பேரிடர் மீட்புப் படையை வலுப்படுத்துதல் அவசியம்
- ஃபெஞ்சல் புயல் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்திச் சென்றுள்ளது. ஒன்றரை கோடி மக்கள் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வழக்கமாக புயல் உருவாகி கரையை கடக்கும்போது 10 முதல் 12 கி.மீ. வேகத்தில் கடக்கும். ஆனால், இந்தப் புயல் 3 கி.மீ. வேகத்தில் மெதுவாக கடந்ததால் மழையளவும் பாதிப்பும் அதிகமாக இருந்தது.
- தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 9 குழுக்கள் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 9 குழுக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியுள்ளன. இருந்தாலும், பல பகுதிகளில் சாலை மறியல், அமைச்சர் மீது சேறு வீசுதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு பேரிடர் மீட்புப் படையினர் பல சவால்களுக்கு மத்தியில் 7 பேரின் உடல்களை மீட்டுள்ளனர்.
- இதுபோன்ற பேரிடர் காலங்களில் அரசு அமைப்புகள் மற்றும் உள்ளூர் இளைஞர்கள் தாமாக முன்வந்து உதவிகளைச் செய்தாலும், அதற்கென உருவாக்கப்பட்ட பயிற்சி பெற்ற பேரிடர் மீட்புப் படையினர் உரிய படகுகள் மற்றும் உபகரணங்களுடன் சென்று மக்களை காப்பாற்றி வரும் செயல் ஈடு இணையற்றதாகும். பேரிடர் மீட்புக்காக தனி அமைப்பு குறித்து சர்வதேச மாநாடுகளில் வலியுறுத்தப்பட்டாலும், 1995-ம் ஆண்டு நடந்த ஒடிசா சூப்பர் புயல், 2001-ம் ஆண்டு குஜராத் பூகம்பம், 2004-ம் ஆண்டு சுனாமி ஆகிய பேரிடர்களுக்கு பின்பே அதன் முக்கியத்துவத்தை மத்திய அரசு உணர்ந்தது.
- பின்னர், அதற்கென சட்டம் இயற்றப்பட்டு, தேசிய பேரிடர் மீட்புப் படை 2005-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மீட்புப் பணியில் நிபுணத்துவம் பெற்ற தலா 1,149 பேர் அடங்கிய 8 குழுக்களுடன் இப்படை தொடங்கியது. தற்போது 16 குழுக்கள் இயங்கி வருகின்றன. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் பேரிடர் மீட்புப் படை தொடங்கப்பட்டது. ரயில் விபத்து, சுரங்க விபத்து, வெள்ள பாதிப்பு என பேரிடர் காலங்களில் பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து செயல்பட்டு லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியுள்ளனர்.
- இதுவரை புயல் வரலாற்றில் இல்லாத வகையில் ஃபெஞ்சல் புயல் ஒரே இடத்தில் நிலைநின்று பாதிப்புகளை ஏற்படுத்திச் சென்றுள்ளது. திருவண்ணாமலையில் இதுபோன்ற நிலச்சரிவே இதற்கு முன் நடந்ததில்லை என்று அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற அசாதாரண பாதிப்புகளுக்கு காலநிலை மாற்றம் போன்ற காரணங்கள் கூறப்படுகின்றன.
- காலநிலை மாற்றத்தால் நாம் கற்பனையிலும் எதிர்பாராத பேரிடர்களை சந்தித்துவரும் நிலையில், பேரிடர் மீட்புப் படையை இன்னும் பலப்படுத்த வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை. அவர்களை அழைத்துப் பேசி, களத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்து , அவர்களுக்குத் தேவையான கூடுதல் வசதிகளை உருவாக்கித் தருவதும், அதன்மூலம் பேரிடர் மீட்புப் படையை எதிர்காலத்தில் வரும் பேரிடர்களை சமாளிக்கும் வகையில் பலம் பொருந்தியதாக மாற்றுவதும் காலத்தின் கட்டாயம்.
நன்றி: இந்து தமிழ் திசை (04 – 12 – 2024)