- நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து, முதன்மைப் பிரச்சினைகளில் இருந்து திசைதிருப்பும் அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது ‘பொது சிவில் சட்டம்’. இச்சட்டம் குறித்த கருத்துகளை அறிவது தொடர்பாக, நாடாளுமன்ற மாநிலங்களவை சட்டத் துறை நிலைக்குழு அளித்த அறிவிப்பின் அடிப்படையில், தமிழக அரசு குழு ஒன்றைச் சமீபத்தில் அமைத்துள்ளது.
வழிகாட்டும் நெறிமுறை
- சுதந்திரத்துக்கான சட்டரீதியிலான ஏற்பாடுகள் 1947 ஆகஸ்ட்டுக்குப் பல மாதங்கள் முன்பே தொடங்கின. அரசமைப்பை உருவாக்கும் பணியில் சட்ட வல்லுநர்கள் அடங்கிய குழு ஈடுபடுத்தப்பட்டது. அந்த வகையில், 1947 மார்ச் 28 அன்று, அடிப்படை உரிமைகள் பற்றி ஆராய்வதற்காகத் துணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
- அதன் உறுப்பினர்களில் ஒருவரான எம்.ஆர்.மசானி, திடுமெனப் பொது சிவில் சட்டம் பற்றிய ஒரு முன்மொழிவைக் கொண்டுவந்தார். மற்ற உறுப்பினர்கள் இதைக் கடுமையாக எதிர்த்தனர். அதனால் மசானியின் கோரிக்கை கைவிடப்பட்டது. 1947 மார்ச் 30 அன்று, மீண்டும் இது குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்பின், பிரிவு 36 முதல் 51 வரையிலான அரசமைப்பின் வழிகாட்டும் நெறிமுறைகளில் ஒன்றாக வேண்டுமானால், பொது சிவில் சட்டம் என்கிற கருத்தை வைத்துக்கொள்ளலாம் என முடிவெடுக்கப்பட்டது.
- பதினான்கு வயதுவரை அனைவருக்கும் இலவசக் கல்வி, ஆண்-பெண் இருபாலருக்கும் சமமான வேலைவாய்ப்பு-ஊதியம், நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்துதல் ஆகியவையும் அரசமைப்பின் வழிகாட்டும் நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளன. இதுபோன்ற தலையாயப் பிரச்சினைகளை மறந்துவிட்டு, அரசியல் லாபங்களுக்காகச் சிலர் பொது சிவில் சட்டத்தைக் கையிலெடுத்து, சிறுபான்மைச் சமூகத்தினர் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.
முஸ்லிம் தனிநபர் சட்டம்
- திருக்குர்-ஆன், அதற்கு விளக்கமாக நபிகள் நாயகம் கூறிய பொன்மொழிகளின் அடிப்படையில் பெறப்பட்டதே ‘ஷரியத்’ சட்டம். இச்சட்டத்தைப் பின்பற்றுவது முஸ்லிம்களின் மத நம்பிக்கையில் ஒன்று. இந்தியாவில் இது ‘முஸ்லிம் தனிநபர் சட்டம்’ என்கிற பெயரில் 1937இல் இயற்றப்பட்டது. முஸ்லிம் தனிநபர்கள், அவர்கள் குடும்பம் பற்றிய அக்கறை, முஸ்லிம் சமூகம் சார்ந்த திருமணம், மணமுறிவு, வாரிசு, வக்பு உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களைக் கையாள்வது ஆகிய நான்கு விவகாரங்களுக்கு மட்டுமே இச்சட்டம் பொருந்தும்.
திருமண ஒப்பந்தம் (நிக்காஹ்)
- பெண்ணின் தகப்பனாரும் நல்ல மனநிலையில் இருக்கும் சமூக அந்தஸ்து கொண்ட இரண்டு சாட்சிகளும் நேரடியாகப் பங்கேற்க, மணவாழ்வில் இணையும் இருவரிடமும் சம்மதம் பெற வேண்டும். ‘மஹர்’ எனப்படும் திருமணத் தொகையைப் பெண் தன்னுடைய விருப்பம்போல் நிர்ணயித்து ஆணிடம் கேட்க வேண்டும். இந்தத் தொகையைப் பெற்றபின், மத அறிஞரால் ‘நிக்காஹ்’ நடைபெறும்.
