உலக அளவிலான பேரிடர் மேலாண்மைக் கட்டமைப்பு தொடர்பான நிறுவனங்கள்
- 1994 ஆம் ஆண்டில் இயற்கைப் பேரிடர் குறைப்பு குறித்த உலக மாநாடு ஜப்பானின் யோகோகாமாவில் நடத்தப் பட்டது.
- இந்த மாநாடானது யோகோகாமா மூலோபாயத்தை ஏற்றுக் கொண்டு 1990-2000 என்ற பத்தாண்டை இயற்கைப் பேரிடர் குறைப்புக்கான சர்வதேசப் பத்தாண்டாக (International Decade for Natural Disaster Reduction - IDNDR) அறிவித்தது.
- IDNDR செயலகத்தினை அடுத்து உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் பேரிடர் அபாயக் குறைப்பு அலுவலகமானது ஐ.நா. பேரிடர் அபாயக் குறைப்பு உத்திசார் திட்டத்தைச் செயல்படுத்த 1999 ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்டது.
- ஹையாகோ கட்டமைப்பு நடவடிக்கை என்பது இயற்கைப் பேரிடர் ஆபத்துகளிலிருந்து உலகைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு 10 ஆண்டுத் திட்டமாகும் (2005-2015).
- பேரிடர் அபாயக் குறைப்பு, இழப்புக்களை அடையாளம் காணல், சட்டம் மற்றும் கொள்கைக் கட்டமைப்பின் மூலம் மதிப்பீடு செய்தல், பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் புதுமைகளைப் பயன்படுத்துதல் போன்ற முன்னுரிமைகள் இந்தத் திட்டத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டன.
- 2015 ஆம் ஆண்டுக்குப் பிந்தைய வளர்ச்சி செயல் திட்டத்தில் மூன்று சர்வதேச ஒப்பந்தங்கள் உள்ளன. அவையாவன:
- செண்டாய் கட்டமைப்பு.
- நீடித்த வளர்ச்சி இலக்குகள் (2015-2030).
- காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தம் (COP 21).
பேரிடர் குறைப்புக்கான செண்டாய் கட்டமைப்பு (2015-30)
- ஜப்பானின் மியாகியில் உள்ள செண்டாயில் 2015 ஆம் ஆண்டு மார்ச் 14 முதல் 18 ஆம் தேதி வரை நடைபெற்ற பேரிடர் அபாயக் குறைப்பு தொடர்பான மூன்றாவது ஐக்கிய நாடுகள் அமைப்பின் உலக மாநாட்டில் இது ஏற்றுக் கொள்ளப் பட்டது.
- பேரிடர் அபாயக் குறைப்புக்கான செண்டாய் கட்டமைப்பு (2015-2030) ஆனது ஹையாகோ கட்டமைப்பினை அடுத்து உருவாக்கப்பட்ட ஒரு கட்டமைப்பு கருவியாகக் கருதப் படுகின்றது.
- இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியா உள்ளிட்ட நாடுகள் தன்னார்வ அடிப்படையில் அதற்கு இணங்க முயற்சிக்கும் ஒரு கட்டுப் படுத்தாத ஒப்பந்தம் இதுவாகும்.
- அனைத்து மட்டங்களிலும் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்துவதில் பேரிடர் அபாயம் குறித்த பலதரப்பட்ட ஆபத்து மேலாண்மை நிர்வாகத்தை வழிநடத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
செண்டாய் கட்டமைப்பு முன்னுரிமை செலுத்தக் கூடிய சில முக்கிய நடவடிக்கைகள்
- பேரிடர் அபாயத்தைப் புரிந்து கொள்ளுதல்.
- பேரிடர் அபாயத்தை நிர்வகிக்க பேரிடர் நிர்வாகத்தை பலப்படுத்துதல்.
- பேரிடர் அபாயக் குறைப்பில் முதலீடு செய்தல்.
