- சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் தொடங்கப்பட்டிருப்பது கடுமையான விமர்சனங்களைப் பெற்று வருவதும், போக்குவரத்து ஊழியர் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருப்பதும் துரதிர்ஷ்டவசமானவை. பொங்கல் பண்டிகைக் காலத்தில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துபவை.
- 2019இல் அதிமுக ஆட்சியின்போது 88.52 ஏக்கர் நிலப்பரப்பில் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில், ரூ.394 கோடி செலவில் கட்டப்பட்ட பேருந்து நிலையத்துக்குக் ‘கலைஞர் நூற்றாண்டுப் பேருந்து முனையம்’ என்று பெயர் சூட்டி, டிசம்பர் 30 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள், மாநில விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்திலிருந்து மட்டுமே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
- இப்பேருந்து நிலையம் பல நவீன வசதிகளுடன் கட்டப்பட்டிருந்தாலும் இதைப்பயன்படுத்துவதில் பயணிகள் சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். பேருந்து நிலையத்தை அடைய அரை கிலோமீட்டருக்கு மேல் நடந்து செல்ல வேண்டியிருப்பதையும், மத்திய, வட சென்னைப் பகுதிகளிலிருந்து பேருந்து நிலையம் வெகு தொலைவில் இருப்பதையும் பயணிகள் சிக்கல்களாகக் குறிப்பிடுகிறார்கள். மேலும், கிளாம்பாக்கத்தை அடைவதற்குப் போதுமான இணைப்புப் பேருந்துகள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
- இந்த விமர்சனங்களை அடுத்து வண்டலூருக்கும் ஊரப்பாக்கத்துக்கும் இடையே கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைப்பதற்கு மாநில அரசு சார்பில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) ரூ.20 கோடி ஒதுக்கியிருக்கிறது. பேருந்து நிலையத்தைத் திறப்பதற்கு முன்பே எடுத்திருக்க வேண்டிய நடவடிக்கை இது.
- கூடவே, இப்பேருந்து நிலையத்தை அடைய, அருகே உள்ள முக்கியப் பகுதியான தாம்பரத்திலிருந்து இணைப்புப் பேருந்துகள் அதிகளவில் இயக்கப்பட வேண்டும். பேருந்து நிலையத்துக்குள் மாநகரப் பேருந்துகள் சென்று வருவதற்கான நடவடிக்கைகளும் தொடங்கப்பட வேண்டும்.
- வெகுதூரத்திலிருக்கும் வட சென்னைவாசிகள் பயன்பெறும் வகையில் நேரடிப் பேருந்துகளை இயக்க வேண்டும். கிளாம்பாக்கம் ரயில் நிலையம் விரைவில் நடைமுறைக்கு வர வேண்டும். மெட்ரோ ரயில் சேவையைக் கிளாம்பாக்கம்வரை நீட்டிப்பது பலனளிக்கும்.
- இப்படி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தால் பயணிகள் அதிக அலைச்சலுக்கு ஆளாகியுள்ள நிலையில், ஜனவரி 9 முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன.
- கோரிக்கைகள் குறித்து பொங்கலுக்குப் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் திட்டமிட்டபடி வேலை நிறுத்தத்தைத் தொடங்கினால், சொந்த ஊருக்குச் செல்லத் திட்டமிட்டிருக்கும் தென் மாவட்டப் பயணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படலாம். அரசுப் பேருந்துகள் சார்ந்த இவ்விரு பிரச்சினைகளுக்கும் விரைவாகத் தீர்வு காணப்பட வேண்டியது அவசியம்.
நன்றி: இந்து தமிழ் திசை (08 – 01 – 2024)