- இவ்வாறு மிக எளிமையான திருமண முறைக்கு ‘ஷரியத்’ சட்டம் வழிகாட்டுகிறது. திருமண விருந்தினை மணமகன் தன் வசதிக்கு ஏற்ப அளித்திட வேண்டும்; அவ்வளவுதான். ஆனால், திருமணங்களில் பெண்களுக்குக் கருகமணி கட்டுவது, மருமக்கள் தாயம் (மணமகன் - மணமகள் வீட்டில் சென்று குடியேறுவது), வரதட்சிணை உள்ளிட்ட சில வழக்கங்கள் பிற்காலத்தில் இணைந்தன.
‘தலாக்’ மணமுறிவு
- கணவனுக்கு மனைவியைப் பிடிக்கவில்லை என்றால், அந்தச் சமயத்தில் பெண் சார்பாக ஒருவரும் ஆண் சார்பாக ஒருவரும் சாட்சிக்கு இருக்க, தங்கள் திருமண பந்தத்தை முறித்துக்கொள்வது ‘தலாக்’ மணமுறிவு. இதில் ஏராளமான கட்டுப்பாடுகள் உண்டு. ஜமாத்தார்கள் முன்னிலையில் இருதரப்பும் பேசி சமரசத்தில் ஈடுபடுவர். பிரிப்பதைவிட சமரசம் செய்து சேர்த்துவைப்பதில்தான் ஜமாத்தார் முனைப்புக் காட்டுவர். முடியாதபட்சத்தில், உரிய கால இடைவெளியில் மூன்று தவணையாக, ‘தலாக்’ சொல்ல வேண்டும்.
- இந்த மூன்று தவணைகளுக்கும் கணவன்-மனைவி இடையே சுமுகமான சூழல் உருவாகி, இருவரும் திரும்பச் சேர்வதற்கான வாய்ப்பு இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடு. மனைவிக்குக் கணவனைப் பிடிக்கவில்லை என்றாலும் உரிய கால அவகாசம் அளித்து, காத்திருந்து, அதன்பிறகும் பிடிக்கவில்லை என்றால், அதை முறையாகச் சொல்லிப் பிரியலாம் எனப் பெண்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் வாய்ப்புதான் ‘குலா’.
- சில ஜமாத்துக்களில் மதக் கோட்பாடுகள் பற்றிய சரியான புரிதல் இல்லாதவர்களால், ‘ஷரியத்’ தொடர்பான தவறான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன; இதனால் ஏழை, பணக்காரர், செல்வாக்குள்ளவர் என்கிற பாகுபாடுகளோடு பாரபட்சம் காட்டப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் உண்டு.
- கட்டாயத் திருமணப் பதிவுச் சட்டம் 2009இன்படி, இஸ்லாமியர் மத வழக்கப்படி திருமணம் செய்துகொண்டாலும், மூன்று மாதத்திற்குள்ளாகத் திருமணத்தைப் பதிவுசெய்தாக வேண்டும். வயது சரிபார்க்கப்பட்டே திருமணப் பதிவு நடக்கிறது. மணமுறிவு என்றால் ஜமாத், ஹாஜி அறிவுறுத்தலை ஏற்று, கால அவகாசம், இடைவெளி - சமரச முயற்சி போன்றவை முறையாக நடைபெற்றனவா என்பதை நீதிமன்றம் உறுதிசெய்த பின்பே, திருமணப் பதிவை ரத்துசெய்து மணமுறிவுக்கு அனுமதிக்கப்படுகிறது.
- இந்த நீதிமன்ற நடைமுறையில், ஆறு மாதங்களிலிருந்து ஓராண்டுவரை மணமுறிவைச் சட்டபூர்வமாக அறிவிக்கக் காலம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதனால், முஸ்லிம்கள் மத்தியில் மறுமணம் காலதாமதமாகிறது. இதனால் ‘ஜமாத்’, ‘ஹாஜி’க்களுக்கு இருந்த அதிகாரம் மணமுறிவு விஷயத்தில் குறைக்கப்பட்டுவிட்டது. இதில் நீதிமன்றமே உச்சபட்ச அதிகார அமைப்பாக உள்ளது.