- பயனுள்ள பேரிடர் தயார்நிலையை மேம்படுத்துதல் மற்றும் மீட்பு, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு ஆகியவற்றில் “மீண்டும் சிறப்பாக கட்டமைப்புகளை உருவாக்குதல்” போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
தேசிய அளவிலான பேரிடர் மேலாண்மைக் கட்டமைப்பு தொடர்பான நிறுவனங்கள்
இந்திய தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம்
- இந்திய தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority of India - NDMA) ஆனது 2005 ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் 2005 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
- ஒரு முழுமையான, செயல்திறன் மிக்க, தொழில்நுட்ப உந்துதல் மற்றும் நிலையான வளர்ச்சி மூலோபாயத்தின் மூலம் பாதுகாப்பான மற்றும் பேரிடரைத் தடுக்கக் கூடிய இந்தியாவை உருவாக்குவதே NDMAன் நோக்கமாகும்.
- NDMA ஆனது இந்தியப் பிரதமரின் தலைமையில் செயல்படுகின்றது. மேலும் காபினட் அமைச்சர் அந்தஸ்துடன் ஒரு துணைத் தலைவரும், இணை அமைச்சர்களின் அந்தஸ்துடன் எட்டு உறுப்பினர்களும் இவ்வமைப்பில் உள்ளனர்.
- செயலாளரின் தலைமையில் செயல்படும் NDMA செயலகமானது பேரிடர் தணிப்பு, தயார்நிலை, திட்டங்கள், புனரமைப்பு, சமூக விழிப்புணர்வு மற்றும் நிதி & நிர்வாக அம்சங்களைக் கையாள்கின்றது.
- இது உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.
தேசியப் பேரிடர் மேலாண்மைத் திட்டம் (NDMP)
- இது 2016 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இதுவே நாட்டில் பேரிடர் மேலாண்மைக்கு என்று தயாரிக்கப்பட்ட ஒரு முதல் தேசிய திட்டமாகும்.
- இந்தியா தனது தேசியத் திட்டமான 2016 ஆம் ஆண்டு தேசியப் பேரிடர் மேலாண்மைத் திட்டத்தினை பேரிடர் அபாயக் குறைப்புக்கான செண்டாய் கட்டமைப்பு (2015-2030) என்பதுடன் இணைத்துள்ளது. செண்டாய் கட்டமைப்பில் இந்தியா கையொப்பமிட்டுள்ளது.
- இந்தத் திட்டத்தின் நோக்கம் பின்வருமாறு:
- இந்தியாவினைப் பேரிடர் நெகிழ்திறனைப் பெற்று கணிசமான அளவிற்குப் பேரிடர் அபாயக் குறைப்பை அடையச் செய்தல்.
- பொருளாதார, சமூக, கலாச்சார, உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச் சூழல் அடிப்படையில் பேரிடரினால் ஏற்படும் வாழ்க்கை, முக்கிய வாழ்வாதாரங்கள் மற்றும் சொத்துக்களின் இழப்புகளைக் கணிசமாகக் குறைத்தல்.
- நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும் உள்ள மக்களிடையே பேரிடர்களைச் சமாளிக்கும் திறனை அதிகப்படுத்துதல்.
மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம்
- மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (State Disaster Management Authority - SDMA) ஆனது மாநில அளவில், 2005 ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ளது.
- SDMA ஆனது மாநில முதல்வரால் தலைமை தாங்கப்படுகின்றது. மேலும் முதல்வரால் நியமிக்கப்பட்ட எட்டு உறுப்பினர்களும் இவ்வமைப்பில் உள்ளனர்.
- SDMA ஆனது மாநிலப் பேரிடர் மேலாண்மைத் திட்டத்தைத் தயாரித்து தேசியப் பேரிடர் மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்துகின்றது.
