TNPSC Thervupettagam

பேராபத்தும் எச்சரிக்கையும்!

May 5 , 2020 1716 days 786 0
  • உலகம் முழுவதும் கொவைட் 19 தீநுண்மி நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், பீட்டர்ஸ்பர்கில் கூடிய 11-ஆவது பருவநிலை மாற்ற விவாதம் முக்கியத்துவம் பெறுகிறது.
  • இந்தியாவின் பிரகாஷ் ஜாவடேகர் உள்ளிட்ட 30 நாடுகளின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் அந்த இணைய விவாதத்தில் கலந்து கொண்டனர்.
  • ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் அதில் கலந்துகொண்டதிலிருந்து இணைய விவாதத்தின் முக்கியத்துவத்தை உணர முடிகிறது.
  • கொவைட் 19 தீநுண்மி நோய்த்தொற்றைத் தொடர்ந்து உலகின் பல்வேறு பாகங்களில் அறிவிக்கப்பட்ட ஊரடங்குகளால் கரியமில வாயு வெளியேற்றம் ஓரளவுக்குக் குறைந்திருக்கிறது என்றாலும்கூட, பாரீஸ் ஒப்பந்தத்துக்குப் பிறகும்கூட அதன் சராசரி அளவு அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.
  • இந்தப் பின்னணியில் நோய்த்தொற்றின் பாதிப்பைத் தொடர்ந்து பருவநிலை மாற்றம் குறித்து அந்த இணைய மாநாட்டில் பல்வேறு பிரச்னைகள் விவாதிக்கப்பட்டன.

கரோனாவிற்கு பின்

  • நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்த பிறகிலான பசுமைப் பொருளாதார வளர்ச்சி குறித்து அந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
  • கொவைட் 19 தீநுண்மி நோய்த்தொற்றின் முடிவுக்குப் பிறகிலான உலகம் வித்தியாசமானதாக இருக்கும் என்று மாநாட்டில் கலந்துகொண்ட அனைவரும் ஒப்புக்கொண்டனர்.
  • அதன் பிறகான வளர்ச்சிப் பணிகளில் பருவநிலை மாற்றம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும், அதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் பெரும்பாலான உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
  • பருவநிலை மாற்றத் தொழில்நுட்பம் அனைத்து நாடுகளுக்கும் வெளிப்படையாகக் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்
  • பதும், வளர்ச்சி அடையும் நாடுகளுக்குக் கரியமில வாயு கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த ஒரு லட்சம் டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.75 லட்சம் கோடி) அளவிலான நிதி ஒதுக்கீடு வளர்ச்சி அடைந்த நாடுகளால் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதும் அந்த மாநாட்டில் இந்தியா வைத்த கோரிக்கைள்.
  • கொவைட் 19 தீநுண்மி பிரச்னையைவிட பருவநிலைப் பிரச்னை கடுமையானது என்று வலியுறுத்தினார் ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரெஸ். கொவைட் 19 தீநுண்மிப் பேரிடரிலிருந்து மீண்ட பிறகு, பசுமை எரிசக்தி, எண்மப் பரிமாற்றங்கள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்க இருப்பதாக ஐரோப்பிய கூட்டமைப்பு தெரிவித்தது.

