TNPSC Thervupettagam

பொது சிவில் சட்டத்தால் இந்து முஸ்லிம் பிளவு ஏற்படாது

August 12 , 2023 474 days 278 0
  • பொது சிவில் சட்டத்தால் இந்து-முஸ்லிம் பிளவு ஏற்படாது என்றும், இந்த சட்டத்தை இஸ்லாமிய பெண்கள் மிகவும் வரவேற்பார்கள் என்றும் கூறுகிறார் பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம ஸ்ரீநிவாசன். மேலும், பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பதுதான் வகுப்பு வாதமே தவிர, கொண்டு வர வேண்டும் என்பது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
  • பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வந்தால் பெண்களுக்கு அதிக பலன் கிடைக்கும். 1989ல் கருணாநிதி முதல்வராக இருக்கும்போது பெண்களுக்கு சொத்துரிமை சட்டம் கொண்டு வந்தார். பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் உரிமை உண்டு என்றது அந்த சட்டம். தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம் பெண்களுக்கு, கிறிஸ்தவ பெண்களுக்கு அதன்படி சொத்து கிடைத்ததா என்றால் இல்லை. ஏனெனில், அவர்கள் இந்த சட்டத்தின் கீழ் வர மாட்டார்கள். அப்படி என்றால், அந்த சட்டமே, இந்து பெண்கள் சொத்துரிமைச் சட்டம் என்ற பெயரில் கருணாநிதி கொண்டு வந்திருக்க வேண்டும். பெண்களுக்கான சொத்துரிமை சட்டம் என்று கொண்டு வந்திருக்கக்கூடாது.
  • குறிப்பாக, பொது சிவில் சட்டத்தை முஸ்லிம் பெண்கள் மிகவும் வரவேற்பார்கள். பொது சிவில் சட்டம் வந்துவிட்டால், ஒரு முஸ்லிம் ஆண் 4 திருமணம் செய்து கொள்ள முடியாது அல்லவா? எந்த முஸ்லிம் பெண்ணும் தனது கணவன் இன்னும் 3 பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்பதை ஏற்க மாட்டார்கள். எனவே, இந்த சட்டம் வந்தால் முஸ்லிம் சகோதரி மகிழ்வார். முத்தலாக் பண்ண முடியாது; விவாகரத்து நிகழ்ந்தால், இந்து பெண்ணுக்கு என்ன ஜீவனாம்ச உரிமை உண்டோ அது முஸ்லிம் பெண்ணுக்கும் கிடைக்கும். சொத்தில் பங்கு கிடைக்கும். எனவே, பெண்கள்தான் இதில் அதிக பலன்பெறக்கூடியவர்கள். எனவே அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு ஆதரிப்பார்கள்.
  • பொது சிவில் சட்டம் வந்தால், இந்து கூட்டுக் குடும்பங்களுக்கு இருக்கும் வருமான வரிச்சலுகை பாதிக்கப்படும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. இந்து கூட்டு குடும்ப முறை கணக்கின் கீழ் வருமான வரிச்சலுகை பெறக்கூடியவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவே இருக்கும். கூட்டுக் குடும்ப முறை என்பது நாட்டில் மிக வேகமாக மாறி இருக்கிறது. சிலர் வருமான வரிச்சலுகைக்காக கூட்டுக் குடும்ப கணக்கை வைத்திருக்கிறார்கள்.
  • நாடு ஒரு பொதுவான முறையை நோக்கி செல்லும்போது சிலருக்கு சிரமம் இருக்கும். நில உச்சவரம்புச் சட்டம் வந்தபோதுகூட, அதிக நிலம் வைத்திருந்தவர்கள் பாதிக்கப்பட்டார்கள். நான்கு வழிச் சாலையை உருவாக்கும்போது சாலையோரம் நிலம் வைத்திருப்பவர்களிடம் இருந்து அரசு நிலத்தை கையகப்படுத்தியதால், பலர் பாதிக்கப்பட்டார்கள். பொது நலன் கருதி இதை நாம் ஏற்கத்தான் வேண்டும். அதுமட்டமல்ல, இந்து கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் பொது சிவில் சட்டத்தை எதிர்க்கவில்லையே.