நிறுவன அமைப்பு
- இதுபோன்ற பேரிடர்களை பின்வரும் நிறுவனங்கள்/நிறுவனங்கள் மூலம் நிர்வகிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
- மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் நிர்வாகக் குழுவினை நிர்வகித்தல் வேண்டும்
- மாநில நிவாரண ஆணையர் தலைமையிலான வருவாய் நிர்வாகப் பேரிடர் மேலாண்மை மற்றும் தணிப்புத் துறை
- மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட நிர்வாகம்
- வட்டாட்சியர்கள் மற்றும் பிற வருவாய் அதிகாரிகளின் உதவியுடன் செயல்படும் துணை ஆட்சியர்கள்.
- மாநகராட்சிகள், நகராட்சிகள், பஞ்சாயத்து ஒன்றியங்கள்.
- அரசு சாரா நிறுவனங்கள்.
- பொதுத் துறை / தனியார் துறை
- சமுதாயம்.
தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம்
- இந்த ஆணையமானது மாண்புமிகு முதலமைச்சரின் தலைமையில் செயல்படுகின்றது.
- வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் தணிப்புத் துறையானது அத்தியாவசிய வசதிகளுக்கான அணுகுதலை வழங்குவதன் மூலமும், ஆதரவு அமைப்புகளை உருவாக்குவதன் மூலமும், மனிதத் திறன்களை வளர்ப்பதன் மூலமும் மாநிலத்தில் பேரிடர் மேலாண்மைத் திறனை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளது.
- மாநிலப் பேரிடர் மேலாண்மை கொள்கையானது 2003 ஆம் ஆண்டில் தயாரிக்கப் பட்டது.
- இந்தக் கொள்கையின் குறிக்கோள்கள்
- நடைமுறையில் உள்ள நிவாரண நடவடிக்கைகளின் தற்போதைய அணுகுமுறையை மாற்றுதல்.
- பேரிடர்களை நிர்வகிப்பதற்கானத் தடுப்பு, தயார்நிலை மற்றும் விரைவான மீட்பு நடவடிக்கைகளுக்காக ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்குதல்.
- முறையான இடர் மதிப்பீடு மூலம் சமூகத்தின் பாதிப்பைக் குறைத்தல்.
- கிடைக்கக்கூடிய வளங்களைத் திறம்பட அடையாளம் கண்டு பயன்படுத்துதல்.
- பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளிப்படையான, நிலையான மற்றும் சமமான நிவாரணத்தை உறுதி செய்தல்.
- மாநிலத்தில் தற்போதுள்ள பேரிடர் முன்னெச்சரிக்கை நடைமுறை பற்றிய விவரங்கள்: இந்திய வானிலை ஆய்வுத் துறைக்கும் மாநில அவசரகாலச் செயல்பாட்டு மையத்திற்கும் இடையே ஒரு அவசரகால தகவல் தொடர்பு நிறுவப் பட்டுள்ளது.
- ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்துறை படைப்பிரிவின் இரண்டாவது அலகு மூலம் மாநிலப் பேரிடர் மீட்புப் படை (State Disaster Response Force - SDRF) அமைக்கப் பட்டுள்ளது.
- மாநில அளவிலான வளங்கள் குறித்த தரவுதளம்: பயிற்சி பெற்ற பணியாளர்களின் எண்ணிக்கை, பேரிடர் மேலாண்மைத் தொடர்பான ஆய்வுகள் குறித்த தரவுதளங்கள் உருவாக்கப் படுகின்றன.
- திறன் மேம்பாட்டுத் திட்டங்கள்:
- பல்வேறு திட்டங்களின் கீழ் பேரிடர் மேலாண்மை குறித்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்குப் பயிற்சி அளிக்கப் பட்டு வருகின்றது.
- சூறாவளி, தொழில்துறை ஆபத்துகள் தொடர்பாக அவ்வப்போது முறையான ஆயத்தப் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.
- பின்வரும் மூலோபாய நோக்கத்துடன் தமிழக அரசு நீண்ட கால மறுவாழ்வின் நோக்கங்களை உணர்ந்து கொள்ள வழி வகுக்கின்றது.
- சேதமடைந்த மற்றும் பாதித்த வீடுகளை பேரிடர்த் தடுப்பு அம்சங்களைப் பயன்படுத்திப் புனரமைத்தல்.
