TNPSC Thervupettagam

பேரிடர் மேலாண்மையில் முழுமை கூடட்டும்

March 31 , 2023 486 days 272 0
  • இயற்கைப் பேரிடர்களின் காலம்’ என்று சொல்லத்தக்க வகையில், மனிதச் செயல்பாடுகளால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றத்தின் விளைவுகள் இயற்கைப் பேரிடர்களைத் துரிதப் படுத்தி வருவதைச் சமீபகாலமாகப் பார்த்துவருகிறோம். இதனால், வலுவான பேரிடர் மேலாண்மை இன்றியமையாத ஒன்றாகிறது. இந்தப் பின்னணியில், சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கும் தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மைத் திட்டம் - 2023, மாநிலப் பேரிடர் மேலாண்மைக் கொள்கை ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன.
  • ஐநா-வின் பேரிடர் ஆபத்துக் குறைப்பு (UNDRR) அமைப்பின் ‘பேரிடர்களுக்குத் தரப்படும் மனித விலை’ (2020) அறிக்கையின்படி, 2000 முதல் 2019 வரை பதிவான இயற்கைப் பேரிடர்களில் சீனா, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் நிகழ்ந்தவைதான் மிகப் பெரிய பொருளாதார அழிவையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தியவை.
  • முந்தைய 20 ஆண்டுகளைவிட இந்தக் காலகட்டத்தில் புவி வெப்பமாதல், காலநிலை மாற்றம் ஆகியவற்றின் விளைவால் தூண்டப்பட்ட பேரிடர்களின் எண்ணிக்கை 60% உயர்ந்திருக்கிறது. இதன் விளைவாக 12 லட்சம் பேர் பலியாகியிருப்பதாகவும், உத்தேசமாக 3 டிரில்லியன் டாலர் பொருளாதார இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அறிக்கை கண்டறிந்திருக்கிறது.
  • சுனாமி (2004); கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் சென்னையிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் ஏற்பட்ட வெள்ளம் (2015); தானே (2011), நீலம் (2012), வார்தா (2016), ஒக்கி (2017), கஜா (2018), புரெவி (2020), நிவர் (2020), மேண்டூஸ் (2022) புயல்கள்; முன்கணித்திராத மழைப்பொழிவு (2021); கனமழை - அதிகன மழை (2021); வறட்சி (2016-2017) என இந்த நூற்றாண்டின் தொடக்கம் முதல் தமிழ்நாடு பரவலான இயற்கைப் பேரிடர்களை எதிர்கொண்டுவந்திருக்கிறது.
  • இந்தப் பின்னணியில், தமிழ்நாட்டின் பேரிடர் மேலாண்மைக் கட்டமைப்பை உறுதிப்படுத்தும் மேலதிக நடவடிக்கையில் அரசு இறங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. சென்டாய் கட்டமைப்புத் திட்டம், ஐநா-வின் வளங்குன்றா வளர்ச்சித் திட்ட இலக்குகள் 2030, பாரிஸ் ஒப்பந்தம் குறிப்பிடும் முன்னுரிமை-இலக்குகள், தேசியப் பேரிடர் மேலாண்மைத் திட்டம் 2016, பேரிடர் அபாயத் தணிப்பு குறித்து பிரதமர் வெளியிட்ட 10 அம்சச் செயல் திட்டம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மாநிலப் பேரிடர் மேலாண்மைத் திட்டமும் கொள்கையும் உருவாக்கப்பட்டுள்ளன.
  • வலுவான பேரிடர் மேலாண்மை இயக்கத்தின் மூலம் பேரிடர்களின் எதிர்மறை விளைவுகளைக் குறைத்து, உயிரிழப்பு, பொதுச் சொத்து, உள்கட்டமைப்பு வசதிகளின் சேதம் ஆகிவற்றைத் தவிர்த்தல், அரசு உருவாக்கிய பொருளாதார-வளர்ச்சி ஆதாயங்களைத் தக்கவைத்துக்கொள்வது ஆகியவை இந்தக் கொள்கையின் நோக்கமாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
  • கணிப்பில் தவறுவதும், கணிக்கவே இயலாததுமான இயற்கைப் பேரிடர்கள் இன்றைக்குத் தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன. ஆனால், மேம்பட்ட பேரிடர் மேலாண்மைக் கொள்கைகளை வகுப்பதையும் தாண்டி, அவற்றை முறையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் மட்டுமே, பேரிடர்களால் விளையும் உயிரிழப்பும் பொருளிழப்பும் குறையும்.
  • பேரிடர்களை எதிர்கொள்வதில் வெற்றிகரமாகச் செயல்படும் ஈக்வெடார், ஸ்விட்சர்லாந்து, பிரேசில், ஜப்பான் போன்ற நாடுகளை அணுகி, அவற்றின் அனுபவப் பாடங்களையும் அரசு கைக்கொள்ள வேண்டும். இவற்றின் மூலம் எதிர்கால ஆபத்துகளைக் குறைத்துக்கொள்ள முடியும்!

நன்றி: தி இந்து (31 – 03 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்