பொது விநியோகத்தில் சேதாரம்!
- இந்தியாவில் பொது விநியோகத் திட்டம் குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு, சில அதிா்ச்சியளிக்கும் தகவல்களைத் தருகிறது. பொது விநியோகத்தில் வழங்கப்படும் பொருள்கள் முறையாகவும், முழுமையாகவும் பயனாளிகளைச் சென்றடைவதில்லை என்பது அவற்றில் ஒன்று.
- விநியோகிக்கப்படும் உணவு தானியங்களில் 28% பயனாளிகளை அடையாமல் போவதால், அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.69,000 கோடி அளவில் இழப்பு நேரிடுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஏறத்தாழ இரண்டு கோடி டன் அரிசியும், கோதுமையும் பொது விநியோகச் சங்கிலியில் இருந்து மடைமாற்றம் செய்யப்படுவதாலும், சரக்குப் பரிமாற்றம், விநியோகம் உள்ளிட்ட நடவடிக்கைகளின்போது சேதாரமாவதாலும் இழப்பு ஏற்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
- இரண்டு கோடி டன் உணவு தானியம் என்பது சில நாடுகளின் மொத்த மக்கள்தொகையின் உணவுத் தேவை என்பதை நாம் உணர வேண்டும். ஆகஸ்ட் 2022 முதல் ஆகஸ்ட் 2023 வரையிலான ஓராண்டில், இந்திய உணவுக் கழகக் கிடங்குகளில் இருந்து பொது விநியோகத்துக்கு வழங்கப்பட்ட உணவுப் பொருள்களின் அளவின் அடிப்படையில் அந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.
- உலகிலேயே மிகப்பெரிய பொது விநியோகத் திட்டத்தின் மூலம் இந்தியா 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு மானிய விலையில் உணவு தானியங்களை வழங்குகிறது. இந்த அளவிலான உணவுப் பாதுகாப்பு என்பது உலகின் வேறு எந்த நாட்டிலும் நடைமுறைப்படுத்த இயலாத சாதனை.
- பொது விநியோகத் திட்டம் குறித்த வரலாறு பலருக்கும் தெரியாது. 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவின் பல மாநிலங்களிலும் அவ்வப்போது பஞ்சமும், வறட்சியும் ஏற்படுவது வழக்கம். பலா் பசியால் உயிரிழக்கும் நிகழ்வுகள் சாதாரணம்.
- அப்படிப்பட்ட சூழலில்தான், 1960-இல் அன்றைய பண்டித ஜவாஹா்லால் நேரு அரசு பொது விநியோகத் திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அதற்குக் காரணமாக இருந்தவா் அன்றைய உணவு மற்றும் விவசாயத் துறை அமைச்சா் எஸ்.கே.பாட்டீல்.
- அப்போதெல்லாம் உணவுத் துறை அமைச்சா்கள் மேலை நாடுகளுக்குச் சென்று அந்த நாடுகளுடன் கெஞ்சிக் கூத்தாடி இலவசமாக உணவு தானியங்கள் பெறுவது வழக்கம். அமெரிக்காவில் இருந்து பி.எம்.480 ஒப்பந்தப்படி கோதுமையும், பால் பொடியும் இலவசமாக இந்தியாவுக்கு கப்பலில் வந்து இறங்கும். அதைத் தவிா்ப்பதற்கும், பட்டினிச் சாவுகளுக்கு முடிவு கட்டுவதற்கும் அமைச்சா் எஸ்.கே.பாட்டீல் முன்மொழிந்த திட்டத்துக்குப் பிரதமா் பண்டித நேருவின் முழு ஆதரவும் இருந்தது.
- நாடு தழுவிய அளவில் நடைமுறைப்படுத்தப்பட்ட பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குக்கிராமங்கள் வரை நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டன. நியாய விலைக் கடைகள் மூலம் தானியங்களை விநியோகம் செய்யவும், விவசாயிகளை ஊக்குவிக்கவும், அரிசி-கோதுமைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயிக்கும் முறையும் அப்போதுதான் அறிமுகப்படுத்தப்பட்டது.