- பாதுகாப்பான இடங்களில் புதிய வாழ்விடங்களைக் கண்டறிய பாதிக்கப்பட்ட இடங்களின் வரைபடத்தை மேற்கொள்ளுதல்.
- சுற்றுச்சூழலுடன் இணக்கமாக வாழ புதிய நிலையான வாழ்வாதார விருப்பங்களை உருவாக்குதல்.
- சுய உதவிக் குழுக்களுக்கு, குறிப்பாக நலிவடைந்த பிரிவினருக்கு அதிக உதவிகள் வழங்குதல்.
- சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள், கையேடு, காணொளி ஆவணப் படம், சமூக விளம்பரம் போன்ற கல்வி, தகவல் தொடர்பு பொருட்களைத் தயாரித்தல்.
- மருத்துவமனைகளில் அவசரகால மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல்.
- பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்களில் அபாய நிலைகளை மதிப்பீடு செய்தல்.
- சிறந்த உள்கட்டமைப்பை வழங்குதல்.
- மேம்பட்ட எதிர்காலத்திற்காக குழந்தைகளின் உளவியல் பிரச்சனைகள் மற்றும் கல்வித் தேவைகளை நிவர்த்தி செய்தல்.
- நிதியளிப்பு
- மாநிலப் பேரிடர் மீட்பு நிதியத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதிகளைக் கொண்டு சாதாரண சூழ்நிலைகளில் ஏற்படும் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.
- கூடுதல் ஆதாரங்கள் தேவைப்பட்டால், அது தேசியப் பேரிடர் மீட்பு நிதியிலிருந்து கோரப் படுகின்றது.
- தொழில்துறை/ இரசாயனப் பேரிடர்கள் ஏற்பட்டால், தேவையான நிதி சம்பந்தப்பட்ட பிரிவுகளால் வழங்கப் படுகின்றது.
- மத்திய நிறுவனங்களின் பங்கு
- பேரிடர்களைத் திறம்பட நிர்வகிப்பதில் இராணுவம், துணை இராணுவப் படைகள், உள்நாட்டு விமானப் போக்குவரத்து அதிகாரிகள், ரயில்வே, தொலைத் தொடர்பு, துறைமுக அதிகாரிகள் மற்றும் மத்தியப் பொதுத்துறை நிறுவனங்களின் முக்கியத்துவத்தை அரசாங்கம் அங்கீகரிக்கின்றது.
- அதன்படி, அவர்களின் பிரதிநிதிகள் பல்வேறு கூட்டங்கள்/ மாநாடுகளில் ஈடுபடுவார்கள் மற்றும் அனைத்துப் பேரிடர் மேலாண்மை மற்றும் தணிப்பு நடவடிக்கைகளிலும் அவர்களின் ஒத்துழைப்பை எளிதாக்குவதற்காக அரசாங்கம் அவர்களுடன் தொடர்ச்சியான தகவல் தொடர்பைப் பேணுகின்றது.
- தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத் திட்டத்தின் முக்கியக் கூறுகள் பின்வருமாறு:
- பேரிடர் நிர்வாகத்தின் பல்வேறு அம்சங்களை வழிநடத்தவும், மேம்படுத்தவும், ஒருங்கிணைக்கவும், கண்காணிக்கவும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அரசு நிறுவியுள்ளது.
- உள்ளூர் நிலைமைகளை மதிப்பீடு செய்த பின்னர் அனைத்து மட்டங்களிலும் விரிவான பேரிடர் மேலாண்மைத் திட்டங்களை வகுக்க அரசு நடவடிக்கை எடுக்கின்றது.
- பேரிடர் நிவாரணத்திற்குப் பதிலாக, சமூகங்களின் பாதிப்பைக் குறைப்பதில் தமிழக அரசு கவனம் செலுத்துகின்றது.
- தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூகம் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் பிற தன்னார்வ/புரவலர் நிறுவனங்களுக்கு அரசாங்கம் உரிய முக்கியத்துவம் கொடுக்கின்றது.
- உதவி/நிவாரணங்களை வழங்கும்போது சாதி, மதம், சமூகம் அல்லது பாலின அடிப்படையில் அரசாங்கம் பாகுபாடு காட்டாது.
மாவட்டப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (DDMA)
- 2005 ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாநில அரசும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மாவட்டப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தை (District Disaster Management Authority - DDMA) அமைத்துள்ளது.
- DDMA நிர்வாகம் பின்வருமாறு அமைக்கப்பட்டுள்ளது:
- தலைவர் – மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட நிர்வாக அதிகாரி அல்லது துணை ஆணையர் DDMAன் தலைவராக செயல் படுகின்றார்.
- இணைத் தலைவர் – உள்ளாட்சி அமைப்பால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதி அதன் இணைத் தலைவராக செயல்படுவார். பழங்குடியினர் பகுதிகளில், மாவட்டக் குழுவின் தலைமை நிர்வாக உறுப்பினர் அதன் இணைத் தலைவராக இருப்பார்.
- DDMAல் ஏழு உறுப்பினர்களுக்கு அதிகமாக எண்ணிக்கை இருப்பதில்லை.
- மாவட்ட நடுவரின் கீழ் நிர்வகிக்கப்படும் பேரிடர் மேலாண்மைக் குழுவானது அந்தந்த கிராமங்களுக்கான கிராம அளவிலான பேரிடர் மேலாண்மைத் திட்டங்களை வகுக்கின்றது.
- DDMA ஆனது மாவட்டப் பேரிடர் மேலாண்மைத் திட்டத்தை உருவாக்கி மாநிலப் பேரிடர் மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்துகின்றது.
அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள்
- இந்தியா பேரிடர் அபாயக் குறைப்புக்கான செண்டாய் கட்டமைப்பில் கையொப்பமிட்டுள்ளது. அதன் முன்னுரிமைகள் & குறிக்கோள்களை அடையவும் உறுதி பூண்டுள்ளது.
- பேரிடர்க் குறைப்புக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச உத்தி சார் அமைப்புடன் (UNISDR) ஒத்துழைத்து அதன் கொள்கைகளை செயல்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
- தேசியப் பேரிடர் மேலாண்மைத் திட்டம் (NDMP) ஆனது மத்திய அமைச்சகங்கள்/துறைகள், மாநில அரசுகள், ஒன்றியப் பிரதேச நிர்வாகங்கள், மாவட்ட அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அரசுகள் உள்ளிட்ட பல்வேறு பங்குதாரர்களின் பங்கு மற்றும் பொறுப்புகளை வரையறுக்கின்றது.
- பேரிடர் நிர்வாகத்தின் முதன்மைப் பொறுப்பு மாநிலங்களிடமே உள்ளது. பேரிடர்களை எதிர்கொள்ள பொதுமக்களை தயார் படுத்துவதற்காக மத்திய அரசானது வழக்கமான ஒத்திகை, சமூகப் பயிற்சி மற்றும் விழிப்புணர்வுத் திட்டத்தை நடத்துகின்றது.
- நில அதிர்வு மண்டலம் IV & V பகுதிகளில் தலா 50 முக்கியமான நகரங்களுக்கும் 1 மாவட்டத்திற்கும் பூகம்பப் பேரிடர் அபாய அட்டவணை (Earthquake Disaster Risk Indexing - EDRI) தயாரிப்பது குறித்து NDMA ஒரு முயற்சியை எடுத்துள்ளது.
- NDMA ஆனது நாட்டிற்கான சிறந்த திட்டமிடல் கொள்கைகளுக்காக நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளுக்கான மேம்படுத்தப்பட்ட வரைபடங்கள் மற்றும் நிலப்படத் தொகுதிகள் ஆகியவற்றைத் தயாரித்துள்ளது.