தரவுகளற்ற கூற்றுகள்
- தேவையானால் எத்தனைத் திருமணங்கள் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என முஸ்லிம் ஆண்களைப் பற்றிய கருத்து பொதுவெளியில் உள்ளது. இது தவறான கூற்று. எல்லாச் சமூகங்களையும்போல முஸ்லிம்களிலும் மிகச் சில ஆண்கள் பலதார மணம்புரிந்தவர்களாக உள்ளனர்; ஆனால், எல்லோரும் அப்படி அல்ல.
- அடுத்து, வீட்டு ஆண்களால் முஸ்லிம் பெண்களுக்கு மிக அதிகமாகக் குடும்ப வன்முறை, கொடுமைகள் இழைக்கப்படுவதாக உலவும் செய்தி; இதுவும் தவறான தகவல். பிற மதத்துப் பெண்களைப் போல், குடும்ப வன்முறைக்கு எதிராக முஸ்லிம் பெண்களும் சட்டரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
- இச்சட்டம் தொடர்பாக, தமிழக அரசு அமைத்திருக்கும் குழு தரப்பில் விசாரித்தபோது, ‘இந்தத் தனியார் சட்டத்தில் சமூகத் தீமை, மனித உரிமை மீறல் அரசமைப்புக்கு எதிராக இருக்கிறதா என்கிற வகையில்தான் ஆய்வு செய்யவிருக்கிறோம். மற்றபடி, பொது சிவில் சட்டம் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது’ என்கின்றனர். ஆனால், இஸ்லாமியத் தலைவர்களோ, ‘இது பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான குழுதான்’ என்கின்றனர்.
- இந்தியாவில் இந்துக்களுக்குத் தனியாகக் குடும்பவியல் சட்டம் இருக்கிறது. இந்துச் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுக்குத் திருமண வாரிசு, சடங்கு எனப் பல்வேறு அம்சங்களில் பெரியளவில் முரண்பாடு உள்ளது. மலைவாழ் மக்களின் பழக்க-வழக்கம் என 400-க்கும் மேற்பட்ட இந்துத் தனியார் சட்டங்கள் உள்ளன. இந்தியாவின் பெருமைகளில் ஒன்றாகக் கருதப்படும் கூட்டுக் குடும்பத்தினால், இந்துக்களுக்கு இருக்கும் சலுகைகள் பற்றிச் சொல்லப்படுவது - இந்துக்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தால், அவர்களுக்கு வருமான வரியில் விலக்கு உண்டு.
- சீக்கியர்களின் மத உணர்வுகளை மதிக்கும் வகையில், அவர்களுக்குச் சிறப்புச் சலுகையாக ‘ஹெல்மெட்’ அணியாமல், தலையில் ‘டர்பன்’ கட்டிக்கொண்டு, இருசக்கர வாகனம் ஓட்டவும் கத்தி வைத்துக்கொள்வதற்கும் அனுமதி உள்ளது. இப்படி எண்ணிலடங்கா வேற்றுமைகளைக் கொண்டிருக்கும் இந்தியா, இன்று உலகளவில் பலம் பொருந்திய நாடாகப் பார்க்கப்படுகிறது. இத்தனை முரண்களையும் கடந்து, ஒற்றுமையாக இருப்பதற்கு இணக்கம்தான் தேவையே தவிர, பொதுவாக்குதல் (uniformity) தேவையில்லை.
- எண்ணிலடங்கா வேற்றுமைகளைக் கொண்டிருக்கும் இந்தியா, இன்று உலகளவில் பலம் பொருந்திய நாடாகப் பார்க்கப்படுகிறது. இத்தனை முரண்களையும் கடந்து, ஒற்றுமையாக இருப்பதற்கு இணக்கம்தான் தேவையே தவிர, பொதுவாக்குதல் தேவையில்லை!
நன்றி: தி இந்து (29 – 11 – 2022)