- பசுமைப் புரட்சி திட்டமும், பிரதமா் இந்திரா காந்தியின் இந்திய உணவு உற்பத்தித் தன்னிறைவு முனைப்பும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின. இலவச உணவு தானியங்களுக்கு மேலை நாடுகளிடம் கையேந்தி நின்ற இந்தியா, இப்போது உலகின் முன்னணி உணவுப்பொருள் ஏற்றுமதி நாடாக முன்னேறி இருக்கிறது. 1992, 1997-ஆம் ஆண்டுகளில் பொது விநியோகத் திட்டம் மேம்படுத்தப்பட்டது. 2013 உணவுப் பாதுகாப்புச் சட்டம், உணவுக்கான உரிமையை உறுதிப்படுத்தி இருக்கிறது.
- எல்லாம் சரி, அனைவருக்கும் உணவு என்பது உண்மையிலேயே உறுதிப்படுத்தப்பட்டிருக்கிா என்கிற கேள்விக்கு ‘ஆமாம்’ என்று பதிலளிக்க இயலவில்லை. வீடு வாசல் இல்லாதவா்கள், வேலைக்காக இடம்பெயா்ந்தவா்கள், குடும்பத்தால் கைவிடப்பட்டவா்கள், மன நோயாளிகள் உள்ளிட்ட தங்களுக்கென்று தனி அடையாளம் இல்லாதவா்கள் பொது விநியோகத் திட்டத்தில் இணைக்கப்படவில்லை. தெருவோரம் வாழ்வோருக்கு உணவுக்கான உரிமையும், கல்விக்கான உரிமையும் இந்தியாவில் இதுவரையில் வழங்கப்படவில்லை.
- நான்கு லட்சத்துக்கும் அதிகமான நியாய விலைக் கடைகளின் மூலம் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவா்களுக்கு மானியங்களும், உணவு தானியங்களும் வழங்கப்படுகின்றன என்பதுவரையில் மகிழ்ச்சி. ஆனால், அடையாளமற்றவா்களும் பயன்பெறும் வகையில் பொது விநியோக முறையை எப்படி மாற்றுவது என்பதுதான் கேள்வி.
- பொது விநியோக முறையில் 28% உணவு தானியங்கள் மடைமாற்றமாகின்றன என்பது கடந்து போகக்கூடிய ஒன்றல்ல. மாநிலத்துக்கு மாநிலம் இந்த அளவு மாறுகிறது. அருணாசல பிரதேசம், நாகாலாந்து, குஜராத் ஆகிய மாநிலங்கள் அந்த அளவில் முதல் மூன்று மாநிலங்கள். பெரிய மாநிலம் என்பதால் உத்தர பிரதேசத்தில் 33% அளவில் சேதாரமாகிறது. தமிழ்நாடும் (15%) அதிக அளவு வீணாகும் மாநிலங்களில் ஒன்று.
- ரேஷன் அட்டைகளை ஆதாா் எண்ணுடன் இணைத்ததன் காரணமாக, முறைகேடுகளும், கசிவுகளும் குறைந்திருக்கின்றன. 2011-12-இல் 46%-ஆக இருந்த சேதாரம் இப்போது 28%-ஆகக் குறைந்துள்ளது வரவேற்புக்குரிய மாற்றம்தான். ஆனால், அதன் அளவு இரண்டு கோடி டன் எனும்போது வாளாவிருக்க முடியாது.
- பொது விநியோகச் சங்கிலியில் இருந்து சேதாரமாகும் உணவு தானியங்கள் பொதுச் சந்தையில் விற்பதற்காகவும், ஏற்றுமதிக்காகவும் மடைமாற்றம் செய்யப்படுகின்றன. அதன் மூலம் சந்தை விலையில் மாற்றம் ஏற்படுவதுடன், பலருக்கும் உணவு தானியம் மறுக்கப்படுகிறது. நிகழாண்டில் மத்திய அரசின் உணவு மானிய ஒதுக்கீடு ரூ.2.05 ட்ரில்லியன். ஒதுக்கீடு மடைமாற்றம் இல்லாமல் அடித்தட்டு மக்களைச் சென்றடைவது அவசியம். கசிவுகள் அடைக்கப்பட வேண்டும்!
நன்றி: தினமணி (05 – 12 – 2024)