% என்ற அளவுக்கு இவர்களுடைய வருமானம்- செல்வம் அதிகரித்துவருகிறது. இதே கடந்த 40 ஆண்டுக் காலத்தில் இதர மக்களுடைய சராசரி வருமானம், பணவீக்க மதிப்பைக் கழித்துவிட்டால் வெறும்1.3% ஆகத்தான் உயர்ந்திருக்கிறது. அவர்களுடைய சொத்து மதிப்போ சராசரியாக ஆண்டுக்கு 3.2%தான் அதிகரித்துள்ளது.
- இந்த நிலை தொடர்ந்தால், பெரும் பணக்காரர்களுடைய வருமானம் - சொத்து மதிப்பு இதே அளவில் வேகமாக அதிகரித்துவிடும் என்று எச்சரிக்கிறார் கேப்ரியால் ஜிக்மேன். ஜனநாயக சமூகங்களில் முற்போக்கான வரிவிதிப்பு முறை முக்கியம். அது சமூகத்தில் ஒற்றுமையை அதிகப்படுத்துவதுடன் அரசுகள் மீது சாமானியர்களுடைய நம்பிக்கையை அதிகப்படுத்தும்.
- அரசு வழங்கும் பொதுப் போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், அடித்தளக் கட்டமைப்பு போன்றவற்றுக்கு நிதி ஒதுக்க அரசுகளுக்கும் அதிக நிதி தேவைப்படுகிறது. பருவநிலை மாறுதல்களால் ஏற்படும் தீய விளைவுகளை, இழப்புகளை ஈடுகட்ட சூழலைக் காக்க அதிகம் செலவிட வேண்டியிருக்கிறது. அதற்கும் பெருமளவு நிதி தேவைப்படுகிறது.
வரி யோசனை இப்போது ஏன்?
- பெரும் பணக்காரர்கள் மீது சிறப்பு வரி விதிக்க வேண்டும் என்று இப்போது யோசனை கூறுவானேன்? உலகம் முழுவதுமே வரி கட்டமைப்பானது பெரும் பணக்காரர்களுக்கு அதிக வரிகளை விதிக்காமல் விட்டுவிடுகிறது. எனவே, சமூகத்தின் இதர மக்களுடைய வருமானம் – சொத்துகளுடன் ஒப்பிடுகையில், பெரும் பணக்காரர்கள் செலுத்தும் வருமான வரி – நிறுவன வரி போன்றவை மிக மிகக் குறைவு.
- இப்போதைய வருமான வரி, ‘அதிக வலிமையுள்ள தோள்கள் மீது அதிக பாரம் ஏற்றப்பட வேண்டும்’ என்ற வரிவிதிப்பு இலக்கணத்துக்கு ஏற்ப இல்லை. இதனால் அரசுக்கும் நிதியிழப்பு ஏற்படுகிறது, உலகமயம் – தாராளமயம் என்ற பொருளாதாரக் கொள்கைகளின் பலன் அரசுக்கும் சமூகத்துக்கும் கிடைப்பதற்குப் பதிலாக, பெரும் பணக்காரர்களுக்கும் பகாசுர நிறுவனங்களுக்குமே அதிகம் கிடைத்துவருகிறது.
- இப்போது உலக அளவில் சமூக, அரசியல் சூழலானது முற்போக்கான வரி விகித அமலுக்குச் சாதகமாகவே இருக்கிறது. பெரும் பணக்காரர்களும் பகாசுர பன்னாட்டு நிறுவனத் தலைவர்களும்கூட நிலைமையை உணர்ந்துள்ளனர். பிற நாட்டு வங்கிகளில் பெரும் பணக்காரர்கள் பணத்தைப் பதுக்கிவைப்பது இப்போது இயலாததாகிவருகிறது. கடந்த 15 ஆண்டுகளில் பல்வேறு நாடுகள், தங்களுடைய வங்கிகளில் வெளிநாட்டவர் வைத்துள்ள ரொக்க இருப்பு - மூலதன முதலீடு போன்ற தகவல்களைத் தயங்காமல் வெளியிடுகின்றனர். இந்த ஒத்துழைப்பு காரணமாக கருப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்கும் முயற்சிகள் கணிசமாகக் குறைந்துள்ளன. வரி ஏய்ப்பு அளவும் மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துள்ளது.