மிகப் பெரிய கேள்விக்குறி

  • வளர்ச்சி அடைந்த நாடுகள், குறிப்பாக, வல்லரசு நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் தங்களது வளர்ச்சிக் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. சீனா மௌனம் சாதிக்கிறது என்றால், அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் மீண்டும் பெட்ரோலியம் சார்ந்த எரிசக்திக்கு முக்கியத்துவம் கொடுக்க அமெரிக்கா முனைகிறது.
  • அந்த இரண்டு நாடுகளும் பருவநிலை மாற்றப் பிரச்னையில் முழுமனதுடன் ஒத்துழைப்புத் தராத நிலையில், எந்த அளவுக்கு இந்தப் பிரச்னையை உலகம் எதிர்கொண்டு வெற்றியடையும் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி?
  • கொவைட் 19 தீநுண்மி பேரிடரிலிருந்து பாடம் படித்து, பருவநிலை மாற்றம் குறித்துக் கவலைப்படுவதில்தான் உலகின் வருங்காலம் அடங்கியிருக்கிறது.
  • கொவைட் 19 தீநுண்மி நோய்த்தொற்றை எதிர்கொண்டு மிகப் பெரிய பொருளாதாரப் பின்னடைவை உலகம் சந்திக்க இருக்கும் நிலையில், பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளுக்கு எதிராகச் செயல்பட முயலுமா, முடியுமா என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.
  • பருவநிலை மாற்ற விவாதத்தின் அடிப்படைக் கேள்விகள் சில இருக்கின்றன. எந்த நாடு, எந்த அளவுக்கு, எப்போது தன்னுடைய கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும்? முந்தைய, இப்போதைய, வருங்கால பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான நிதியுதவி எங்கிருந்து யாரால் வழங்கப்படும்? முக்கியமான துறைகளில் கரியமில வாயு வெளியேற்றத்தைத் தவிர்ப்பதற்கான தொழில்நுட்பத்தையும், வளர்ச்சித் தேவைகளையும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு எப்படி, யார் வழங்கப் போகிறார்கள்? இந்தக் கேள்விகளுக்குப் பதில் கிடைக்காதவரை அடுத்தகட்டத்தை நோக்கி அடியெடுத்து வைக்க முடியாது.

பேராபத்தின் எச்சரிக்கை

  • 2009-இல் கூடிய கோபன்ஹேகன் பருவநிலை மாநாட்டில் தொடங்கி, எல்லா மாநாடுகளிலும் வளர்ச்சி அடைந்த நாடுகள் முக்கியத்துவம் இல்லாத பிரச்னைகளைத்தான் விவாதித்து வந்திருக்கின்றன.
  • முக்கியமான பிரச்னைகளில் புதிய தடைகளை ஏற்படுத்துவதும், பிரச்னையைத் திசைதிருப்புவதுமாக செயல்பட்டு வந்திருக்கின்றன.
  • 2015 பாரீஸ் ஒப்பந்தத்தில்தான் ஓரளவுக்கு சட்டபூர்வமாக அனைத்து நாடுகளையும் கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
  • ஸ்பெயினிலுள்ள மாட்ரிடில் நடந்த மாநாட்டில், மிகப் பெரிய பேரழிவிலிருந்து சர்வதேசத் தலைவர்களால் உலகம் காப்பாற்றப்படும் என்று எதிர்பார்த்த விஞ்ஞானிகளின் வேண்டுகோள்கள் பொய்த்தன.
  • பெரு வெள்ளம், வறட்சி, புயல் ஆகியவை கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதற்கு பருவநிலைதான் காரணம்.
  • இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட சார்ஸ் (2003), பன்றிக் காய்ச்சல் (2009), இப்போதைய கொவைட் 19 ஆகியவை எல்லாவற்றின் பின்னணியிலும் பருவநிலை மாற்றத்தின் முத்திரை காணப்படுகிறது. இவையெல்லாம் பறவைகள், விலங்குகளிலிருந்து உருவாகியிருக்கும் தீநுண்மிகள். எபோலா, சிக்கா, நிபா தீநுண்மிகளும் இதே வகையைச் சார்ந்தவைதான்.
  • பருவநிலை மாற்றத்தின் விளைவாகத்தான் தங்களது இயற்கையான வாழுமிடங்களிலிருந்து மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குள் விலங்குகள் நுழைந்து, புதிய தீநுண்மிகளையும் நோய்களையும் பரப்புகின்றன. பருவநிலை மாற்றம் என்கிற பேராபத்தின் வெளிப்பாடும் எச்சரிக்கையும்தான் கொவைட் 19 தீநுண்மி!

நன்றி: தினமணி (05-05-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்