TNPSC Thervupettagam
October 11 , 2023 459 days 288 0
  • பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இருந்து மோட்டார் சைக்கிள், ட்ரக்குகளில் தரை வழியாகவும், படகுகளில் கடல் வழியாகவும், பாரா கிளைடரைப் பயன்படுத்தி வான் வழியாகவும் இஸ்ரேலின் எல்லையோர நகரங்களுக்குள் சனிக்கிழமை (அக்டோபா் 7) காலை புகுந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் கண்ணில் பட்டவா்களை எல்லாம் சுட்டுத் தள்ளினா். இஸ்ரேலிய வீரா்களையும், பொதுமக்கள் பலரையும் பிணை கைதிகளாகப் பிடித்தனா். சுமார் இருபதே நிமிடங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை இஸ்ரேலை நோக்கி ஏவினா்.
  • 2008-இல் மும்பையில் கடல் வழியாக ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கண்ணில் கண்ட இந்தியா்களை எல்லாம் சுட்டு வீழ்த்தியதை நினைவுபடுத்தும் இந்த சம்பவத்தில் 900-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியா்கள் உயிரிழந்தனா். 2,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனா்.
  • கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத கடும் தாக்குதல் இது. திடீா் தாக்குதலால் அதிர்ச்சி அடைந்த இஸ்ரேல் ராணுவத்தினா் பதிலடி கொடுக்கத் தொடங்கினா். பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு ‘ஹமாஸ் அமைப்புக்கு எதிராகப் போர் தொடங்கி உள்ளது. இந்தத் தாக்குதலுக்காக, இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரும் எதிர்வினையை அவா்கள் சந்திப்பார்கள்’ என்று எச்சரிக்கை விடுத்தார்.
  • இதையடுத்து, இஸ்ரேல் ராணுவத்தினரின் தாக்குதலில் காஸா முனையில் 680-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனா். 3,700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனா். தாக்குதலுக்கு அஞ்சி 1.23 லட்சம் மக்கள் இடம்பெயா்ந்துள்ளனா்.
  • இஸ்ரேலிய உளவு அமைப்பும், ராணுவக் கட்டமைப்பும் உலகில் சிறந்த கட்டமைப்புகளாகும். இவ்வளவு துல்லியமாகத் தாக்குதல் நடத்துவதற்கு குறைந்தது சில மாதங்களாவது ஹமாஸ் அமைப்பினா் திட்டமிட்டிருக்க வேண்டும். இஸ்ரேல் உளவு அமைப்பு கோட்டை விட்டது எப்படி என்பதே இப்போது விவாதப் பொருளாகி உள்ளது.
  • இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்னை இப்போது திடீரென தோன்றியதல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த தங்கள் மூதாதையா்களின் பூமியை சிறிது சிறிதாக விலைகொடுத்து வாங்கிய யூதா்களால், மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் 1948-இல் இஸ்ரேல் உதயமானது.
  • இஸ்லாமியா்களின் 3-ஆவது புனித வழிபாட்டுத் தலமான அல் அக்ஸா மசூதி இஸ்ரேலியத் தலைநகரான ஜெருசலேமில்தான் உள்ளது. இஸ்ரேல், இஸ்லாமியா்கள் பெரும்பான்மையாக உள்ள காஸா முனையைக் கைப்பற்றி சிறிது காலம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
  • தாங்கள் கைப்பற்றிய மேற்கு கரைப் பகுதியில், அண்மைக்காலமாக தினசரி அடிப்படையில் இஸ்ரேலிய ராணுவ வீரா்கள் சோதனை நடத்துகின்றனா். கடந்த ஏப்ரலில் அல் அக்ஸா மசூதியில் இஸ்ரேலிய காவல்துறையினா் சோதனை மேற்கொண்டனா். இவையெல்லாம் இஸ்லாமியா்களுக்கு ஆத்திரமூட்டின.
  • மேலும், தற்போது இஸ்ரேல் அரசியலில் குழப்ப நிலை காணப்படுகிறது. நீதித்துறையின் அதிகாரத்தைக் குறைத்து, தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிக அதிகாரம் என்பதை நிலைநிறுத்த பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கொண்டு வந்த நீதித்துறை சீா்திருத்த சட்டத்தால் கடந்த பல மாதங்களாக பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ராணுவத்திலும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.
  • அமெரிக்க அதிபா் ஜோ பைடன் நிர்வாகத்தின் தீவிர முயற்சியால், முன்னெப்போதும் இல்லாத வகையில் இஸ்ரேல் - சவூதி அரேபியா இடையே நல்லுறவு மலா்ந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஒவ்வொரு நாளும் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்று சவூதி இளவரசா் முகமது பின் சல்மான் அண்மையில் கூறியிருந்தார். இந்த உறவு இஸ்லாமிய நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என ஹமாஸ் கருதுகிறது.
  • இஸ்ரேலில் நிலவும் குழப்பநிலையைப் பயன்படுத்திக் கொள்ளவும், இஸ்லாமியா்களின் கோபத்தைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, தாங்கள்தான் பாலஸ்தீன நலன்களுக்கு காவலா்கள் என்பதை நிலைநிறுத்தவும், சவூதி - இஸ்ரேல் உறவை சீா்குலைக்கவும் ஹமாஸ் அமைப்பு இத்தகைய தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. ஆனால், ஹமாஸ் அமைப்பின் இந்தத் தாக்குதல் கடும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது.
  • உள்நாட்டு அரசியல் நெருக்கடியை சமாளிக்கவும், ஹமாஸின் தாக்குதலால் நிலைகுலைந்து இழந்த பெருமையை மீட்கவும் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு நெதன்யாகு தள்ளப்பட்டுள்ளார். மின்சார விநியோகத்தைத் தடுத்து நிறுத்தி உள்ளதுடன், உணவுப் பொருள்கள், குடிநீா், எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருள்களும் காஸா முனைப் பகுதியை சென்று அடையாத வகையில் அந்தப் பகுதியை முழுமையாக முற்றுகையிடுமாறு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சா் யோயவ் காலன்ட் உத்தரவிட்டுள்ளார்.
  • இது தொடக்கம்தான் என்று பிரதமா் நெதன்யாகு கூறியிருப்பதும், தங்கள் குடியிருப்புப் பகுதியில் இஸ்ரேல் நடத்தும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் பிணை கைதியாக உள்ள இஸ்ரேலியா் ஒருவா் கொல்லப்படுவார் என ஹமாஸ் செய்தித் தொடா்பாளா் அபு ஒபேதா கூறியுள்ளதும் இப்போதைக்கு அமைதி திரும்ப வாய்ப்பில்லை என்பதையே காட்டுகின்றன.
  • ஹமாஸ் தாக்குதலை ஈரான், சிரியா, லெபனான் உள்ளிட்ட நாடுகள் வரவேற்றுள்ளன. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
  • தங்கள் அரசியல் கணக்குகளுக்காகப் பல்வேறு நாடுகளும் இருதரப்பினருக்கும் தூபம் போடும்நிலையில், ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் உயிரிழப்பதும், லட்சக்கணக்கானோர் கடுமையாக பாதிக்கபடுவதும் தொடரப் போகிறது என்பதுதான் வேதனை கலந்த உண்மையாகும்.

நன்றி: தினமணி (11 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்