- இத்தகைய முயற்சிக்குத் தூண்டுகோலாக இருக்கும் இன்னொரு பெரிய நடவடிக்கையாக 2021இல் 130க்கும் மேற்பட்ட நாடுகள் கூடி, பெரிய பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் (எம்என்சி) மீதான குறைந்தபட்ச வரி 15% என்ற வரையறையை ஏற்று அமல்படுத்தத் தொடங்கியுள்ளன. எனவே, இந்த அளவுக்கும் கீழே வரி விகித அறிவிப்பை வெளியிட்டு எந்த நாடும் பன்னாட்டு நிறுவனங்களைத் தங்கள் நாட்டில் முதலீடு செய்யுமாறு ஈர்க்க முடியாது. இதையே அடிப்படையாக வைத்து, பெரும் பணக்காரர்கள் மீது சிறப்பு வரியை விதிக்கலாம் என்கிறார் கேப்ரியால் ஜிக்மேன்.
ஆதரவு எப்படி?
- பெரும் பணக்காரர்கள் மீது சிறப்பு வரிவிதிப்பு யோசனைக்கு உலக அளவில் ஆதரவு எப்படி? லத்தீன் அமெரிக்க நாடுகளில் பெரியதான பிரேசில் இதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறது. பிரான்ஸ், ஸ்பெயின், கொலம்பியா, பெல்ஜியம், ஆப்பிரிக்க ஒன்றியம், தென் ஆப்பிரிக்கா ஆகியவையும் ஆதரிக்கின்றன.
- உலக அளவில் பெரும் பணக்காரர்களுக்குச் சிறப்புச் செல்வ வரி விதிப்பதை ஏற்க முடியாது என்று அமெரிக்காவின் நிதியமைச்சர் ஜேனட் எல்லன் கூறியிருக்கிறார்; ஆனால், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆண்டுக்கு 10 கோடி டாலர்களுக்கு மேல் செல்வ மதிப்பு கூடுவோருக்கு குறைந்தபட்ச வருமான வரி விதிக்கலாம் என்று ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவுக்குப் பொருத்தமா?
- இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகளில் சமூகத்தின் மேல்தட்டில் இருக்கும் 1% (பணக்கார) மக்களுடைய செல்வ மதிப்பு அபாரமாக உயர்ந்திருக்கிறது.
- நிதின் குமார் பாரதி, லூகாஸ் சான்செல், தாமஸ் பிக்கெட்டி, அன்மோல் சோமாஞ்சி ஆகியோர், ‘இந்தியாவில் வருமானம் – செல்வ வளம் 1922 - 2023: உதயமானது கோடீஸ்வரர்களின் அரசு’ என்ற ஆய்வு நூலில் இதைக் குறிப்பிட்டுள்ளனர். இந்திய சமூகத்தின் மேலடுக்கில் இருக்கும் 1% பணக்காரர்கள், நாட்டின் மொத்த வருமானத்தில் 22.6% பெறுகின்றனர், சொத்தில் 40.1% சேர்த்துள்ளனர் என்று புத்தகம் தெரிவிக்கிறது. உலகின் வேறெந்த நாட்டையும்விட இந்தியாவில்தான் இப்படிச் செல்வக் குவிப்பு அதிகமாகியுள்ளது என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.
- இப்படிப்பட்ட பெரும் பணக்காரர்கள் மீது ‘சூப்பர் வரி’ விதித்து ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கும் முதல் நடவடிக்கையைத் தொடங்கலாம் என்று ஆய்வறிக்கை கூறுகிறது. உலக அளவிலும், இந்தியா அளவுக்கு வருமானம் உள்ள இதர நாடுகளிலும் ஒதுக்கப்படுவதைவிடக் குறைவாகவே - சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்து ஆகியவற்றுக்கு - ஒன்றிய அரசு நிதி ஒதுக்குகிறது. இதற்குக் காரணம் நிதிவளம் குறைவு என்பதுதான்.
- 2022இல் இந்தியாவின் முதல் 162 இடங்களைப் பிடித்த கோடீஸ்வரர்கள் மீது அவர்களுடைய செல்வ மதிப்பில் 2% வரி விதித்தால், அரசின் தேசிய வருமானத்தில் 0.5% அதிலேயே கிடைத்துவிடும் என்கிறது அறிக்கை. சமீபத்திய ஆண்டுகளில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு அரசு செலவிட்ட தொகையைப் போல இரண்டு மடங்குக்கும் அதிகமான தொகை இது என்றும் ஆய்வறிக்கையில் மதிப்பிட்டுள்ளனர்.
நன்றி: அருஞ்சொல் (14 – 07 – 2024)