- புவியியல் தகவல் அமைப்புத் (Geographic Information System - GIS) தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் மூலம், GIS சேவையகத்தை நிறுவி தரவுதளத்தை உருவாக்கியதன் விளைவாக பேரிடர் அபாய மேலாண்மைக்கான ஒரு திட்டத்தை NDMA உருவாக்கியுள்ளது.
- NDMAன் ஆப்தமித்ரா திட்டத்தில் 25 மாநிலங்களில் இருக்கும் வெள்ளத்தால் பாதிப்பு நிகழ வாய்ப்புள்ள 30 மாவட்டங்களில் (மாவட்டத்திற்கு 200 தன்னார்வலர்கள்) பேரிடர் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 6000 சமூகப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
- இந்தியாவில் படகு விபத்து சோகங்களைத் தவிர்ப்பதற்கான வழிகாட்டுதல்களைத் தயாரிப்பதற்காக தனிக் குழு ஒன்று அமைக்கப் பட்டு உள்ளது.
நடைமுறைச் சிக்கல்கள்
- பேரிடர் நிர்வாகத்தின் பல்வேறு அம்சங்களில், குறிப்பாக, பெரிய பூகம்பங்கள் மற்றும் வெள்ளம் போன்ற பேரிடர் நிகழ்வுகளை எதிர்கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைச் செயல்களில் குறிப்பிடத் தக்க இடைவெளிகள் உள்ளன.
- அவசரகாலச் செயல்பாட்டு மையங்கள், அவசரகாலத் தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் தேடல் & மீட்புக் குழுக்கள் போன்ற வசதிகள் பலப்படுத்தப்பட வேண்டும்.
- பல்வேறு நிலைகளில் உள்ள தயார்நிலை நடவடிக்கைகளானவை மக்கள் சார்ந்தவையாக இருப்பதில்லை.
- பேரிடர் அபாயத்தை நிர்வகிப்பதற்கான இந்தியாவின் திறனானது அதன் பரப்பளவு மற்றும் மிகப்பெரிய மக்கள்தொகையின் காரணமாக மிகக் கடினமாக உள்ளது.
- 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியா உலகில் உள்ள எந்தவொரு நாட்டினைக் காட்டிலும் தீவிர வானிலை மற்றும் இயற்கைப் பேரிடர்களுக்கு மிக அதிகமாக ஆட்கொள்ளப்படும் நாடாக உருவெடுக்கும்.
- நில அதிர்வைத் தாங்கக்கூடிய பாதுகாப்பான உள்கட்டமைப்பு மற்றும் கட்டிடங்கள் இல்லாத காரணத்தால் வடகிழக்கு இந்தியப் பகுதி பூகம்பங்களால் அதிகளவு பாதிக்கப் படுகின்றது.
- இந்தப் பகுதியானது நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் மண் அரிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படக் கூடியதாக உள்ளது.
- இதன் விளைவாக, இடர் குறைப்பு நடவடிக்கைகளானவை SDMPகளில் உள்ள வழிகாட்டுதல்கள் அல்லாத திட்டங்கள் மூலம் இயக்கப் படுகின்றன.
முடிவுரை
- மீட்புப் பணியில் ஏற்படும் முக்கியப் பிரச்சினைகளை முன்னெச்சரிக்கையுடன் தடுக்கக் கூடிய மற்றும் இடர்களை அடையாளம் காணும் முறைகளை தெரிந்து கொள்ள வேண்டியதன் அவசியம் ஆனது பேரிடர் வளர்ச்சி செயற்பாட்டில் கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது.
- எனவே, பேரிடர்கள் இனி அவசரகால மீட்புச் சேவைகளின் மூலம் நிர்வகிக்கப்பட வேண்டிய நிகழ்வுகளாக கருதப்படாது.
- பேரிடர்களை நிர்வகிப்பதற்கான முன்னோக்கியப் பாதையானது மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சியின் அடிப்படையிலான உத்திசார் திட்டத்தைக் கொண்டு வருவதாகும்.
ó ó ó ó ó ó ó ó ó ó