  • பொது சிவில் சட்டம் வந்தால் பழங்குடி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற வாதம் இருக்கிறது. முதலில் பொது சிவில் சட்டம் குறித்த வரைவு மசோதா வெளிவரட்டும். தற்போது அந்த வரைவு மசோதாவை சட்ட ஆணையம் தயாரித்து வருகிறது. ஆனால், அது எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்று தெரியவில்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அது அறிமுகப்படுத்தப்படலாம். அப்போது, அந்த வரைவு மசோதா பொது விவாதத்திற்கு விடப்படும். அப்போது எல்லோரும் கருத்து சொல்வார்கள். பழங்குடி மக்களும் தங்கள் கருத்தைச் சொல்வார்கள். அப்போது இதனை பார்த்துக்கொள்வோம். வரைவு மசோதா வருவதற்கு முன் ஏன் அதனை எதிர்க்க வேண்டும்?
  • பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் விஷயம் என்பது மிக நீண்ட நடைமுறையைக் கொண்டது. தடாலடியாக செய்யக்கூடிய ஒன்று அல்ல. வரைவு மசோதா வந்த பிறகும்கூட அதில் மாற்றங்கள் ஏற்படலாம். ஒருமித்த கருத்தின் அடிப்படையில்தான் இந்தசட்டத்தைக் கொண்டு வர பாஜக விரும்புகிறது. பெரும்பான்மை - சிறுபான்மை அடிப்படையில் இது திணிக்கப்படாது. மக்கள் இதை இயல்பாக ஏற்றுக்கொள்வார்கள்.
  • பொது சிவில் சட்டம் குறித்த விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடியே தொடங்கி வைத்திருப்பதால், நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டே அவர் இது குறித்துப் பேசிய இருப்பதாக சிலர் விமர்சிக்கிறார்கள். தேர்தலுக்காகத்தான் இதை செய்கிறார் என்றே வைத்துக்கொள்வோம்.
  • பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தினால், அமல்படுத்துபவர்களுக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்றால், இந்த சட்டத்திற்கு மக்கள் ஆதரவு அதிகம் என்றுதானே அர்த்தம். இதனால் இந்து - முஸ்லிம் இடையே பிளவு ஏற்படுமா என்றால், நிச்சயம் ஏற்படாது. ஆனால், காங்கிரசும், கம்யூனிஸ்ட்டுகளும் இது மக்களை பிளவுபடுத்தும் என்றுதான் பிரச்சாரம் செய்வார்கள். அவர்களுக்கு முஸ்லிம்களின் பிரதிநிதி என்றால், எல்லை காந்தி என்று சொல்லப்பட்ட கான் அப்துல் கபார் கானோ, இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக இருந்த அபுல் கலாம் ஆசாத்தோ, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமோ அல்ல. அவர்களைப் பொறுத்தவரை முஸ்லிம்களின் பிரதிநிதி என்றால், சையத் அகம்மது கான், முகம்மது அலி ஜின்னா ஆகியோர்தான். காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட்களும் எப்போதுமே பிரிவினைவாதிகளையும் அடிப்படைவாதிகளையுமே ஆதரிக்கிறார்கள்.
  • இந்து - முஸ்லிம் பிரச்சினை எப்போதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் இதற்குக் காரணம். அயோத்தி ராமர் கோயில் விஷயத்திலும் அப்படித்தான் சொன்னார்கள். ஆனால், நீதிமன்றத் தீர்ப்பு வந்தபோது எத்தனை இடத்தில் பிரச்சினை ஏற்பட்டது? ஒரு சின்ன ஆர்ப்பாட்டமாவது நடந்ததா? ஆனால், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக ஆகியவை பூச்சாண்டி காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். எனவே, பொது சிவில் சட்டம் வந்தால் இந்து-முஸ்லிம் வெறுப்பு ஏற்படாது. எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள்.
  • பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பவர்கள் முழுக்க முழுக்க மதவாதிகள். மத அடிப்படையில் சிந்திப்பவர்கள். அவர்களிடம் எந்த தர்க்கமும் கிடையாது. ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு சிவில் சட்டம் எந்த நாட்டில் இருக்கிறது என்று கேட்டால் அதற்கு அவர்களிடம் பதில் இல்லை. பொது சிவில் சட்டம் கூடாது எனும்போது, பொது கிரிமினல் சட்டம் இருக்கலாமா என்று கேட்டால் அதற்கும் அவர்களிடம் பதில் இல்லை. ஷரியத் சட்டம் 1937ல் தானே வந்தது, அதற்கு முன் ஆயிரம் ஆண்டுகளாக உள்ளூர் வழக்கத்தில் இருந்த சட்டத்திற்குத்தானே முஸ்லிம்களும் கட்டுப்பட்டார்கள் என்று கேட்டால் அதற்கும் பதில் கிடையாது.
  • இஸ்லாத்தில் இருக்கும் சட்டத்திலேயே மாற்றம் கொண்டு வந்துதானே ஜின்னா ஷரியத் சட்டத்தைக் கொண்டு வந்தார் என்று சொன்னால் அதற்கும் பதில் கிடையாது. எதற்கும் இவர்களிடம் பதில் கிடையாது. ஆனால், திரும்பத் திரும்ப பொது சிவில் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்று சொல்ல வேண்டும்; பாஜகவை மத அடிப்படைவாத கட்சியாக சித்தரிக்க வேண்டும்; முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி என சித்தரிக்க வேண்டும்; அதன்மூலம் சிறுபான்மையினரின் வாக்கு வங்குவங்கியை தங்கள் பக்கம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதைத்தாண்டி, அவர்களிடம் நேர்மறை திட்டம் எதுவும் கிடையாது.
  • பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டிய ஒன்று. இதை எதிர்ப்பதுதான் வகுப்பு வாதமே தவிர, கொண்டு வர வேண்டும் என்பது அல்ல. மதச்சார்பற்றவாதிகள் தங்களை கொஞ்சம் திருத்திக் கொள்ள வேண்டும். மதச்சார்பு என்றால் என்ன என்பதில் அவர்கள் தங்கள் கருத்தை திருத்திக் கொள்ள வேண்டும். முஸ்லிம்களுக்கு செயற்கையாக அச்சம் தூண்டப்பட்டிருக்கிறது. பாஜக வெறுப்பு அரசியலின் பரிமாணங்கள் இவை. உலகில் எந்த நாட்டில் ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு சிவில் சட்டம் இருக்கிறது? எதாவது ஒரு நாட்டை சொல்ல முடியுமா?
  • அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் முஸ்லிம்களுக்கு என்று தனிச் சட்டம், கிறிஸ்தவர்களுக்கு என்று தனிச் சட்டம் இருக்கிறதா? உலக நாடுகளில் இருக்கக்கூடிய முஸ்லிம், கிறிஸ்தவர்கள், இந்து என எல்லோரும் அந்தந்த நாட்டின் சட்டத்தை ஏற்றுக்கொள்வார்கள், இந்தியாவில் மட்டும் ஏற்றுக்கொள்ள மாட்டார்களா? அப்படி என்ன இந்தியாவில் மட்டும் சூப்பர் முஸ்லிம், சூப்பர் கிறிஸ்தவன், சூப்பர் இந்து என இருக்கிறார்களா? எந்த நாட்டில் தனிச் சட்டம் இருக்கிறது? சிவில் சட்டத்தில் தனி சட்டம் வேண்டும் என்று கேட்பவர்கள் கிரிமினில் சட்டத்தில் தனி சட்டம் கேட்பார்களா? ஒரு கொலை அல்லது பாலியல் பலாத்காரம் நடந்தால் அவற்றுக்கு மத அடிப்படையில் தண்டனைக் கொடுக்கலாமா? அதை அவர்கள் ஒப்புக் கொள்வார்களா? நமது மதச்சார்பற்றவாதிகள் அதை ஏற்பார்களா?

நன்றி: இந்து தமிழ் திசை (12  – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்